குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
டென்னாற்றுங் கொல்லோ உலகு
மு.வ விளக்க உரை - இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்.
கலைஞர் விளக்க உரை - கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்
குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
வேளாண்மை செய்தற் பொருட்டு
மு.வ விளக்க உரை - ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
கலைஞர் விளக்க உரை - தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்
குறள் 213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற
ஒப்புரவின் நல்ல பிற
மு.வ விளக்க உரை - பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.
கலைஞர் விளக்க உரை - பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது
குறள் 214
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
செத்தாருள் வைக்கப் படும்
மு.வ விளக்க உரை - ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
கலைஞர் விளக்க உரை - ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்
குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
பேரறி வாளன் திரு
மு.வ விளக்க உரை - ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.
கலைஞர் விளக்க உரை - பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்
குறள் 216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
நயனுடை யான்கண் படின்
மு.வ விளக்க உரை - ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.
கலைஞர் விளக்க உரை - ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்
குறள் 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்
பெருந்தகை யான்கண் படின்
மு.வ விளக்க உரை - ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.
கலைஞர் விளக்க உரை - பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்
குறள் 218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்
கடனறி காட்சி யவர்
மு.வ விளக்க உரை - ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
கலைஞர் விளக்க உரை - தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்
குறள் 219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு
செய்யா தமைகலா வாறு
மு.வ விளக்க உரை - ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.
கலைஞர் விளக்க உரை - பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்
குறள் 220
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து
விற்றுக்கோள் தக்க துடைத்து
மு.வ விளக்க உரை - ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.
கலைஞர் விளக்க உரை - பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்
நன்றி
0 Comments