கருட புராணம் பகுதி - 03 - GARUDA PURANAM PART - 03

கருட புராணம் பகுதி - 03


கருட புராணம் பகுதி - 03 - GARUDA PURANAM PART - 03

ஜீவாத்மாவிற்கு எந்த இடத்தில் மதிப்புகள், மரியாதைகள் கிடைக்கும்?

ஸ்ரீமந்நாராயணன் பலவிதமான நரகங்களைப் பற்றி எடுத்துரைத்து கொண்டிருக்க, கருடாழ்வாரின் மனதில் ஒரு கேள்வி எழத் துவங்கியது. எமலோகத்தில் செல்லும் ஜீவாத்மாவிற்கு எந்த இடத்தில் மதிப்புகள், மரியாதைகள் கிடைக்கும்? என்ற ஐயம் உருவாகியது. அதை நாராயணரிடம் வினாவினார். ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாருக்கு தோன்றிய ஐயத்தை தெளிவுப்படுத்தும் பொருட்டு, பூமியில் வாழ்கின்ற மானிடர்களின் உடலில் இருந்து இறந்த பின்பு பிரிந்து செல்கின்ற ஜீவாத்மா பிண்டத்தாலாகிய சரீரத்துடன் எமபுரி வரை சென்று, அந்த இடத்தில், பிண்ட சரீரத்தை விடுத்து கட்டைவிரல் அளவுடைய ஆகிருதியுடன் ஒரு வன்னி மரத்தில் சில காலம் தங்கியிருக்கும்.

பின்பு கர்ம சரீரத்துடன் எமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அங்கு செல்லக்கூடிய ஜீவாத்மா எவ்விதத்தில் உபசரிக்கப்படுகிறது? என்பதை பற்றி எடுத்துரைப்பதை தெளிவாக... கேட்பாயாக என்றார் திருமால். கருடனே...!! அங்கங்கள் நிரம்பிய பரிணாமம் உள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னி மரத்தில் இருந்து விடைப்பெற்று எமகிங்கரர்களுடன் இருபது காத தூரம் விஸ்தாரம் உள்ள சித்ரகுப்தனின் பட்டினத்தின் வழியாக எமபுரிக்கு செல்லும். பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் தான, தர்மங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்த ஜீவாத்மாவிற்கு எமபுரியானது அழகுகள் நிறைந்த ரம்மியமான பகுதியாக காணப்படும்.

பூமியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இறந்தவர்களை குறித்து பூலோகத்தில் தான, தர்மங்கள் செய்து கொண்டிருந்தாலோ அல்லது இறந்தவர்கள் நிறைய தான, தர்மங்களை செய்து புண்ணியங்களை பெருமளவில் வீட்டில் சேர்த்து வைத்திருந்தாலோ, அந்த ஜீவனானது எமலோகத்தில் எந்தவித தடையும் இல்லாமல், எமகிங்கரர்களால் எவ்விதமான இன்னல்களையும் அனுபவிக்காமல் தாமதமின்றி அழைத்துச் செல்லப்படுவார்கள். எமபுரியில் இருக்கக்கூடிய அரசவையில் தர்மத்துவஜன் என்கின்ற ஒருவர் எமதர்மராஜாவின் அருகில் எந்நேரமும் இருந்து கொண்டே இருப்பார்.

அவருடைய பணி யாது? என்று பார்த்தோமானால் எமபுரிக்கு வருகின்ற ஜீவன்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எமனுக்கு தெரிவிப்பதே அவருடைய முதற்பணியாகும். பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இறந்தவரை குறித்து ஏழுவகை தானியங்களான கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு பயிறு, துவரை மற்றும் இரும்பால் ஆகிய ஊன்றுகோல், உப்பு, பருத்தி முதலிய பொருட்களை தானம் செய்திருந்தால் அது எமலோகத்தில் இருக்கின்ற தர்மத்துவஜனை திருப்திப்படுத்துவதாய் அமைந்திருக்கும். தர்மத்துவஜனை மட்டுமல்லாமல் எமபுரியில் இருக்கின்ற மற்ற எம பரிசாரகர்களையும் மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்.

மகிழ்ச்சி அடைந்த தர்மத்துவஜன் மற்றும் எம பரிசாரகர்கள் இறந்த அந்த ஜீவன் எம பட்டினத்தை அடைந்ததும், எவ்விதமான காலதாமதமும் இன்றி புண்ணியம் செய்த இந்த ஆன்மா எமபுரிக்கு வந்திருக்கும் தகவலை தர்மத்துவஜன் மூலமாக எமபுரியின் அரசரான எமதர்மராஜாவிற்கு தெரிவிப்பார்கள். இவர்கள் செய்த தானத்தால் மகிழ்ச்சியடைந்த தர்மத்துவஜன் எமதர்மராஜாவிடம் இந்த ஆன்மா புண்ணியங்கள் பல செய்து இருக்கின்றது என்று கூறுவார். பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய கொடிய எண்ணம் படைத்த பலரும் அவர்கள் செய்த நல்ல தான, தர்மங்களால் பாவ ஆத்மாவாக இந்த நிலையை அடையும் தகுதியைப் பெற்று விடுகின்றது.

பூமியில் சரீரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர்கள் பல புண்ணிய காரியங்களை செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பூமியில் மதிப்பு இல்லாமல் இருந்தாலும் செய்த தான, தர்மத்தின் விளைவாக எமலோகத்தில் சரீரம் அல்லாத அந்த ஜீவனுக்கு உகந்த வரவேற்பு கிடைக்கும். பாவங்கள் பல செய்து பூமியில் மடிந்த பகுத்தறிவாளர்களான மனிதனின் உடலில் இருந்து பிரிந்து சென்ற ஜீவாத்மாவிற்கு எமலோகமோ, எமபுரியோ மிகவும் பயங்கரமாக இருக்கக்கூடியதாக காட்சியளிக்கும்.

அவர்களுக்கு தர்மராஜாவாக இருக்கக்கூடிய எமதர்மராஜனும், அவர்களுடைய தூதர்களும் அதாவது எமகிங்கரர்கள் என அனைவரும் மிகவும் அச்சம் கொள்ளும் வகையில் இருக்கக்கூடிய பயங்கரமான உருவத்துடன் தோற்றமளிப்பார்கள். பாவங்கள் பல செய்து பூமியில் வாழ்ந்தவன் இறந்த பின்பு இவர்களை கண்டு பயந்து அச்சம் கொண்டு ஓலமிட்டு அழுது கொண்டிருப்பான். பல நற்காரியங்களை செய்து புண்ணியம் ஈட்டிய ஜீவாத்மாவிற்கு எமலோகமோ, எமபுரியோ அல்லது எமலோகத்தில் இருக்கக்கூடிய தூதர்களோ மிகவும் அழகாக காட்சியளிப்பார்கள்.

எமதர்மராஜானோ நல்ல லாவண்ய ரூபத்தோடு தோற்றமளிப்பான். நன்மைகள் நிறைந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருந்த சரீரம் கொண்ட பகுத்தறிவாளர்களான மனிதர்கள் செய்த வினையின் காரணமாக அதாவது, தீயவைகள் பல புரிந்து இறந்த பகுத்தறிவாளர்களான மனிதர்கள் இறந்த பின்பு ஜீவாத்மாவாக மாறிய பின் அந்த ஆன்மாவினால் செய்யப்பட்ட கர்ம வினையினால் துர்ஆத்மாக்களாக இருப்பதினால் அவர்களின் கண்களுக்கு எல்லாமே தீயதுமாகவும், பயம் கொள்ளும் வகையிலும் இருக்கும். நன்மைகள் பல புரிந்த ஜீவாத்மாவின் கண்களுக்கு எல்லாமே நல்லபடியாக இருப்பதாக தோன்றும்.

பூமியில் வாழும்போது நற்காரியங்கள் பல செய்யக்கூடிய மனிதர்களுக்கு கிடைக்காத மரியாதை, எமபுரியை அடைந்த பின்பு அவர்கள் செய்த நற்காரியங்களின் பலனாக எமதர்மராஜன் எழுந்து நின்று அவர்களை வரவேற்று, அவர்களுக்கு அமர்வதற்கான தனியாக ஆசனம் அளித்து மரியாதை செலுத்துவார். எமபுரியில் இருக்கக்கூடிய மற்றும் ஆண்டு கொண்டிருக்கக்கூடிய எமதர்மராஜன் இவ்விதமாக ஒரு ஜீவனை மரியாதை செலுத்தும் பொழுது எமபுரியில் இருக்கக்கூடிய மற்ற ஏவலர்களும் அவர்களுக்கு மரியாதை செலுத்திக் கொண்டே இருப்பார்கள்.

எமலோகத்தில் இருக்கின்ற எமதர்மராஜன் வீற்றிருக்கின்ற தர்ம சபையில் புண்ணியம் செய்த ஆன்மாக்களுக்கு எமதர்மராஜன் கம்பீரமான தோற்றம் கொண்டவராகவும், சாந்த குணம் படைத்தவராகவும் காட்சியளிப்பார். பாவம் செய்த ஆன்மாக்களுக்கு எமதர்மராஜன் அகோரமான வடிவம் கொண்டவராகவும், பார்ப்பதற்கு பயம் கொள்ளத்தக்க வகையில் இருக்கக்கூடியவராகவும் காட்சியளிப்பார். பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கும்போது புண்ணியங்கள் பல செய்த ஆன்மாக்கள் எமலோகத்தை அடைந்ததும் எமகிங்கரர்கள், எமதர்மராஜனின் முன்னின்று சூரிய மண்டலத்தின் வழியாக பிரம்மதேவன் வீற்றிருக்கும் சத்திய லோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

உடலுடன் கூடிய ஆன்மாவானது பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் பாவங்கள் பல செய்து பாவ ஆத்மாவாக எமலோகத்தை அடையும் பொழுது அந்த ஆன்மாவின் உடற்பகுதிகள் யாவும் கட்டி பிணைத்த வண்ணமாக எமதர்மராஜாவின் முன்பாக கொண்டு செல்வார்கள். அவர்கள் செய்த தீவினைகளுக்கு ஏற்ப தண்டனைகளும், நரகங்களும் கிடைக்கப்பெற்று துன்பத்தை அனுபவிக்க துவங்குவார்கள். வாழும் பொழுது புண்ணியங்கள் பல செய்து இறந்த ஆன்மாக்கள் இறந்த பின்பு சொர்க்கலோகத்தை அடைகின்றது.

பாவ, புண்ணியங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் செய்வது தவறு என்று தெரிந்திருந்தும் பாவங்கள் பல செய்து உழன்று பூமியில் வாழ்ந்து மடிந்த பாவ ஆத்மாக்கள் நரகத்தில் தள்ளப்பட்டு துன்பத்தில் ஆழ்த்தப்படுவார்கள். நன்மைகள் மற்றும் தீமைகள் என சரிவிகித அடிப்படையில் இரண்டையும் கலந்து செய்தவர்களுக்கு அவர்கள் செய்த செயல்களின் அடிப்படையில் ஜென்மங்களும், பிறவிகளும் அளிக்கப்படுகின்றன. பாவம் பல செய்தவர்களுக்கு பிறவிகள் என்பது அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

பாவம் பல செய்தவர்களுக்கு மானிடப் பிறவி என்பது சாத்தியமில்லாத ஒரு வாய்ப்பாகவே இருக்கின்றது. ஒருவேளை அவர்களுக்கு பிறவிகள் கிடைத்தாலும் மிருகங்களாகவோ, அருவருக்கதக்க தோற்றம் கொண்ட உயிரினங்களாகவோ மண்ணுலகில் பிறக்கின்றார்கள். ஒருவர் செய்கின்ற நல்ல வினைகளில் பயனுக்கு ஏற்ப அவர்கள் எடுக்கும் அடுத்தடுத்த பிறவிகளில் அறிவு நிறைந்தவர்களாகவும், அழகு கொண்டவர்களாகவும், செல்வம், புகழ், ஆரோக்கியம் என அனைத்தும் நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

இவைகள் யாவும் கிடைப்பதற்கு ஒவ்வொரு வகை புண்ணியங்கள் அந்த ஆன்மாவினால் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இந்த பாக்கியங்கள் யாவும் கிடைக்கப்பெறுகின்றன. மனிதன் உடலுடன் ஆன்மாவும் இணைந்து பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் தான, தர்மங்களை செய்து வாழ்ந்தவராக இருந்தாலும், அவர்கள் செய்த தான, தர்மத்தின் பலன்களை அவர்கள் எந்த ஜென்மம், எந்த பிறவி எடுத்தாலும், அந்த பிறவியில் அவர்கள் முன் செய்த தான, தர்மத்தின் பலன்களை அனுபவிப்பார்கள்.

பஞ்சபூதத்தால் உருவாக்கிய இந்த உடலுடன் வாழும் பொழுது மனிதன் தன்னை செல்வந்தன் என்றும், அறிவில் சிறந்தவர்கள் என்றும், நானே பலசாலி என்றும், எனக்குத் தெரியாத எந்த துறையும் இல்லை என்ற அகம்பாவமும் கொண்டிருக்கலாம். ஆனால், இறந்தவுடன் அவனது உடலில் இருந்து அனைத்தும் அகற்றப்படும். ஏன் அரைஞாண் கயிறு கூட அறுத்து எறியப்பட்டுவிடும். பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய மூலப் பொருட்களால் உருவான சரீரமானது உயிருடன் இருக்கும் வரை மட்டுமே அதற்கு மதிப்பு. அந்த சரீரத்திலிருந்து ஆன்மா பிரிந்தவுடன் அந்த நொடியிலேயே அந்த சரீரம் தன்னுடைய மதிப்பை இழக்க துவங்குகின்றது.

ஆன்மா இல்லாத சரீரத்தை மண்ணில் புதைத்தால் மண்ணில் உள்ள புழுக்கள் தின்று அழித்துவிடும். நெருப்பில் தகனம் செய்தால் சாம்பலாகக்கூடிய தன்மையை அடையும். உடல் கூறுகளை வெட்டி கண்டந்துண்டமாக நரி போன்ற விலங்குகளிடம் எறிந்தால் அவை தின்று ருசி பார்த்துவிடும். இதுவே மனித உடலின் தன்மையாகும். ஜீவன்களுக்கு மனித உடல் கிடைப்பது என்பது ஒரு வரம் ஆகும். அந்த வரத்தினை கொண்டு அந்த ஜீவன் நன்முறையில் வாழ வேண்டும். மனித உடல் கிடைத்தாலும் அதில் கூன், குருடு, செவிடு, மலடு எதுவும் இல்லாமல் பிறப்பது அரிதிலும் அரிது.

குறைகள் எதுவும் இல்லாமல் பிறந்தவர்கள் தன்னுடைய தகுதிகளை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் பூமியில் வாழும் பொழுது தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கி, மோட்ச வாழ்வினை அடைய வேண்டும். அதை எதுவும் செய்யாமல் தீய குணம் கொண்டு மற்றவர்களை துன்புறுத்துதல், மற்றவர்களை முன்னேறவிடாமல் அவர்களை பின்னுக்கு தள்ளுதல் போன்ற பல தீய எண்ணங்களுடன் செயல்படுவதினால் அவர்கள் தங்களுடைய தகுதிகளை இழக்கத் துவங்குகிறார்கள்.

இந்த பூமியில் வாழும்போது அவர்களிடம் இருக்கும் பொருள் செல்வத்தினை ஆளும் அதிகார பலத்தினாலும், மேன்மையான வாழ்க்கையை வெளித்தோற்றத்திற்கு வாழ்ந்தாலும் இறந்த பின்பு அவர்கள் நரகத்தை அடைந்து துன்பங்களை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் செய்த பாவத்தின் விளைவாக மனிதப் பிறவிகளாக மீண்டும் பிறப்பு எடுக்காமல், விலங்கு பிறவிகளாக பிறக்கின்றார்கள். அந்த விலங்கு பிறப்பினையும் அவர்கள் செய்த வினையே முடிவு செய்கின்றது.

மனித பிறப்பினை அடைந்து புண்ணியங்கள் எதையும் செய்யாமல் தீவினைகளை செய்தவன் தம்முடைய கரங்களில் அமிர்தம் கிடைத்தும் அதை குடிக்காமல் வீண் செய்தவர்களுக்கு ஒப்பானவன் என்று திருமால் கூறியருளினார். இவ்விதமாக எமலோகத்தில் ஜீவாத்மாக்கள் மதிக்கப்படுவது எமதர்ம சபையில் நடைபெறும் நிகழ்வுகளை பற்றியும், திருமால் எடுத்துரைப்பதாக சூதமாமுனிவர் கூறுகின்றார்.


பிரேத ஜென்மத்தை யார் அடைவார்கள்?

சூதமாமுனிவர் மீண்டும் கருடாழ்வார் திருமாலிடம் தன்னுடைய ஐயத்தை வெளிப்படுத்த தொடங்கியதை மீண்டும் எடுத்துரைக்க துவங்கினார்.

மாதவா... பூமியில் வாழ்ந்த உயிரினங்கள் இறந்த பின்பு எமதர்மராஜாவின் சபையில் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள்? என்றும், அவர்கள் செய்த வினையின் பயனாக அடையும் தண்டனைகளை பற்றியும் எடுத்துரைத்தீர்கள். இதில் எமக்கு ஒரு ஐயம். அதாவது, பிரேத ஜென்மத்தை எப்படி ஒருவர் அடைகின்றார்? என்றும், அந்த பிரேத ஜென்மத்தை அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதையும், தாங்கள் கூறியருள வேண்டும் என்று கருடாழ்வார் வேண்டினார்.

பிரேத ஜென்மத்தை யார் அடைவார்கள்?

கருடனே... பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மனிதர்கள், தன்னை போன்ற பிற மனிதர்களிடம் இருக்கக்கூடிய பொருட்களை ஏமாற்றியோ அல்லது அவர்களை வற்புறுத்தியோ அவர்களிடமிருந்து கவர்தல் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கைத்துணையாரை தன் பக்கம் ஈர்த்து அபகரித்தல் போன்ற செயல்களை யார் செய்கின்றார்களோ, அவர்கள் அனைவரும் இறந்த பிறகு வேறு ஒரு சரீரத்தை அடையாமல், எங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்ற காற்று உருவமான பிரேத ஜென்மத்தை அடைகின்றார்கள்.

இறந்த ஒருவரின் உடல் அவர்கள் வீட்டில் இருக்கும்போது இறந்தவரை பற்றி எவ்விதமான கவலையும் அடையாமல், அவர்கள் ஈட்டி வைத்துள்ள பொருட்களின் மீது கண்ணும், கருத்துமாக தன்னுடைய சுயநலமான புத்தியினால் அவர்களுடைய உற்றார், உறவினர்களை வஞ்சித்து இறந்தவர்களின் பொருட்களை அபகரித்து கொள்ளக்கூடிய நயவஞ்சகர்கள், தீய துன்பங்கள் நிறைந்த பல நரகங்களை அடையக்கூடியவர்கள் ஆவார்கள். இறந்த ஒருவருடைய சொத்துக்களுக்கு தொடர்பு உள்ளவர்களை எவ்விதத்திலும் அவர்களை அடையவிடாமல், இறந்தவருடைய சொத்துக்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாமல், சொத்துக்களை அனுபவித்தவர்கள் யாவரும் பிரேத ஜென்மத்தை எடுத்து துன்பத்தை அடைவார்கள்.

பிரேத ஜென்மம் அடைந்த துர்ஆத்மாக்கள் பசி, தாகத்தோடு தான் வாழ்ந்திருந்த வீட்டினையும், அங்கும் இங்கும் என எங்கும் சுற்றி அலைந்து கொண்டிருப்பார்கள். அந்த வேதனை அவர்களோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அந்த பிரேத ஜென்மம் எடுத்த துர்ஆத்மாக்களால் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். பிதுர் தினங்களில் பித்ருக்களுக்காக செய்யப்படுகின்ற காரியங்களில் அந்த பித்ருக்களை அவர்களுடைய காரியங்களில் பங்கேற்கவிடாமல் வீட்டின் வாசலிலேயே தடுத்து, விரட்டி அடித்து அவர்களுக்கான அவிசுகளை தாங்களே வாங்கி உண்பார்கள்.

