கைத்தொழிற் புரட்சி
18 ஆம் நூற்றாண்டின் இறுதி அரைப்பகுதியில் பிரித்தானியாவில் கைத்தொழிற் புரட்சி ஆரம்பமானது. அதிலிருந்து சுமார் அரை நூற்றாண்டு காலம் கைத்தொழிற் புரட்சி யானது பிரித்தானியாவுக்குள் மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகக் காணப்பட்டது. ஆயினும் 19 ஆம் நூற்றாண்டாகும்போது ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் உலகின் சில நாடுகளிலும் கைத்தொழிற்புரட்சியின் செல்வாக்குப் பரவியது.
கைத்தொழிற் புரட்சி ஐரோப்பாவில் ஏற்பட்டமைக்கான பிரதான காரணம் வர்த்தக வளர்ச்சியாகும். 18 ஆம் நூற்றாண்டாகும்போது ஐரோப்பாவின் நிலைமையைப் பார்க்கும்போது பிரித்தானியா தவிர பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பானியா முதலிய நாடுகளும் குடியேற்ற நாடுகளைக் கொண்டிருந்ததுடன் பரவலான முறையில் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தமை தெரியவருகின்றது. கைத்தொழிற் புரட்சியானது பிரித்தானியாவில் ஆரம்பமானமைக்கான காரணங்களை ஆராய்வது முக்கியமானதாகும்.
கைத்தொழிற் புரட்சி பிரித்தானியாவில் ஆரம்பித்தமைக்கான காரணங்கள்
16 ஆம் நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பாவின் வெளிநாட்டு வர்த்தகம் வளர்ச்சி அடைந்திருந்தது. 18 ஆம் நூற்றாண்டாகும்போது ஐரோப்பிய நாடுகளுள் பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பானியா, ஒல்லாந்து எனும் நாடுகளை முந்திக்கொண்டு பிரித்தானியா வர்த்தகத்தில் முன்னணி வகித்தது. கைத்தொழில் துறையில் முதலீடு செய்யக்கூடிய செல்வந்தர்கள் பிரித்தானியாவில் உருவாகியிருந்தனர். அத்துடன் 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பிரித்தானியாவின் சனத்தொகையும் அதிகரித்திருந்தமையால் பண் டங்களுக்கான கேள்வியும் அதிகரித்திருந்தது. அதற்கேற்ப பொருள்களை உற்பத்தி செய்யவேண்டிய சவாலான ஒரு நிலைமையும் அங்கு உருவானது. இந்நிலை கைத்தொழிற்புரட்சி உருவாகுவதில் செல்வாக்குச் செலுத்தியது. அத்துடன் 14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக அங்கு விஞ்ஞான அறிவு வளர்ச்சி கண்டதை அவதானிக்க முடிகின்றது. இயந்திர சாதனங்களை உருவாக்குவதற்கு அந்த விஞ்ஞான அறிவு பெரிதும் உதவியது. அதேபோன்று இயந்திர சாதனங்களை உருவாக்குவதற்குத் தேவையான இரும்புக் கனியமும் பிரித்தானியாவில் காணப்பட்டதுடன் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்ட நிலக்கரியும் அங்கு தாராளமாகக் காணப்பட்டது.
இதே காலப்பகுதியில் பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் சனத்தொகை அதிகளவில் காணப்பட்ட போதிலும் அந்நாடுகளின் தூரநோக்கற்ற அரச கொள்கை காரணமாக பிரித்தானியாவுடன் ஒப்பிடுமளவில் அந்நாடுகளில் வர்த்தகம் வளர்ச்சியடைந் திருக்கவில்லை. ஆனால் பிரித்தானியா பல்வேறு வர்த்தக சட்டங்கள் மூலம் தமது குடியேற்ற நாடுகள் தவிர்ந்த வேறு நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளை விரிவாக் குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. எனவே பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகளுக்குத் தேவையான பொருள்களை பிரித்தானியாவிடமிருந்தே இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை உருவானதால் பிரித்தானியப் பொருள்களுக்கு குடியேற்ற நாடுகளில் சிறந்த கேள்வி நிலவியது. பிரித்தானியச் சந்தைகளில் அதிக கேள்வி நிலவிய சில பொருள்கள் இயந்திர சாதனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். பிரித்தானியாவின் பருத்தித் துணிகளுக்கு இந்தியாவில் அதிகளவு கேள்வி நிலவியமை சிறந்த உதாரணமாகும். பிரித்தானியாவின் பருத்தித் துணிகளுக்குக் குடியேற்ற நாடுகளில் கேள்வி நிலவிய போதிலும் அதுவரை காலமும் காணப்பட்ட பழைய உற்பத்தி முறைகளால் குறுகிய காலத்தில் புடைவை உற்பத்தியை அதிகரிக்க முடிய வில்லை. எனவே பிரித்தானிய உற்பத்திப் பொருள்களுக்குக் காணப்பட்ட அதிக கேள்வி காரணமாகக் குறுகிய காலத்தில் கூடியளவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்தது. இச்சவாலை எதிர்கொள்ளும் வகையில் பிரித்தானியாவின் கைத் தொழில் துறை வேகமாக வளர்ச்சி கண்டது.
அதே காலப்பகுதியில் பிரித்தானியாவின் விவசாயத் துறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது நில உடைமையாளர்களால் விவசாயிகளின் சிறிய நிலங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பெரிய விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. இது நில அடைப்பு இயக்கம் அல்லது வேலியடைப்பு இயக்கம் எனப்பட்டது. இதனால் தமது விவசாய நிலங்களை இழந்த கிராமிய விவசாயிகள் வேலை வாய்ப்புத் தேடி நகர்ப்புறங்களை நோக்கிப் புலம்பெயர்ந்தனர். அத்தோடு சிலுவை யுத்தங்கள் முடிவடைந்த பின்னர் நிலமானிய அடிமைகள் தமது பண்ணைகளுக்குச் செல்லாமல் நகரங்களில் குடியமர்ந்தனர். எனவே கைத்தொழில் துறைக்குத் தேவையான மேலதிக ஊழியர்கள் இலகுவாகக் கிடைத்தனர்.
