இராமாயணம் பகுதி - 17 - RAMAYANAM PART - 17

 

இராமாயணம் பகுதி - 17


இராமாயணம் பகுதி - 17 - RAMAYANAM PART - 17


தசரதன் மற்றும் குமாரர்கள் போகும் வழியில் சில தீய சகுணங்கள் ஏற்பட்டன. மயில்கள் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகச் சென்றன. இது நல்ல சகுணம் ஆகும். காகங்கள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகச் சென்றன. இது தீய சகுனம் ஆகும். இந்த சகுனத்தால் தசரதன் தயங்கி நின்றான். தசரதன் ஜோதிடரை அழைத்து இந்த நிமித்தங்களின் பலன்கள் என்னவென்று கேட்டான். ஜோதிடர் ஆராய்ந்து, முதலில் இடையூறு வரும், பின்பு அந்த இடையூறு நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று கூறினான். அவர்கள் சிறிது தூரம் சென்றதும், எதிரே பூமி அதிரும்படியாக கையில் கோடாரி ஏந்திய ஒருவன் அவர்கள் முன் தோன்றினான். அவன் பெயர் பரசுராமன். இவனது வரலாறு வருமாறு.

ஜமதக்னி, ரேணுகாதேவி இருவருக்கும் பிறந்த புத்திரர்களுள் ஒருவர் தான் பரசுராமன். பரசுராமன் மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆவார். பரசுராமர் மிக பலம் மிக்கவர். சூரிய வம்சத்தில் பிறந்த கேகய நாட்டு மன்னன் திருதவீரியனின் மகன் கார்த்தவீரியார்ச்சுனன். இவனுக்குப் பிறவியிலேயே கால்கள் இல்லை. இவன் தன் பன்னிரண்டு வயதுக்குமேல், ஞான உபதேசம் பெற்று பலசாலியாக நாட்டை ஆண்டு வந்தார்.

ஒரு நாள் கார்த்தவீரியார்ச்சுனன் காட்டுக்கு
வேட்டையாட சென்றபோது, அவனும் அவனது படையினரும் கடும் பசியால் அவதியுற்றனர். அப்போது, ஜமதக்னி முனிவர், தன்னிடமிருந்த காமதேனு என்னும் தேவ பசுவின் உதவியால் அவர்கள் அனைவருக்கும் அறுசுவை மன்னர் கார்த்தவீரியார்ச்சுனன், முனிவரிடம் காட்டில் வாழும் உமக்கு காமதேனு தேவையில்லை. ஆகவே, அதை எனக்கு கொடுங்கள் என்று கேட்டான். முனிவர் தர மறுத்து விட்டார். ஆனால் மன்னர் அந்த தேவ பசுவைப் வலுகட்டாயமாக தன் நாட்டுக்குப் பிடித்து சென்றார். அதையறிந்து கோபம் கொண்ட ஜமதக்னியின் மகன் பரசுராமன், அந்நாட்டுக்கு சென்று மன்னனின் தலையை வெட்டி வீழ்த்திவிட்டு காமதேனுவை மீட்டு கொண்டு வந்தார்.

இதையறிந்த ஜமதக்னி முனிவர், அரசனைக் கொன்றது ஒரு பிராமணனைக் கொன்றதைவிட பெரும்பாவச் செயலாகும். அப்பாவம் தீர நீ யாத்திரை செய்து வருவாயாக என்று கூறி யாத்திரைக்கு அனுப்பி வைத்தார். பரசுராமரும் யாத்திரை சென்று வந்தார். ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி ஒருமுறை ஹோம காலத்துக்குள் தண்ணீர் கொண்டுவர தாமதமாகி விட்டதால், கோபம் கொண்ட முனிவர், அவளைக் கொன்று விட்டு வா என்று மகனிடம் ஆணையிட்டதால், பரசுராமன் கோடாரியால் தாயை வெட்டி வீழ்த்தினான். ஜமதக்னி முனிவர், பரசுராமரிடம், மகனே! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள், என்று கேட்டார். பரசுராமர் என் தாயாரும், சகோதரர்களும் பிழைத்து எழ வேண்டும் என்று கேட்டு கொண்டார். முனிவரும் அவ்வாறே அருள் செய்தார். தாயும், சகோதரர்களும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

பரசுராமர் தனக்கும் தன் தந்தை போன்ற சக்தி கிடைக்க தவம் செய்யக் காட்டுக்கு சென்றார். அச்சமயத்தில் கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்கள் பரசுராமனைப் பழிவாங்க நினைத்து, பரசுராமனின் தந்தை தனியாக இருந்த நேரம் பார்த்து தலையை வெட்டி விட்டனர். அதைப் பார்த்த ரேணுகாதேவி கத்தினாள். தன் தாயின் அழுகையொலி கேட்ட பரசுராமன், வீட்டிற்கு திரும்பிச் சென்றார். அங்கே தன் தந்தையின் தலை வெட்டப்பட்டிருப்பதை பார்த்த பரசுராமர் கடும் கோபம் கொண்டு, கோடாரியை ஏந்திக்கொண்டு, கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்களை வெட்டி வீழ்த்தினான். அதோடு தன் கோபம் தீராமல், இருபத்தொரு தலைமுறைகள் சத்ரியர் வம்சம் தழைக்காமல் இருக்க அவர்களை நாசம் செய்வேன் என்று சபதம் ஏற்று கொண்டார்.

பிறகு தந்தையின் தலை மற்றும் உடலையும் ஒன்று சேர்த்து கடைசி கடமைகளை செய்து முடித்தான். ஜமதக்னி முனிவர் சப்தரிஷி மண்டலத்தில் நட்சத்திரமாகப் பிரகாசித்தார். பரசுராமன் தான் செய்து கொண்ட சபதத்தின்படி, இருபத்தொரு முறை உலகை வலம் வந்து சத்ரியர்களை வதம் செய்து வந்தார்.

