இலங்கையின் புராதன கால நிர்வாகம் - ANCIENT ADMINISTRATION OF SRI LANKA


இலங்கையின் புராதன 

கால நிர்வாகம் 


இலங்கையின் புராதன கால நிர்வாகம் - ANCIENT ADMINISTRATION OF SRI LANKA

புராதன காலத்தில் எமது நாட்டை ஆட்சி செய்தவர்கள் மன்னர்களாவர் என்று வரலாற்று மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சி செய்யும் போது பின்பற்றப்பட்ட அரசியல் கொள்கை யாது என்பதைக் கூறும் மிக முக்கியமான தகவல்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

எந்தவொரு நாட்டிலும் நிர்வாகத்தைக் கொண்டு நடத்தும் மூன்று தாபனங்கள் காணப்படுகின்றன. அவை சட்டம், நிர்வாகம், நீதி என்பனவாகும். அரசாங்கம் என்பதனால் கருதப்படுவது இம்மூன்று தாபனங்களுமாகும். நாட்டுக்குத் தேவையான சட்டங்கள் வகுப்பதை இன்று பாராளுமன்றம் புரிவதைப்போல, அன்று அரச சபை செய்தது.

இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நிர்வாகத் துறையாகும். இதில் சம்பந்தப்படுவது அரச அதிகாரிகளாவர். சட்டத்தை மீறுவோரைத் தடுத்து, சமூகத்திற்கு ஏற்படும் தீங்குகளைத் தவிர்த்து நாட்டு மக்களுக்கு நியாயங்களைப் பெற்றுத் தருவது நீதித்துறையாகும்.

புராதன காலத்தில் எமது நாட்டில் நிர்வாக, நீதித்துறைகள் காணப்பட்டன. சட்டத்துறையாகச் செயற்பட்டதும் நிர்வாகத்துறையாகும். சட்டத் துறை தாபனமாக தனியான சுதந்திர அமைப் பொன்று காணப்படாமைக்கு அந்நேரத்தில் எமது நாட்டில் முடியாட்சி முறை நிலவியமையே காரணமாகும். சட்ட, நிர்வாகத் துறைகளைக் குறிப் பதற்கு கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களில் பிரயோகிக்கப்பட்டிருப்பது "எக்தென் சமிய" எனும் சொற்பிரயோகம் ஆகும். அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த புத்தன்னே ஹெல எனும் இடத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் வத்ஹிமி வஹன்சே வதாவ "எக்தென் சமியென்" எனும் வாசகம் காணப்படுகின்றது. எக்தென் சமிய எனும் சொல் உருவாகி இருப்பது ஏசு ஆஸ்தான சாம்ய எனும் சொற்களால் ஆகும். ஏக ஆஸ்தான எனப்படுவது அரச சபை ஆகும். சாம்ய என்பது அனுமதி என்ற பொருள் தரும். எனவே அரச சபையால் அனுமதிக்கப்பட்டது எனப் பொருள் தரும். மேற்குறிப்பிட்ட கல்வெட்டானது காணி ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன் தொடர்புபட்டதாகும். இவ்வன்பளிப்பு சபையின் அனுமதியுடன் அரசனின் ஆணைக்கு அரச ஏற்ப மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள் ளது. வத்ஹிமியன் வதால என்பது அரசனின் ஆணையைக் குறிப்பதாகும். வத்UI என்பது அரசனைக் குறிப்பதாகும்.

கி. பி. 9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளபடி அரசாங்கக் காணி ஒன்றை பௌத்த விகாரைக்கு அன்பளிப்புச் செய்வதற்கு வருகை தந்த அதிகாரிகளில் சிலர் சபாவ எனும் இடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த குருமஹத் தமன எனும் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கெலே கம எனும் இடத்தை மஹிந்த ராம எனும் பிக்குணி களின் ஆராமைக்கு அன்பளிப்புச் செய்ய வந்த மெனின்கமுவே உதய, நிக வெல்லே சேன என்ற அதிகாரிகள் இருவர் சபாவையைப் பிரதிநிதித் துவப்படுத்த வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சபாவ எனக்குறிப்பிடப்படுவது அக்கால நீதிமன்றத்தை ஆகும். அரசுக்குச் சொந்தமான நிலத்தை இன்னொருவருக்கு உரித்தாக்குவது சட்டரீதியான செயற்பாடாகும். ஆகையால் இங்கு நீதிமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தி யோகத்தர்களின் வருகை கட்டாயமானதாகும். அச்சந்தர்ப்பத்தில் அவ்வதிகாரிகளின் பொறுப்பு காணியின் எல்லை. அதனை அனுபவிப்பது தொடர்பான நிபந்தனைகளைப் பதிவதாகும்.