ஏனைய நாடுகளைப் போலல்லாது பிரித்தானிய சமூகத்தில் எத்தரத்தில் இருந்த வர்களாலும் தமது திறமைக்கேற்ப பணம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. பிரித்தானியாவில் காணப்பட்ட அத்தகைய சுதந்திரமான சமூக பொருளாதாரப் பின்னணி புதிய சிந்தனைகளின் வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்ததுடன் அது கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கும் காரணமாய் அமைந்தது. இவ்வாறு பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களுக்குத் தக்கவாறு கைத்தொழிற் துறையிலும் வியாபாரத்துறையிலும் முதலீடு செய்வதற்கான கடன் வசதிகளை வழங்கக்கூடிய வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பிரித்தானியாவில் தோற்றம் பெற்றமையை அவதானிக்க முடிந்தது.
பிரித்தானியாவில் நிலவிய அரசியல் உறுதிப்பாடும் கைத்தொழிற் புரட்சிக்கு உதவியாக அமைந்தது. பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாயமைந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சுதந்திரம், உதவி மற்றும் வரிச் சலுகை என்பன பாராளுமன்றத்தின் மூலம் கிடைக்கப்பெற்றன.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரித்தானியாவில் கைத்தொழில் புரட்சி ஏற்படுவதற்குப் பொருத்தமான பின்னணி அதிகளவில் காணப்பட்டது. பிரித் தானியா ஒரு தீவாகக் காணப்பட்டமை, உள்நாட்டு வர்த்தகம் நாடு முழுவதும் பரவி பொதுச் சந்தையொன்று வளர்ச்சியடைந்திருந்தமை, உற்பத்திப் பொருள்களுக்கு உயர்ந்த விலையைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை, இலண்டன் நகரம் மூலப்பொருள், மூலதனம், முடிவுப்பொருள் முதலியவற்றை விநியோகிக்கும் மத்திய நிலையமாக விளங்கியமை போன்ற காரணங்களால் ஏனைய நாடுகளை விடக் கைத்தொழில் உற்பத்தித் துறையில் பிரித்தானியாவால் முதலிடம் வகிக்க முடிந்தது.
கைத்தொழிற் புரட்சியின் வளர்ச்சி
பிரித்தானியாவின் கைத்தொழில் புரட்சியானது பின்வரும் மூன்று கைத்தொழில் துறைகளை அடிப்படையாகக் கொண்டே நிகழ்ந்தது.
நெசவு
இரும்பு
நிலக்கரி
மேற்படி கைத்தொழில் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது காலப்போக்கில் பின்வரும் துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
போக்குவரத்து
தொடர்பாடல்
விவசாயம்
நெசவு
பிரித்தானியத் துணிவகைகளுக்குக் குடியேற்ற நாடுகளில் காணப்பட்ட உயர்ந்த கேள்வி காரணமாகப் புடைவை உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை அந்நாட்டுப் புடைவை உற்பத்தியாளர்களுக்குச் சவாலாக அமைந்தது. 1733 ஆம் ஆண்டு ஜோன் கே என்பவரால் பறக்கும் நூனாழி கண்டுபிடிக்கப்பட்டமையால் நெசவு செய்யும் செயற்பாடு வேகமடைந்தது. ஆயினும் நூல் நூற்கும் செயற்பாடு மந்த கதியிலே இடம்பெற்றமை பிரச்சினையாக அமைந்தது. அதாவது நூல் நூற்பவர்கள் ஆறு பேரினால் ஒரு நாளில் நூற்கப்படும் நூலானது துணி நெய்பவர் ஒருவருக்கு ஒரு நாளைக்குப் போதுமானதாகக் காணப்பட்டது. எனவே நூல் நூற்பதை வேகப்படுத்த வேண்டிய தேவை பிரித்தானியாவில் ஏற்பட்டது. அதன் விளைவாக 1764 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஹாகிரீவ்ஸ் என்பவரால் ஜெனீ எனப் படும். நூல் நூற்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்டது. இவ்வியந்திரம் கைகளினாலேயே இயக் கப்பட்டது. 1769 ஆம் ஆண்டு ரிச்சட் ஆக்ரைட் என்பவரால் நீர் வலுவி னால் இயங்கும் சிறப்பான தொரு நூல் நூற்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்டது. முன்னர் கண்டு பிடிக்கப்பட்டதை விட பின்னர் கண்டுபிடிக்கப் பட்ட நூல் நூற்கும் இயந்திரம் சிறப்பானது. இது நீர் சக்கரம் என அழைக்கப்பட்டது. முன்னர் பருத்தி நெய்வதற்கு பயன்படுத்தப் பட்ட இயந்திரத்துடன் ஒப்பிடும்போது ஆக்ரைட்டின் கண்டுபிடிப்பு முக்கியமானது. ஆயினும் அது அளவில் பெரியதாக இருந்தமையால் வீடுகளில் வைத்துப் பயன்படுத்துவது சிரமமாகக் காணப்பட்டது. அதே போன்று அதை செயற்படுத்துவதற்கு வேகமான நீரோட்டம் தேவைப்பட்டது. எனவே நீரோட்ட வசதியுள்ள இடங்களில் மாத்திரமே அதனைப் பயன்படுத்த முடிந்தது.
ஜெனி இயந்திரம், நீர்ச்சக்கரம் இரண்டினதும் அடிப்படையில் சாமுவெல் கொறம்ப்டன் என்பவர் 1779 ஆம் ஆண்டில் நூல் நூற்கும் மியூல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் மென்மையானதும் சக்தி வாய்ந் ததுமான நூலை உற்பத்தி செய்ய முடிந்தது. 1785 ஆம் ஆண்டு எட்மன் காட் ரைட் என்பவரால் மியூல் இயந்திரத்தை நீராவியால் இயங்கச் செய்யும் முறை கண்டறியப்பட்டது. எனவே முப்பது வருட காலப்பகுதியில் நூல்நூற்றல் செயற்பாட்டை மேம் படுத்துவதற்காகப் புதிய இயந்திர சாதனங்களைப் போலவே புதிய தொழிநுட்ப முறையையும் கண்டறிய முடிந்தது. இதலால் நெசவுக்கைத்தொழில் குறுகிய காலத்திற்குள் பாரியை வளர்ச்சி கண்டது.
