அவை அஞ்சாமை
குறள் 721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
மு.வ விளக்க உரை - சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.
கலைஞர் விளக்க உரை - சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.
குறள் 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
மு.வ விளக்க உரை - கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.
கலைஞர் விளக்க உரை - கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.
குறள் 723
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்
மு.வ விளக்க உரை - பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
சாலமன் பாப்பையா விளக்க உரை - பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.
கலைஞர் விளக்க உரை - அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.
குறள் 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
மு.வ விளக்க உரை - கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.
கலைஞர் விளக்க உரை - அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
குறள் 725
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு
மு.வ விளக்க உரை - அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.
கலைஞர் விளக்க உரை - அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.
குறள் 726
வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
மு.வ விளக்க உரை - அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.
சாலமன் பாப்பையா விளக்க உரை - நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?
கலைஞர் விளக்க உரை - கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.
குறள் 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்
மு.வ விளக்க உரை - அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
கலைஞர் விளக்க உரை - அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
குறள் 728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
மு.வ விளக்க உரை - நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
சாலமன் பாப்பையா விளக்க உரை - நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.
கலைஞர் விளக்க உரை - அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.
குறள் 729
கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்
மு.வ விளக்க உரை - நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.
கலைஞர் விளக்க உரை - ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.
குறள் 730
உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
மு.வ விளக்க உரை - அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.
கலைஞர் விளக்க உரை - தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.
நன்றி
0 Comments