ஜனவரி மாதத்தில் உள்ள
சிறப்பு தினங்கள்
ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 1ஆம் நாள் கிரிகோரியன் (Gregorian) நாட்காட்டியின் முதல்நாள். கிரிகோரியன் நாட்காட்டியானது உலகளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஜனவரி 1 ஐ ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டம் முதன்முதலாக மெசபடோமியா (ஈராக்) நாட்டில் கி.மு. 2000 இல் தோன்றியது.
உலக குடும்ப தினம்
ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர். உலக முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம். நாட்டிற்கிடையே எந்த போரும், பொறாமையும் இன்றி வாழ வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி - 4
ஐசக் நியூட்டன் பிறந்த தினம்
ஐசக் நியூட்டன் 1643ஆம் ஆண்டு ஜனவரி 4 இல் இங்கிலாந்து நாட்டில் உல்சுதோர்ப் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். ஈர்ப்புவிசை பற்றிய ஆய்வுகள்மூலம் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒரு--வராகக் கொண்டாடப்படுகிறார். இவரின் இயக்க விதியை நியூட்டன் விதி என்று அழைக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்பின்மூலம் அறிவியலில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.
ஜனவரி - 8
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவன தினம்
தென்னாப்பிரிக்க கருப்பு இன மக் களின் உரிமைகளுக்காகப் போராட தென்னாப்பிரிக்கப் பழங்குடியினரின் தேசிய காங்கிரஸ் 1912ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சியின் முதலாவது தலைவர் சோல் பிளாட்ஜி. இக்கட்சியின் பெயர் 1923ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் என்று மாற்றப்பட்டது. இது தற்போது தென்னாப்பிரிக்காவின் ஆளும் கட்சியாக உள்ளது.
ஜனவரி - 10 :
உலக சிரிப்பு தினம்
முதன்முதலாக 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் நாள் மதன் கட்டாரியா என்பவரால் சிரிப்பு தினம் தொடங்கப்பட்டது. அவர் இதை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாகவே அறிமுகப்படுத்தினார். இன்று 65 நாடுகளில் 6000 சிரிப்பு கிளப்புகள் நடந்து வருகின்றன. உடம்பிற்கும், மனதிற்கும் சிரிப்பு நல்லது. இதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி - 17 :
பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த தினம்
பெஞ்சமின் பிராங்க்ளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்தார். மின்னலில்கூட மின்சாரம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். மின்சாரம், இடி, மின்னல் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்துக் கண்ணாடியையும் (Bifocal Glasses) கண்டுபிடித்தார். அமெரிக்காச் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட மூவரில் ஒருவர் பெஞ்சமின் ஆவார்.
ஜனவரி - 19 :
ஜேம்ஸ் வாட் பிறந்த தினம்
ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாள் ஸ்காட்லாந்து நாட்டில் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். கல்வியை தாயாரிடம் வீட்டிலேயே கற்றார். முதன்முதலாக நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தார். நீராவி இயந்திரத்தில் இவர் செய்த மேம்பாடுகளே பிரிட்டிஷ் மற்றும் உலகின் பிற நாடுகளிலும் தொழில் புரட்சி ஏற்பட அடிப்படையாக அமைந்தன.
ஜனவரி - 21
லெனின் நினைவு தினம்
லெனினை உலகப் புரட்சியாளர் என்று அழைக்கிறார்கள். ரஷ்யப் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர். ரஷ்யாவில் பொதுவுடமை அரசை நிறுவினார். சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக பதவி வகித்தார். இவர் சோவியத் மார்க்சியம் - லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டினை உருவாக்கினார். சமூகப் புரட்சியாளர் லெனின் 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 இல் இயற்கை எய்தினார்.
ஜனவரி - 26
சர்வதேச சுங்க தினம்
சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு அதன் முதல் நிர்வாகக் கூட்டம் ஜனவரி 26, 1953ஆம் ஆண்டில் புருசெல்ஸில் நடைபெற்றது. 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அதன் பின்னர் 161 சுங்க அதிகாரிகள் உள்பட சுங்கத்துறையினர் இந்த அமைப்பில் இணைந்தனர். இந்த அமைப்பு உலகின் 98 சதவீத பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. சர்வதேச சுங்க தினம் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது.
ஜனவரி - 27
சர்வதேச இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள்
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர். சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சோவியத் படைகள் 1945ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று நாஜி மரண முகாமில் இருந்த யூதர்களை விடுவித்தது. இனப்படுகொலை மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா. அமைப்பு இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.
ஜனவரி கடைசி ஞாயிறு
உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்
தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். தொழுநோயாளிகள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவர்கள்மீது அக்கறையும், கருணையும் ஏற்படவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொழுநோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. பொதுச்சபை 2006ஆம் ஆண்டு டிசம்பர் 13இல் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.
நன்றி
0 Comments