இரும்பு
பிரித்தானியா இரும்புத்தாதை அதிகளவு கொண்ட நாடாகும். கைத்தொழில் புரட்சிக்கு முன்னரே அங்கு போர் ஆயுதங்கள், விவ சாய உபகரணங்கள் வீட்டுப் பாவனைப் பொருள்கள் என் பவற்றைத் தயாரிப்பதற்காக இரும்பும் உருக்கும் உற்பத்தி செய்யப்பட்டன. அதற்கான இரும்புத்தாது விறகு மூலமே உருக்கப்பட்டுள்ளது. ஆயி னும் கைத்தொழில் புரட்சி யின் பின்னர் இயந்திரங் களைத் தயாரிப்பதற்காகப் பாரியளவில் இரும்பும் உருக் கும் தேவைப்பட்டன. விறகை எரிபொருளாகக் கொண்டு பாரியளவில் இரும்பையும் உருக்கையும் உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே அதற்கான மாற்றுவழி முறையொன்றை கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதன்படி ஆபிரகாம் டர்பி என்பவரால் நிலக்கரி மூலம் இரும்புத்தாதை உருக்கும் முறை கண்டறியப்பட்டது. அதன்மூலம் வார்ப்பு இரும்பை உற்பத்தி செய்ய முடிந்தது. 1784 ஆம் ஆண்டு ஹென்றி கோட் என்பவர் கண்டுபிடித்த ரோலர் இயந்திரம் மூலம் பதப்படுத்தப்பட்ட இரும்பை உற்பத்தி செய்யமுடிந்தது. 1856 ஆம் ஆண்டில் ஹென்றி பேஸ்மர் என்பவரால் இரும்பிலிருந்த கழிவுகளை அகற்றி உருக்கு உற்பத்தி செய்யும் முறை கண்டறியப்பட்டது. இம்முறையானது மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டு 1860 ஆம் ஆண்டு திறந்த இரும்பு உலை கண்டறியப்பட்டதன் மூலம் உயர் தரத்திலான உருக்கை உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த முறையின் மூலம் இலாபகரமாகவும் வேகமாகவும் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டது. இரும்பு உருக்குக் கைத்தொழிலில் மேலும் ஒரு கட்டமாக விலியம் சீமன்ஸ் என்பவர் இரும்புத்தாதை உருக்கக்கூடிய மின் அடுப்பைக் கண்டுபிடித்தார். இப்புதிய கண்டுபிடிப்புக் காரணமாக இரும்பு உருக்குக் கைத்தொழில் துரித வளர்ச்சி கண்டது.
நிலக்கரி
பிரித்தானியா நிலக்கரிப் படிவுகள் பெருமளவிலுள்ள நாடாகும். தென் வேல்ஸ், யோக்சயர், லங்காசயர் முதலிய பிரதேசங்கள் நிலக்கரிப் படிவுகள் அதிகமாகக் கொண்டவையாகும். இரும்பை உருக்குவதற்கும் இயந்திரங்களை இயக்குவதற்கும் வீட்டுப் பாவனைக்கும் இலாபகரமானதும் செயற்றிறன் மிக்கதுமான எரிபொருளாக நிலக்கரி விளங்கியது. கைத்தொழில் புரட்சியுடன் நிலக்கரிக்கான கேள்வி அதிகரித் தாலும் நிலக்கரி அகழ்வு இலகுவானதாக அமையவில்லை. அகழ்வின்போது நீரை வெளியேற்றுதல், ஆழமான அகழ்வின்போது சுரங்கத்தினுள் விஷ வாயு உருவாதல், சுரங்கத்தினுள் வெப்பநிலை அதிகரித்தல், சுரங்கத்தினுள் வெளிச்சம் ஏற்படுத்துதல் முதலிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்ட வேளையில் புதிய கண்டுபிடிப்புகள் பல தோற்றம் பெற்றன.
தோமஸ் நியூகொமன் என்பவர் சுரங்கத்தினுள் சேரும் நீரை குழாய் மூலம் வெளியேற்றவும் குழாய் மூலம் வெளியிலிருந்து வளியை அனுப்பி சுரங்கத்தைக் குளிரூட்டக்கூடிய நீராவியால் இயங்கும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்தார். ஆயினும் அவ்வியந்திரம் வினைத்திறன் குறைந்ததாகக் காணப்பட்டதுடன் நிலக்கரிக் கைத்தொழில் தவிர்ந்த வேறு தொழில்களுக்கும் அதனைப் பயன்படுத்த முடியாதிருந் தது. எனவே ஜேம்ஸ் வோட் என்பவர் நியூகொமனின் நீராவி இயந்திரத்தை விருத்தி செய்து செயற்றிறன் மிக்க நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்தார்.
அது எல்லாக் கைத்தொழில்களுக்கும் பயன்படுத்தக்கூடிய வினைத்திறனான இயந்தி ரமாகத் திகழ்ந்தது.
ஹம்பிறி டேவி என்பவரால் பாதுகாப்பான விளக்கு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நிலக்கரிச் சுரங்கங்கள் வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதுவரை காலமும் செப்புக் கம்பிகளைப் பயன்படுத்திப் பெண்களும் சிறுவர்களுமே நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து நிலக்கரியை வெளியே கொண்டு வந்தனர். 1839 ஆம் ஆண்டு இரும்புக் கேபிள் கம்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் மூலம் சுரங்கங் களிலிருந்து இலகுவாக நிலக்கரியை வெளியே கொண்டு வர முடிந்தது.
நிலக்கரிக் கைத்தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அதன் மூலம் இன்னும் பல உப கைத்தொழில்கள் வளர்ச்சி கண்டன. நிலக்கரியை எரிக்கும்போது உண்டாகும் தார் பெருந்தெருக்களை அமைப்பதற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அதே போன்று புடைவைகளை நிறமூட்டுவதற்குத் தேவையான சாயங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் மருந்துகள், நறுமணப் பொருள்கள், கிருமிநாசினி, களை நாசினி, செயற்கைப் பசளை போன்றனவும் நிலக்கரியின் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டன.