சபாவ எனும் சொல் இடம்பெறாத இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது மஹலே எனும் சொல்லாலாகும். அது 'மஹலேகம்" (பதிவாளர் நாயகம்) எனும் பதவியைக் குறிக்கும். அரச செயலாளர்களின் பொறுப்பு சகல அரச கடமை களையும் பதிவதும் அவற்றைப் பாதுகாத்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் வதுமாகும். இவ்வாறான பதிவாளர் நாயகம் பற்றி மெதிரிகிரியவில் காணப்பட்ட கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெதிகிரியவில் அமைந்திருந்த எத்வெஹர எனப்பட்ட பதனாகரவு இரண்டாம் சேன மன்னனின் ஆணைப்படி காணியை வழங்கி அது தொடர்பான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக காசியப்ப எனும் பதிவாளர் நாயகம் (மஹலே கஸ்பா) அங்கு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் தலைநகராக விளங்கிய காலத்தில் நாட்டின் நிர்வாக மத்திய நிலையமாகவும் அது விளங்கியது. அப்போது மன்னன்தலைநகரிலிருந்து ஆட்சி செய்தான். இக்காலத்தைப் போன்று அன்று தொடர்பு சாதனங்களோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத காரணத்தினால் அநுராதபுரத்தில் இருந்து தூரப் பிரதேசங்களில் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமான காரியமாக இருந்து வந்தது. இதனால் உள்ளூராட்சி தொடர்பான தனியானதொரு நிர்வாக அமைப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் வரலாற்று மூலாதாரங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட வல்லிபுரம் பொற்சாசனம் இது தொடர்பான ஆதாரமாகும். அதில் கூறப்பட்டுள்ள விடயமாவது நாகதீப (யாழ்ப்பாண)த்தை நிர்வகித்த ரிஷிகிரி எனும் அமைச்சர் அங்கு பியங்குக திஸ்ஸ எனும் விகாரையைக் கட்டியது பற்றியதாகும். தனிப்பட்ட உள்ளூராட்சிப் பிரதேசங்களை நிர்வகிப்பதற்காக மத்திய அரசு நிர்வாகிகளை நியமித்திருந்தமை இதன் மூலம் தெளிவாகின்றது.

இவற்றிற்குப் புறம்பாக அதனைவிடக் கீழ் மட்டத்து நிர்வாக நடவடிக்கைகளுக்காகச் சுயேச் சையான சபைகள் அவ்வப் பிரதேசங்களில் காணப்பட்டன. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட கல்வெட்டுக்களில் பிரதேச மட்டத்தில் செயல்பட்ட சபைகள் '''தசகம் எத்தன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. பத்துக் கிராமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் அதன் தலைவர்களைக் கொண்ட அச்சபை சிறிதளவு நிர்வாக விடயங்களில் சம்பந்தப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் புராதன பௌத்த விகாரையான களுதிய பொக்குனையில் காணப்பட்ட கல்வெட்டு ஒன்றில் அவ்விகாரைக்குத் தானம் வழங்குகையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பத்துக் கிராமத் தலைவர்களும் ஒன்றுகூடி அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அநுராதபுரம் இந்நாட்டின் தலைநகராகத் திகழ்ந்த காலத்தில் இருந்தே அரசுரிமை தந்தை வழிமுறையாக வந்தது. பட்டத்து இராணியின் பிள்ளைகளுக்கு அரசுரிமை கோரும் தகுதியிருந்தது. தந்தையின் பின்னர் பிள்ளைக்கு அரசு உரிமையாக வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் அவ்வச் சந்தர்ப்பத்தில் வாழ்ந்த மூத்தவருக்கு அரசுரிமை வழங்கப்பட்டது. தேவனம்பிய திஸ்ஸ மன்னனுக்குப் பின்னர் அரசுரிமை பெற்றது உத்திய, மஹாசிவ, சூரதிஸ்ஸ, அசேல் என்ற அவரது சகோதரர்கள் நால்வராவர்.

நிர்வாகத்தில் நாட்டு மக்களுடைய நலன் களுக்காக நிர்வாகிகள் செயற்பட்டனர். சமய நிலையங்களுக்குக் கொடுப்பனவுகளை மேற் கொள்வது மட்டுமன்றி சாதாரண மக்களின் நலன்களிலும் கரிசனை செலுத்தினர். விசேட மாக, பொதுமக்களுக்குத் தேவையான பொதுச் சுகாதார வசதிகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தினர். வெஜ்ஜசாலா என்ற சொல் புராதன இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது வைத்திய சாலையைக் குறிப்பதற்காகும். வெஜ எனும் வைத்தியர்களைப்பற்றி கிறிஸ்துக்கு முற்பட்ட இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளன. புத்ததாஸ (கி.பி.340 - 368) வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதில் மிகவும் ஆர்வம்மிக்க மன்னராவார். ஐந்தாம் மஹிந்த மன்னர் (கி.பி. 982 - 1029) நாடெங்கும் காணப்பட்ட வைத்தியசாவைகளுக்குத் தேவைப் பட்ட சகல வசதிகளையும் வழங்கினார். நான்காம் காசியப்ப மன்னரின் காலத்தில் (கி.பி. 914 - 923) அநுராதபுரத்தை அண்டிய பிரதேசங்களில் கடுமையான காய்ச்சல் பரவியது. அப்போது காணப்பட்ட சாதாரண வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகளில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளர்களைப் பராமரிப்பது சிரமம் எனக் கண்ட மன்னர் அதற்கெனத் தனியான வைத்தியசாலை ஒன்றை நிறுவியதாக வரலாற்று மூலாதாரங்கள் குறிப்பிடுகின்றன. "உபசக்க ரோகநாச" எனும் வார்த்தையால் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மாரின் தேவைக்காகப் பிரசவ விடுதிகளைக் கட்டுவதற்கு முதலாம் உபதிஸ்ஸ மன்னன் (கி.பி 365 - 406) நடவடிக்கைகளை மேற்கொண்டான். அவ்விடுதிகள் பஸவந்தி நாம சால எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரச வத்திற்கான வைத்தியசாலைகள் என்பது இதன் பொருளாகும். கல்வெட்டுக்களில் இக்கட்டடங்கள் "திம்பிரிகே" எனக் கூறப்பட்டுள்ளன. மிகவும் முற்பட்ட காலங்களில் இருந்து இந்நாட்டில் தாய் மாருக்கான பிரசவ விடுதிகள் நிர்மாணிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பண்டுகாபய மன்னனின் காலத்தில் அநுராதபுரத்தில் "சொத்திசாலா" எனப்பட்ட விசேட கள் காணப்பட்டன. இச்சொல் பிராமணர்களின் வழிபாட்டிடத்தைக் குறித்தது. அத்துடன் பிரசவ விடுதியினைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் பட்டது என்றும் அட்டுவா நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

எமது நாட்டை ஆண்ட மன்னர்கள் தமது அயல் நாடுகளுடனும் சில வேளைகளில் தூர நாடுகளுடனும் நட்புறவுத் தொடர்புகளை வைத் திருந்தனர். காலத்திற்குக் காலம் இத்தொடர்புகள் இடம்பெற்ற பிரதேசங்கள் மாற்றமடைந்தன. இந்தியா, அரேபியா உட்பட ஏனைய ஆசிய நாடுகளுடன்ஆதி காலத்தில் இருந்தும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுடன் அண்மிய நூற்றாண்டுகளில் இருந்தும் தொடர்புகள் இருந்து வந்தன. இலம்ப கர்ண அரசர்களுள் புகழ்பெற்ற முதலாம் கஜபாகு மன்னன் (கி.பி. 114 - 136) பத்தினி தெய்வக் கோயில் ஒன்றின் திறப்பு விழாவிற்கு தென்னிந்தியாவில் சேர இராச்சியத்திற்கு வந்ததாக அந்நாட்டுக் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. சில வேளைகளில் இவ்வரசியல் சுற்றுலாவின் நோக்கம் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் உறவுகளை மேம்படுத்திக்கொள்வதாக இருந் திருக்கலாம்.