பிரேத ஜென்மம் எடுத்த அந்த துர்ஆத்மா வீட்டினை சுற்றிக்கொண்டே இருப்பதினால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும் மகிழ்ச்சி என்பது எட்டாக் கனியாகவே இருக்கும். அவர்கள் எந்த அளவு முயற்சிகள் செய்தாலும் அவர்களால் எந்தவொரு பொருளையும், சுகத்தையும் அனுபவிக்க முடியாது. அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பொருட்கள் யாவும் இவர்களுக்கும் பயன்படாமல், மற்றவர்களுக்கும் கொடுக்காமல் வீணடிக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

தன்னுடைய வாரிசுகளுக்கு எந்தவொரு மகிழ்ச்சியையும் அழிக்காமல், ஏன்? அவர்களுக்கு புத்திரபாக்கியம் இல்லாமலும், அவர்களுடனே அந்த வம்சம் முடிந்து விடக்கூடிய சூழ்நிலையும் உருவாகிவிடும். ஒருவேளை அவர்களுக்கு முன்பே பேரன், பேத்திகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் கொடிய நோய்களினால் பலவிதமான இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாவார்கள். பிரேத ஜென்மம் எடுத்தது முதல் ஆத்மாக்களின் மூலம் துன்பங்களை அனுபவிக்க கூடியவர்கள் யார்? என்று கூறுகிறேன் கேட்பாயாக என்றார் திருமால்.

அதாவது, ஆத்மாக்கள் பூமியில் பகுத்தறிந்து உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் யாவருக்கும், எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல், தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு இருக்கக்கூடியவர்களும், நற்காரியங்களை புரிவதற்கு மனம் இல்லாதவர்களும், இறை நம்பிக்கை இல்லாமல் அல்லது இறைவனை வழிபடக்கூடிய அடியார்களை ஆதரிக்காமல் அவமானம் செய்யக்கூடியவர்களும், மது அருந்தக்கூடியவர்களும், மாமிசம் உண்பவர்களும் இந்த ஆத்மாக்களின் மூலம் துன்பத்தை அனுபவிக்கக்கூடியவர்கள் ஆவார்கள்.


பிரேத ஜென்மங்களாக மாறக்கூடியவர்கள் யார்?

வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் குழந்தைகள் வேண்டாம் என்று கருவை கலைக்கக்கூடியவர்களும், உறவினர்களுடன் ஒற்றுமை இல்லாமல் அவர்களுக்கிடையே கலகங்களை உருவாக்குபவர்களும் இறந்த பின்பு பிரேத ஜென்மங்களாக மாறுகின்றனர். நண்பர்களை பகைவராக மாற்றிக் கொள்ளக்கூடியவர்களும், நண்பர்களுக்குள் கலகங்களை உருவாக்கி அவர்களை பிரிக்கக்கூடியவர்களும், நிந்தனை செய்யக்கூடியவர்களும் இறந்த பின்பு பிரேத ஜென்மங்களாக திரிகின்றார்கள்.

தன்னை ஈன்றெடுத்த பெற்றோர்களை புறக்கணிக்கக்கூடியவர்களும், மற்றொருவர் கொண்டிருக்கக்கூடிய பொருட்களின் மீது ஆசை கொண்டு கொலை, கொள்ளை போன்ற பாவச் செயல்களை செய்யக்கூடியவர்களும், ஒருவர் கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை அவருக்கு தெரியாமல் களவு செய்வதும், இழிவான காரியங்களை செய்து அதன்மூலம் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர்களும், வாரிசுகளுக்கு நன்மை செய்ய முடியவில்லை என்றாலும், அவர்களை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்ளக்கூடியவர்களும், தன்னை நம்பி வந்த வாழ்க்கைத்துணைவரிடம் ஒற்றுமையுடன் வாழாமல் பிரிந்து வாழக்கூடியவர்களும் இறந்த பின்பு பிரேத ஜென்மங்களாக திரிகின்றார்கள்.

மற்றவர்களின் நலனுக்காக கட்டப்பட்ட பொதுவான கட்டிடங்களை இடித்து அதில் தன்னுடைய விருப்பம் போல் தனக்கு தேவையானதை கட்டிக் கொள்ளக்கூடியவர்களும், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட குளங்களை தூர் வாராமல் மற்றும் பாதுகாப்பு செய்யாமல் அதை களங்கம் செய்கின்ற பகுத்தறிவாளர்களும், அன்ன சத்திரங்களை இடித்துவிட்டு தன்னுடைய தேவைகளுக்காக வீடுகளையும், கடைகளையும் கட்டிக் கொள்ளக்கூடியவர்களும் பிரேத ஜென்மத்தை கண்டிப்பாக அடைவார்கள்.

அன்ன சத்திரங்களை தவறான வழிகளில் பயன்படுத்தக்கூடியவர்களும், கோவில்களை இடிக்கக்கூடியவர்களும் அல்லது கோவில்களின் சொத்துக்களை தன்னுடைய சொத்துக்களாக மாற்றிக்கொண்டு அதை அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடியவர்களும், ஊர் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள ஏரிகளை தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ளக்கூடியவர்களும், ஏரி நிலங்களில் வீடுகளை கட்டி அதன் மூலம் பொருள் செல்வம் சேர்த்தவர்களும் பிரேத ஜென்மத்தை கண்டிப்பாக அடைவார்கள்.

இடி விழுந்து மரணம் அடைந்தவர்களும், நீதிமன்றத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தவறான நீதிகளை வழங்கக்கூடியவர்களும், கால்நடைகளை குறிப்பாக மாடுகளை கொல்பவர்களும், துன்புறுத்துபவர்களும் பிரேத ஜென்மத்தை கண்டிப்பாக அடைவார்கள். விரோதிகள் மற்றும் எதிரிகளின் மூலமாக கொலை செய்யப்பட்டவர்களும், அகால மரணம் அடைந்தவர்களும், தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர்களும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் எவரும் அறியாத வண்ணமாக இறந்தவர்களும், தன்னுடைய பெற்றோர்களுக்கு சிரார்த்த பூஜைகளை செய்ய தவறியவர்களும், முறையற்ற முறையில் உறவு கொள்ளக்கூடியவர்களும் பிரேத ஜென்மங்களாக மாறக்கூடியவர்கள் ஆவார்கள்.

இவ்விதமாக யார் யாரெல்லாம் பிரேத ஜென்மங்களாக மாறுகின்றார்கள்? என்பதனை பற்றி ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாருக்கு எடுத்துரைத்தார். நாராயணன் இவ்விதம் உரைத்துக் கொண்டிருக்க கருடாழ்வாருக்கு மேலும் ஐயங்கள் உருவாக துவங்கின. அதாவது, பிரேத ஜென்மம் எடுத்த ஒரு ஆன்மாவினால் என்னென்ன செயல்கள் செய்ய இயலும்? அதனால் எவ்விதமான பாதிப்புகள் உருவாக நேரிடும்? என்பதை பற்றி அறிந்து கொள்ள கருடாழ்வாருக்கு ஆவல் உருவாக துவங்கியது.


பிரேத ஜென்மாக்களினால் ஏற்படும் இன்னல்கள் யாவை?

உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்தருளும் திருமாலே...!! பிரேத ஜென்மம் எடுத்த ஆன்மாவினால் என்னென்ன துன்பங்கள் ஏற்படும்? என்பதையும் எடுத்துரைக்க வேண்டும் என்று அடியேன் வேண்டுகின்றேன் என்று கூறினார் கருடாழ்வார். பறவைகளின் வேந்தனாக இருக்கக்கூடிய கருடனே...!! யாம் உரைப்பதை கவனிப்பாயாக... ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் பொருள் இல்லாத ஒரு சிறிய கருத்து வேறுபாட்டிற்காக வாழ்க்கைத்துணைவரை பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலைகள், தான் ஈன்றெடுத்த பிள்ளையை மனதில் இருக்கும் வஞ்சனையாலும், கோபத்தாலும் பிள்ளைகளை விட்டு தனியாக வாழ நேரிடுதல் போன்ற பிரச்சனைகளை பிரேத ஜென்மாக்கள் தோற்றுவிக்கின்றன.

பிரேத ஜென்மாக்கள் மூலம் ஏற்படக்கூடிய துன்பங்களை களைய அந்த குடும்பத்தினர் அனைவரும் மனம் ஒன்றி அவர்களுக்கான பரிகாரங்களை செய்ய வேண்டும். அதாவது, தன்னுடைய வசதிக்கேற்ப தான, தர்மங்களை செய்தல், விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தல் மற்றும் கூட்டத்துடன் இணைந்து கோவிந்த நாம சங்கீர்த்தனம் உரைத்தல், பித்ருக்களின் சிரார்த்தங்களை எந்நிலையிலும் தவறாமல் செய்து வருதல் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ளுதல் போன்றவை பிரேத ஜென்மாக்களால் ஏற்படக்கூடிய துன்பத்திலிருந்து பாதுகாக்கும் அரணாக அமையும்.

பிரேத ஜென்மமாக மாறியவர்கள் தோற்றமானது பொலிவில்லாமல் மிகவும் கொடூரமாக, கோரமான வடிவமாக இருக்கும். அவருடைய பிரேத ஜென்மம் நீங்க அவருடைய குடும்பத்தினர் பரிகாரம் செய்தால் மட்டுமே அவர்களால் இறந்தவர்களுடைய அதாவது, பிரேத ஜென்மம் எடுத்த ஆன்மாக்கள் இன்னல்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ இயலும். பிரேத ஜென்மமாக மாறியவர் உண்ண உணவும், அருந்த நீருமின்றி பசி, தாகத்தில் தவிப்பதை தன்னுடைய குலத்தாரின் கனவில் வந்து எடுத்துரைப்பார்.

இவ்விதமாக அவர்களின் பிரேத ஜென்ம நிலையை மனிதர்கள் அறிந்து கொள்ள இயலும் என்று பகவான் ஸ்ரீமந்நாராயணன் பிரேத ஜென்மம் எடுத்த ஆன்மாக்களினால் உண்டாகும் இன்னல்களை பற்றி விவரித்தார். ஸ்ரீமந்நாராயணன் உரைத்தவற்றை நன்கு கேட்டுணர்ந்த கருடாழ்வார் மீண்டும் நாராயணனை பணிவுடன் வணங்கி, ஐயனே...!! பிரேத ஜென்மங்களை பற்றி யாம் நன்கு உணர்ந்து கொண்டோம். ஒருவர் பிரேத ஜென்மங்களாக மாறிவிட்டால் அவருக்கு எப்போது நல்ல காலம்? அந்த நிலையில் இருந்து எப்பொழுது விடுதலை கிடைக்கும்? என்பதை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டினார்.

கருடனே...!! பிரேத ஜென்மமாக மாறியவர் அவருடைய குலத்தினை சார்ந்தவர்களுக்கு எண்ணிலடங்கா பல இன்னல்களையும், துன்பங்களையும் கொடுத்துக்கொண்டே இருப்பார். தன்னுடைய இந்த நிலையை தன் குலத்தில் இருப்பவர்கள் யாராவது ஒருவரின் சொப்பனத்தில் தோன்றி தான் பசியுடன் இருப்பதாக தெரிவிப்பார் அல்லது குடும்பத்தில் படிப்படியாக முன்னேற்றம் எதுவுமின்றி துன்பமும், இன்னல்களும் மாறிமாறி உருவாகிக் கொண்டே இருந்தால் அந்த குடும்பத்தை சார்ந்த நபர்கள், பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து சாஸ்திரமும், வேதமும் உணர்ந்தவர்களின் ஆலோசனைகளை பெற்று அதில் உரைத்த நெறிமுறைகளின்படி நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும்.

அவர்கள் கூறும் அறச்செயல்களை அலட்சியம் இல்லாமல் மன ஒற்றுமையுடன் மேற்கொள்ள வேண்டும். பிரேத ஜென்மாக்களால் ஏற்படும் இன்னல்களை தவிர்க்க மாமரம், தென்னை மரம், அரச மரம் போன்ற அனைவருக்கும் பயன் தரக்கூடிய மரங்களை வளர்க்க வேண்டும். இறைவனின் வழிபாட்டிற்காக பயன்படக்கூடிய மணம் தரும் மலர்களுடன் கூடிய நந்தவனம் அமைப்பதும், நேர்மையுடனும், உண்மையுடனும் வாழக்கூடியவர்களுக்கு தன்னால் முடிந்த அளவு தான, தர்மங்களை செய்வதும், வனத்தில் இருக்கும் விலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும் பயன்படும் வகையில் நீர் நிலைகளை அமைக்கலாம்.

ஆவினங்களின் பசியை போக்கும் வண்ணமாக புல் தரைகளை வளர்த்தல், ஊர் மக்களுக்கு பயன்படும் வகையில் கிணறுகள் தோண்டுதல், பயன்பாட்டில் இல்லாத அதாவது, களங்கமாக இருக்கக்கூடிய நீர்நிலைகளை தூர்வாருதல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தான, தர்மங்கள் மற்றும் ஹோமங்கள் செய்யவும். பிரேத ஜென்ம தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறச்சிந்தனைகள் என்பது இல்லாமல் இருக்கும். அதாவது, அவர்கள் நல்ல காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் அமையாமல் இருக்கும்.

வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்களை மட்டும் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த நிலையில் இருப்பவர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப தம்மால் இயன்ற அளவு உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். செய்த உதவிகளுக்கு பலனை எதிர்பார்க்காமல் இருப்பது பிரேத தோஷத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை படிப்படியாக குறைக்கும். நம்மால் இயன்ற அளவு தான, தர்மங்களை செய்யும்பொழுது பிரேத தோஷத்தினால் உண்டான துன்பங்கள் குறைந்து அவர்களுடைய அடுத்த சந்ததியினருக்கு அந்த தோஷத்தின் விளைவுகள் செல்லாமல் இருக்கும்.

குடும்பத்தில் அடுத்தடுத்து துன்பங்களினால் நிம்மதியில்லாத தருணங்கள் ஏற்படும் பொழுது இந்த தருணங்கள் யாவும் பிரேத ஜென்ம தோஷத்தினால் ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் துர்கனவுகளை அலட்சியம் செய்யாமல் வயதில் மூத்த மற்றும் வேதம் உணர்ந்தவர்களிடம் கூறி அவர்களிடம் இருந்து நிவர்த்திக்கான வழிமுறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். சான்றோர் பெருமக்கள் கூறிச்சென்ற தர்ம வழிகளை எந்த நிலையிலும் தவறாமல் பின்பற்றுதல் மிகவும் அவசியமாகும். துன்பங்கள் மிகுதியாக இருக்கும் பொழுது புண்ணிய நதிகளுக்கு சென்று நீராடி இறைவனை வேண்டி ஜெபம் செய்ய வேண்டும்.

புண்ணிய தலங்களில் செய்யும் ஜெபங்களுக்கும், அவ்விடத்தில் செய்யப்படுகின்ற தான, தர்மங்களுக்கும் மற்ற இடங்களை காட்டிலும் கூடுதல் பலன்களை உருவாக்கும். கிரகணம், பௌர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு மற்றும் மகாளயம் போன்ற புண்ணிய தினங்களில் அவரவர்களின் முன்னோர்கள் மற்றும் பித்ருக்களை நினைத்து தர்ப்பண காரியங்களை செய்தல் வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பண காரியங்கள் செய்வதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து அவர்களின் சந்ததியினரையும், குடும்பத்தினரையும் ஆசீர்வாதம் செய்வார்கள்.

மேலும் அவர்களே குடும்பத்தை பாதுகாக்கும் அரணாகவும் திகழ்வார்கள். இதனால் அந்த குடும்பங்களுக்கு பூதப் பிரேத பைசாசங்களால் துன்பங்கள் நேரிடாத வண்ணம் பாதுகாப்பாக இருப்பார்கள். தன்னை ஈன்ற பெற்றோரையும், தனக்கு பல கலைகளையும், அறிவுகளையும் புகட்டி நம்மை சான்றோராக்கக்கூடிய குருவையும் எந்தவொரு நிலையிலும் நிந்திக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது. ஏனெனில் அவர்களே நம் அருகில் இருக்கக்கூடிய முதற்கண் தெய்வங்கள் ஆவார்கள்.

தாய், தந்தையர்களை பாதுகாத்து அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து அவர்களின் மனம் குளிர செய்கின்றவர்கள் புண்ணிய நதிகளில் சென்று நீராடினால் என்ன பலன் கிடைக்குமோ அதற்கு சமமான பலன்களை அவர்கள் அவ்விடத்திலேயே பெறுவார்கள். ஆனால் பெற்றோர்களை மதிக்காமல் அவர்களின் மனதை தினம் தினம் நோகடித்து அவர்களை மதிக்காமல் செய்கின்ற தான, தர்மங்கள் என்பது எவ்வித பயனையும் அளிக்காது.

பெற்றோர்கள் இறந்த பின்பு அவர்கள் இறந்த அந்த பன்னிரண்டு நாட்களும், இறந்த திதி காலத்திலும் அவர்களுக்காக செய்யப்படுகின்ற தான, தர்மங்கள் என்பது செய்பவர்களுக்கு நன்மையை அளிக்கக்கூடிய ஒன்றாகும். செய்கின்றவர்களுக்கு குடும்பத்தில் இருக்கக்கூடிய துன்பங்கள் கலைந்து இன்பங்கள் பிறக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்கள் யாவும் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். எமலோகத்தில் இருக்கக்கூடிய 'புத்" என்ற நரகத்திலிருந்து பெற்றோர்களை கரையேற்றுவதனாலேயே அவர்கள் ஈன்ற வாரிசுகளுக்கு 'புத்திரர்கள்" என்ற பெயரும் உருவாகியது.

விபத்துக்களின் மூலம் இறந்தவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள். அவ்விதம் இறந்தவர்களுக்கு ஒரு வருடம் வரை எந்தவிதமான கர்ம செயல்களையும் நடத்தக்கூடாது. அவர்கள் இறந்து ஓராண்டு முழுவதுமாக நிறைவடைந்தவுடன் சிரார்த்தம் முதலிய காரியங்களை செய்து முடித்த பின்பு, அவர்கள் அடைந்த பிரேத ஜென்ம தோஷத்தை நீக்குவதற்கான கிரியைகளையும் செய்ய வேண்டும் என்று ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாருக்கு எடுத்துரைத்தார்.


உயிர்களின் இறப்பு என்பது எதன் அடிப்படையில் இருக்கும்?

ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாரிடம் ஒருவர் இறந்த பின்பு அவருடைய உடலில் இருந்து பிரிந்து சென்ற ஆன்மா என்னென்ன துன்பத்திற்கு ஆளாகுகின்றது? என்பதைப் பற்றியும், அந்த துன்பத்திற்கு என்னென்ன காரணங்கள்? என்பதைப் பற்றியும் எடுத்துரைத்து கொண்டிருந்தார். இவை யாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கருடாழ்வாருக்கு மென்மேலும் மனதில் ஐயங்கள் தோன்றின. அதாவது, ஒருவர் உலகில் பிறக்கின்றார் எனில் இறப்பு என்பது அவருக்கு எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றது? என்பதை பற்றி அறிந்து கொள்ள அவருடைய மனம் ஆவல் கொண்டது.

தன் மனதில் இருந்த ஐயத்தையும், தனக்கு ஏற்பட்டிருந்த ஆர்வத்தையும் ஸ்ரீமந்நாராயணனிடம் கருடாழ்வார் வினவினார். உலக உயிர்கள் யாவையும் காத்து ரட்சித்து கொண்டிருக்கக்கூடிய நாராயணரை உலகில் தோன்றும் உயிரினங்களில் சிலகாலம் வாழ்ந்து முடிந்த பின்பு அந்த ஜீவனானது மரணத்தின் வாசலில் நிற்கின்றது. இறப்பு என்பது எதன் அடிப்படையில் உயிரினங்களுக்கு நிர்ணயம் செய்யப்படுகின்றது? என்பதை பற்றி எடுத்துரைக்க வேண்டும் என்று வினவினார்.

