இராமாயணம் பகுதி - 55 - RAMAYANAM PART - 55


இராமாயணம் பகுதி - 55


இராமாயணம் பகுதி - 55 - RAMAYANAM PART - 55

இந்திரஜித்தின் அரக்கர் படைகள் அனுமனை சூழ்ந்துக் கொண்டன. அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்தான். அனுமன் தன் பக்கத்தில் இருந்த ஆச்சா மரத்தை பிடுங்கி அரக்கர்களிடம் போரிட்டான். அரக்கர் படைகள் அனைத்தையும் கொன்றான். பிறகு அனுமன் தன் தோள்களைத் தட்டி என்னிடம் போருக்கு வாருங்கள் என முழக்கமிட்டான். அரக்கர்களுக்கு அழிவு வந்துவிட்டது என்றான். இதைக்கேட்ட இந்திரஜித், உன் எண்ணத்திற்கு நான் முடிவு கட்டுகிறேன் எனக் கூறி அனுமன் மீது அம்புகளை ஏவினான். அனுமன் மீது பாய்ந்த அம்புகளால் இரத்தம் வலிந்தது. அனுமன் உடலை மிகவும் பெரிதாக்கிக் கொண்டே சென்றான். இந்திரஜித்தால் அனுமனை பாதிக்குமேல் காண முடியவில்லை. பிறகு அனுமன், இந்திரஜித்தின் தேரில் ஏறி அவனுடைய வில்லை பிடுங்கி ஒடித்து எறிந்தான்.

அனுமன் ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இந்திரஜித் மீது எறிந்தான். இதனால் இந்திரஜித்தின் மணிமுடிகள் உடைந்து கீழே விழுந்தன. இதனால் கோபங்கொண்ட இந்திரஜித் அனுமன் மீது ஆயிரம் பாணங்களை ஏவினான். அனுமன், இந்திரஜித்தை அவன் நின்றிருந்த தேரோடு தூக்கி எறிந்தான். தரையில் விழுந்த இந்திரஜித் எழுந்து வானில் சென்றான். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இந்திரஜித், அனுமன் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவ நினைத்தான். அதனால் இந்திரஜித் பிரம்மாஸ்திரத்திற்கு அர்ச்சனைகளும், பூஜைகளும், வழிபாடுகளும், செய்து சகல தெய்வங்களை வணங்கி அந்த பிரம்மாஸ்திரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டான். பிறகு இந்திரஜித், ஒரு பெரிய வில்லை பிரம்மாஸ்திரத்தில் பொருத்தி அனுமன் மீது எய்தினான். பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட அனுமன் கீழே விழுந்தான்.

பிறகு அனுமன் தன்னை கீழே சாய்த்தது பிரம்மாஸ்த்திரம் என்பதை உணர்ந்து கொண்டான். பிரம்மாஸ்திரத்திற்கு மதித்து கட்டுப்படுவது தான் சிறந்தது என நினைத்து கட்டுப்பட்டான். இதைப் பார்த்த இந்திரஜித், அனுமனின் அருகில் வந்து இவனுடைய வலிமையை ஒடிக்கி விட்டேன் என்றான். அதுவரையிலும் அனுமனை பார்த்து பயந்த அரக்கர்கள், ஓடி வந்து அனுமனை சூழ்ந்துக் கொண்டனர். அனுமன் கட்டுண்டதை பார்த்து அரக்கர்கள் மகிழ்ந்தார்கள். பிறகு அரக்கர்கள் அனுமனை கயிற்றோடு கட்டி அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர். அனுமன் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட செய்தியை அறிந்து சீதை மிகவும் வருந்தினாள். போகும் வழியில் சில அரக்கர்கள் அனுமனை பார்க்க பயந்தனர். சிலர் நீ கொன்ற என் மகனை திரும்பக் கொடு என்றனர். இன்னும் சிலர் நீ கொன்ற என் கணவரை திரும்ப கொடு என்றனர். இன்னும் சில அரக்கர்கள் அனுமனிடம் பணிந்து எங்களை மன்னித்து விடு என்றனர்.

சிலர் நீ கொன்ற என் தந்தையை திரும்ப கொடு என்றனர். அனுமன், அரக்கர்கள் பின் சென்றால் இராவணனை காண முடியும் என நினைத்து அமைதியாக வந்தான். அனுமனுடன் இந்திரஜித் தலைமையில் அரக்கர்கள் அரண்மனையை அடைந்தனர். இராவணனுக்கு அனுமன் கட்டுண்ட செய்தி முன்பே தெரிவிக்கப்பட்டது. உடனே இராவணன், அரக்கர்களிடம் அவனை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் என ஆணையிட்டான். அனுமனை இராவணன் முன்பு நேருக்குநேர் நிறுத்தி வைத்தனர். இராவணனை பார்த்த அனுமனுக்கு பிரம்மாஸ்திரத்தை அறுத்தெறிந்து இவனை இப்பொழுதே கொல்கிறேன் என எண்ணினான். பிறகு பிரம்மாஸ்திரத்தை அறுத்தெறிவது தவறு என்பதை நினைத்து அமைதியானான். இவனோடு நான் போரிட்டால் சீதையின் நிலைமையை நான் எப்படி இராமனிடம் சொல்வேன் என நினைத்தான். ஆதலால் இராவணன் முன்பு ஒரு தூதனாக சந்திப்பது தான் சிறந்தது என நினைத்தான்.