போக்குவரத்து
கைத்தொழில் புரட்சியின் செல்வாக்குக் காரணமாக போக்குவரத்துத் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. கைத்தொழில் துறையில் ஏற்பட்ட விருத்தியினால் தொழிற்சாலைக்குத் தேவையான மூலப்பொருள்களை கொண்டு செல்லவும், முடிவுப் பொருட்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும் வீதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே 1811 ஆம் ஆண்டு ஜோன் மெக்கடம் என்பவரால் பெருந்தெருக்களை அமைக்கும் முறையொன்று கண்டறியப்பட்டது. அது மெக்கடம் முறை எனப்பட்டது.
இம்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட பெருந்தெருக்களில் பண்டங்களையும் பயணிகளையும் சுமந்த வாகனங்கள் வேகமாகவும் வசதியாகவும் பயணம் செய்யக் கூடியதாக இருந்தன. எனவே அவ்வாறான பல நூறு மைல்கள் நீளமான பாதைகள் பிரித்தானியாவிலும் ஸ்கொட்லாந்திலும் மிகத் துரிதமாக அமைக்கப்பட்டன.
இவ்வாறு பெருந்தெருக்கள் மேம்படுத்தப்பட்டதுடன் அவற்றில் போக்குவரத்து செய்யும் இயந்திரங்களும் வளர்ச்சி கண்டன. 1814 ஆம் ஆண்டு ஜோர்ஜ் ஸ்டீவன்சன் நீராவியின் சக்தியால் இயங்கக்கூடிய புகையிரத என்ஜினைக் கண்டுபிடித்தமை கைத்தொழில் புரட்சியின் முக்கிய கட்டமாகும். இதன்மூலம் நிலக்கரி மற்றும் மூலப் பொருள்களைக் கொண்டு செல்வதற்குப் புகைவண்டிகள் பெரிதும் பயன்படுத்தப் பட்டன. கைத்தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவுப் பொருள்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல புகையிரதங்கள் பயன்படுத்தப்பட்டதன் மூலம் குறைந்த நேரத்தில் பெருந்தொகையான பொருள்களை ஒரே தடவையில் கொண்டு செல்ல முடிந்தமையால் போக்குவரத்துச் செலவும் குறைந்தது. புகையிரத என்ஜினைக் கண்டுபிடித்ததன் மூலம் போக்குவரத்துத் துறையில் புரட்சிசெய்த ஜோர்ஜ் ஸ்டீவன்சன் 17 வயதுவரை எழுத வாசிக்கத் தெரியாதவராக இருந்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.
கைத்தொழிற் புரட்சி காரணமாகத் தரைமார்க்கப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியானது நீர்ப்போக்குவரத்திலும் செல்வாக்குச் செலுத்தியது.
1807 ஆம் ஆண்டு அமெரிக்க இனத்தவரான ரொபட் புல்டன் புகைப்படகைக் கண்டுபிடித்தார். பயணிகளைக் கொண்டு செல்லுவதற்காக 1811ஆம் ஆண்டு ஹென்றி பெல் புகைக் கப்பலைக் கண்டுபிடித்தார். புகைக் கப்பலுக்கான எரிபொருளாக ஆரம்பத்தில் விறகும் பின்னர் நிலக்கரியும் பயன் படுத்தப்பட்டன. 1885 ஆம் ஆண்டு ஜேர்மனியரான டெம்லர் மோட்டார்
வண்டியைக் (கார்) கண்டுபிடித்ததுடன் 1903 ஆம் ஆண்டு அமெரிக்கரான ரைட் சகோதரர்களால் ஆகாய விமானமும் கண்டுபிடிக்கப்பட்டமையால் போக்குவரத்துத் துறை பாரிய மாற்றங்களைக் கண்டது. இவ்வாறு கைத்தொழில் புரட்சியின் பரம்பல் காரணமாக குறுகிய காலத்தில் நிலம், நீர், ஆகாயம் ஆகிய மார்க்கங்களில் பாரிய போக்குவரத்துப் புரட்சியொன்று ஏற்பட்டது.
தொடர்பாடல்
போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிக்குச் சமமாக தொடர்பாடல் துறையிலும் வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. அதுவரை காலமும் பிரித்தானியாவில் அதிக செலவு டைய தபால் முறையொன்றே காணப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகளின்போது குறுகிய காலத்தில் குறைந்த செலவில் கடிதங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே 1840 ஆம் ஆண்டு 'பெனீ தபால் சேவை' என்ற பெயரில் புதிய தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் இங்கிலாந்து நாட்டினுள் எந்தவொரு பகுதிக்கும் ஒரு பெனீ அல்லது ஒரு பென்ஸ் செலவில் கடிதமொன்றை அனுப்ப முடிந்தது.
கைத்தொழிற் துறையிலும் போக்குவரத்துத் துறையிலும் ஏற்பட்ட துரித வளர்ச்சி காரணமாகக் கடிதப் போக்குவரத்தை விட இரண்டு இடங்களுக்கிடையே விரைவான தொடர்பாடல் முறையொன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக 1844 ஆம் ஆண்டு சாமுவெல் மோஸ் என்பவரால் தந்தி முறை கண்டறியப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட இரு இடங்களை மின் கம்பி ஒன்றின் மூலம் இணைத்து அதன் மூலம் குறியீடுகளைப் பயன்படுத்தி செய்திகள் பரிமாறும் முறை ஆரம்பமானது.
1895 ஆம் ஆண்டு குக்லி மார்க்கோனி அவர்கள் வானலைகள் மூலம் செய்திப் பரிமாற்றம் செய்யும் வானொலியைக் கண்டுபிடித்தமையும் ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தமையும் பாரிய புரட்சிகளாகும். வானொலி, தொலைக்காட்சிச் சேவைகள் தொடர்பாடல் துறைகளில் மாத்திரமல்லாது வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகளின் முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக அமைந்தன.
விவசாயம்
கைத்தொழில் புரட்சி இடம்பெற்ற அதே காலத்திலேயே விவசாயத் துறையிலும் பாரிய வளர்ச்சி ஏற்பட்டது. அதில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள் பின்வருமாறு:
பாரிய விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்பட்டமை.
சுழற்சி முறை, நிலமாற்று முறை பயிர்ச்செய்கை.
விலங்கு வளர்ப்பில் புதிய தொழினுட்பமுறைகள் பயன்படுத்தப்பட்டமை.