புன்னகை முகத்துடன் ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாரை நோக்கி அவருடைய மனதில் எழுந்த ஐயங்களை போக்கும் பொருட்டு கருடனே...!! இதுவரை யாம் உமக்கு உரைத்தது யாவும் ஒரு ஜீவன் மறைந்த பின்பு அதன் உடலில் இருந்து பிரிந்து சென்ற ஆன்மாவானது என்னென்ன துன்பங்களை அனுபவிக்கும்?... அந்த துன்பங்களுக்கு காரணங்கள் என்னென்ன?... எதன் அடிப்படையில் நரகங்கள் யாவும் நிர்ணயம் செய்யப்படுகின்றன?... என்பதையும் உமக்கு யாம் உரைத்தோம்.

இனி உலகில் பிறப்பெடுக்கும் உயிர்களின் இறப்பு என்பது எதன் அடிப்படையில் இருக்கும்? என்பதை பற்றியும் நாம் பார்ப்போம் என்றார் திருமால்.

உலகில் பிறப்பெடுக்கும் உயிர்களின் இறப்பு என்பது அந்தந்த உயிரினங்கள் செய்கின்ற செயல்களின் விளைவினால் மட்டுமே அவர்களின் ஆயுளும் நிர்ணயமாகின்றது. மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மேம்பட்டு இருக்கக்கூடிய உயிரினமான, பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மனித உயிரினங்கள் வரைமுறையின்றி செய்கின்ற செயல்களினால் அவர்களின் முடிவினை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

சட்டத்திற்கு புறம்பாக தொழில்களை செய்து அதனால் லாபம் பல சம்பாதித்தாலும், அவன் செய்த தொழிலினால் துன்பங்கள் அடைந்தவர்களும் ஏராளமாக இருப்பார்கள். அவர்களின் சாபத்தினால் அவர்களின் விழிகளில் இருந்து வருகின்ற கண்ணீரிலும், அந்த தவறுகளை இழைத்தவர்கள் தங்களுடைய ஆயுட்காலத்தை நிர்ணயம் செய்து கொள்கின்றார்கள். யாம் செய்வது தவறு என்று தெரிந்தாலும் அதை தெரிந்தே செய்கின்ற குற்றவாளிகளின் ஆயுட்காலமும் குறைந்து கொண்டே செல்கின்றது.

தாம் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கின்ற பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு நரகத்தில் வெகுகாலம் தங்கியிருந்து செய்த பாவத்தின் விளைவாக தண்டனைகளை அனுபவித்து கொண்டே இருப்பார்கள். மற்றவர்களின் பொருட்களை அடைய நினைப்பதும், மாற்றான் மனைவியை அடைய முற்படுவதும், தன்னுடைய நிலையில் இருந்து தவறி கீழ்மட்டமான வேலைகளை செய்கின்றவர்கள் அதாவது, இழிவான காரியங்களை செய்கின்றவர்கள் வாழ்நாளில் தம்முடைய வாழும் காலத்தை குறைத்துக்கொண்டு மரண வாயிலை விரைவாக அடைவதற்கான முயற்சிகளை செய்கின்றார்கள் என்பதாகும்.


எதனால் ஒருவர் நரகத்திலிருந்து துன்பத்தை அனுபவிக்கிறார்?

நன்மை தரக்கூடிய எந்தவொரு செயலையும் மற்றவர்களுக்கு செய்யாமல் இருக்கக்கூடியவர்களும், கலையிலும், அறிவிலும், வயதிலும் மூத்தவர்களை மதித்து நடக்காமல் இருப்பவர்களும், இறை சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடியவர்களும், தெரிந்தே தவறு செய்யக்கூடிய பகுத்தறிவாளர்களும் நரகத்தை சென்று அடைவார்கள். அடுத்தவர்களுக்கு துன்பம் நிலைக்க வேண்டும் என்று நினைப்பதும் குற்றமாகும். அறவழியில் சென்று பொருளீட்டும் தவறான வழிகளின் மூலம் பொருளீட்டுவது, தன்னுடைய சுகத்திற்காக உயிர்களை கொடுமைப்படுத்துதல் போன்ற செயல்களின் மூலம் ஒருவர் இறந்த பின்பு நரகத்தை அடைந்து துன்பத்தை அனுபவிப்பார்.


கரும சட்டம் என்றால் என்ன?

கருடனே...!! மனிதன் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் அவன் கொண்டிருக்கக்கூடிய தேகம் என்பது அழியக்கூடியதாகும். மனிதனின் தேகம் மட்டும் அழிவது அல்ல... உலகில் பிறக்கின்ற அனைத்து உயிரினங்களின் தேகங்களும் அழியக்கூடியதாகும். இந்த தேகமானது உண்பதாலும் அழியும். உண்ணாமல் இருந்தாலும் அழியக்கூடியதாகும். அவரவர்கள் செய்த வினைகளின் பயனை அவரவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும். அதுதான் கரும சட்டம் ஆகும். கரும சட்டம் என்பது ஒரு ஆன்மா பிறவி எடுத்து செய்யக்கூடிய நல்ல வினைகள் மற்றும் தீய வினைகளுக்கு ஏற்ப அந்த ஆன்மாவின் அடுத்த பிறவி மற்றும் வாழ்க்கை நிலை அமையும் என்பதாகும்.

இந்த சட்டத்தில் எந்தவொரு இடத்திலும் ஏற்ற, இறக்கங்கள் என்பது இருக்காது. கரும சட்டத்தின் முன்னிலையில் அனைத்து உயிரினங்களும் ஒன்றே ஆகும். இந்த கரும சட்டத்தின் மூலமாக ஆன்மாக்கள் பூமியில் வந்து பிறப்பெடுக்கின்றன. அந்த ஆன்மாவினால் செய்யப்பட்ட வினைகளின் பயனாக அந்த ஆன்மாவின் வாழ்க்கை தரமும் அமைகின்றது. அந்த ஆன்மாவினால் நிறைய நற்கருமங்கள் செய்யப்பட்டிருந்தால் பிறப்பெடுத்தது முதல் அந்த ஆன்மாவிற்கு நிலையான வாழ்க்கை அமையும். ஒருவேளை அந்த ஆன்மாவினால் நற்கருமங்கள் எதுவும் செய்யப்படாமல் இருக்குமேயானால் வாழ்க்கை நிலையும் அதற்கு ஏற்றார்போலவே கரடு முரடாக இருக்கும்.


ஏன் பிறவா நிலையை அடைய வேண்டும்?

கருடனே...! பிறப்பெடுக்கும் உயிரினங்களில் மேலான உயிரினமாக இருக்கக்கூடிய பகுத்தறிவாளர்களான மனிதப் பிறவிகள் மட்டுமே பிறவா நிலையை அடைவதற்கு முழு தகுதி உடையவர்கள் ஆவார்கள். இந்த தகுதி என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. பிறவா நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது என்பது அவர்களுடைய வினைப்பயனே முடிவு செய்கின்றது. எவர் ஒருவர் நற்கருமங்களை செய்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களால் மட்டுமே தன்னுடைய பிறப்பை தடுத்து, பிறவா நிலையை அடைய இயலும்.

ஸ்ரீமந்நாராயணன் பிறவாநிலையை பற்றி உரைத்துக் கொண்டிருக்க கருடாழ்வாருக்கு அகத்தில் ஓர் ஐயம் உருவாகியது. தனது மனதில் தோன்றிய எண்ணத்தை நாராயணனிடம் வினவினார். ஐயனே...!! ஏன் பிறவா நிலையை அடைய வேண்டும் என்பதை பற்றி கூற இயலுமா? என்று வினவினார். புன்னகை பூத்த முகத்துடன் கருடாழ்வாரின் பயத்தை போக்கும் விதமாக பிறவா நிலையை பற்றியும் கூறத்துவங்கினார் நாராயணன். கருடனே...!! உடல் என்பது அழியும் தன்மை கொண்டதாகும். அதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.

மரணத்தைவிட ஜனனம் என்பது அதிகமான துன்பத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஏனெனில் கர்ப்ப காலங்களில் தாயின் வயிற்றினுள் இருக்கும் குழந்தையானது தாயின் மலம், சிறுநீர் ஆகிய நாற்றங்களை சகித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தாய்க்கு இருமல் ஏற்படுமேயானால் குழந்தைக்கு நடுக்கம், அதிர்ச்சி ஏற்படும். தாயானவள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பட்சத்தில் கருவிலிருக்கும் கர்ப்பமும் கொதித்துக் கொண்டிருக்கும்.

இதை உணர்ந்த மகான்கள் இதற்காகத்தான் 'பிறவா வரம் வேண்டும்" என்பதனை வேண்டுவார்கள். சுயக்கட்டுப்பாடு, நேர்மை, நற்குணங்கள் மற்றும் இறைவனின் மீது பற்று கொண்டு இருக்கக்கூடியவர்களுக்கு மறுபிறவி என்பது ஏற்படுவதில்லை. பூமியில் வாழும் பொழுது பொருட்களை சேர்ப்பதில் மட்டும் மகிழ்ச்சி கொள்ளாமல் அந்த பொருட்களை கொண்டு தீர்த்த யாத்திரைகள், தான, தர்மங்கள் போன்ற தர்ம செயல்களை செய்வதன் மூலம் புண்ணியங்களை மிகுதியாக பெருக்கிக்கொள்ள முடியும்.

பகுத்தறிவாளர்களான மனிதர்களுடைய மனதில் தோன்றுகின்ற எண்ணமும், அவர்கள் வாக்குகளும், அவர்களுடைய தேகமும் பாவத்தை செய்கின்றது. அதுவே புண்ணியத்தையும் செய்கின்றது. புண்ணியம் தவிர்த்து பாவத்தை செய்கின்றவர்கள், மிகுதியான பாவங்களை செய்தவர்கள் அடுத்தடுத்த பிறவிகளில் நாய்களாகவும், நரிகளாகவும் பிறப்பார்கள். நல்ல எண்ணத்துடனும், ஒழுக்கத்துடனும் இருக்கக்கூடியவர்கள் அடுத்தடுத்த பிறப்புகளை எடுப்பதை தவிர்த்து விடுகின்றார்கள். ஆகவே வாழும் காலத்தில் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு அவரவர்களின் வசதிக்கு ஏற்ப அதாவது, அவர்களிடம் இருக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப கர்மங்களை செய்தல் வேண்டும்.

பொருள் தன்மைக்கு ஏற்ப கர்மங்களை செய்தல் வேண்டும் என்பதை உணராத பலர் தங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய அறிய மானிடப் பிறவியை இழந்து, மீண்டும் ஈனப் பிறவிகளாக பிறக்கிறார்கள். ஒரு குழந்தை பிறந்த உடனே உலக அனுபவங்கள் எதுவும் கிடைக்கப்பெறாமல் அதாவது, பெற்றோரின் அரவணைப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் போன்ற நற்காரியங்கள் எதுவும் கிடைக்கப்பெறாமல் இறப்பதற்கு காரணம் யாது? என்றால் முற்பிறவியில் அந்த குழந்தையின் ஆன்மாவினால் செய்யப்பட்ட பாவங்களின் விளைவாகவும், அவர்களுடைய பெற்றோர்கள் செய்த பாவத்தின் காரணமாகவும் எதுவும் அறியாத அந்த சிசுவானது இறக்கின்றது.

முந்தைய பிறப்புகளில் தான, தர்மங்கள் செய்து வாழ்ந்தவர்கள் மீண்டும் பிறப்பது இல்லை. ஒருவேளை அவர்கள் பிறப்பு எடுத்தாலும் நல்ல அறிவுள்ள மற்றும் செல்வம் நிரம்பியவர்களாகவும், மகிழ்ச்சியான குடும்பத்திலும் வாழ்கின்றார்கள். நீண்டகாலம் வாழ்ந்திருந்து ஆரோக்கியமான தேகத்துடன் எவ்விதமான குறைகளும் இல்லாத பேரன், பேத்திகளோடு யார் வாழ்கிறார்களோ அவர்களே புண்ணியவான்கள் ஆவார்கள்.


இறப்பின் காரணமும், மோட்சத்திற்கான பாதையும்

கருடனே...!! மரணம் பற்றிய சில கர்ம நிகழ்வுகளை பற்றி உரைக்கின்றோம்... பொறுமையுடன் கேட்பாயாக... பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய, எதையும் பகுத்தறிந்து அறிந்துக் கொள்ளக்கூடிய மனித பிறப்புகளில் பெண்கள் கர்ப்பம் தரித்த ஆறு மாதத்திற்குள் கருவில் இருக்கும் சிசுவானது கலைந்தால் அந்த பெண்ணிற்கு ஆறு நாட்கள் மட்டும் சூதகத் தீட்டு ஏற்படும். ஒருவேளை ஏழாவது மாதத்தில் கலைந்தாலோ அல்லது எத்தனையாவது மாதத்தில் கரு கலைந்து போனதோ அத்தனை நாட்களுக்கு மட்டுமே அந்தப் பெண் சூதகமானவள் ஆகின்றாள்.

தந்தைக்கு எந்தவிதமான தீட்டுகளும் கிடையாது. கருவில் இருக்கும் குழந்தை இறந்து போனால் அந்த குழந்தைக்கு எந்தவிதமான கிரியைகளையும் செய்ய வேண்டியது இல்லை. ஒருவேளை குழந்தை பிறந்து ஐந்து வயதிற்குள் இறந்து போனால், அந்த குழந்தையின் பெற்றோர்கள் அந்தக் குழந்தையின் நினைவாக மற்றும் அந்தக் குழந்தை செய்த வினையில் இருந்து விமோச்சனம் அடைவதற்காக குழந்தைகளுக்கு பால் சோறும், தயிர் சோறும் வழங்க வேண்டும்.

பூமியில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் இறப்பும், பிறப்பும் என்பது இயற்கையானது. மற்ற உயிரினங்களை காட்டிலும் மேம்பட்டு இருக்கக்கூடிய மனித உயிரினமான பகுத்தறிவாளர்கள் தாங்கள் மீண்டும் இந்த பூமியில் பிறப்பு எடுக்க விரும்பவில்லை என்று விரும்புவார்கள். அவரவர்களுக்கு கிடைத்த பிறவிகளில் நல்ல கருமங்களை செய்வதன் மூலம் மோட்சத்தை அடையலாம். அதாவது உண்மையும், பெரியோர்கள் இடத்தில் பணிவும், எப்பொழுதும் மகிழ்ச்சியான சொற்களை பயன்படுத்துவதும், அறம் சார்ந்த செயல்களில் ஈடுபடுவதும், புண்ணிய தலங்களுக்கு சென்று நீராடுதல் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலமும் மீண்டும் இந்த பூமியில் பிறப்பதை அவரவர்கள் தவிர்த்துக்கொள்ள முடியும் என்று ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாருக்கு பிறப்பினை தடுக்கும் முறைகளையும், இறப்பிற்கு காரணமாக இருக்கக்கூடிய கர்ம வினைகளை பற்றியும் எடுத்துரைத்தார்.


கர்ம காரியங்கள்

கருடனே...!! இதுவரை யாம் இறப்பிற்கான காரணத்தையும், பிறப்பதற்கான வழியையும், கர்ம வினைகளை பற்றியும் உமக்கு உரைத்தோம். இனி இறந்து போன அந்த ஆன்மாவிற்கு செய்ய வேண்டிய கர்ம நிகழ்வுகளை பற்றி கூறுகின்றேன் கவனத்துடன் கேட்பாயாக... என்று கூறினார். கருடரும் ஸ்ரீமந்நாராயணனை நோக்கி அவ்விதமே செய்கிறேன் பிரபு! என்று தனது முழு கவனத்தையும் ஸ்ரீமந்நாராயணன் உரைப்பதிலேயே லயித்துக் கொண்டிருந்தார்.


குழந்தையின் பல்வேறு நிலைகள் :

ஒரு குழந்தையானது கரு தரித்து, முதல் மாதம் முதல் பதினாறு மாதம் வரை சிசு என்றும், ஆறு வயது வரை குமரன் என்றும், ஒன்பது வயது வரை பவுண்டரகன் என்றும், பதினாறு வயது வரை கைசோரன் அதாவது, பால்யன் என்றும் அழைக்கப்படுவார்கள்.


செய்ய வேண்டிய கர்ம காரியங்கள் :

ஒரு குழந்தை பிறந்து ஐந்து வயதிற்குள் இறந்து போனால் அந்த குழந்தையின் கர்ம வினைகளை போக்கும் பொருட்டு அக்குழந்தையின் நினைவாக ஊர் குழந்தைகளுக்கு பால் சாதமும், தயிர் சாதமும் கொடுக்க வேண்டும். அந்தக் குழந்தை இறந்த 11 மற்றும் 12 நாட்களில் சாஸ்திரங்களில் கூறியிருக்கும் சில கர்ம நிகழ்வுகளையும் செய்ய வேண்டும். ஐந்து வயதுக்கு மேல் பன்னிரண்டு வயதிற்குள் உள்ள குழந்தைகள் இறந்தவராயின் அவர்களின் கர்ம வினைகளை குறைக்கும் பொருட்டு இறந்த குழந்தையின் பெயரில் விருஷோற்சர்க்கம் செய்ய வேண்டும். இந்த கர்ம நிகழ்வுடன் குடம், கூடை மற்றும் விளக்கு முதலியவற்றை தானம் செய்தல் வேண்டும்.

தானம் செய்யாவிடில் இறந்த குழந்தையானது மறுபிறவியில் மரமாக தோன்றுவார்கள். அவ்விதமாக அவர்கள் தோன்றிய மரத்திலிருந்து காய், கனிகள் (உடல் உறுப்புகள்) என அனைத்தையும் மரமாக தோன்றிய பிறவியில் தானமாக செய்ய நேரிடும். உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் தந்தையின் குணத்தினை கொண்டிருப்பார்கள். அதாவது தந்தையை போலவே அவர்களது புதல்வர்களும் இருப்பார்கள். தந்தையின் உருவத்தோற்றமும், குணநலன்களும் அவர்களுடைய குழந்தைகளிடத்திலும் காணப்படும். இது ஏன் நிகழ்கிறது? என்று பார்த்தோமானால் தந்தையின் ஜீவனின் ஒரு பிரிவே அவர்களுக்கு மகனாக பிறக்கின்றார்கள்.

பூமியில் எப்பொழுதும் இருக்கக்கூடியது ஒரு சூரியன் மற்றும் ஒரே ஒரு சந்திரன் ஆகும். நீர் நிரம்பிய பல குடத்தில் பகல் பொழுதில் ஆதவனின் ஒளியில் வைத்து பார்த்தால் அதில் பல சூரியன்கள் இருப்பது போல தோன்றும். இதேபோன்று பௌர்ணமி அன்று இரவில் நீர் நிரம்பிய பல குடங்களை வைத்து சந்திரனை பார்த்தோமானால் பல சந்திரன்கள் இருப்பது போல நமக்கு தோன்றும். ஆனால் இங்கு இருப்பதோ ஒரே சூரியன், சந்திரன் ஆவார்கள். அதனால் ஏற்படுத்தப்பட்ட பிம்பங்கள் என்பது பல நூறு கோடிகளாகவே இருக்கின்றன. அதை போல தான் புத்திரர்களின் பிறப்பும். தந்தையின் அம்சங்களே புத்திரர்களிடம் காணப்படும்... குணங்கள் மற்றும் பண்புகள் யாவும்.