பரசுராமரை எதிரே பார்த்ததும் தசரதன் கலங்கிப் போனான். சத்திரியர்களை வேரோடு அழிக்கும் இந்த பரசுராமன், தனது குமாரன் இராமனை ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயம் தசரதனுக்கு வந்தது. எதிரே வரும் பரசுராமரை யாரோ என்று எண்ணி இராமனும், பரசுராமனைப் பணிந்து வணங்கினார். பரசுராமனோ கோபம் தணியாமல், 'இராமா! பழுதுபோன சிவதனுசை ஒடுத்ததால், நீ வீரனாகிவிட முடியாது. நீ வீரன் என்றால் வந்து என்னுடன் போரிடு' என்றான். அதற்கு தசரதன், பரசுராமா! உனக்கு சாதாரண மானுடர்களாகிய நாங்கள் சமமா?. உன் வீரத்தை பற்றி அனைவருக்கும் தெரியும் தானே. இராமனோ இளம் பாலகன். இராமன் அறிந்தும் அறியாமையாலும் ஏதாவது பிழை செய்திருந்தால் கோபத்தை தணித்து பொருத்தருளுவாய் என்றான். இவ்வாறு தசரதன் பலவாறாக கெஞ்சி அழுது முயற்சித்தான்.

அதற்கு அசட்டை செய்யாமல் பரசுராமன், இராமன் முறித்த சிவதனுசு பழுதுபட்டது என்றும், இராமனால் முடிந்தால் என் கையிலிருக்கும் விஷ்ணு தனுசை முறித்து இராமன் வீரன் என்று நிரூபித்துக் காட்டட்டும் என்றான். இராமர், பரசுராமர் கையிலிருந்த விஷ்ணுதனுசை வாங்கி அதை வளைத்து, நாண் பூட்டினார். அம்பை குறிபார்த்து, 'பரசுராமரே! நீர் ஜமதக்னியின் புதல்வன். தவம் மேற்கொண்டவன். உம்மைக் கொல்லல் தகாது. ஆனால் நான் இந்த அம்பை வில்லில் பூட்டி விட்டால் அதற்கு ஓர் இலக்கு வேண்டும் அல்லவா? இப்போதே சொல் என் அம்புக்கு எது இலக்கு?' என்றான் இராமன். பரசுராமர் திகைத்தார். இராமா! நீ யார் என்பதை நான் புரிந்து கொண்டேன். இராம பாணத்திற்கு இலக்காவது யார்? இராமா! உன் அம்புக்கு என் தவத்தின் வலிமையை தருகிறேன் என்று சொல்லி வில்லை தளர்த்தினான். பின்னர் பரசுராமன் இராமனை வாழ்த்தி வணங்கி விடைபெற்றுச் சென்றான். பரசுராமரை மீண்டும் தவம் செய்ய செல்லுமாறு இராமர் கூறினார். இராமருக்கு சக்தி வாய்ந்த கோதண்டம் கிடைத்தது. இராமரை தொழுது விடை பெற்று சென்றார், பரசுராமர்.

மயங்கி வீழ்ந்த தசரதனை இராமர் தேற்றி எழுப்பினான். பரசுராமனால் இராமனுக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை என்பதை அறிந்தும், பரசுராமன் இராமனால் தோல்வியடைந்ததை அறிந்து தசரதன் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அனைவரும் அயோத்தி நகர் சென்றடைந்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

கைகேயின் சகோதரர் யுதாசித்து வந்து, தம் தகப்பனார், தன் பேரன்களை பார்க்க விரும்பியதால் அவர்களை அழைத்துவர சொன்னதாக கூறினான். கைகேயி சகோதரரின் அழைப்பின் பேரில் பரதனையும் சத்ருக்னனையும் கேகய நாட்டுக்கு அனுப்பி வைத்தார், தசரதன். தசரத சக்ரவர்த்தி நாட்டை அமைதி பூங்காவாகவும், அறநெறியுடன் ஆட்சி புரிந்து வந்தார். மக்களும் எவ்வித பிரச்சனை இன்றி, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இராமர் அதிகாலையில் எழுந்து நீராடி தன் நித்திய வழிபாடுகளை முடித்து தாய் தந்தையர் மற்றும் தன் குருவாகிய வசிஷ்டரை வணங்குவார்.

சீதைக்கும் வேதங்களை உபதேசிப்பார். ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்து வந்தார். மக்கள் மனதில் இராமர் நீங்காத இடத்தை பிடித்தார். இராமரும் அயோத்தியில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

ஒருநாள் காலை தசரதர் நீராடிவிட்டு கண்ணாடி முன் நின்று தலைமயிரை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தபோது காதில் அருகில் நரைமுடியைக் கண்டார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தசரதர், உனக்கு முதுமை வருகின்றது. முதுமை வந்தால் மரணம் வரும். மரணம் வருமுன் இறைவனுடைய சரணத்தை அடையவேண்டும். இத்தனைக் காலம் மக்களுக்கு உழைத்தாய். இனி, உன் உயிருக்கு உழைப்பாய் என்று நரைமுடி எச்சரிக்கை போல் இருந்தது. மரணத்திற்கு முன் கானகம், முக்தியை அடைய வேண்டும் என்று விரும்பினார். இராமருக்கு விரைவில் முடிசூட்டி விட்டு சீக்கிரம் துறவறம் மேற்கொள்ள விரும்பினார்.

தொடரும்.....




Post a Comment

0 Comments