புதிய விவசாய முறைகளின் பயன்பாடு
நவீன உபகரணங்களின் பயன்பாடு
கைத்தொழில்மயமாக்கலுடன் பாரிய தொழிற்சாலைகள் உருவானதன் காரணமாக அதிகளவான மக்கள் நகர்ப்புறம் நோக்கி ஈர்க்கப்பட்டதன் காரணமாக அவர்களின் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவில்லை. அதேபோன்று கிராமப் புறங் களில் எஞ்சியிருந்த சிறு நில உரிமையாளர்களுக்கும் தமது விவசாய நிலங்களை பல்வேறு காரணங்களால் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு
கைவிடப்பட்ட நிலங்களையும் விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்ட சிறு நிலங்களையும் ஒன்றிணைத்து பாரிய விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. இது நில அடைப்பு இயக்கம் எனப்பட்டது. இவ்விவசாயப் பண்ணைகளில் விவசா யம் மேற்கொள்ளப்பட்டமையால் விவசாயத்துறை வளர்ச்சி கண்டது.
பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்காக நிலமாற்று முறை அறிமுகம் செய்யப்பட்டமை நோய்ப் பரவலை குறைப்பதற்கும் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் காரணமாகியது. ஜென்ரோட்டல் என்பவரால் ஏர் பூட்டப்பட்ட குதிரைகள் மூலம் வரிசையாகப் பயிரிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் விதைப்பதற்குத் தேவையான விதையின் அளவைக் குறைத்துக் கொள்ளவும் அதிக விளைச்சலைப் பெற்றுக் கொள்ளவும் முடியுமாயிருந்தது.
அதேபோன்று விலங்கு வேளாண்மையிலும் பயன்படுத்தப்பட்ட தொழினுட்ப முறை காரணமாக அத்துறையிலும் உற்பத்தியின் அளவு அதிகரித்தது. ரொபட் பெக்வெல் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட செம்மறி ஆடுகள் இனப்பெருக்கம் தொடர்பிலான புதிய கண்டுபிடிப்புகளை உதாரணமாகக் கூறலாம்.
கைத்தொழில் புரட்சியின் பின்னர் செயற்றிறன் மிக்க கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டமையால் விவசாயத் துறையிலும் பாரிய புரட்சி நிகழ்ந்தது. காடுகளை அழிப் பதற்கும் நிலத்தைப் பண்படுத்துவதற்கும் விதைகளை உற்பத்தி செய்வதற்கும் நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோன்று விளைச்சலை அதிகரிக்கும் வகையில் உரம் தயாரிப்பின் பக்கம் கவனம் செலுத்தியமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகளின் பயனாக 1800 ஆம் ஆண்டில் குவானோ உரம் என்னும் உரம் தென்னாபிரிக்காவில் உற்பத்திசெய்யப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்காவிலும் இவ்வுரம் தயாரிக்கப்பட்டது. இரசாயன உரங்கள், கிருமி நாசினி கள் என்பன பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
நவீன கைத்தொழிற் புரட்சியுடன் வளர்ச்சி கண்ட விவசாய இரசாயன உற்பத்திகளும் நவீன போக்குவரத்துச் சாதனங்கள் மற்றும் களஞ்சியப்படுத்தல் வசதிகள் காரணமாக விவசாய, விலங்கு வேளாண்மை உற்பத்திகளைக் குறைந்த செலவில் மேற்கொள்ள முடிந்ததுடன் அவற்றைக் குறைந்த விலையில் விற்பனை செய்யவும் முடிந்தது. எனவே விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டது.
வேறு நாடுகளில் கைத்தொழில் புரட்சியின் பரவல்
பிரித்தானியாவில் ஆரம்பித்த கைத்தொழில் புரட்சியானது மிகக் குறுகிய காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தின் ஏனைய நாடுகளிலும் பரவியது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களிலும் அது பரவியது. 19 ஆம் நூற்றாண்டில் வேறு நாடுகளில் கைத்தொழில் புரட்சி பரவுவதில் செல்வாக்குச் செலுத்திய காரணங்களாவன.
உலகம் முழுவதும் சனத்தொகை துரித வளர்ச்சியை அடைந்தமையால் பொருள் களுக்கான கேள்வி அதிகரித்தமை.
ஐரோப்பாவில் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி
பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டமை.
இதன்படி உலகின் ஏனைய நாடுகளும் பிரித்தானியாவைப் போன்றே இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி தமது உற்பத்திகளைத் துரிதப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டின. ஜேர்மனியிலும் பிரான்சிலும் மூலப்பொருள்கள் காணப்பட்ட பிரதேசங்களிலும் சந்தைகளுக்கு சமீபமாகவும் கைத்தொழிற்சாலைகள் தோற்றம் பெற்றன. கைத்தொழில் வளர்ச்சி காரணமாக முதலாம் உலக மகாயுத்தத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே ஜேர்மன் வல்லரசுத் தன்மையுடன் விளங்கியது. அதனைத் தொடர்ந்து பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரியா, ஹங்கேரி, பிரஷ்யா முதலிய ஐரோப்பிய நாடுகளிலும் கைத்தொழில் புரட்சி பரவியது. ஆஸ்திரிய வல்லரசு 30 000 மைல்கள் நீள மான பாதைகளை அமைத்ததுடன் பெல்ஜியத்திலும் பாதைகள் இரு மடங்கு வளர்ச்சி கண்டன. தொடர்ந்து எல்லா நாடுகளிலும் புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்டன. பிரித்தானியாவின் குடியேற்றமான அமெரிக்கக் குடியேற்றங்களிலும் கைத்தொழில் புரட்சி பரவியது. சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் கைத்தொழில் துறை வேகமான வளர்ச்சி கண்டது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய தசாப் தங்கள் சிலவற்றிலும் கைத்தொழில் துறையில் அதிகளவு வளர்ச்சி கண்ட ஒரே ஆசிய நாடாக ஜப்பான் திகழ்ந்தது. மேலைத்தேய முறைகளையும் மாதிரிகளையும் பின்பற்றி விஞ்ஞானத் தொழினுட்பத் துறைகளில் அதிவளர்ச்சி கண்ட நாடுகளுடன் போட்டி யிடக்கூடிய நாடாக ஜப்பான் மாறியிருந்தது.
20ஆம் நூற்றாண்டாகும்போது சீனா, இந்தியா, இலங்கை முதலிய ஆசிய நாடுகளிலும் கைத்தொழில் புரட்சியின் செல்வாக்கு பரவியதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு கைத்தொழில் புரட்சியானது உலகின் ஏனைய நாடுகளில் பரவியமையாலும் போக்கு வரத்து தொடர்பாடல் துறைகளில் ஏற்பட்ட துரித வளர்ச்சியாலும் உலகம் முழுவதும் ஒரு பூகோளக் கிராமமாக மாறும் நிலை ஏற்பட்டது.
கைத்தொழில் புரட்சியின் விளைவுகள்
உலகம் முழுதும் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி காரணமாக அந்த நாடுகளில் அரசியல், பொருளாதார, சமூகத் துறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்கள் நன்மையானவையாகவும் தீமையானவையாகவும் விளங்கின.
அரசியல் விளைவுகள்
கைத்தொழில் புரட்சியின் காரணமாக உச்ச அளவு இலாபத்தைப் பெறும் நோக்குடன் பணத்தை முதலீடு செய்த பணக்கார வகுப்பினரும் உழைப்பை விற்று வாழ்க்கை நடத்தும் ஏழை வகுப்பினரும் உருவாகினர். பணக்கார முதலாளிமார் ஏழைத் தொழிலாளரின் உழைப்பைச் சுரண்டி அவர்களுக்குக் குறைந்த கூலியை வழங்கியதுடன் தாம் அதிக இலாபத்தை அடைந்தனர். எனவே தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் கீழ் மட்டத்தில் இருந்தது. இதன் காரணமாக முதலாளி, தொழிலாளி வர்க்கங்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. எனவே தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தங்கள் என்னும் வகையில் தொழிலாளரின் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பமாயின. இந்த நிலைமை காரணமாக பொதுவுடமைவாதம், தாராண்மைவாதம் ஆகிய பல்வேறு அரசியல் கொள்கைகளும் தோற்றம் பெற்றதைக் காணமுடிகின்றது.
அடம்ஸ்மித் என்பவர் முதலாளித்துவம் என்னும் எண்ணக்கரு உலகம் முழுவதும் பரவும் வகையில் அரசின் தலையிடாகக் கொள்கையை முன்வைத்தார். நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் அரசின் தலையீட்டைக் குறைந்தளவினதாக்கும் கொள்கை அரசு தலையிடாக் கொள்கை எனக் கருதலாம். அத்துடன் கைத்தொழில்மயமாக்கல் ஐரோப்பா முழுதும் பரவியமையால் குறைந்த விலைக்கு மூலப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளவும் கூடிய விலைக்கு முடிவுப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்குமான தேவை எழுந்தது. எனவே ஐரோப்பிய நாடுகள் தமது குடியேற்ற நாடுகளில் முழுமையான அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தும் போட்டியில் ஈடுபட்டன.
எனவே 1850களின் பின்னர் மேற்படி குடியேற்றவாதக் கொள்கை புதிய குடியேற்ற வாதம் எனப்பட்டது. இவ்வாறு தமது குடியேற்றங்களை விஸ்தரிக்கும் போட்டியில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டமை முதலாம் உலக மகா யுத்தத்திற்கான அடிப்படைக் காரணியாக அமைந்தது.
பொருளாதார விளைவுகள்
கைத்தொழில் உற்பத்தி அதிகரிப்பு, வர்த்தக நடவடிக்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தல் என்பன கைத்தொழில் புரட்சியின் விளைவால் ஏற்பட்ட பாரிய மாற்றங்களாகும். எனவே தொழிற்சாலை உரிமையாளர்களான பணக்கார வர்க்கமும் வர்த்தக வகுப்பும் சமூகத்தில் முறையாக வளர்ச்சியடைந்தன. சிறுநில உடைமையாளர்களான விவசாயிகளுக்குத் தமது தொழிலை மேற்கொள்ள முடியாது போகவே கைத்தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தன்னிறைவுப் பொருளாதார முறை வீழ்ச்சியடைந்து சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர் வகுப்பொன்று தோற்றம் பெற்றது. இதனால் விவசாயப் பொருளாதாரம் பின் தள்ளப்பட்டு ஏற்றுமதி, இறக் குமதி அடிப்படையிலான வர்த்தகப் பொருளாதாரம் முன்னணிக்கு வந்தது. விவசாய நடவடிக்கையும் கைத்தொழில்மயமானதால் உணவுப் பண்டங்களும் பெருமளவில் சந்தைக்கு நிரம்பல் செய்யப்பட்டன. எனவே ஐரோப்பிய நாடுகளிலும் அவர்களின் குடியேற்றங்களான ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் உள்நாட்டு வர்த்தகத்தைப் போலவே வெளிநாட்டு வர்த்தகமும் வளர்ச்சி கண்டது. அது போலவே முதலாளித்துவப் பொருளாதாரமும் உலகெங்கும் வேகமாகப் பரவியது.
விரிவடைந்த இவ்வர்த்தக நடவடிக்கைகளுக்கான முதலீடுகளைத் தனிப்பட்ட முயற்சியாளர்களால் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே முயற்சியாளர் கள் சிலர் ஒன்றிணைந்து தனித்தனி கூட்டு வர்த்தகக் கம்பனிகளை உருவாக்கிக் கொண் டனர். இவ்வர்த்தகக் கம்பனிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தமது நாடுகளின் அரச அனுசரணையுடன் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொண்டன.
இவ்வர்த்தக நிறுவனங்கள் ஆரம்பத்தில் உள்நாட்டு வர்த்தகர்களைக் கொண்டமைந்த போதிலும் 19 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் பலதேசியக் கம்பனிகளாக
உருவாகின. பொருள் உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்ட இக்கம்பனிகள் அதனோடு இணைந்த வகையில் நிதி மற்றும் வங்கி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. அதன் மூலம் வர்த்தகர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்பட்டதுடன், நிதிக் கொடுக்கல் வாங்கல்களும் இலகுவாக்கப்பட்டன.
சமூக விளைவுகள்
கைத்தொழில் புரட்சியானது சமூகத்தில் நன்மையானதும் தீமையானதுமான மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தது. கைத் தொழில்மயமாக்கத்துடன் அதிகள் வில் நகரங்கள் உருவாகியதுடன் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையும் பாரிய மாற்றங்களுக்குள்ளானது. கைத்தொழிற் சாலைகளில் உற்பத்தி செய்த பொருள் களை மக்கள் விலைகொடுத்து வாங்க முடிந்தது. அதேபோன்று கைத்தொழில் துறையில் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புக்களும் கிடைத்தன. உயர்ந்தது. ஆயினும் காலப்போக்கில் கைத்தொழிற்புரட்சி, சமூகத்தில் நன்மை யான விளைவுகளுடன் தீயவிளைவுகளையும் ஏற்படுத்தியது.
எனவே மக்களின் வாழ்க்கைத் தரமும் கைத்தொழில்மயமாக்கம் காரணமாக ஐரோப்பாவில் பாரிய நகரங்கள் பல தோன்றி விரைவாக வளர்ச்சியடைந்தன. அதன் பிரதான விளைவு யாதெனில் அந்நகரங்கள் பெரு மளவில் சனநெருக்கடி மிக்கவையாக மாறியமையாகும். ஆயினும் அந்நகரங்களின் அடிப்படை வசதிகள் மிகக்குறைந்த வேகத்திலே வளர்ச்சியடைந்தன. உதாரணமாக வியன்னா நகரில் 1847ஆம் ஆண்டுக்கு முன்னர் 20 வருட காலப் பகுதியில் சனத் தொகை 20% இனால் வளர்ச்சியடைந்த போதிலும் வீடமைப்பு 11.5% மாத்திரமே வளர்ச்சி கண்டது.
கைத்தொழிற்சாலைகள் பரவியதால் உலகின் பல நகரங்களில் கைத்தொழில் நகரங்கள் தோன்றின. கிராம மக்கள் இந்நகரங்களை நோக்கி ஈர்க்கப்பட்டனர். பாரியளவு தொழில்களினால் நகரங்களில் தொழிலை இலகுவாகப் பெற்றமையால் நகர மயமாக்கலும் விரைவாக இடம்பெற்றது.
வகுப்பு ரீதியாக சமூகவமைப்பின் தோற்றம் கைத்தொழிற்புரட்சியின் முக்கிய விளைவாகும். 20 ஆம் நூற்றாண்டாகும்போது ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் பொருளாதார நடவடிக்கைகள் கைத்தொழிற்சாலை உரிமையாளர்களான செல்வந்தர் களாலே மேற்கொள்ளப்பட்டன. இச்செல்வந்த வகுப்பினர் இரு பிரிவினர்களாகக் காணப்பட்டனர்.
நில உடைமைப் பிரபுக்கள்
மத்தியதர வகுப்பினரான வர்த்தகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், வங்கி யாளர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், ஒப்பந்தக்காரர்கள்
மேற்படி வகுப்பினர் குறைந்த கூலிக்கு தொழிலாளரை வேலைக்கமர்த்தி அதிகளவு இலாபமடைந்தனர். சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொண்ட செல்வந்த வகுப்பினர் சொகுசாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்தனர்.
ஆயினும், உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் கவலைக்கிடமானதாக விளங்கியது. தமது வாழ்க்கையை நடாத்துவதற்காக தொழிலாளர் குடும்பங்களில் கணவன், மனைவி இருவருமே தொழில் செய்ய வேண்டியிருந்ததுடன் சில சந்தர்ப்பங்களில் தமது பிள்ளைகளைக் கூட வேலைக்கமர்த்த வேண்டியிருந்தது. நாளொன்றுக்கு 12 அல்லது 14 மணித்தியாலம் வேலை செய்ய வேண்டியிருந்ததுடன் அவர்களது தொழிலும் கடினமானதாகக் காணப்பட்டது. பெண்களும் சிறுவர் களும் வசதிகளற்றதும் பாதுகாப்பற்றதுமான தொழிற்சாலைகளிலே வேலை செய்தனர். தொழிலாளர்கள் தமது தொழிற்சாலைகளுக்கு அருகிலே வசிப்பதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். எனவே சேரிப்புறங்களில் குடியேறிய அவர்களுக்கு குறைந்தளவிலான சுகாதார வசதிகளாவது கிட்டவில்லை. இவ்வாறான சேரி வீடுகளில் ஓர் அறைக்குள்ளேயே ஒரு குடும்பத்தின் அங்கத்தவர் அனைவரும் வாழவேண்டிய நிலை காணப்பட்டது. இவ்வாறு சமூகத்தின் பெரும்பான்மையான தொழிலாளர்கள் வறுமை, குறைந்த சம்பளம், குறைந்த வாழ்க்கைத்தரம், வேலையின்மை என்னும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். இத்தகைய துன்பமான வாழ்க்கைச் சூழலில் குடும்பங்களில் மதுபாவனையின் பயன்பாடு, தவறான செயல்களில் ஈடுபடல், நெறிபிறழ்ந்த வாழ்க்கை முறையுடன் பல்வேறுவகையான துஷ்பிரயோகங்களும் இடம்பெற்று வந்தன.
18 ம் , 19 ம் நூற்றாண்டுகளில் இவ்வர்க்க ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு காண்பதற்கு பல நாடுகளிலும் கவனஞ்செலுத்தப்பட்டது. இவ்வரசியல் கொள்கைகளின் செல் வாக்குக் காரணமாகத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரித்தல், வேலை நேரத்தைக் குறைத்தல், அடிப்படைச் சுகாதார வசதிகளைப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான தொழிற்சங்க அமைப்பு ரீதியாக தொழிலாளர் செயற்பட ஆரம்பித்தனர். எனவே ஏழைத் தொழிலாளர் வகுப்பினரின் சமூக, பொருளாதார நலன்புரி நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட்டு சட்டங்களை விதித்து செயற்பட்டதை எல்லா நாடுகளிலும் அவதானிக்க முடிந்தது.
கைத்தொழில் புரட்சி காரணமாக ஏற்பட்ட மற்றுமொரு தீய விளைவு சூழல் மாச டைதலாகும். தொழிற்சாலைக் கழிவுகள் நதிகளிலும் நீர்நிலைகளிலும் கலந்தமையால் நீர் மாசடைந்தது. அதேபோன்று தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிய புகை காரணமாக சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டதுடன் அப்புகை வளிமண்டலத்தில் கலந்து நிலையாகப் படிந்த காரணத்தால் எதிர்கால மனித சமூகத்தின் நிலைத்த தன்மைக்கே மிகப் பெருஞ்சவாலாக அது மாறியுள்ளது.