அதனால் தான் தந்தை இறந்தால் மகனும், மகன் இறந்தால் தந்தையும் ஈமக் கிரியைகளை செய்ய வேண்டும். ஒரு தகப்பனாருக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் அத்தனை பிள்ளைகளும் ஏதேனும் ஒரு வழியிலாவது தந்தையினுடைய குணாதிசயங்களையும், உடலமைப்பையும் கொண்டிருக்கின்றார்கள். ஸ்ரீமந்நாராயணன் இவ்விதமாக உரைத்துக் கொண்டிருக்க கருடாழ்வாருக்கு மனதில் ஒரு ஐயம் தோன்றியது. அதாவது கண்பார்வையற்ற அல்லது உடல் ஊனமுற்ற தந்தையருக்கு பிறக்கும் குழந்தைகளும் அவர்களின் சாயலான அதாவது அவருடைய உடல் அமைப்பை கொண்டு இருக்க வேண்டுமே என்று எண்ணத் தொடங்கினார். அதே எண்ணத்தை நாராயணரிடமும் வினவினார்.

சிறப்பான கேள்வியை கேட்டுள்ளாய்... பறவை குலத்து வேந்தனே...!! ஒருவரின் பிறப்பு எந்தவிதமான குறைகளும் இல்லாமல் இருப்பது என்பது அந்த ஜீவனின் முன்ஜென்மத்தில் செய்து இருக்கக்கூடிய புண்ணிய பலன்களின் அடிப்படையில் மட்டுமே. ஒரே நேரத்தில் வௌ;வேறு பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் ஒருவர் செல்வந்தருக்கும், மற்றவர் செல்வம் இல்லாமல் வறுமையில் வாடி தவித்து கொண்டு இருக்கக்கூடிய குடும்பத்திலும் பிறப்பு எடுக்கின்றார்கள். எவ்விதமான இல்லத்தில் பிறந்திருந்தாலும் சிலர் ஒழுக்கத்துடனும், சிலர் ஒழுக்கம் இல்லாமல் தவறான வழிகளில் செல்லக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.

எவ்விதமான இல்லத்தில் பிறந்திருந்தாலும் சிலர் ஒழுக்கத்துடனும், சிலர் ஒழுக்கம் இல்லாமல் தவறான வழிகளில் செல்லக்கூடியவர்களாகவும் இருப்பதற்கு காரணம் யாது? என்று பார்த்தோமானால் அந்தந்த ஜீவன்கள் முன்ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளின் (பாவ, புண்ணிய) பதிவுகளே ஆகும். மேலும் அவர்கள் செய்த அந்த வினை பதிவுகளுடன், பெற்றோர்களுடைய வினை பதிவுகளும், அவர்களுடைய முன்னோர்கள் செய்த வினை பதிவுகளும் இதில் சேர்ந்து அவர்களுக்கு குணம் மற்றும் அங்ககீன தோஷங்களையும் உருவாக்குகின்றது.

பாட்டன் செலவு செய்யாமல் கருமியாக இருந்து சொத்துக்கள் பல சேர்த்திருப்பார். ஆனால் அவர்களுடைய பேரன்கள் அந்த சொத்துக்களை கொண்டு தர்ம வழிகளில் செலவு செய்தால் அவர்களின் முன்னோர்களுக்கு வைகுண்ட பதவிகள் கிடைக்கும். ஒருவேளை அவர்கள் ஆடம்பர வகையில் அல்லது தவறான வகையில் பொருள் விரயங்கள் செய்யக்கூடியவராக இருப்பார்களானால் பாவங்கள் உண்டாகும்.


கர்ம காரியம் செய்ய யாருக்கு உரிமை அதிகம்?

ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அவர்களில் மூத்த மகன் மட்டுமே தந்தைக்கு ஈம சடங்குகளையும், மற்ற ஈம கிரியைகளையும் செய்ய முழுத்தகுதியும், கடமையும் உடையவர்கள் ஆவார்கள். தந்தை ஈன்ற மற்ற குமாரர்கள் பூமியில் வாழும் பொழுது தனது தந்தைக்கு உதவ தகுதி உடையவர்கள் ஆவார்கள். தந்தை இறந்த பின்பு தன்னுடைய தந்தை மேலுலகத்தில் அனுகூலத்துடன் இருக்க அதாவது, தந்தைக்கு (ஆன்மா நிலையிலுள்ள தந்தை பசி, பட்டினி என்று அலைந்து திரியாமல் அல்லது பிரேத ஜென்மங்களாக சுற்றி திரியாமலும்) கர்ம, காரியங்களை செய்ய மற்ற புதல்வர்களை காட்டிலும் மூத்த புதல்வனுக்கே கடமை உரியதாகும்.


பாக்கியசாலிகள் யார்?

பூலோக வாழ்க்கையை ஒருவன் நல்லதொரு முறையில் வாழ்ந்து புதல்வனை ஈன்று அவனுடைய புதல்வன் அவனுக்கு ஒரு புதல்வனை ஈன்று அதாவது, வாழும் காலத்தில் தன்னுடைய வம்சத்தில் பேரனை பார்த்து ஒருவர் மடிந்தால் அவரே பாக்கியம் மற்றும் முக்தியும் அடையக்கூடியவர் ஆவார். அவர்களே புண்ணிய லோகத்தை சென்று சேரக்கூடிய பாக்கியத்தையும் பெற்றவர்கள் ஆவார்கள்.

தனது மனைவியின் வீட்டில் இருந்து வரதட்சணை எதுவும் வாங்காமல் திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணுடன் நல்ல முறையில் வாழ்ந்து, தனது மனைவியை எந்த முறையிலும் துன்புறுத்தாமல் மகிழ்வுடன் வைத்துக்கொண்டு தனது வம்சத்தை விருத்தி செய்து அதாவது, ஒரு சற்புத்திரன் (நல்ல குணமும், பண்பும் உள்ள பிள்ளை) பிறந்தால் அந்த பிள்ளையின் மூலம் 21 தலைமுறையினர் கரையேறுகிறார்கள். அவனே தன்னுடைய பெற்றோர் இறந்த பின்பு அவர்களுக்கு கர்ம காரியங்கள் செய்ய தகுதி பெற்றவன் ஆவான்.


ஈன்றவர்களுக்கு கர்ம காரியம் செய்ய தகுதி இல்லாதவர்கள் யார்?

மனம் போன போக்கில் தன்னுடைய பெற்றோர்களின் விருப்பமில்லாமல் அவர்களுக்கு வலியையும், வேதனையும் அளித்து தனக்கு பிடித்தவளுடன் வாழ்ந்து புதல்வனை ஈன்ற மகனுக்கு தன்னுடைய பெற்றோர்களுக்கு கர்ம காரியங்களை செய்யும் உரிமை முற்றிலும் கிடையாது. அதாவது, தன்னுடைய பெற்றோர்களுக்கான கர்ம காரியங்களை செய்ய எவ்விதத்திலும் அத்தகைய மகனுக்கு உரிமை என்பது எதுவும் இல்லை. அதனால் பூமியில் வாழ்கின்ற பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மற்ற பிறவிகளில் இருந்து மேம்பட்டு இருக்கக்கூடிய மனிதர்கள், புத்திரர்களை சற்புத்திரர்களாக வளர்க்கவோ அல்லது அடையவோ முயற்சிக்க வேண்டும்.

கண்ணால் கண்டு உடலால் அனுபவிப்பது மட்டுமே சுகம் என்பது இல்லை. நிரந்தரமில்லாத இந்த சுகத்திற்காக நிரந்தரமான சுகத்தினை எப்பொழுதும் இழந்துவிடக்கூடாது. ஸ்ரீமந்நாராயணன் பெற்றோர்களுக்கு கர்ம காரியங்களை செய்ய தகுதி உடையவர்களை பற்றியும், தகுதியில்லாதவர்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.


சபிண்டீகரணம் என்றால் என்ன?

கருடாழ்வார், பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒருவர் இறந்த போது அவருக்கு செய்யப்பட வேண்டிய சடங்குகள் மற்றும் கர்ம நிகழ்வுகளை பற்றியும் தாங்கள் எடுத்து கூற வேண்டுமென்று அன்புடன் வேண்டினார்.

கருடாழ்வாரின் விருப்பத்திற்கிணங்க ஸ்ரீமந்நாராயணன் இறந்த பின்பு அவரின் உடலுக்கு செய்யப்படவுள்ள கர்மங்களை பற்றியும் எடுத்துரைக்க துவங்கினார். பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒருவர் உலக வாழ்க்கையை முடித்து கொண்ட பின்பு அவருக்கு ஓர் ஆண்டு காலம் வரை சாஸ்திரங்களில் உள்ளபடி கர்ம காரியங்கள் செய்யப்பட வேண்டும். அதில் சபிண்டீகரணம் என்கின்ற சடங்கும் செய்தல் வேண்டும்.


சபிண்டீகரணம் என்றால் என்ன?

சபிண்டீகரணம் என்பது தன்னுடைய குலத்திலுள்ள மூதாதையர்களுக்காக செய்யப்படுகின்ற பூஜையாகும். மூதாதையர்களுக்காக பிண்டங்களை வைத்து, பின்பு இறந்தவருக்கான பிண்டத்தையும் வைத்து இரண்டு பிண்டங்களையும் ஒன்றாக சேர்ப்பது இந்த சடங்கு ஆகும். இந்த சபிண்டீகரணம் செய்வதன் மூலம் இறந்தவர் தன்னுடைய பிரேத பைசாச உருவத்தை விடுத்து தன்னுடைய மூதாதையர்களுடன் இணைந்து கொள்வார்.


சபிண்டீகரணம் எப்பொழுது செய்ய வேண்டும்?

இந்த சடங்கை செய்வது என்பது ஒருவர் மடிந்த 12வது தினத்திலும், 15வது தினத்திலும், ஆறாவது மாதத்திலும் செய்யலாம். இந்த சடங்கை செய்யும் வரை இறந்தவர் பிரேத ஜென்மத்துடன் இருப்பார். சபிண்டீகரணம் செய்து முடிக்கும் வரை இறந்தவருடைய பிள்ளைகள் எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுதல் கூடாது. சபிண்டீகரணம் செய்து முடித்த பின்பே இறந்தவருடைய பிரேத ஜென்மமானது முழுவதுமாக நீங்கப்பெற்று பிதுர்த்துவம் அடையும். இந்த கர்ம நிகழ்வை நிகழ்த்திய பின்பு தாய், தந்தையரின் வம்சாவளியில் மூன்று தலைமுறையினருக்கு சிரார்த்தம் நடத்தப்பட வேண்டும்.


சபிண்டீகரணம் செய்ய தகுதி உடையவர்கள் யார்?

இறந்தவர்களுக்கு கர்மங்களை செய்யும் தகுதி என்பது இறந்தவருடைய புதல்வர்களுக்கு மட்டுமே உரியதாகும். ஒருவேளை இறந்தவர்களுக்கு புத்திரர்கள் யாரும் இல்லாமல் இருந்தால் அவர்களுடன் பிறந்த அதாவது, இறந்தவருடைய மூத்த சகோதரன் அல்லது இளைய சகோதரன் அல்லது அவர்களின் புதல்வர்கள் இந்த கர்ம நிகழ்வுகளை செய்யலாம். ஒருவேளை அவர்களுக்கு சகோதரர்களும் இல்லாத பட்சத்தில் இந்த நிகழ்வுகளை அவர்களுடைய மனைவியின் கையால் அதாவது, இறந்தவரின் மனைவியின் கையால் தர்ப்பைப் புல்லை வாங்கி பங்காளி உறவினர்கள் இறந்தவருக்காக செய்யலாம். ஒருவேளை இவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் இறந்தவருக்காக புரோகிதரே இறந்தவரின் கர்மங்களை செய்யலாம். புத்திரர்கள் இல்லாத தாயார்கள் இறந்தால் அவர்களுக்கான கர்மங்களை அவர்களுடைய கணவர்களே செய்ய வேண்டும்.


எது பாவச் செயல்?

சபிண்டீகரணம் என்ற சடங்கின் மூலமாக இறந்தவருடைய பிண்டத்தை மூதாதையர்களின் பிண்டத்தோடு இணைத்தல் மட்டும் போதாது. மூதாதையர்களின் அதாவது தாய், தந்தையரின் மூன்று தலைமுறையினருக்கு சிரார்த்தம் எனப்படும் திதி கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு திதி கொடுக்காமல் தவறினால் அந்த சபிண்டீகரணம் என்ற சடங்கை நிகழ்த்தி வைத்த புரோகிதர் நரகத்தில் துன்பத்தை அனுபவிப்பார். மூதாதையர்களுக்கு சிரார்த்தம் கொடுக்காததால் சபிண்டீகரணம் செய்தவருக்கும் பாவங்கள் அதிகரிக்கும்.


இறந்தவர் மேலான உலகத்தை அடைய யாது செய்தல் வேண்டும்?

இந்த உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டவருக்கு பல பிள்ளைகள் இருந்தாலும் ஒரு வருட காலம் வரை ஒருவர் மட்டுமே இறந்தவருக்கான சகல கர்ம நிகழ்வுகளையும் செய்து வர இயலும். மேலும் இறந்தவருக்காக ஓராண்டு காலம் வரை நித்திய சிரார்த்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், ஒரு குடத்தில் நீர் நிறைத்து உதககும்ப தானம் செய்தல் வேண்டும். அதாவது நீர் நிரம்பிய குடத்தை தானம் செய்வதன் மூலம் இறந்தவர் மேலான உலகத்தை அடைய இயலும்.


போற்றப்படக்கூடியவர்கள் யார்?

தனது உலக வாழ்க்கையில் இருக்கக்கூடிய சகல இன்ப, துன்பங்களையும் பரிமாற்றி கொள்ளக்கூடிய ஒருவர் பெண்களின் வாழ்க்கையில் இருப்பவரானால் அது அவளுடைய கணவன் மட்டுமே ஆவார். அவருடைய எண்ணங்களை புரிந்து செயல்படக்கூடிய கணவரை அடைந்த பெண்மணிகள் வாழும் காலத்திலேயே பாக்கியசாலிகள் ஆவார்கள். வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் தனது கணவனை இறைவனாக எண்ணி வாழ்ந்து அவன் தன்னைவிட்டு பிரிந்தவுடன் அதாவது முழுவதுமாக உலகிலிருந்து நீங்கியவுடன் (இறந்தவுடன்) அவருடன் தன்னுடைய உயிரையும் நீத்துக் கொள்ளக்கூடிய அவளுடைய கற்பு என்பது போற்றுதலுக்கு உரியதாகும்.

அவள் இறந்த உடனே புண்ணிய லோகத்தை சென்று அடைகின்றாள். பண்புகள் நிறைந்த மற்றும் நல்ல குணங்களை கொண்ட மனைவியை உடைய பண்பற்ற கணவனும், அவள் செய்த புண்ணியங்களினால் கணவன் நற்கதியை அடைகின்றான். அதாவது, அவனும் சொர்க்கத்தை அடைகின்றான். இவ்விதமாக இறந்த பெற்றோர்களுக்கு அவர்களின் புதல்வர்கள் ஒரே ஒரு சபிண்டீகரணத்தை செய்தால் மட்டும் போதுமானதாகும். சிரார்த்தம் மட்டும் தனித்தனியே செய்தல் வேண்டும்.


நீண்ட காலம் சொர்க்கத்தில் இருப்பவர்கள் யார்?

தன்னுடைய வாழ்க்கைத்துணைவரை தெய்வமாக எண்ணி வாழும் காலத்தில் பலவிதமான இன்னல்களை சந்தித்தாலும் அவருக்கு உறுதுணையாக இருந்து அவரிடத்திலும் மற்றும் அவரை சார்ந்த உறவினர்களிடத்திலும் கருணையோடும், அன்போடும் நடந்து கொள்கின்ற பெண்ணானவள் கணவன் இறந்த பொழுது தானும் இறக்கின்றார் எனில் அந்த மங்கையானவள் மூன்றரை கோடி தேவ ஆண்டுகள் சொர்க்கத்தில் தன்னுடைய கணவனோடு வாழ்ந்து கொண்டிருப்பாள்.


தேவர்களும் வணங்கக்கூடியவர்கள் யார்?

தன்னுடைய கணவரை அவமதித்து விட்டு அல்லது சண்டையிட்டு பிரிந்து அடுத்தவர்களுடன் கூடி வாழும் அல்லது கணவனுக்கு அறியாமல் துரோகம் செய்கின்ற பெண்கள் நரகத்திற்கு செல்வார்கள். இந்த பெண்களை ஈன்றதால் அந்த குலத்திற்கும் தோஷம் உண்டாகும். தன்னுடைய கணவன் நல்லவனோ, கெட்டவனோ அவனை கடவுளாக எண்ணி வாழ்ந்து, கற்புநெறி தவறாமல் இறக்கின்ற உத்தமமான பெண்மணிகளை தேவர்களும் வணங்குவார்கள்.

கணவனின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதே அவளுடைய முக்கியமான கடமையாக மனைவிக்கு இருக்க வேண்டும். இதுவே பத்தினிப் பெண்களின் தர்மமும் கூட. தன்னுடைய கற்பிற்கு பங்கம் வராத பட்சத்தில் கணவன், மனைவிக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். அவனே அவளுடைய கற்பிற்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் பட்சத்தில் அவன் பல கோடி காலங்கள் நரகத்தில் கிடந்து துன்பத்தை அனுபவிப்பான்.

மாங்கல்யம் கட்டி ஊரறிய, உலகறிய ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்ட கணவரிடம், அவரை இழிவுப்படுத்தும் விதமாகவோ அல்லது தன்னுடைய விருப்பத்திற்கு இணங்காமல் இருப்பவரை துன்பப்படுத்தும் விதமாகவோ நடந்து கொள்கின்ற பெண்மணிகள் இறந்த பின்பு கொடிய நரகத்தை அடைந்து துன்பத்தை அடைவார்கள். மேலும் அவர்கள் மறுபிறவி எடுக்கும் பட்சத்தில் தீய குணங்கள் நிரம்பிய ஒருவனுக்கு மனைவியாகி அவன் மூலமாக பலவிதமான துன்பங்களை அடைவார்கள்.


கர்ம நிகழ்வுகளை எவ்விதம் அனுசரிக்க வேண்டும்?

பறவைகளின் அரசனான கருடனே...!! ஒருவன் இறந்த பின்பு அவர்கள் மோட்சம் அடையும் கர்ம நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றான சபிண்டீகரணத்தை பற்றியும், ஒரு பெண் கற்புக்கு அரசியாக இருந்தால் அவளால் புகுந்த வீடும், பிறந்த வீடும் அடையும் பெருமைகள் பற்றியும், பல புண்ணியங்கள் செய்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய சொர்க்கத்தை, பெண்கள் தன்னுடைய கற்பை பாதுகாப்பதன் மூலம் எவ்விதம் அடைகின்றார்கள்? என்பதையும் யாம் உனக்கு இங்கே விளக்கி இருக்கின்றோம். இன்னும் ஏதாவது ஐயம் உனக்கு உள்ளதா? என்று ஸ்ரீமந்நாராயணன் வினவினார்.

சுவாமி இதுவரை இறந்தவர்களுக்கான காரியங்களை யார் யார் செய்வது? என்றும், எவ்விதம் செய்யப்பட வேண்டும்? என்பதையும் குறிப்பிட்டீர்கள். இனி கர்ம நிகழ்வுகளை எவ்விதம் அனுசரிக்க வேண்டும்? என்பதையும் தாங்கள் எடுத்துரைக்க வேண்டுகின்றேன் என்று வேண்டினார் கருடாழ்வார். கருடா...! பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டங்களில் ஒருவர் சற்புத்திரர்களை அடையாவிட்டாலும் அல்லது புத்திரர்கள் இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு பூமியில் மட்டுமல்ல எவ்வுலகிலும் இன்பம் என்பது இல்லை. பகுத்தறிந்து உணரும் மனிதர்கள் பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களோ அதே மகிழ்ச்சியை இறந்த பின்பும் அந்த ஆன்மா அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் தான, தர்மங்கள் செய்வது மட்டுமல்லாமல் நல்ல ஒழுக்கமுள்ள சற்புத்திரர்களையும் பெற்றிருக்க வேண்டும்.