பாதிகாபய அரசனால் (கி.மு. 22 - கி.பி. 07) உரோம நாட்டிற்கு தூதரக அதிகாரிகளை அனுப்பியதற்கான குறிப்பு மகாவம்சத்தில் உள்ளது. ருவன்வெலி தாது கோபத்திற்கு பூஜை செய்வதற்குத் தேவையான கண்ணாடி மணிகளைப் பெற்று வருவதற்காகவே இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கி.பி. 8ஆம், 9ஆம் நூற்றாண்டுகளில் இந்நாட்டு ஆட்சியாளர்கள் சீனாவுடன் நெருக்கமான உறவு களை ஏற்படுத்திக் கொண்டனர். இக்காலத்தில் எமது நாட்டுத் தூதுவர்கள் சீனாவுக்குச் சென்று வந்தனர். ஆறாம் அக்கிரபோதி மன்னன் ஆட்சிக் காலத்தில் இத்தொடர்புகள் மிகவும் பலப்பட்டிருந்தன. அக்காலகட்டத்தில் இலங்கை இராஜதந்திரிகள் இருபது முறை சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். வியாபாரத் தொடர்புகளை வளர்த்துக் கொள்வது இவர்களின் மூல நோக்கமாக இருந்தாலும் கலாசாரத் தொடர்பு களிலும் செல்வாக்குச் செலுத்தினர்.

இலங்கை தமது அயல்நாடுகளுடன் மேற் கொண்ட உறவுகளில் திருமணத் தொடர்புகள் முக்கியமானவையாகும். இந்தியாவின் பலம் வாய்ந்த நாடுகளான கலிங்கம், பாண்டிய நாடு என்பவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட திருமணங் கள் தொடர்பாக வம்சக் கதைகள் கூறுகின்றன. முதவாம் விஜயபாகு மன்னன் (கி.பி. 1070 - 1110) கலிங்க இளவரசி திரிலோக சுந்தரியைத் திருமணம் செய்து கொண்டதோடு தனது சகோதரியான மித்தா இளவரசியை பாண்டிய இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்ததன் மூலம் தனது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தி இருக்கலாம்.

சமயம், மொழி ரீதியில் வேறுபட்டிருந்தாலும் தமது அண்டை நாட்டுப் பிரஜைகளுடன் நம்பிக்கையுடன் செயற்படுவது எமது புராதன ஆட்சியாளர்களின் வெளிநாட்டுக் கொள்கையில் தெளிவாகத் தெரியும் இயல்பாகும். முதலாம் விஜயபாகு மன்னரால், பொலன்னறுவையில் கட்டப்பட்ட தலதா மாளிகையின் பாதுகாப்புக் காக வேளைக்காரப் படையை நியமித்தது இதற்குச் சிறந்ததொரு உதாரணமாகும். இவர்கள் தென் னிந்தியாவில் இருந்து வந்து சம்பளத்திற்காக பணி யாற்றிய படையினராவர்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் எங்களது மன்னர்கள் அரபு நாடுகளுடன் மிக நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கையில் அராபிய வணிகர்களின் தலைமையில் அக்காவ இந்து சமுத்திரத்தில் இடம்பெற்ற வர்த்தக நடவடிக் கைகளுக்கு இலங்கையின் ஒத்துழைப்பை உறுதி யாகப் பேணிக்கொள்வதே அதன் நோக்கமாக இருந்தது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அராபிய வரலாற்று ஆசிரியரான அல் - பல சூரியின் குறிப்புகளின்படி அக்கால சிவப்புத் தீவின் (இலங்கையின்) மன்னர், இஸ்லாமிய அரசர்களுடன் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிகின்றது.

சுருங்கக்கூறின் புராதன காலத்தில் இந்நாட்டில் நிலவிய நிர்வாகத்தின் தலையாய நோக்கங்களாக இருந்தவை. நாட்டு மக்களிடையே சமாதான சகவாழ்வை உருவாக்குதலும் அவர்களுடைய நலன்களைக் கவனித்தலும் தாய்நாட்டின் பாது காப்பும் மக்களுடைய எதிர்கால நல்வாழ்வுக்காக நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தலுமாகும். தங்களது அயல் நாடுகளுடன் நல்லுறவுடன் செயற்படுவதற்கும் அவர்கள் தூர நோக்குடன் செயற்பட்டுள்ளமை தெரிய வருகின்றது.

நன்றி 

Post a Comment

0 Comments