கைத்தொழிற்புரட்சி இலங்கையில் செல்வாக்குச் செலுத்திய விதம்
பிரித்தானியாவில் ஆரம்பித்த கைத்தொழிற் புரட்சியானது குறுகிய காலத்தில் உலகம் முழுதும் பரவியமையை ஏற்கனவே அறிந்தோம். பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டதைப் போன்ற கைத்தொழில் புரட்சி 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஏற்படாவிட்டாலும் அதன் செல்வாக்கு இலங்கையிலும் ஏற்பட்டது. ஏனெனில் பிரித்தானியாவில் கைத்தொழில் புரட்சி நிகழ்ந்த காலத்தில் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகக் காணப்பட்டது. பிரித்தானிய செல்வந்தர்கள் இலங்கை வந்து பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் முதலீடுகளை மேற்கொண்டனர். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட தேயிலை, தென்னை, இறப்பர் பெருந்தோட்ட உற்பத்திகளுக்குத் தேவையான இயந்திர சாதனங்கள் பிரித் தானியாவிலிருந்து தருவிக்கப்பட்டன.
1804 ஆம் ஆண்டு ஆளுநர் பிரட்றிக் நோர்த் அவர்களால் கோப்பி விதைகளைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட்டமை.
தேயிலைக் கொழுந்தை உலர்த்துதல் முதல் ஏற்றுமதிக்காகத் தரப்படுத்துதல்என்பன இயந்திர சாதனங்களாலேயே மேற்கொள்ளப்பட்டமை.
இறப்பரை ஏற்றுமதிக்காகத் தயார்படுத்துவதற்கு இயந்திர சாதனங்கள் பயன்படுத்தப்பட்டமை.
பெருந்தெருக்கள் அமைத்தல். மெக்கடம் முறை 1885 ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டமை.
பெருந்தோட்டங்களிலும் தொழிற்சாலைகளிலும் கூலிக்கு வேலைசெய்யும் தொழிலாளர் வகுப்பொன்று இலங்கையிலும் தோற்றம்பெற்றது. பெருந்தோட்ட உடைமையாளர்களும் தொழிற்சாலை உரிமையாளர்களும் பணக்கார வகுப்பினராக உருவானதுடன் அவர்கள் பிற்காலத்தில் செல்வந்த கல்விகற்ற மத்தியதர வகுப் பினராக சமூகத்தில் செல்வாக்குப் பெற்றனர். முதலாளித்துவப் பொருளாதார முறை இலங்கையிலும் வளர்ச்சியடைந்ததுடன் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும் முன்னிலை வகித்தது. இவ்வர்த்தக நடவடிக்கைகளின்போது வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்பவும் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் வங்கிகள் தேவைப்பட்டன. எனவே இலங்கையிலும் வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பெருந்தோட்ட உற்பத்திகளை கொழும்பு வர்த்தக நிலையங்களுள் மற்றும் கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லவும் பெருந்தோட்டத் துறைக்குத் தேவையான பண்டங்களைக் கொண்டு வரவும் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையேற்பட்டது. அதுவரை காலமும் இலங்கையில் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டன. அது பொருந்த மற்றதொரு முறையாகக் காணப்பட்டமையால் பெருந்தெருக்களும் புகையிரத வீதிகளும் அமைக்கப்பட்டன. ஆளுநர் எட்வட் பான்ஸின்காலத்தில் கண்டி கொழும்பு பிரதான வீதி அமைக்கப்பட்டதுடன் அடுத்து குருணாகல் - கண்டி பெருந்தெருவும் தம்புள்ளை கண்டி பெருந்தெருவும் அமைக்கப்பட்டன. 1850 ஆம் ஆண்டின் பின்னர் கல்லும் தாரும் பயன்படுத்தப்பட்டு பெருந்தெருக்கள் அமைக்கும் முறையும் அறிமுக மானது. அதே போன்று ஆறுகளுக்குக் குறுக்காக மரப்பாலம் அமைப்பதற்குப் பதிலாக இரும்புப் பாலங்களும் அமைக்கப்பட்டன. ஆளுநர் ஹென்றிவோட் அவர்கள் புகை யிரத வீதிகளை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதன்படி 1858 ஆம் ஆண்டு கண்டி - கொழும்பு புகையிரதப் பாதை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாதை அமைக்கப்பட்டபின் 1967 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இப்பிரதான பாதையூடாக புகையிரதம் செலுத்தப்பட்டது. அடுத்து 1871 ஆம் ஆண்டு பேராதனையிலிருந்து நாவலப்பிட்டி வரையிலும் 1899 ஆம் ஆண்டு பேராதனையிலிருந்து பண்டாரவளை வரையிலும் புகையிரத வீதிகள் நீடிக்கப்பட்டன.
போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக வர்த்தக நிலையங்களும் அதன் வளர்ச்சி காரணமாக நகரங்களும் தோன்றி வளர்ச்சியடைந்தன. கொழும்பு மாநகரங்கள் தவிர கம்பளை, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி முதலியன இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்த நகரங்களாகும். அதுவரை காலமும்இலங்கையில் ஆட்கள் மூலமே செய்திப் பரிமாற்றம் நடைபெற்றது. 1815 ஆம் ஆண்டு கொழும்பு, திருகோணமலை, காலி, யாழ்ப்பாணம் முதலிய நகரங்களை இணைக்கும் வகையில் அரசாங்க தபால் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்தபால் சேவை குதிரை வண்டிகள் மூலமே செயற்பட்டது. கொழும்பு, கண்டியில் அமைக்கப்பட்டப்பின் ஆசியாவிலே முதன் முதலாக குதிரை வண்டி மூலமான தபால் சேவை இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் முதன்முதலாக தபால் முத்திரை 1857 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1903 ஆம் ஆண்டளவில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் 340 தபால் நிலையங்கள் செயற்பட்டன. 1858 ஆம் ஆண்டு இலங்கையில் தந்தி மூலம் செய்தி பரிமாறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
நன்றி
0 Comments