இராமாயணம் பகுதி - 79 - RAMAYANAM PART - 79


இராமாயணம் பகுதி - 79


இராமாயணம் பகுதி - 79 - RAMAYANAM PART - 79

இலங்கை நகரம் பெரும் சோகமயமாக காட்சி அளித்தது. இலங்கையில் எப்போதும் ஆடலும், பாடலும், நாத ஓசைகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால் இன்று நகர் முழுவதும் அழுகுரல் மட்டுமே ஒலித்துக் கொண்டு இருந்தது. இலங்கையில் தங்கள் கணவர்களை இழந்த அரக்கர்கள் தலையை விரித்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தனர். தங்கள் மார்பிலும், தலையிலும் அடித்துக் கொண்டனர். இந்த அழுகொலியைக் கேட்டு இந்திரஜித் திடுக்கிட்டான். ஏன் இந்த அழுகுரல்? என்ன நிகழ்ந்தது? இராவணன், இராமனிடம் தோற்றுவிட்டானா? இல்லை அந்த அனுமன் இலங்கை நகரை பெயர்த்து எடுத்துவிட்டானா? இந்த அழுகுரலுக்கான காரணம் என்ன? என்று தன் பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டான். அவர்கள் இந்திரஜித்திடம் சொல்ல அஞ்சி நடுங்கினார்கள். பிறகு அவர்கள் பயந்துக் கொண்டு, அசுர குலத்தின் வேந்தனே! உம் தம்பிகளான அதிகாயன், நிகும்பன், கும்பன் முதலியவர்களை இலட்சுமணன் அழித்து விட்டான் என்றனர்.

இதைக் கேட்ட இந்திரஜித் பெரும்கோபம் கொண்டான், இருப்பினும் தம்பிகளை இழந்துவிட்ட அவன் மிகவும் வருந்தினான். உடனே அவன் இராவணனின் மாளிகைக்கு விரைந்து வந்தான். அங்கு துயரத்தில் இருக்கும் இராவணனை பார்த்து வணங்கினான். பிறகு அவன் தந்தையே! ஏன் இலங்கை நகரம் முழுவதும் அழுகுரலாக கேட்கின்றது? இங்கு என்ன நேர்ந்தது எனக் கேட்டான். இராவணன், மகனே! இந்திரஜித், உன் தம்பிகளான அதிகாயன், நிகும்பன், கும்பன் போரில் மாண்டு விட்டனர் எனக் கூறினான். இதைக்கேட்டு இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டான். தந்தையே! தாங்கள் அறிவை இழந்து விட்டீர்களா? போருக்கு ஒவ்வொருவராக அனுப்பி தாங்கள் அனைவரையும் இழந்துவிட்டீர்கள். தாங்கள் இவர்களை அனுப்பியதற்கு பதில் என்னை அனுப்பி இருந்தால் நான் போரில் வெற்றி பெற்றிருப்பேன். அன்று தூதனாக வந்த அந்த அனுமனையும் கொல்லாமல் விட்டுவிட்டாய்.

அந்த இராமன் இருக்கும் இடம் தெரிந்தும் அவனை கொல்லாமல் இருக்கின்றாய். இனியும் தாங்கள் அறிவற்றவனாக முடிவு செய்யாமல், இலங்கை நகரை காப்பாற்றுங்கள். என் தம்பிகளை கொன்ற அந்த இலட்சுமணனை நான் கொல்வேன். இல்லையென்றால் நான் இலங்கை நகருக்குள் நுழைய மாட்டான். இப்பொழுதே நான் போருக்குச் செல்கிறேன் என்றான். இராவணன், மகனே! நீ சொன்ன இந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருக்கிறது என்றான். பிறகு இந்திரஜித் இராவணனை வணங்கிவிட்டு, போருக்கு செல்ல ஆயத்தமானான். தன் படைகளை திரட்டிக் கொண்டு, வில்லை கையில் ஏந்திக் கொண்டு போருக்குச் செல்ல தந்தையிடம் விடைபெற்றான். இராவணனை இந்திரஜித்தை மார்புடன் தழுவிக் கொண்டு, வெற்றியுடன் திரும்புவாயாக எனக் கூறி வழியனுப்பினான். இந்திரஜித்துடன் சென்ற படைகள் எண்ணில் அடங்காதவை.

