திருக்குறள் அதிகாரம் 24 - புகழ் - PUKAL


புகழ்


திருக்குறள் அதிகாரம் 24 - புகழ் - PUKAL


குறள் 231

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல 
தூதிய மில்லை உயிர்க்கு 


மு.வ விளக்க உரை - வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை. 

கலைஞர் விளக்க உரை - கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை 

குறள் 232

உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் 
றீவார்மேல் நிற்கும் புகழ்
 

மு.வ விளக்க உரை - புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே. 

கலைஞர் விளக்க உரை - போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும் 

குறள் 233

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் 
பொன்றாது நிற்பதொன் றில் 


மு.வ விளக்க உரை - உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை. 

கலைஞர் விளக்க உரை - ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை 

குறள் 234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் 
போற்றாது புத்தே ளுலகு 


மு.வ விளக்க உரை - நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும். 

கலைஞர் விளக்க உரை - இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது 

குறள் 235

நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் 
வித்தகர்க் கல்லால் அரிது
 

மு.வ விளக்க உரை - புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். 

கலைஞர் விளக்க உரை - துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும் 

குறள் 236

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று 


மு.வ விளக்க உரை - ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது. 

சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது. 

கலைஞர் விளக்க உரை - எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது 

குறள் 237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை 
இகழ்வாரை நோவ தெவன்
 

மு.வ விளக்க உரை - தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன? 

சாலமன் பாப்பையா விளக்க உரை - புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக? 

கலைஞர் விளக்க உரை - உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? 

குறள் 238

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் 
எச்சம் பெறாஅ விடின் 


மு.வ விளக்க உரை - தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர். 

கலைஞர் விளக்க உரை - தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும் 

குறள் 239

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம் 


மு.வ விளக்க உரை - புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும். 

கலைஞர் விளக்க உரை - புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும் 

குறள் 240

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர் 


மு.வ விளக்க உரை - தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர். 

சாலமன் பாப்பையா விளக்க உரை - தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே. 

கலைஞர் விளக்க உரை - பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்

நன்றி

Post a Comment

0 Comments