பொருட்கள் பல இருந்தும் அதை மற்றவர்களுக்கு கொடுக்க மனமில்லாமல் இருப்பவர்களுக்கும், தான, தர்மத்தின் பலன்களை அறியாமல் அதை வாழ்வினில் எந்தவொரு சூழ்நிலையிலும் செய்யாதவர்களுக்கும் அவர்களின் குலவிருத்தியான சந்ததி என்பது இருக்காது. அவனுடைய மனைவி ஒருவேளை கருத்தரித்தாலும் அந்த சிசுவானது கர்ப்பத்தில் நீண்ட நாட்களுக்கு உயிருடன் தங்காது.


சற்புத்திரர்களை அடைய என்ன செய்ய வேண்டும்?

எங்கும் சுற்றித் திரியும் விலங்குகளும் அதனுடைய இனத்தினை விருத்தி செய்வதற்கு என்று குட்டிகளை ஈன்றெடுக்கும். விலங்குகளைக் காட்டிலும் எதையும் பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மனிதர்கள் தேவர்களின் முந்தைய நிலையாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே எளிதில் பிறவா நிலையை அடைவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். அத்தகைய அரிய பிறப்பினை உடைய மனிதர்கள் சற்புத்திரர்களை அடைந்தால் நற்கதி கிடைக்கும். சற்புத்திரர்களை அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல.

அதுவும் அவர்கள் செய்த கர்ம நிகழ்வுகளுடைய பதிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு அமையும் வாரிசுகளின் நிலைகளும் இருக்கும். அதாவது, நல்ல குலத்தில் பிறந்த ஒழுக்கமும், பண்பும் நிறைந்த ஒரு மங்கையை அக்னி சாட்சியாக கொண்டு பெரியோர்கள் மற்றும் சான்றோர்களின் முன்னிலையில் கரம் பிடிக்க வேண்டும். அவளை எள்ளளவும் துன்பப்படுத்தாமல் அன்புடன் நடத்தி, பாசத்துடன் அவர்களின் விருந்தினர்களையும், தம்முடைய விருந்தினர்களையும் அன்போடு வரவேற்று வாழ்பவர்களுக்கும், நேர்மையுடன் செயல்பட்டு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பொருள் ஈட்டுபவர்களுக்கும் நல்ல குணமுள்ள சற்புத்திரர்கள் பிறப்பார்கள்.

எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுடைய பொருட்களுக்கு ஆசைப்படாமல் தன்னிடம் இருக்கும் பொருட்களை கொண்டு மகிழ்ச்சி அடைபவர்களுக்கும், தீர்க்க ஆயுளுடன் உடல் ஆரோக்கியம், நோயற்ற வாழ்வுடன், நல்ல குணமுள்ள சற்புத்திரர்கள் பிறப்பார்கள். மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது வாழ்கின்ற காலத்தில் சற்புத்திரர்கள் இல்லாமல் இருந்தாலோ கணவனுக்கு நற்கதி கிடைக்காது.


இறந்தவர்களுக்கு கிரியைகளை செய்ய அனுசரிக்க வேண்டிய முறைகள் :

இறந்தவர்களுக்கான கர்ம நிகழ்வுகளை செய்யவிருக்கும் இடத்தினை முதலில் சுத்தம் செய்து கோமியம் தெளித்து மொழுக வேண்டும். கோமியம் தெளித்து சுத்தம் செய்த இடத்தில் தேவர்கள் எழுந்தருளி அவ்விடத்தினை ஆசீர்வாதம் செய்வார்கள். ஒருவேளை இடமானது சுத்தம் செய்யப்படாமல் இருக்குமேயானால் அவ்விடத்தில் தேவர்களுக்கு பதிலாக பேய்களும், பூத பிரேத பிசாசுகளும் அவ்விடத்தில் கூடி நின்று இறந்தவர்களுக்கு தரக்கூடிய கர்ம நிகழ்வுகளின் பலன்களை இறந்தவரை சென்றடையாது தடுத்து, இறந்த அந்த ஜீவன் நரகத்தில் துன்புறும் நிலையினை ஏற்படுத்தும்.

ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாரிடம் இவ்விதமாக உரைத்து கொண்டிருக்க... கருடாழ்வாருக்கு கர்ம நிகழ்வுகள் நடைபெறும் இடத்தில் தர்ப்பையும், எள்ளும் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன? என்பதை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. தனது ஐயத்தை அந்த பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனிடம் வினவினார். புன்னகை பூத்த வண்ணமாகவே நாராயணரும் வினதா புத்திரனை நோக்கி எள் என்பது எனது வியர்வையில் இருந்து உருவாகிய ஒரு பரிசுத்தமான தானியம் ஆகும். எள்ளில் இரண்டு வகையான தானியங்கள் உள்ளன. ஒருவர் தானம் கொடுக்கும் பொழுது எள்ளையும் சேர்த்து கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு அதிகப்படியான சுப பலன்கள் உருவாகும். எள்ளை தானம் செய்வதன் மூலம் பாவங்கள் யாவும் அகலும்.


முன்னோர்களுக்கு திருப்தி என்பது எதில்?

சிரார்த்த பூஜைகள் செய்கின்ற இடத்தில் கருப்பு எள்ளை சேர்க்கும் பொழுது முன்னோர்களான பிதுர் தேவதைகள் திருப்தியடைவார்கள். எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதாவது, நல்லெண்ணெயில் தீபம் ஏற்றும் பொழுது அவ்விடத்தில் இருக்கும் தீய சக்திகள் யாவும் அகன்று நல்ல சக்திகள் தோன்றக்கூடும். எள்ளு பிண்ணாக்கு சாப்பிடும் பசுவின் பால் என்பது உடலில் ஏற்படும் நோய்களை போக்கவல்லது மற்றும் உடலுக்கு பலத்தையும் அளிக்கக்கூடியதாகும்.


மும்மூர்த்திகளும் இருக்கும் இடம் எது?

சூசகப்புல் எனப்படும் தர்ப்பைப்புல்லானது ஆகாயத்தில் முதன் முதலில் தோன்றியதாகும். தர்ப்பைப்புல்லின் நுனிப்பகுதியில் பிரம்மாவும், மற்றொரு முனையில் சிவனும், நடுப்பகுதியில் நானும் வாசம் செய்வதால் தர்ப்பைப்புல் என்பது மிகவும் புனிதமான ஒன்றாகும். தர்ப்பை இல்லாமல் எந்தவொரு சிரார்த்த நிகழ்வுகளையும், கர்மங்களையும் செய்தல் என்பது ஆகாது. அவ்விதம் செய்தாலும் அது முன்னோர்களை திருப்திப்படுத்தாது. மேலும் தர்ப்பைக்கு நிர்மால்ய தோஷம் என்பது இல்லை. (நிர்மால்யம் ஸ்ரீ பூஜை செய்து பயன்படுத்தியது).


சம்சார வாழ்க்கையை கடக்கும் தெப்பம் என்பது எது?

ஏகாதசி விரதம், துளசி, பகவத்கீதையை மனதார படித்து பின்பற்றுதல், சான்றோரிடம் அன்பும், பக்தியும் கொண்டிருத்தல், கடவுளை சரணடைதல் போன்றவைகள் மூலம் பிறவி கடலை அதாவது, சம்சார வாழ்க்கையை கடக்க இயலும். இவைகள் யாவற்றையும் கட்டி இருப்பது என்பது தர்ப்பைப்புல் ஆகும்.


தர்ப்பைப்புல்லின் மகிமைகள் :

இந்த உலகில் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையில் நடக்க இருக்கின்ற முக்கியமான சடங்குகள் யாவற்றிலும் தர்ப்பை முக்கியமான ஒரு பங்கை கொண்டிருக்கும். கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களில் தங்க கம்பி அல்லது வெள்ளி கம்பிகளை பயன்படுத்தக்கூடிய இடங்களிலும் தர்ப்பைப்புல்லினை பயன்படுத்தலாம். ஆலயங்களை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்படும் பந்தல் கால்களில் தர்ப்பைப்புல் கட்டப்படும். இதன் பயன் என்னவென்றால் நிகழப்போகின்ற நிகழ்ச்சியானது எந்தவிதமான விக்னங்களும் இல்லாமல் முடிய வேண்டும் என்பதற்காக. தர்ப்பைப்புல்லுக்கு விக்னங்களை தடுக்கின்ற வல்லமையும் இருக்கின்றது.


தூப்புல் எது?

தர்ப்பைப்புல்லானதோ நீரில் மூழ்கினாலும் அழுகாது. நீர் இல்லாமல் இருந்தாலும் வாடாது. இதனாலேயே தூய புல் என்றும் தூப்புல் என்றும் தர்ப்பைப்புல்லுக்கு பெயர் உள்ளது.


அமிர்த வீரியம் என்றால் என்ன?

கிரகண காலங்களில் ஏற்படக்கூடிய கதிர்வீச்சுக்களால் உண்டாகும் பலவிதமான விளைவுகளையும் தவிர்க்கும் வல்லமை தர்ப்பைப்புல்லிற்கு உள்ளது. கிரகண காலங்களின் போது தர்ப்பைப்புல்லிற்கு வீரியம் அதிகமாகும். அந்த வீரியம் அமிர்த வீரியம் என்று அழைக்கப்படுகின்றது.


யாருக்கெல்லாம் வைகுண்ட லோகம் நிச்சயம் கிடைக்கும்?

மரணப்படுக்கையில் இருக்கின்ற ஒருவர் கோமியத்தால் சுத்தம் செய்யப்பட்ட பகுதியில் தர்ப்பைப்புல்லினை பரப்பி, அந்தப் புல்லின் மீது எள்ளினை இரைத்து அதன்மீது உடல்நலம் சரியில்லாமல் அதாவது, மரணம் அடையும் நிலையில் இருப்பவரை படுக்கவைத்து அவருடைய கரங்களில் தர்ப்பைப்புல்லையும், துளசியையும் கொடுத்து என்னுடைய நாமங்களை உரைத்த வண்ணமாகவோ அல்லது ஜெபித்த வண்ணமாகவோ உயிர் நீங்குவாரானால் நான்முகன் முதலிய தேவர்களுக்கு கிடைக்காத எம்முடைய வைகுண்ட லோகத்தை அவர்கள் அடைவார்கள் என்றார் திருமால்.

தானங்களை செய்யும்பொழுது அதனுடன் துளசியும் சேர்த்து அளிக்கும் பொழுது அந்த தானத்தின் மகிமை என்பது அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடியதாகும். வைகுண்டத்தில் உருவானதே உப்பாகும். அந்த உப்பினை தானம் செய்தால் மேன்மை அடைய இயலும். இறக்கின்ற தருணத்தில் உப்பினை தானம் செய்தால் இறந்தவர் சொர்க்கலோக வாசத்தை அடைவார்.


தான, தர்மத்தின் பலன்கள்

ஸ்ரீமந்நாராயணன் எடுத்துரைத்து கொண்டிருந்தவற்றை கேட்டுக் கொண்டிருந்த கருடாழ்வாருக்கு, ஒவ்வொரு மனிதர்களும் தங்களுடைய வாழ்நாளில் செய்யக்கூடிய தான, தர்மத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டினார். ஸ்ரீமந்நாராயணரும் கருடாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு தான, தர்மத்தின் பலன்களை பற்றியும் எடுத்துரைக்க துவங்கினார்.


மகா தானம் என்றால் என்ன?

ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அதனை அவர் மனதளவில் மகிழ்ந்து கொடுக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகின்றார்கள் என்றோ அல்லது கடமை என்றோ செய்யப்படுகின்ற எந்த ஒரு தானமும் நற்பலனை அளிக்காது. தான பொருட்களில் பருத்தி என்பது மிகவும் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் மானுடர்களுக்கு மானம் என்பது உயிர் போன்றதாகும். அந்த உயிரையும் காப்பாற்றக்கூடியது என்பது பருத்தி ஆகும். அதாவது மானத்தை காக்கக்கூடிய ஆடைகளை தயாரிப்பது என்பது பருத்தியிலிருந்து உருவாக்கக்கூடியதாகும்.

பருத்தியிலிருந்து தயாராகக்கூடிய ஆடைகளை தானம் செய்வதினால் செய்கின்றவரும் தன்னுடைய வாழ்நாட்களை பூமியில் வாழ்ந்து முடித்த பின்பு கைலாச லோகத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருப்பார். பருத்தியை தானம் செய்வது என்பது 'மகா தானம்" என்று சிறப்பிக்கப்படுகிறது. ஒருவேளை இந்த தானத்தை செய்தவர் மீண்டும் பிறப்பெடுப்பார் எனில் செய்த இந்த தானத்தின் பலனாக நல்லதொரு மேனியையும், பூர்ண ஆயுள் நிரம்பியவராகவும், ஐஸ்வர்யங்கள் நிரம்பிய குலத்தில் பிறந்து புகழோடு வாழ்ந்து பின்பு வைகுண்ட லோகத்தை அடைவார்.


கொடிய பாவங்களையும் அழிக்கும் தானம் எது?

தில தானம் எனப்படும் எள்தானமும், கோ தானமும் (பசு தானம்) செய்தால் ஒருவர் வாழ்நாளில் செய்திருந்த பாவங்களையும், ஏன் கொடிய பாவங்களையும் அழிக்கக்கூடியதாகும். மேற்கூறியவற்றை தானங்கள் கொடுப்பது என்பது உத்தமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டியதாகும்.


தானத்தின் முழுப்பலனையும் அனுபவிக்கக்கூடியவர்கள் யார்?

தானம் பெற்றவர் தானமாக பெற்ற பொருளை தவறான வழிகளில் பயன்படுத்துவதற்கு காரணமாக இருக்கக்கூடாது. தகுதியற்றவர்களுக்கு தானம் கொடுப்பதினால் எந்தவிதமான பலன்களும் கிடைக்காது. ஆகவே தானத்தை பெற தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே தானம் கொடுப்பதினால் முழு பலனையும் தானம் கொடுப்பவர் அடைய முடியும்.


சிறந்த பலனை எப்பொழுது தானத்தின் மூலம் அடைய இயலும்?

ஒரு மனிதர் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது செய்கின்ற தானம் என்பது சிறந்த பலனை அளிக்கக்கூடிய உன்னதமான தானமாகும். கிரகணம் ஏற்படும் காலம் மற்றும் புண்ணிய காலம் ஆகியவை தானங்களை செய்வதற்கு உகந்த காலங்களாகும். இதேபோன்று பகுத்தறிந்து உணரும் தன்மையில் மனிதர்கள் இருக்கும் நிலையில் பூதானம் (நிலத்தை தானம் செய்தல்) செய்வதாலும், தானிய தானம் செய்வதாலும், சுவர்ண தானங்கள் (பொன், பொருட்களை தானமாக வழங்குதல்) செய்வதன் மூலம் பிறப்பெடுத்த இப்பிறவியில் செய்த பாவங்கள் யாவும் அழியும்.


எந்த தானம் செய்தால் எமன் மகிழ்ச்சி அடைவார்?

வாழும் காலத்திலோ அல்லது இறக்கும் தருவாயிலோ இருக்கும் காலங்களிலும் ஒருவர் எள்ளையும், இரும்பையும் தானமாக கொடுத்தால் எமதர்மன் மிக்க மகிழ்ச்சி அடைவார். எமன் மகிழ்ச்சி அடைந்தால் நரகத்தில் கிடைக்கும் தண்டனைகளை எள் அளவாவது குறைப்பார். ஒருவர் வாழ்நாளில் எள்ளை தானமாக செய்வதன் மூலம் எம பயத்தினை முழுவதுமாக அகற்ற இயலும். பருத்தி ஆடைகளை தானம் செய்வதன் மூலம் எமதூதர்களிடத்தில் இறந்த ஆன்மா பயமின்றி பயணம் செய்ய இயலும். தானியங்களை தானம் செய்வதன் மூலம் இறந்தவருடைய ஆன்மாவிற்கு எமலோகத்தில் நல்லதொரு உபசரிப்பும் கிடைக்கும்.


எப்பொழுது தானம் செய்தால் அதிக பலனை அடைய இயலும்?

உடல்நிலையும் சரியில்லாமல், மரணம் ஏற்படும் தருவாயில் என்னை நினைத்து தியானித்தாலோ அல்லது என்னுடைய நாமங்களை உச்சரித்துக் கொண்டிருந்தாலோ அவனுக்கு ஈடு, இணையற்ற இன்ப வீடாகிய வைகுண்ட லோகத்தில் இருக்க நித்திய வாசம் கிடைக்கும். தந்தை இறந்த பிறகு அவருடைய புதல்வர்கள் இறந்த தந்தைக்கு சிரார்த்தம் செய்வதை காட்டிலும், மரணப்படுக்கையில் இருக்கும் தந்தையின் அருகில் இருந்து புத்திரர்கள் செய்யும் தானம் அதீத பலன்களை அளிக்கக்கூடியதாகும்.


எந்த லோகம் யாருக்கு?

கருடனே...!! பஞ்சபூதங்கள் (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) யாவற்றிலும் யாமே நிறைந்து இருக்கின்றோம் என்று உணர வேண்டும். நன்மைகள் செய்தவர்கள் சொர்க்கத்தையும், பாவங்கள் செய்தவர்கள் நரகத்தையும் அடைவார்கள். கொடுப்பவனும் யாமே... அந்த பொருளை பெறுபவனும் யாமே... முற்பிறவியில் செய்கின்ற கர்ம வினைகளின் அடிப்படையிலும், பிறப்பெடுக்கின்ற இப்பிறப்பில் செய்கின்ற கர்ம வினைகளின் அடிப்படையிலும் இறந்த, எதையும் பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மனித ஆன்மாவானது எந்த லோகத்தை அடைகின்றது? என்று அந்த ஆன்மாவே முடிவு செய்கின்றது.


அதிக அளவில் புண்ணியங்கள் எந்த தானத்தில், எங்கு செய்தால் கிடைக்கும்?

கருடா...!! யான் இருக்கும் திருத்தலங்களில் என்னை வழிபட்டு எனது தலங்களில் தான, தர்மங்கள் எவர் செய்கின்றாரோ அவர்கள் அதிக அளவில் புண்ணியங்களை பெறுவார்கள். மரணம் அடைந்தவர்களின் நினைவாகவோ அல்லது வாழும் காலத்தில் பூமியை எவர் ஒருவர் தானம் செய்கின்றாரோ அந்த பூமியின் அடிகளுக்கு ஏற்ப அத்தனை ஆண்டுகள் இறந்தவர் சொர்க்கலோகத்தில் வாழ்ந்திடுவார்.

வாழும் காலத்தில் தீப தானம் செய்வதால் இறந்த பின்பு ஆன்மாவானது ஒளிமிக்க பாதையில் எமதூதர்களால் அழைத்துச் செல்லப்படுவார்கள். எமதூதர்கள் அழைத்து செல்லும் பாதையில் அவர்களுடைய முன்னோர்கள் இருட்டில் இருந்தாலும் அவர்களையும் நல்ல உலகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய சக்தி இவர்களுக்கு கிடைக்கும். தீப தானம் கொடுக்க உகந்த மாதம் என்பது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் ஆகும்.


அனைத்திலும் யார் இருக்கின்றார்?

மண்ணுலகில் பிறப்பு எடுக்கின்ற அனைத்து உயிரினங்களும் என்றோ ஒரு நாள் இறந்தாக வேண்டும். பிறப்பெடுக்கும் நாளில் இறக்கும் நாளும் நிர்ணயம் செய்யப்படுகின்றது. ஆகவே மற்ற உயிர்களை காட்டிலும் மேம்பட்டு இருக்கக்கூடிய மனித உயிரினங்கள் உயிருடனும், உடலுடனும் இருக்கும் காலக்கட்டங்களில் தங்களால் முடிந்த அளவு தானங்களை செய்து புண்ணியங்களை ஈட்டிக்கொள்ள வேண்டும்.