இராவணன் போரில் தன் மகன், தம்பி உள்பட பலரை இழந்தான். இருந்தாலும் அவன் பின்வாங்காமல் தன் மகன் இந்திரஜித்தை போருக்கு அனுப்பி வைத்தான். ஆனாலும் ஏனோ இராவணனின் மனம் பயந்தது. தன் மகனையும் இழந்து விடுவோமோ என்று மனம் கலங்கினான். போரில் பல உயிர்களை இழந்து, இப்போது தன் மகனையே பலி கொடுக்க அனுப்புகிறோமே என்று அஞ்சினான் இராவணன். இராவணன், போரில் தன் மகன் இந்திரஜித்தை இழந்து விடக் கூடாது. அதே சமயம் இராமனையும் வீழ்த்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தான். தன் மகன் இந்திரஜித், ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவி பக்தன் என்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. 

உடனே இந்திரஜித்திடம், நீ ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவியின் பக்தன். ஆகவே நீ போரில் வெற்றி பெற, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோன்றுவித்து, ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் செய்தால் உன்னை யாராலும் வீழ்த்த முடியாது என்றான் இராவணன். தன் தந்தை இராவணன் ஆலோசனைப்படி பிரம்மாண்டமான நிகும்பலா யாகம் செய்தான் இந்திரஜித். அனுமன் இராவணனின் திட்டத்தையும், இந்திரஜித்தின் நிகும்பலா யாகத்தையும் அறிந்து கொண்டான். உடனே அனுமன் இராமரிடம் விரைந்து வந்தான். தங்களை வீழ்த்த இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்து ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவியை தனக்கு உதவி செய்ய அழைக்கிறான் என்றான் அனுமன். இதை கேட்ட இராமர், அனுமனே! நீ கவலை கொள்ள வேண்டாம். தேவி பிரத்தியங்கிரா, எப்போதும் நல்லமுறையில் நடப்பவர்களுக்குதான் துணையாக இருப்பாள்.

நேற்றுவரையில் இந்திரஜித் நல்லமுறையில் ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவியின் பக்தனாக இருந்து வந்தான். அதனால் அவனுக்கு தேவி துணையாக இருந்தாள். ஆனால் இன்றோ அவன் தவறான செயலுக்கு தேவியை துணைக்கு அழைக்கிறான். நிச்சயமாக அவன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் அருளை பெற மாட்டான் என்று கூறினார். பிறகு இராமர், ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை மனதால் வணங்கி நல்ல எண்ணத்தோடு பூஜை செய்தார். இராமர் மற்றும் இந்திரஜித் இருவரும் ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவியின் பக்தர்கள். இருவரும் தேவியின் அருளுக்காக கடுமையாக பூஜை செய்தனர். இவர்களில் யாருக்கு ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவி துணையிருந்து உதவி செய்வாள்? என்று தேவலோகமே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி இந்திரஜித்தின் முன் தோன்றினாள். இந்திரஜித், நீ மிகச் சிறந்த என்னுடைய பக்தன். உன் தந்தை இராவணனின் தீய எண்ணத்துக்கு நீ துணை போகலாமா? தீய எண்ணத்துக்காக நீ எவ்வளவு நிகும்பலா யாகம் செய்தாலும் நான் உனக்கு துணையாக இருக்கமாட்டேன். இருந்தாலும் நீ என் தீவிர பக்தனாக இருப்பதால் உலகம் இருக்கும்வரை உன் புகழ் இருக்கும். நீ யாகம் செய்த இந்த இடமும் உன் புகழ் பேசும் என்று ஆசி வழங்கினாள் தேவி. பிறகு ஸ்ரீPபிரத்தியங்கிரா தேவி இராமர் முன் தோன்றி, உன் பூஜைக்கான எண்ணம் மிகவும் சிறந்தது. இந்த போரில் நீ வெற்றி பெறுவாய். நான் உனக்கு துணையாக இருப்பேன் எனக் கூறி மறைந்தாள்.

தொடரும்.....

Post a Comment

0 Comments