பெண்வழிச் சேறல்
குறள் 901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
மு.வ உரை - மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.
சாலமன் பாப்பையா உரை - மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.
கலைஞர் உரை - கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
குறள் 902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
மு.வ உரை - கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை - தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.
கலைஞர் உரை - எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.
குறள் 903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
மு.வ உரை - மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.
சாலமன் பாப்பையா உரை - மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
கலைஞர் உரை - நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.
குறள் 904
மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று
மு.வ உரை - மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
சாலமன் பாப்பையா உரை - தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
கலைஞர் உரை - மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
குறள் 905
இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
மு.வ உரை - மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
சாலமன் பாப்பையா உரை - தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
கலைஞர் உரை - எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.
குறள் 906
இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்
மு.வ உரை - மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை - தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.
கலைஞர் உரை - அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.
குறள் 907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து
மு.வ உரை - மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
சாலமன் பாப்பையா உரை - மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
கலைஞர் உரை - ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.
குறள் 908
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்
மு.வ உரை - மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை - தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
கலைஞர் உரை - ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.
குறள் 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்
மு.வ உரை - அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை - அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
கலைஞர் உரை - ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
குறள் 910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
மு.வ உரை - நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
சாலமன் பாப்பையா உரை - சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.
கலைஞர் உரை - சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.
நன்றி
0 Comments