வாழ்கின்ற காலத்தில் ஒருவர் செய்கின்ற புண்ணியம் என்பது பிறப்பெடுக்கும் மற்ற பிறவிகளிலும் அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஒருவர் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு அடுத்தடுத்த பிறவிகளில் நல்லதும், கெட்டதும் நடைபெறுகின்றது. ஒருவர் செய்கின்ற கர்ம வினைகளின் அடிப்படையிலேயே அவர்களின் புத்திகளில் நல்லதையும், கெட்டதையும் யாமே நாட செய்கின்றோம். கொடுப்பவனும், வாங்குபவனும் யாமே இன்றி வேறொருவர் இல்லை என்பதை பகுத்தறிந்து உணரும் மனிதர்கள் நன்கு உணர்ந்து தான, தர்மங்களை செய்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

ஒருவர் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது செய்கின்ற தானம் என்பது எவ்வளவு சிறந்தது? என்று யாம் முன்பே உரைத்து இருக்கின்றோம். ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. செய்கின்ற தானத்தின் மூலம் என்னென்ன பலன்கள் ஏற்படுகின்றன? என்பதை அறிந்து செய்வது சிறப்பாகும். சமைத்த உணவுகளையும், செப்பு பாத்திரங்களையும் வாழ்கின்ற காலத்தில் தானமாக யார் செய்கின்றார்களோ அவர்கள் இறந்த பின்பு அந்த ஆன்மா ஆகாய மார்க்கமாக மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ளும். யானைகளையும், குதிரைகளையும் ஆலயங்களுக்கு தானமாக வழங்கக்கூடியவர்கள் அதிகமான புண்ணியங்களை அடைவார்கள்.

சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும், நவராத்திரி, பௌர்ணமி போன்ற காலக்கட்டங்களிலும், தர்ப்பண சிரார்த்த காலங்களிலும் வேதம் உணர்ந்த அந்தணர்களுக்கு தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு) கொடுப்பதாலும், ஆலயங்களில் அர்ச்சனைகளுக்கு பூக்களை அளிப்பதாலும் எமகிங்கரர்கள் மகிழ்ச்சி அடைந்து இறந்த உடலிலிருந்து பிரிந்த ஆன்மாவினை எள்ளளவும் துன்புறுத்தாமல் எமலோகத்திற்கு அழைத்து செல்வார்கள். அரிசி, எள், 13 கடகம் (கமண்டலம்), மோதிரம், குடை, விசிறி, பாதரட்சை அதாவது காலணி இவற்றை தானம் கொடுக்க வேண்டும். வாழ்கின்ற காலத்தில் ஆடைகளை தானமாக கொடுத்தால் இறந்த பின்பு ஆன்மாக்களை அழைத்து செல்ல வரக்கூடிய எமகிங்கரர்கள் தங்களுடைய கோர ரூபத்தை மாற்றிக்கொண்டு ஜீவனின் முன்பாக நல்ல உருவத்துடன் காணப்படுவார்கள்.

பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மற்ற உயிரினங்களை காட்டிலும் மேம்பட்டு இருக்கக்கூடிய அதாவது, தேவர்களுக்கு முன்பாக இருக்கக்கூடிய மனித உயிரினங்கள் செய்கின்ற தான, தர்மங்களின் அடிப்படையில் மேலான இடங்களையும், லோகங்களையும் அடைகின்றார்கள் என்று ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாரை நோக்கி உரைத்துக் கொண்டிருந்தார். இவ்விதமாக நாராயணன் பூமியில் பிறக்கின்ற அனைத்து உயிரினங்களிலும் சிறந்த உயிரினமாக அதாவது, பிறப்புகளில் அரிய உயிரினமான மனித உயிரினங்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப நிகழக்கூடிய நன்மைகளும், தீமைகளும் எதன் அடிப்படையில் நிகழ்கின்றது? என்பதையும் ஒவ்வொரு தானத்தின் பலன்களையும் எடுத்துரைத்தார்.


இறந்த பின்பு உடலின் நிலை யாது?

திருமால் தானத்தின் பலன்களை பற்றி எடுத்துரைத்து கொண்டிருக்க கருடாழ்வாருக்கு மனதில் மென்மேலும் ஐயங்கள் உருவாகியது. அதாவது, மனிதர்களின் உடலிலிருந்து உயிர் எந்த வழியில் பிரிகின்றது? என்பதே ஆகும். ஸ்ரீமந்நாராயணன் கருடனின் ஐயத்திற்கு பதில் கூறத் துவங்கினார். கருடனே...!! மனிதனுக்கு இறப்பு என்பது ஏற்படுகின்ற பொழுது அவனது உயிரானது பஞ்சபூதங்களாலான சரீரத்தை விட்டு அகலும் பொழுது அவனுடைய கண்விழி வழியாகவோ அல்லது நாசியின் வழியாகவோ அல்லது உரோமத்துவாரங்கள் வழியாகவோ வெளியேறும்.

பிரம்மம் உணர்ந்த ஞானிகளுக்கு கபாலம் வழியே அவர்களின் ஆன்மா வெளிப்படும். பாவம் செய்த உடலிலிருந்து ஆன்மாவானது அவ்வளவு எளிதில் வெளியேறுவதில்லை. பாவம் செய்தவர்களின் உடலிலிருந்து ஆன்மாவானது பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகி பின்பு வெளியேறும். ஒருவேளை அவர்களின் உடலிலிருந்து ஆன்மா வெளியேறுமாயின் அபான மார்க்கமாக (மலவாய் வழியாக) வெளியேறும். மனிதனின் உடலானது பஞ்சபூதங்களால் உருவானதாகும். பஞ்சபூதங்கள் என்பது இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை மூலங்களான (மண்) பிருதிவி, (நீர்) அப்பு, (அக்னி) தேயு, (காற்று) வாயு, (ஆகாயம்) வான் ஆகியவற்றை குறிப்பிடுவதாகும்.


இறந்த பின்பு உடலின் நிலை யாது?

உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்பு பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட உடலானது விரைத்து மரக்கட்டையாக மாறிவிடும். உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்பு உடலில் இருக்கும் உணரக்கூடிய பாகங்களான மெய், வாய், கண், மூக்கு, காது போன்றவைகள் ஒவ்வொன்றாக செயலிழக்க துவங்குகின்றன. மேலும் மனிதன் வாழும் காலத்தில் மறைமுகமாக இருந்துவந்த காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்ய குணங்கள் யாவும் மனதோடு ஒன்றி மறைய துவங்குகின்றது. உடலிலிருந்து ஜீவன் பிரிந்த பின்பு மேற்கண்டவை யாவும் ஆகாயத்தோடு கலந்துவிடுகின்றன.

செய்த வினைகளின் பயனாக மீண்டும் அந்த ஆன்மா பிறப்பெடுக்கும் பொழுது இந்த குணங்கள் யாவும் இணைந்து ஜெனனம் ஏற்படுகின்றது. நன்மைகள் பல செய்து புண்ணியம் சேர்த்த ஆன்மாவானது பிறப்பெடுக்கும் மறுபிறவியில் நல்லதொரு செல்வம் நிறைந்த குலத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறக்கின்றார். மனிதனின் உடல் என்பது எலும்பு, தசை, நரம்பு இவற்றால் பிணைக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்பாகும்.

மனிதனின் உடல் என்பது எலும்பு, தசை, நரம்பு இவற்றால் பிணைக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்பாகும். வாழும் பொழுது நவ துவாரங்கள், ரோம துவாரங்கள் வழியாக உடல், கழிவுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்பு மேற்கண்ட அனைத்து உறுப்புகளின் பணிகளும் முழுவதுமாக நிறுத்தப்படுகின்றன. இந்த செயல்பாடுகளானது மனித உடலுக்கு மட்டுமல்லாமல் பிறப்பெடுக்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் இதுவே நியதி ஆகும்.


உடலின் அதிசய நிகழ்வு

விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவர்களுக்கு சரீரம் உண்டு. ஆனால் அவர்களுக்கு வயோதிகம் கிடையாது. ஸ்ரீமந்நாராயணன் கருடனை நோக்கி உடலை விட்டு உயிரானது எவ்விதம் பிரிகின்றது? என்பதை எடுத்துரைத்தார். யாம் உரைத்தவற்றில் ஏதேனும் ஐயங்கள் உள்ளதா? என்று வினவினார். பிரபுவே...!! தாங்கள் உரைத்தவற்றில் இருந்து இறப்புகள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் கிடைக்கப்பெற்றேன்.

மேலும் மனித உடல் என்பது சொல்ல முடியாத அளவிற்கு பலவிதமான ஆச்சரியங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. தசை மற்றும் நரம்பு போன்றவற்றால் உருவான உடலானது ஏதோ ஒருவிதமான மாயத்திற்கு கட்டுப்பட்டது போல் காணப்படுகின்றது. அந்த மனித உடலின் அதிசய நிகழ்வுகளை பற்றி அடியேனுக்கு பல சந்தேகங்கள் உருவாகின்றன. அந்த சந்தேகங்களை நீக்கும் பொருட்டு தாங்கள் பதில்களை எடுத்தருள வேண்டும் என்று வினவினார் கருடன்.

கருடாழ்வாருக்கு எழுந்த சந்தேகங்களை போக்கும் பொருட்டு ஸ்ரீமந்நாராயணரும் அவருடைய வினாக்களுக்கு பதிலளிக்க துவங்கினார். பறவைகளின் வேந்தனே... நீ மனிதர்களுடைய உடல் தத்துவத்தை பற்றியும், அந்த உடல் இயங்கும் விதத்தை பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறாய். உன்னுடைய ஐயங்களை போக்கும் பொருட்டு மனித உடலில் இருக்கக்கூடிய தத்துவங்களை பற்றி எடுத்து உரைக்கின்றோம். பொறுமையுடன் கேட்பாயாக... என்று கூறி உரைக்கத் துவங்கினார் திருமால்.

ஆணும், பெண்ணும் இணைந்து தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் பெண்ணினுடையை வயிற்றில் கருவானது உருவாகின்றது. உருவான கருவானது முழு வளர்ச்சி அடைந்து 10 மாதங்களில் வளர்ந்து குழந்தையாக பிறக்கின்றது. பெண்ணானவள் மாதவிலக்காகி இருக்கும் முதல் நான்கு நாட்களில் மற்றவர்களின் கண்களுக்கு படாதவாறு தனி இடத்தில் இருக்க வேண்டும். ஒருவேளை அந்த நான்கு நாட்களும் அவர்களை பார்க்க நேரிட்டால் பார்ப்பவர்களுக்கு பாவம் உண்டாகும் என்று கூறினார் திருமால்.

இவ்விடத்தில் கருடாழ்வாருக்கு ஒருவிதமான ஐயம் தோன்றத் துவங்கியது. அதாவது, மாதவிலக்கு அடைந்த பெண்ணை முதல் நான்கு நாட்களில் பார்ப்பதன் மூலம் ஏன் தோஷம் உருவாகிறது? என்று ஸ்ரீமந்நாராயணனை நோக்கி வினவினார். அதன் பின்னர் ஸ்ரீமந்நாராயணனும் அதற்கான விளக்கத்தை அளிக்க துவங்கினார். ஒரு சமயத்தில் தேவர்களின் தலைவனாக இருந்துவந்த இந்திரன் அரம்பையர்கள் ஆடிய நடனத்தை கண்டும், கந்தவர்கள் இயற்றிய இசையில் மயங்கி மனம் மகிழ்ந்தும் கொண்டிருந்தான். இந்திரனின் மனமும், கண்களும் அரம்பையர்களின் உடல் அழகை கண்டு மயக்கமுற்று இருந்தன.

அப்பொழுது தேவர்களின் குரு அவ்விடத்திற்கு வந்திருந்தார். மயக்கமான நிலையில் இருந்த இந்திரதேவனும் வந்திருந்த குருவை கவனிக்காமல் அவரை அலட்சியப்படுத்தும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தான். இதை கண்டதும் குருதேவர் மனதில் பலவிதமான குழப்பங்களுடனும், வேதனையுடனும் அவ்விடத்தை விட்டு அகன்றார். பின்பு குருவானவர் தேவர்களுக்கு எவ்விதமான உதவியையும் செய்யாமல் மறைந்தும் சென்றார். தேவர்களின் குருவானவர் தேவலோகத்தில் இல்லாததை அறிந்து கொண்ட அசுரர்கள் இதுவே அவர்களை தாக்குவதற்கான தகுந்த நேரம் என்று தேவர்களின் மீது எதிர்பாராத தாக்குதல்களை நிகழ்த்த தொடங்கினார்கள்.

தேவர்களும் அந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுத்து அசுரர்களை வெற்றி கொண்டனர். இருப்பினும் முறையான பாதுகாப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் தேவர்களும் துன்பத்தை அனுபவிக்க தொடங்கினார்கள். தேவலோகத்திற்கு வந்த ஒற்றர்கள் தேவேந்திரனிடம் தாரகாசுரன் தேவர்களின் மீது போர் தொடுக்க போவதை கூறினர். அசுரலோகத்திலிருந்து வந்த ஒற்றனின் கூற்றால் மிகவும் சினம் கொண்ட தேவேந்திரன் நான் போருக்கு தயாராக உள்ளேன் என்று கூறி தாராகாசுரனிடம் இருந்து வந்த ஒற்றனிடம் கூறினார். தேவேந்திரனின் கூற்றுக்கிணங்கி தாரகாசுரன் தனது படையை தயார் செய்து தேவேந்திரனுடன் போர் புரிவதற்கு தயாராக இருந்தான். தேவேந்திரனும் தனது படைகளுடன் நேருக்கு நேராக போரிட தயாராக இருந்தார்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே யுத்தம் உண்டாயிற்று. எனினும் தேவர்களின் பகுதியிலேயே அதிகப்படியான இழப்புகள் உண்டாயின. காரணம் தாரகாசுரன் பெற்ற வரத்தின் மகிமையே ஆகும். தேவேந்திரன் தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பிரயோகித்து பார்த்தும் எவ்விதமான பலனும் இல்லை. இவரின் சக்தி மிகுந்த ஆயுதங்களும் தாரகாசுரனிடம் சக்தி இழந்து போயின. தேவேந்திரனும் விடாது முயற்சித்து பார்த்தும் அவரின் எண்ணம் ஈடேறவில்லை. இந்நிலை இவ்வாறே சென்று கொண்டிருந்தால் தன்னுடைய அழிவு உறுதி என முடிவு செய்த தேவேந்திரன் அவ்விடத்தை விட்டு மறைந்தார்.

தேவேந்திரன் மறைந்ததை அடுத்து போர் புரிய தலைவனே இல்லாததால் இனி தேவலோகம் எனக்கே உரியது என்றும், இனி நானே தேவலோகத்தின் அரசன் ஆவேன் என்றும், மூவுலகிலும் இனி என் கட்டளைப்படி அனைத்தும் நடைபெற வேண்டும் எனவும் கூறி தாரகாசுரன் மகிழ்ந்தான். தேவேந்திரன் தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியை தேடி அவரின் குருகுலத்திற்கு சென்றார். பெண் மயக்கத்தில் இருந்த தேவேந்திரன் செய்த செயல்களால் இந்திர சபையை புறக்கணித்த குலகுருவை எங்கு தேடியும் தேவேந்திரனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின் என்ன செய்வது? என்று அறியாமல் பிரம்மாவை காண சென்றார். இவ்வேளையில் தேவர்களின் அதிபதியான தேவேந்திரன், பிரம்ம தேவரிடம் சென்று நிகழ்ந்த அனைத்தையும் கூறினார். இனி நான் மேற்கொண்டு என்ன செய்வது? என்று தெரியாமல் இருப்பதாகவும், தேவர்களின் குருவையும் காண முடியவில்லை என்றும் கூறி இதற்கு தாங்கள்தான் உபாயம் கூற வேண்டும் என பணிந்து நின்றார். தாரகாசுரனின் அழிவு என்பது சிவபெருமானால் மட்டுமே நிகழும். அதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்று பிரம்ம தேவர் கூறினார்.

தேவேந்திரன் உரைத்ததில் இருந்து குருவை அவமதித்ததால் ஏற்பட்ட தோஷமானது தேவேந்திரனான இந்திரனை நெருங்க தொடங்கியதை நன்கு உணர்ந்திருந்தார் பிரம்ம தேவர். இனி மேற்கொண்டு தம்மால் எந்த உதவியும் செய்ய இயலாத நிலையில் இருப்பதை உணர்ந்த பிரம்ம தேவர், இந்திரனிடம் தேவர்களின் குருவான பிரகஸ்பதியை காணும் வரையில் துஷ்டா என்பவரின் மகனான மூன்று தலைகளை கொண்ட விஸ்வரூபனை தேவர்களின் குருவாக கொள்வீர்களாக... என்று கூறினார்.


பிரம்ம தேவரின் சூழ்ச்சி :

நான்முகன் அளித்த யோசனையில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் இதையும் நடைமுறைப்படுத்தாவிட்டால் இவரின் பகைமையும் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து நான்முகன் அருளியதை ஏற்று அவ்விதமே விஸ்வரூபனை தேவர்களின் குருவாக நியமிக்கலாம் என்று எண்ணினார். பிரம்ம தேவர் தேவேந்திரனுக்கு கூறியது அவருக்கு அளித்த உதவி மட்டுமல்லாமல் அவரது கர்ம வினையை அனுபவிக்கும் பொருட்டு கூறப்பட்ட உபாயம் ஆகும். இது பிரம்ம தேவரால் செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சியாகும். இதை உணராத தேவேந்திரனும் பிரம்ம தேவரை வணங்கி தேவர்களின் குருவான விஸ்வரூபனை காண அவர் இருக்கும் இடத்தை நோக்கி செல்லத் துவங்கினார்.


விஸ்வரூபனை காணச் செல்லுதல் :

தேவேந்திரன் விஸ்வரூபன் இருக்குமிடத்தை அடைந்து நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்து தேவர்கள் அனைவரும் குரு இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும், தாங்கள் அப்பதவியில் இருந்து தங்களை வழிநடத்த வேண்டும் என்றும் வேண்டினார். மேலும், எங்களை தங்களின் சீடனாக ஏற்று, எங்களுக்கு தாங்கள் போதித்தல் வேண்டும் என்றும் வேண்டினார். ஒரு அசுரனான நான் தேவர்களின் குருவாக இருப்பதா? என்ற எண்ணம் விஸ்வரூபனிடம் உண்டாயிற்று. இருப்பினும் இதுவே தேவர்களை பழிவாங்குவதற்கான சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொண்டார்.

அதாவது மனதளவில் அசுரர்களின் வெற்றிக்கொடியை அனைத்து லோகங்களிலும் பறக்கவிட வேண்டும் என்றும், தேவர்கள் அனைவரையும் வதம் செய்ய வேண்டும் என்றும் எண்ணத்தை கொண்டே தேவேந்திரனிடம் நான் தங்களின் குருவாக இருக்க சம்மதிக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். உதடுகள் மட்டுமே புன்னகைத்து குருவாக இருப்பதாக கூறினார். இருப்பினும் மனதளவில் அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவர் தேவர்களின் குருவாக இருக்கத் துவங்கினார்.


தேவேந்திரனின் மனக்கவலை :

பிரகஸ்பதியிடம் நடந்து கொண்ட விதத்தை எண்ணி எண்ணி மிகவும் மனம் குலைந்தார் தேவேந்திரன். இதனால் ஏற்பட்ட தோஷத்தை களைய ஒரு மாபெரும் யாகத்தை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு புதிய குருவான விஸ்வரூபனிடம் தனது விருப்பத்தை எடுத்துரைத்து ஒரு யாகம் நடத்த வேண்டும் என்றும், அது தேவர்களின் வளர்ச்சிக்காகவும், நான் குருவிடம் செய்த செயல்களால் ஏற்பட்ட விளைவுகளை களையவும் நிகழ்த்தப்பட வேண்டும் என்று கூறினார். விஸ்வரூபனும் யாகத்தை நடத்துவதாக கூறினார். ஆனால், அதில் மறைமுகமாக சில திட்டங்களை செய்யத் துவங்கினார்.


சூழ்ச்சியை அறிதல் :

தேவேந்திரனின் விருப்பம் போலவே யாகமும் துவங்கியது. யாகம் துவங்கியதும் விஸ்வரூபன் தேவர் குலம் தழைக்க வேண்டும் என்பதை உதட்டளவில் மட்டும் கூறி மனதளவில் அசுரர்கள் குலம் தழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி ஒவ்வொரு முறையும் மந்திரங்களை எடுத்துரைத்து யாக வேள்விக்கு நெய்யை ஊற்றி கொண்டிருந்தார்.

விஸ்வரூபன் எடுத்துரைக்கும் மந்திரங்களை அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த இந்திரதேவன் நன்கு கவனிக்க துவங்கினார். அவர் கூறும் மந்திர சக்திகளின் வலிமையை தனது ஞான திருஷ்டியால் காண தொடங்கினார். அதாவது விஸ்வரூபன் உரைக்கும் மந்திரமானது தேவர்களை பலப்படுத்துவதற்கு பதிலாக அசுரர்களை பலப்படுத்துகின்றது என்பதை அறிந்து கொண்டதும் அவ்விடத்தில் மிகுந்த சினம் கொண்டார்.


பிரம்மஹத்தி தோஷம் உருவாதல் :

சினம் கொண்ட தேவேந்திரன் தனது கரங்களில் இருந்த ஆயுதத்தை விஸ்வரூபனின் மீது ஏவினார். விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் அது கொய்த்து எரிந்தது. தலையற்ற உடலில் இருந்து விஸ்வரூபனின் ஆன்மாவானது பிரிந்து, அவன் இறக்கத் தொடங்கினான். விஸ்வரூபன் ஒரு அசுரனாக இருக்கும் பட்சத்திலும் அனைத்து வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்று உணர்ந்தவராக இருந்து வந்தார். விஸ்வரூபனை கொன்ற குற்றத்தினால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷமானது அவ்விடத்தில் பற்றிக்கொண்டது.


தோஷத்தை போக்குதல் :

பிரம்மஹத்தி தோஷத்தினால் தேவேந்திரன் பாதிக்கப்பட்டதும் அந்த தோஷத்தின் விளைவால் அனைத்து தேவர்களும் பாதிக்கப்பட துவங்கினர். தேவர்களின் பொலிவானது சிறுக சிறுக குறையத் துவங்கியது. இதை அறிந்ததும் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திரனுக்கு ஏற்பட்ட தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை போக்க தங்களால் இயன்றளவு முயற்சி செய்யத் துவங்கினர்.

தேவேந்திரனான இந்திரனுக்கு ஏற்பட்ட இந்த தோஷத்தை போக்க பூவுலகில் இருந்த மரங்கள், மண், நீர் மற்றும் அனைத்து மானுட பெண்களுக்கும் அதை சமமாக பங்கிட்டுக் கொடுத்துவிடலாம் என்று மற்ற தேவர்கள் எண்ணினர். இந்த தோஷத்தினால் ஏற்படும் விளைவுகளை நாங்கள் எவ்விதத்தில் நீக்கிக்கொள்ள முடியும்? என்று தோஷம் ஏற்ற நால்வரும் தேவர்களிடம் வினவினார்கள். தேவர்கள் அவர்களின் வினாவிற்கு விடை அளிக்கும் பொருட்டு நீருக்கு தோஷமானது நுரையாகவும், மண்ணிற்கு தோஷமானது உவர் மண்ணாகவும், பெண்களுக்கு தோஷமானது பூப்பாகவும், மரத்திற்கு அதிலிருந்து வெளிப்படும் பிசினாகவும் பிரம்ம தோஷமானது கழியும் என்று கூறினார்கள்.

தேவ குல வேந்தனுக்கு ஏற்பட்ட இந்த தோஷத்தினை நாங்கள் ஏற்பதினால் எங்களுக்கு ஏதாவது நன்மை உண்டாகுமா? என்று வினவினார்கள். ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பலன் இருப்பது போல நீங்கள் ஏற்கும் இந்த தோஷத்தினால் உங்களுக்கு நன்மையே உண்டாகும் என்று கூறினார்கள். அதாவது, மண் ஏற்ற தோஷத்தினால் மண்ணில் சகல உயிர்களும் உயிர் வாழத் தேவையான அனைத்து விதமான பயிர் விளைச்சலும் உண்டாகும் என்றும், நீரானது இறைக்க இறைக்க ஊறும் என்றும், மரங்களில் இருந்து வெளிப்படும் காய், கனிகள் அனைவருக்கும் பயனை அளித்து நீண்ட நாட்கள் உயிர் வாழும் என்றும், பெண்ணானவள் தன் கருவில் இருக்கும் குழந்தை பிறக்கும் வரையிலும் தன் கணவரோடு கலந்து மகிழ்ச்சி அடையலாம் என்றும் தேவர்கள் வரமளித்தார். தோஷத்தின் பலமானது குறையத் துவங்கியதும் தேவர்கள் அனைவரும் முன்பு போலவே தங்களது பொலிவை பெறத் துவங்கினர்.


மாதவிலக்கும், காட்சிகளும் :

பெண் மாதவிலக்கான முதல் நான்கு நாட்களுக்கு மற்றவர்கள் பார்வையில் படக்கூடாது. காரணம் யாதெனில் இந்திரன் பெற்று இருக்கக்கூடிய பிரம்மஹத்தி தோஷம் பெண்களை பிடித்து இருப்பதினால் அந்த தோஷம் அவர்களை மட்டும் பாதிக்காமல், அவர்களை காண்போரையும் பாதிக்கின்றது. மாதவிலக்கு அடைந்த பெண்ணானவள் முதல் நாளன்று கொலை செய்த கொலைகாரி போன்றும், இரண்டாம் நாள் கொள்ளையடித்தவள் போன்றும், மூன்றாம் நாள் அழுக்குகள் நிறைந்து இருக்கக்கூடிய ஆடை போன்றும், நான்காம் நாளில் ஓரளவு தூய்மை அடைந்தவளாகவும் இருப்பாள்.


விலக்கான காலங்களில் செய்யக்கூடாதவை எவை?

ஒரு பெண் விலக்கான காலங்களில் உப்பு நிறைந்த பண்டத்தை உண்ட பிறகு அவளுடைய கணவனையும், குழந்தைகளையும், சூரியனையும் காண வேண்டும். அவ்விதம் இல்லாமல் மீறி சூரியனை பார்ப்பதினால் சூரிய தோஷமும், கணவன் மற்றும் புத்திரர்களை பார்ப்பதினால் அவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும்.


மாதவிலக்கான காலங்களில் பெண்கள் இறைவழிபாடு செய்யலாமா?

மாதவிலக்கு அடைந்த காலத்தில் பெண்கள் இறைவழிபாட்டு செய்வதை தவிர்க்கவும். அதாவது வீட்டில் இருக்கும் பூஜையறைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கோவில்கள், யாக, சிரார்த்த பூஜைகளில் பங்கேற்கக்கூடாது.


கொடிய யோகம் யாருக்கு உண்டாகும்?

பெண்ணானவள் மாதவிலக்கு அடைந்திருப்பாள் என்பதை அறிந்தும் ஆணை கட்டாயப்படுத்தி அவளுடன் இணைய காரணமாக இருக்கின்றவர்களுக்கு கொடிய யோகமும், பாவமும் ஏற்படும்.


மனிதன் பிறப்பு நிலைகள்

பெண்ணானவள் மாதவிலக்கான நான்காம் நாட்களில் இருந்து எட்டாம் நாட்களுக்குள் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. திருமணமான தம்பதியர்கள் சற்புத்திரர் வேண்டுமென்றால் இருவரும் ஒரு மனதாக இருந்து கோபம், சோகம், விரக்தி போன்றவற்றை மறந்து ஒருவருடன் ஒருவர் உடல் அளவிலும், மனதளவிலும் இணையும் பொழுது ஆணிடமிருந்து வெளிப்படும் சுக்கிலமும், பெண்ணிடம் இருந்து வெளிப்படும் சுரோணிதமும் வீரியம் கொண்டதாகவும், உன்னதமானதாகவும் இருக்கும்.

கலவியின்போது ஆணிடம் இருந்து வெளிப்படும் சுக்கிலமும், பெண்ணிடம் இருந்து வெளிப்படும் சுரோணிதமும் ஒன்று கலந்து குழந்தையாக பிறப்பெடுக்கின்றன. இணைவின்போது ஆணிடமிருந்து வெளிப்படும் சுக்கிலத்தின் அளவு பெண்ணிடம் இருந்து வெளிப்படும் சுரோணியத்தின் அளவைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தையாகவும், பெண்ணின் சுரோணியம் ஆணின் சுக்கிலத்தை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் பெண் குழந்தையாகவும், ஆணின் சுக்கிலமும், பெண்ணின் சுரோணியமும் சம அளவில் இருக்கும் பட்சத்தில் திருநங்கைகளாகவும் பிறக்கின்றார்கள்.


மனிதன் பிறப்பு நிலைகள் :

மங்கையினுடைய கருவறை (கர்ப்பப்பை) ஆனது ஆரோக்கியமானதாகவும், நல்ல நிலையிலும் இருக்கும் பட்சத்தில் கலவி செய்த ஐந்தாம் நாளில் சுரோணியத்துடன் (முட்டையுடன்) சுக்கிலம் இணைந்து ஒரு குமிழி உண்டாகும். குமிழியானது பதினான்கு நாட்களுக்குள் தசையின் வளர்ச்சி அதிகரிக்கும். இருபதாவது நாட்களில் மென்மேலும் தசைகளின் வளர்ச்சி உண்டாகும். கருவுற்ற முப்பதாவது நாட்களில் பஞ்சபூதங்களின் சேர்க்கை ஏற்படும்.

கருவுற்ற இரண்டாவது மாதத்தில் உடலுக்கு உரிய தோலானது உருவாக துவங்குகின்றது.

கருவுற்ற மூன்றாவது மாதத்தில் உடலில் இருக்கக்கூடிய நரம்புகள் யாவும் உருவாகின்றன.

கருவுற்ற நான்காவது மாதத்தில் புற அமைப்புகளும் உருவாகின்றது.

கருவுற்ற ஐந்தாவது மாதத்தில் காது, மூக்கு, மார்புகள், முடியும் தோன்ற துவங்குகின்றன.

கருவுற்ற ஆறாவது மாதத்தில் கழுத்தும், தலையும் உருவாகின்றன.

கருவுற்ற ஏழாவது மாதத்தில் கருவானது இனப்பெருக்க உறுப்பின் வளர்ச்சி முழுமை பெற்று சிசுவானது ஒரு ஒருங்கிணைந்த இயக்கத்தை வெளிப்படுத்த துவங்குகின்றது.

எட்டாவது மாதத்தில் உடலில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளும் பரிபூரணமாக உருவாகி சிசுவின் உடலில் முன் ஜென்ம வினை பதிவுகளுக்கு ஏற்ப உயிரானது (ஆன்மாவானது) செலுத்தப்படுகின்றது.

ஒன்பதாவது மாதம் சுழிமுனை என்ற நாடியின் மூலத்தை சிசுவானது அடைகின்றது.

பத்தாவது மாதத்தில் தாயின் கருவறையிலிருந்து வந்த குழந்தையானது தன்னுடைய பிஞ்சு பாதங்களால் உதைத்து கருவறையை திறக்க முயற்சிப்பதால் தாய்க்கு பிரசவ வலி ஏற்படுகின்றது.


விதி எப்பொழுது எழுதப்படுகின்றது?

அன்னையின் கருவறையில் எவருக்கும் தெரியாமல் இருக்கும் பொழுது பிரம்ம தேவனால் கருவில் மறைந்திருக்கக்கூடிய உயிருக்கு விதியானது எழுதப்படுகின்றது. யாரும் அறியா வண்ணம் இருளில் மறைந்திருக்கும் காலத்திலேயே கருவில் இருக்கும் சிசுவின் ஆயுளும், கல்வியும், செல்வ நிலையும், ஆரோக்கியமும், எந்த நேரத்தில் கருவில் இருந்து வெளிப்படுதல் வேண்டும் என்றும், பிறப்பும்-இறப்பும் ஒரே நேரத்தில் முன் ஜென்ம பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப கர்ம வினைகளின் அடிப்படையில் பிரம்மனால் எழுதப்படுகின்றது. பிறவி எடுத்த அனைத்து மனிதர்களும் அனுபவிக்கின்ற இன்ப, துன்பங்கள் யாவும் பூர்வஜென்மத்தில் செய்த வினைகளின் அடிப்படையிலேயே இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.


விசித்திரமான கட்டமைப்பு :

கருடா...!! நீ முன்பே கூறியது போல மனித உடல் என்பது விசித்திரமானதாகவும், மாயமான ஒரு வியக்கத்தக்க கட்டமைப்பை கொண்டிருக்கக்கூடியதாகவும் இருக்கும். ஏனெனில் மனிதனின் உடல் பஞ்சபூதங்களும், பஞ்ச இந்திரியங்களும், தச நாடிகளும் இணைந்து உருவானதாகும். (தச நாடிகள் என்பது பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்பதாகும்).

மனிதனின் சரீரம் என்பது சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், ரத்தம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதாகும். இவைகள் அனைத்தும் நரம்புகளால் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இவ்விதமாக திருமால் எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் பொழுது கருடாழ்வார் மனிதனின் உடலில் பஞ்சபூதங்கள் எவ்விடத்தில் இருக்கின்றன? என்பதை பற்றி உரைத்திட வேண்டும் என்று வினவினார்.


உடலில் பஞ்சபூதங்கள் :

பூமியில் தோன்றுகின்ற அனைத்து உயிரினங்களிலும் பஞ்சபூதங்களின் குணங்கள் நிறைந்துதான் இருக்கின்றன. பஞ்சபூதங்கள் இல்லை என்றால் எந்த உயிரினங்களும் இல்லை என்று கூறிய திருமால் மனித உடலில் பஞ்சபூதங்கள் எவ்விடத்தில் அமைந்திருக்கின்றன? என்பதை பற்றி எடுத்துரைக்க துவங்குகின்றார். பஞ்சபூதங்கள் என்பது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகும்.

மண்ணின் குணம் என்பது தன்னிடமிருக்கும் விதையினை வளர்ப்பதாகும். அதேபோல்தான் மண்ணின் குணமும் மனிதர்களின் உடலில் நிரம்பியிருக்கின்றன. மண்ணின் குணத்தினால் எலும்பு, தலை முடி, உடல் தசைகள், நகங்கள், புற தோல்களும் ஏற்படுகின்றன. நீரின் குணம் என்பது இருக்கும் இடத்தினை குளிர்விப்பதாகும். அதேபோல் மனிதனின் உடலில் உள்ள வெப்பத்தினை குளிர்விக்கும் பொருட்டு உற்பத்தியாகக்கூடிய உமிழ்நீரும், சிறுநீரும், சுக்கிலமும், நிணநீரூம் நீரின் குணத்தினை கொண்டிருப்பதாகும்.

நெருப்பின் குணம் என்பது தன்னுடன் சேர்ந்த பொருட்களை தன்னுடனே எரிக்கும் குணம் கொண்டதாகும். அதாவது, மனிதர்களின் உடலில் ஏற்படக்கூடிய பசி, தாகம், தூக்கம், சோம்பல், புத்துணர்ச்சி முதலியவை நெருப்பின் குணத்தினால் ஏற்படக்கூடியவை ஆகும். காற்றின் குணம் என்பது ஓரிடத்தில் நிலையில்லாமல் இருப்பது போல பல இடங்களில் சுற்றித்திரியும் தன்மை கொண்டதாகும். அதே தன்மை கொண்ட கோபம், இச்சை, மடம், பயம், மோகங்கள் போன்றவை காற்றின் குணத்தினால் ஏற்படக்கூடியவைகளாகும். ஏனென்றால் இவைகள் நிலையானதல்ல.

ஆகாயம் என்பது பரந்து விரிந்து இருக்கக்கூடிய விசாலமான அமைப்பினை கொண்டதாகும். மனிதர்களிடத்தில் எழும்பும் கேள்விகள், எண்ணங்கள், கம்பீரமான சிந்தனைகள், ஆன்ம சக்திகள் மற்றும் சப்தங்கள் போன்றவை ஆகாயத்தின் மூலம் ஏற்படுகின்றன. சுருக்கமாக கூற வேண்டுமென்றால் 'அண்டத்தில் உள்ளவைகள் யாவும் பிண்டத்தில் இருக்கின்றன". இதுவே மனிதனின் பிறப்பில் உள்ள ரகசியம் ஆகும். கருடனே...!! இவைகள் யாவும் மனித குலத்திற்கு நன்மை அளிக்கும் பொருட்டு உன் மூலமாக பிறப்பின் ரகசியத்தை யாம் உமக்கு உரைத்தோம். நீ மேற்கொண்டு ஏதேனும் அறிய விரும்புகின்றாய் என்றால் என்னிடம் கேட்பாயாக... என்று திருவாய் மலர்ந்து அருளினார்.


எமலோக பயணம்

கருடாழ்வார் நாராயணனை பணிந்து பிரபுவே... தாங்கள் இதுவரை மானுடப் பிறப்பு எவ்விதம் நிகழ்கின்றது? அவர்கள் செய்த பாவங்களுக்கு உண்டான தண்டனைகள் என்னென்ன? என்பதை என் மூலமாக உலகில் உள்ள கோடான கோடி பகுத்தறிந்து உணரும் ஜீவன்களுக்கு கூறியுள்ளீர்கள். இதேபோன்று எமலோகம் எவ்விதத்தில் இருக்கும்? என்றும் உரைத்தீர்கள். மேலும், இறந்த ஆன்மாவானது எமலோகத்திற்கு செல்ல மேற்கொள்ளக்கூடிய எமலோக பயணத்தை பற்றியும் விளக்கிட வேண்டும் என்று வேண்டினார்.

கருடா...!! பூவுலகில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில் அவர்களின் உடலில் இருந்து பிரிந்து ஆன்மாவானது எமலோகம் செல்கின்றது. ஏனெனில் எமலோகத்தில் எமதர்மன் முன்னிலையில் ஆன்மாவின் கர்ம வினைகளுக்கு ஏற்ப தண்டனைகளும், மறுபிறவியும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. செய்தவினைக்கான தண்டனையையோ அல்லது நன்மையையோ அனுபவிக்க அந்த ஆன்மா மேற்கொள்ளக்கூடிய பயணம் என்பது மிகவும் கொடியதாக இருக்கும் என்று ஏற்கனவே யாம் உமக்கு உரைத்து இருக்கின்றோம்.

எமலோக பயணம் :

எமலோக பயணம் மேற்கொள்ளக்கூடிய பாதையில் சிறிது தூரம் வரை நெருப்பிலிருந்து வெளிப்படக்கூடிய அனல் போன்றதாக ஒரு பகுதி நிரம்பி காணப்படும். அந்த அனல் போன்ற பகுதியை தாண்டி சென்றதும் சிறிது தூரம் வரை முட்களும், தீக்கொள்ளிகளும் நிரம்பி காணப்படும். அதற்கு அடுத்து அந்த ஆன்மா மேற்கொள்ளக்கூடிய பயணம் என்பது சிறிது தூரம் வரை தாங்கமுடியாத உடல் இல்லாத அந்த ஆன்மாவை வாட்டி வதைக்கக்கூடிய குளிராக இருக்கும் பகுதியில் செல்ல வேண்டும்.

பூலோகத்திற்கும், எமலோகத்திற்கும் இடையே இருக்கக்கூடிய தொலைவு என்பது 86,000 காதங்கள் ஆகும். வாழும் காலத்தில் புண்ணியங்கள் எதையும் செய்யாமல் பாவங்கள் செய்த ஆன்மாக்களுக்கு அந்த வழி நெடுகிலும் நிழல்கள் எதுவுமில்லாமல் தாகத்தை தணிப்பதற்காக நீரும் கிடைக்காமல் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் அமையும். எமலோகத்தில் கிடைக்கும் தண்டனைகளுக்கு முன்பாகவே அவர்களுக்கு இந்த பயணமே மிகப் பெரிய தண்டனையாக காணப்படும்.


எமலோக அமைப்பு :

கருடா... எமலோக பயணங்களை பற்றி அறிந்து கொண்ட நீ எமலோகம் பற்றியும், அதனுடைய தன்மைகள் பற்றியும் புரிந்து கொள்வாயாக... எமலோகம் தென் திசைக்கும், வட திசைக்கும் மையத்தில் வஜ்ரம் போன்று மிகவும் உறுதியானதாக, யாராலும் அசைக்க முடியாத அளவிற்கு உருவாக்கப்பட்டு இருக்கக்கூடியதாகும். ஏன் எமனின் அனுமதி இல்லாமல் தேவர்களாலும், அசுரர்களாலும் கூட எமலோகத்தை நெருங்கவோ, சிதைக்கவோ இயலாது.

எமலோகத்தின் மையத்தில் சம சதுர அளவில் எமதர்மனின் மாளிகை அமைந்திருக்கும். அந்த மாளிகை அமைந்திருக்கும் பரப்பு என்பது நூறு யோசனை அளவில் இருக்கக்கூடியதாகும். (யோசனை என்பது ஆதிகாலத்தில் தொலைவினை அளக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வேத கால அலகாகும். யோசனையில் சரியான அளவு என்பது எதுவரை என்று இன்றளவும் தெரியவில்லை. ஆனால், அறிஞர்களின் கூற்றுப்படி யோசனை என்பது 4 மைல்களிலிருந்து 9 மைல்கள் வரை இருக்கலாம்.)

எமதர்மனின் மாளிகையானது 25 யோசனை அளவு உயரத்தினை கொண்டிருக்கும். மாளிகை எண்ணற்ற சாளரங்களுடன் (ஜன்னல்கள்) அமைக்கப்பட்டிருக்கும். அழகிய கொடிகளாலும், முத்து கோவைகளாலும், கண்களை பறிக்கக்கூடிய பலவிதமான வண்ணங்களில் இருக்கக்கூடிய தோரணங்களாலும் மாளிகையானது அலங்கரிக்கப்பட்டிருக்கும். எமலோகத்தில் இருக்கக்கூடிய மண்டபங்களும், அந்த மண்டபங்களில் நிறுத்தி இருக்கக்கூடிய தூண்களும் வைரங்களினால் இழைக்கப்பட்டு இருக்கும்.

அந்த எமலோக மண்டபத்தில் அழகான தோற்றமுடைய ஒரு இடத்தில் எப்பொழுதும் இனிய இசைகளும், ஆடல்களும், பாடல்களும் இடைவிடாது நடந்து கொண்டே இருக்கும். எமதூதர்கள் பணிவுடன் கரம் குவித்த மனமாக நிற்க, மண்டபத்தின் நடுவிலேயே எமதர்மன் அமர்ந்திருப்பார். அவர் மற்றவர்கள் அஞ்சும் படியாக அகோரமாகவும், கம்பீரமாகவும் தோற்றம் கொண்டு இருந்தாலும், அவருடைய முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியானது இருந்து கொண்டே இருக்கும். தன் பெரிய மீசையை நீவி விட்ட வண்ணமாக ஆனந்தமாக இருப்பார்.


சித்ரகுப்தனின் அரண்மனை :

எமதர்மனுடைய மண்டபத்தின் அருகிலேயே சித்ரகுப்தனுடைய அரண்மனை அமைந்துள்ளது. சித்ரகுப்தனின் மண்டபமானது இருபத்தைந்து யோசனை நீளமும், அகலமும் கொண்டிருக்கும். அரண்மனையானது பத்து யோசனை அளவு உயரம் இருக்கும். சித்ரகுப்தனின் அரண்மனையானது காண்போர் வியக்கும் வகையில் எழில்மிகு தோற்றத்துடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அந்த மண்டபத்தின் நடுவில் சித்ரகுப்தன் சகல ஜீவாத்மாவின் பாவ, புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் கணக்கில் கொண்டிருப்பான். சித்ரகுப்தன் கணக்கில் இதுவரை எந்தவித தவறும் ஏற்பட்டதில்லை. ஒவ்வொரு வினைப் பதிவுகளும் சரியான முறையில், அதற்குண்டான பாவ, புண்ணியங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.


ரோகமும், கிரகங்களின் இருப்பிடமும் :

சித்ரகுப்தனுடைய அரண்மனையை சுற்றிலும் கொடிய வியாதிகளை உருவாக்கக்கூடிய கிரகங்களும் இருக்கின்றன. அதாவது ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு விதமான நோயை உருவாக்கும் தன்மையை கொண்டிருக்கும். சித்திரகுப்தனுடைய அரண்மனையின் கிழக்கு திசையில் கொடிய சுரமும், தெற்கில் சூலை மற்றும் வைசூரி நோயை உருவாக்கக்கூடிய கிரகங்களும், மேற்கு திசையில் காலத்திற்கு ஏற்றவாறு நோய்களை உருவாக்கக்கூடிய வயிறு சம்பந்தப்பட்ட நோயை உருவாக்கக்கூடிய கிரகங்களும், வடக்கில் உடல் நோய்களை உருவாக்கக்கூடிய கிரகங்களும், தென்கிழக்கே வலிப்பு, மயக்கம் போன்ற நோய்களை உருவாக்கக்கூடிய கிரகங்களும், தென்மேற்கு திசையில் பேதி, காலரா போன்ற வியாதிகளை உருவாக்கக்கூடிய கிரகங்களும், வடமேற்கில் ஜன்னி நோயை உருவாக்கக்கூடிய கிரகங்களும் தனித்தனியே தங்களுக்கு என்று மனைகளை அமைத்து அவ்விடத்தில் இருக்கின்றன.

நோய்களை உருவாக்கக்கூடிய கிரகங்கள் யாவும் எமதர்மனின் உத்தரவிற்கு காத்து கொண்டிருக்கும். (கால நிலைகளுக்கு ஏற்ப எமதர்மனின் உத்தரவுப்படி நோய்கள் பரவ தொடங்குகின்றன. இதனால் பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள் யாவும் நோய்வாய்ப்பட்டு துன்பத்தை அடையும் அல்லது மரணத்தையோ அடையும். இவைகள் யாவும் பிறப்பு, இறப்புகள் சரிசம விகிதத்தில் இருக்கும் பட்சத்தில் எமனின் உத்தரவின் அடிப்படையில் நிகழும். எமனின் பார்வையிலும், சித்ரகுப்தனின் கணக்கிலும் பகுத்தறிந்து உணரும் மனிதனும், வாயில்லா உயிரினங்களும் ஒன்றே. இரண்டிற்கும் எவ்விதமான வேறுபாடுகளும் கிடையாது.)

நாராயணன் இவ்விதமாக உரைத்து கொண்டிருக்க கருடாழ்வாரும் நாராயணனிடம் பிரபுவே...!! பாவம் இழைத்தவர்கள் எவ்விதத்தில் தண்டிக்கப்படுகின்றார்கள்? என்பதை எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டினார். கருடனே...!! ஏற்கனவே பாவம் இழைத்தவர்கள் எவ்விதம் தண்டிக்கப்படுகின்றார்கள் என்பதையும் உரைத்துள்ளேன். மீண்டும் அவர்களுக்கு எவ்விதம் தண்டனைகள் அளிக்கப்படுகின்றன? என்பதையும் உரைக்கின்றேன் கேட்பாயாக... என்றார் திருமால். பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் நன்மைகள் செய்ய பல வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் அமைந்தாலும் நன்மைகள் ஏதும் செய்யாமல் மற்றவர்களுக்கு துன்பங்களையும், பாவங்களையும் செய்தவர்கள் இங்கு பல வகையில் துன்பப்படுவார்கள்.

உடல் இல்லாத ஜீவாத்மாக்கள் பாவம் செய்யப்பட்டு இருக்கையில் அந்த ஆன்மாக்களை உலக்கையால் அடித்து எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள். சில கூரிய ஆயுதங்களினால் அல்லது முட்கள் பொருத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டும், கூர்மையான கத்தி கொண்டும் உடல் இல்லாத ஆன்மாவானது துன்பப்படுத்தப்படுகின்றது. சிலர் செக்கிலிட்டு ஆட்டி வதைக்கப்படுவார்கள். கொடுமைகள் செய்த ஆன்மாக்களை இரும்பு கம்பியில் கோர்த்து அனல் பொருந்திய பெரும் தீயில் வாட்டி வதைக்கப்படுவார்கள். சில ஆத்மாக்களை கொதிக்கும் அக்னி குண்டத்தில் கிடத்தி அவர்களை வேகும் படியாக வைப்பார்கள். நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் என்பது ஜீவாத்மாக்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப கொடுக்கப்படுகின்றன.

பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஆசை வார்த்தைகளை கூறி நயவஞ்சகமாக அல்லது விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக பிற கன்னியர்கள் உடனோ, பிறர் மனைவியுடனோ கூடி வாழ்ந்தாலும் அல்லது அவர்களுடன் கூடி களித்துக் கொண்டிருக்கும் ஆடவர்களுக்கும், திருமணமான மாற்றான் கணவருடன் கூடி களித்து கொண்டிருக்கக்கூடிய மங்கையர்களுக்கும், நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனை யாதெனில் பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது எந்த சுகத்திற்காக மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்கிறார்களோ... அதே சுகத்திற்காக நரகத்தில் செம்பினால் செய்யப்பட்டு எப்போதும் அனலினால் சூடேற்றப்படக்கூடிய ஆடவர் மற்றும் மங்கையர்களை கட்டித் தழுவ வேண்டும்.


சூடான பதுமைகள் :

விருப்பமில்லாமல் கன்னியர்களை தங்களது இச்சைக்கு கட்டாயப்படுத்தக்கூடிய பகுத்தறிவாளர்களான நயவஞ்சகர்கள் இவ்விடத்தில் கட்டாயமாக எப்பொழுதும் கொதித்துக் கொண்டே இருக்கக்கூடிய செம்பினால் செய்யப்பட்ட பதுமைகளால் கட்டி அணைக்கப்பட்ட நிலையில் ஒட்ட வைத்து விடுவார்கள் எமகிங்கரர்கள். தாமிரத்தால் செய்யப்பட்ட அந்த பதுமையானது எப்பொழுதும் அனலினால் சூடேறி கொண்டே இருக்கும்.

அந்த சூடானது உடல் இல்லாத ஆன்மாவிற்கு பலவகையில் துன்பத்தை ஏற்படுத்தும் வண்ணமாக இருக்கும். பூமியில் வாழும் பொழுது நன்மை, தீமை எதுவென்று பகுத்தறிந்து உணரும் பகுத்தறிவாளர்கள் சிறிது நேர சுகத்தினால் நரகத்தில் பல காலத்திற்கு தாமிரத்தால் உருவாக்கப்பட்ட பதுமையை கட்டித் தழுவிய வண்ணம் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.


சூடான ஆடவர்கள் :

இதேபோன்று திருமணமான பெண்கள் கணவருக்கு துரோகம் செய்து மற்றவர்களுடன் கூடி தழுவுகின்ற ஒழுக்கம் இல்லாத மங்கையர்களும், ஆசை வார்த்தைகளை கூறி மற்றவர்களின் மனதை மயக்கி தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய மங்கையர்களும் இறந்த பின்பு உடல் இல்லாத நிலையில் இதே நரகத்தில் தாமிரத்தால் செய்யப்பட்ட எப்பொழுதும் சூடேறி கொண்டு இருக்கக்கூடிய ஆடவர்களை கட்டித் தழுவ வேண்டும்.

ஆகவே பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய ஆண்கள், பெண்கள் தங்களது ஒழுக்க நிலைகளை தவறாமல் வாழ வேண்டும். இல்லையென்றால் சிறிது நேர சுகமானது நரகத்தில் பல கால தண்டனையாக அதாவது, சூடான தாமிர ஆடவர் அல்லது மங்கைகளை கட்டித் தழுவ வேண்டிய நிலை உண்டாகும். ஆகவே ஒவ்வொரு ஆடவரும், மங்கையரும் அவரவர்களுக்கு உண்டான ஒழுக்க நிலைகளுடன் கண்ணியமாக வாழ வேண்டும்.


கழிவு குழி :

கருடனே...!! இந்த தண்டனைகள் மட்டுமல்லாமல் இன்னும் மேற்கொண்டு பல தண்டனைகள் நரகத்தில் கொடுக்கப்படுகின்றன. அவைகளையும் உரைக்கின்றேன் கேட்பாயாக... என்றார் திருமால். கரும்பு ஆலைகளில் விடப்படக்கூடிய கரும்பின் நிலை என்னவாகும்? என்பதை நீ அறிவாய் அல்லவா?... அதைப்போலவே தான் சில பாவம் செய்த பாவ ஜீவாத்மாக்கள் நசுங்கி பாதிக்கப்படுகின்றார்கள். இன்னும் சில அல்ல பல ஜீவாத்மாக்கள் வாழும் காலத்தில் பாவம் செய்யும் பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்த பின்பு உடல் இல்லாத நிலையில் நரகத்தை அடையும் ஆன்மாக்கள் மலம், சிறுநீர், கோழை முதலியவற்றால் நிரம்பிய குழிகளில் தள்ளப்படுவார்கள்.

குழிகளில் இருக்கக்கூடிய மலம், சிறுநீர் ஆகியவற்றின் நாற்றத்தை தாங்க முடியாமல் குழிகளின் உள்ளே இருக்கக்கூடிய பாவம் செய்த ஜீவாத்மாக்கள் வெளியே தலை தூக்கும் பொழுது காவலில் இருக்கக்கூடிய எமகிங்கரர்கள் அந்த ஜீவனை தங்களின் கரங்களில் இருக்கக்கூடிய கூர்மையான ஆயுதங்களால் குத்தி கொடூரமாக தாக்கி மீண்டும் அதே குழியில் தள்ளுவார்கள்.

பூமியில் மனிதனின் கழிவுகளில் இருந்து உற்பத்தி ஆகக்கூடிய புழுக்கள் கொடும் பாவம் செய்த ஜீவாத்மாக்களின் வாயிலும், மூக்கிலும், ஏன் காதுகளிலும் புகுந்து பலவிதமான துன்பங்களை அவ்விடத்தில் உருவாக்கும். பாவ செயல்களின் மூலம் உடலினால் அனுபவித்த இன்பங்கள் யாவும் நரகத்தில் அதைவிட பன்மடங்கு துன்பம் தரும் வகையில் பாவம் இழைத்த ஜீவாத்மாக்கள் அனுபவிக்கின்றன. அந்த குழியில் தள்ளப்படக்கூடிய ஜீவாத்மாக்கள் சொல்ல முடியாத வகையில் இன்னும் பலவிதமான துன்பங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்கின்றன. சுற்றுப்புற சுவர்கள் மேடும், பள்ளமும் உள்ள பாறைகளால் உருவாக்கப்பட்டிருக்கும்.


தலையில் ஆணி :

தான் படிக்கவில்லை என்றாலும் தனது பிள்ளையாவது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பலவித துன்பங்களுக்கு மத்தியில் பெற்றோர் தான் ஈட்டிய பணத்தினை கொண்டு படிக்க அனுப்பியும் படிக்காமல் சோம்பேறித்தனமாக சுற்றித்திரிந்து தவறான வழிகளில் செல்லக்கூடிய கசடர்களும், கன்றுக்கு பால் கொடுக்காமல் பசுவின் மடியில் இருக்கக்கூடிய முழு பாலையும் கறக்கூடியவர்களும், வீட்டிற்கு வந்து இருக்கக்கூடிய உறவினர்கள் பசியான நிலையில் இருக்க தாம் மட்டும் சுகமாக உண்டு வாழ்ந்தவர்கள்.

வேலைகளை பல மணி நேரம் வாங்கி கொண்டு அதற்கு குறைந்த அளவு ஊதியம் கொடுக்கக்கூடியவர்களும், மறைமுக சக்திகளை தவறான வழியில் பயன்படுத்தி அதாவது பில்லி, சூனியம் போன்றவற்றை வைத்து நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய குடும்பங்களையும் அல்லது பிறர்குடியையும் கெடுக்கக்கூடியவர்களும், தான் எப்பொழுதும் உனக்கு துணையாக இருக்கின்றேன் என்று சொல்லி அவர்களிடம் இருக்கக்கூடிய பொருட்களை ஏதாவது ஒருவிதத்தில் பறித்து மோசம் செய்யக்கூடியவர்களும், நதிநீரில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்யக்கூடியவர்களும், நிர்வாணமாக நீராடக்கூடியவர்களும் இறந்த பின்பு அவர்களுடைய உடலில் இருந்து ஆன்மா பிரிந்த பின்பு செய்த பாவங்களுடைய கணக்கின் அடிப்படையில் அந்த ஆன்மாக்களின் தலையில் ஆணிகள் அடிக்கப்படுகின்றன.

எப்பொழுதும் விலைமாதர்களின் வீடே கதி என்று இருக்கக்கூடியவர்களும், தன்னை நம்பி வந்த மனைவி மற்றும் தம்முடைய புதல்வர்களை சித்திரவதை செய்யக்கூடியவர்களும், ஒருவர் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அதை அவருக்கு தெரியாமல் ஒட்டுக்கேட்டு அதை தவறான வழியில் பயன்படுத்தி குடும்பத்தில் சண்டையை உருவாக்கக்கூடியவர்களும், கணவனை இளக்காரம் செய்யக்கூடிய பெண்களும், நெல்லை உலர்த்தாமல் விற்பனை செய்தல் போன்ற தவறுகளை செய்தவர்களும் இறந்த பின்பு அவர்களுடைய உடலில் இருந்து ஆன்மா பிரிந்த பின்பு செய்த பாவங்களுடைய கணக்கின் அடிப்படையில் அந்த ஆன்மாக்களின் தலையில் ஆணிகள் அடிக்கப்படுகின்றன.

உடல் இல்லாத நிலையில் தலையில் ஆணி அடிக்கும் பொழுது எண்ணற்ற துன்பத்தை அவ்விடத்தில் பாவம் செய்த அந்த ஆத்மா அனுபவிக்கும். ஒருவேளை அவர்கள் தாகம் என்று கேட்கையில் கொதிக்கும் ஈயத்தை அவர்களின் வாயில் ஊற்றுவார்கள். இதனால் அந்த ஜீவாத்மா துன்பத்தை அனுபவிக்கும். அப்பொழுது பின்னால் இருக்கும் எமகிங்கரர்கள் கொடுமை செய்த அந்த ஆன்மாவை பிடரியில் குத்துவார்கள். மேலும் பாவம் செய்த கொடிய ஆன்மாக்களை 300 காதம் அகலம் இருக்கும் முள் காட்டில் போட்டு இழுத்து வதைத்து துன்புறுத்துவார்கள் எமகிங்கரர்கள்.

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் இன்னென்ன என்று சொல்லி மாள இயலாது. ஆகவே பூமியில் வாழக்கூடிய ஒவ்வொரு பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மானுடர்கள் யாவரும் உயிரோடு இருக்கும் பொழுதே தன்னால் இயன்றளவு தான, தர்மங்களை செய்து நேர்மையுடன் வாழ்க்கையை வாழ்ந்தால் இறந்த பின்பு உடல் இல்லாத நிலையில் நீதி தவறாத எமதர்மனின் சபையில் தண்டனையில் இருந்து தப்பிக்க இயலும்.


The notes are referenced from 
the app "கருட புராணம்''. 
For more details, visit : 
[https://play.google.com
/store/apps/details?id=nithra.
tamil.garudapuranam]

தொடரும் .....

Post a Comment

0 Comments