அலர் அறிவுறுத்தல்
குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
மு.வ விளக்க உரை - (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.
கலைஞர் விளக்க உரை - எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.
குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்
மு.வ விளக்க உரை - மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
கலைஞர் விளக்க உரை - அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.
குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
மு.வ விளக்க உரை - ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.
கலைஞர் விளக்க உரை - எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!
குறள் 1144
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
மு.வ விளக்க உரை - எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.
கலைஞர் விளக்க உரை - ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.
குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது
மு.வ விளக்க உரை - காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.
கலைஞர் விளக்க உரை - காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.
குறள் 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
மு.வ விளக்க உரை - காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!
கலைஞர் விளக்க உரை - காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் “கிரகணம்” எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.
குறள் 1147
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்
மு.வ விளக்க உரை - இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
கலைஞர் விளக்க உரை - ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.
குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்
மு.வ விளக்க உரை - அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.
கலைஞர் விளக்க உரை - ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.
குறள் 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை
மு.வ விளக்க உரை - அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
சாலமன் பாப்பையா விளக்க உரை - அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
கலைஞர் விளக்க உரை - உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?
குறள் 1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்குமிவ் வூர்
மு.வ விளக்க உரை - யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.
கலைஞர் விளக்க உரை - யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்.
நன்றி
0 Comments