இராவணனின் சபைக்கு கட்டிக் கொண்டு வரப்பட்ட அனுமனை இந்திரஜித் அறிமுகப்படுத்தினான். அனுமனை பார்த்து, குரங்கின் உருவில் இருக்கும் இவ்வீரன் சிவபெருமானை போலவும், விஷ்ணுவை போலவும் வலிமை கொண்டவன் எனக் கூறினான். இராவணன் அனுமனை பார்த்து, நீ யார்? எதற்காக இங்கு வந்துள்ளாய்? உன்னை இங்கு அனுப்பியவர் யார்? எனக் கேட்டான். அனுமன், நான் வில் வீரத்தில் சிறந்தவனான இராமனின் தூதுவன். இராமன், வேதங்களை நன்கு கற்றவன். அறிவில் சிறந்து விளங்குபவன். அறத்தை வளர்ப்பவன். தர்மநெறியில் விளங்குபவன். அத்தகைய இராமனின் தூதன் நான். இராமனின் மனைவி சீதையை தேடி வாலியின் சகோதரனான சுக்ரீவனின் கட்டளைப்படி வாலியின் மகன் அங்கதன் தலைமையில் வந்துள்ளேன். அவனுடைய தூதனாக மற்றும் தனியாக இங்கே வந்துள்ளேன் என்றான்.

வாலியின் பெயரைக் கேட்ட இராவணன், பலமாக சிரித்தான். வாலியின் மகன் அங்கதனின் தூதனா நீ? வாலி நலமாக உள்ளானா? எனக் கேட்டான். அனுமன் இராவணனை பார்த்து கேலியாக சிரித்தான். பிறகு, அரக்கனே! வாலி இவ்வுலகை விட்டு வானுலகம் சென்று விட்டான். அவனின் உயிரை இராமனின் பாணம் பதம் பார்த்தது. இப்போது வாலியின் தம்பியான சுக்ரீவன் அரசனாக உள்ளான் எனக் கூறினான். உடனே இராவணன் அனுமனிடம், வாலியை இராமன் எதற்காக கொன்றான் என சொல் என்றான். சீதையைத் தேடி இராமன் வந்தபோது, சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவனின் துயரை போக்கும் பொருட்டு இராமன் வாலியை கொன்று சுக்ரீவனுக்கு முடி சூட்டினான் என்றான். இராவணன், உன் குலத்து தலைவனை கொன்ற இராமனிடம் அடிமையாக இருக்கின்றீர்கள். தன் சொந்த அண்ணனை இராமனை விட்டு கொன்ற சுக்ரீவன் எனக்கு தூது அனுப்பியுள்ளானா எனக் கேட்டான்.

நீ இங்கு தூதுவனாக வந்துள்ளதால் உன்னை கொல்லாமல் இருக்கின்றேன். உண்மையைச் சொல் என்றான் இராவணன். அனுமன் இராவணனிடம், நான் உனக்கு அறிவுரையை கூறுகிறேன் கேள் என்றான். நான் உன்னை காண வேண்டும் என்பதற்காக தான் அசோக வனத்தையும், உன் அரக்கர்களையும் அழித்தேன். ஒருவனுக்கு ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஓர் அரசனாகிய நீ ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் இருக்கிறாய். பிறரின் மனைவியை விரும்புபவனுக்கு பழியும், பாவமும் வந்து சேரும். உனக்கோ பல மனைவிமார்கள் இருக்க நீ மற்றவர் மனைவியை விரும்புவது நியாயமா? ஒருவனுக்கு பெண்ணாசையும், பொன்னாசையும் இருந்தால் அது அவனுக்கு அழிவைத் தேடி தரும். நீ சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டால் இராமன் உன்மீது சிறிதேனும் கருணை காட்ட வாய்ப்புள்ளது எனக் கூறினான்.

இராவணன் இதனைக் கேட்டு பெரும் கோபங்கொண்டான். உடனே குரங்காகிய நீ! எனக்கு அறிவுரை சொல்வதா! உன்னை இப்பொழுதே எமலோகத்திற்கு அனுப்புகிறேன் என்றான். தன் ஏவலாட்களுக்கு இக்குரங்கை உடனே கொல்லுங்கள் என ஆணையிட்டான். உடனே அரக்கர்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டனர். அப்போது அரசவையில் இருந்த இராவணனின் தம்பி விபீஷணன் எழுந்து ‘நில்லுங்கள்’ என்றான். விபீஷணன் இராவணனிடம் அண்ணா! உன் கோபம் உலக நீதிக்கு ஏற்றது அல்ல. உன் தவத்தின் பலனாய் இந்திரன் முதலிய தேவர்கள் உனக்கு பணிவிடை செய்கிறார்கள். இவன் ஒரு தூதுவன் என்று சொல்லியும் இவனைக் கொல்வது நம் குலத்திற்கு பாவமாகும். இத்தூதுவனை கொல்லாதே என தடுத்து நிறுத்தினான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments