மகாபாரதம் பகுதி - 92 - MAHABHARATHAM PART - 92

 

மகாபாரதம் பகுதி - 92


மகாபாரதம் பகுதி - 92 - MAHABHARATHAM PART - 92

அக்னியை வலம் வந்தான். கண்ணன் பாதங்களை வணங்கினான். அப்போது கண்ணன், அர்ஜுனா! காண்டீபத்தை உன் கையில் ஏந்தி, நாணேற்றிய வண்ணமே அக்னிப் பிரவேசம் செய். முடியுமானால், தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றையும் வில்லில் தொடுத்துக்கொண்டே அக்னியை வலம் வா! என்றார். அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நிகழ்ந்தது அந்த அதிசயம்.

திடீரென மேல் வானிலே பிரகாசமான வெளிச்சம் ஒன்று தோன்றியது. ஆம், உண்மையில் அப்போது ஆதவன் அஸ்தமனம் ஆகவில்லை; சூரியன் தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்தான். கண்ணன் தன் ஸுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டனர். வியப்படைந்து மேல் வானை நோக்கினான் அர்ஜுனன். பேரொளியுடன் சூரியன் தரிசனம் தந்தான். ஸுதர்சனச் சக்கரம் நகர்ந்ததும், இருளெனும் மாயை மறைந்து, மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசிக் கொண்டிருந்தது.

அர்ஜுனன் கண்களில், தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். அர்ஜுனா! அதோ ஜயத்ரதன்! எடு உன் அஸ்திரத்தை, விடு பணத்தை !!! அவன் தலையைக் கொய்து, வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற மடியில் விழச் செய்! என்று ஆணையிட்டான் கண்ணன். கண்ணிமைக்கும் நேரத்தில், காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து, விண்ணிலே தூக்கிச் சென்று, வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி, மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன். உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது.

தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ, அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் வரமே அவனையும் அவன் மகனையும் சேர்த்து அழித்துவிட்டது. பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கண்ணனை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். தன்னை நம்பியவர்களை எப்படிப்பட்ட துயரத்தில் இருந்தும் காத்தருள்வான் கண்ணன் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு.

சபதத்தை முடித்தான் அர்ஜுனன். குருக்ஷேதிரத்தை தொடர்ந்தான் கண்ணன். ஆனால் துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான். துரோணரிடம் இன்று என் தம்பியர் பலர் மாண்டனர். பீமனும் சாத்யகியும் செய்த போரில் வீரர் பலர் இறந்தனர். ஜயத்ரதனும் மாண்டான். அர்ச்சுனனின் வல்லமையை யார் வெல்ல முடியும். இனிப் பேசிப் பயனில்லை. வெற்றி அல்லது வீர மரணம் என்று புலம்பினான்.

இவ்வாறு அன்று காலையில் நடந்த போரில் கௌரவர்களின் முக்கியமான வீரர்களில் ஒருவனான ஜயத்ரதனை இழந்தான் துரியோதனன். மாவீரன் பூரிசிரவஸ் என்பவனை இழந்தான். மேலும் பல தம்பியர்களை இழந்திருந்தான். அவனின் மன வலிமை சற்றே தளர்ந்து இருந்தது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தான். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. போர்களத்தின் காட்சிகள் அவன் கண் முன் ஓடியது. தம்பியர்களின் மரண ஓலங்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. இருபின்னும் அஸ்தினாபுரத்தை விட்டு கொடுக்க மனம் இல்லை.

பதினான்காம் நாள் பகல் போரின் முடிவில் துரியோதனனின் மன வேதனையை உணர்ந்த துரோணர், தன் முழு ஆற்றலையும் செலுத்திப் போரிடத் துணிந்தார். துரியோதனனின் கடுஞ்சொற்கள் ஒரு பக்கம் இருக்க, துரியோதனனின் மனவருத்தம் ஒரு பக்கம். சற்றே மௌனம் சாதித்த துரோணர் ஒரு முடிவிற்கு வந்தார். பகைவரை ஒழித்தப் பின்தான் கேடயத்தை கழட்டுவேன் என்று சபதம் செய்தார். மாலை மறைந்ததும் இரவுப் போரை தொடங்கினார். மாபெரும் வீரரான துரோணர், வில்லுடனும் வேலுடனும் தன் ரதத்தில் ஏறினார். போர்க்களம் நோக்கி பயணித்தார். அவரின் தேர் சத்தத்தை வைத்தே துரோணர் வருவதை அறிந்தான் அர்ஜுனன்.

அருமையான திட்டம் தீட்டினான் பாண்டவர்களின் படை தளபதி திருஷ்டத்துய்மன். இரவு போர் என்பதால் மனிதர்களை விட அரக்கர்களுக்கு பலம் அதிகம் என்பதை மனதில் கொண்டு, பீமனின் மகன் கடோத்கஜன், அவனின் மகன் அஞ்சனபர்வா ஆகியோருக்கு முக்கிய பொருப்புப்கள் கொடுத்தான். மேலும் கடோத்கஜன் அரக்கிக்கு பிறந்ததால் அவனுக்கு மாய விளையாடும், சித்து விளையாட்டும் அத்துப்படி. அது மட்டுமா அசாதாரண போர் வீரன். பீமன் பலத்தில் பாதியும், தன் தாய் இடும்பியிடம் இருந்து பாதி பலமும் கொண்ட அசாத்திய வீரன். இவனை கண்டாலே நடுங்கும் தோற்றம் உடையவன். தன் பெரியப்பவாகிய தருமர் மற்றும் சித்தப்பாக்கள் ஆகிய அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர்களுக்கு செல்ல பிள்ளை. தந்தையை காண காட்டில் இருந்து எப்போது வந்தாலும் திரௌபதி இவனுக்கு மட்டும் உணவை ஊட்டி விடுவாள். கிருஷ்ணரின் மேல் மிகுந்த பக்தியும், பாசமும் உடையவன். அபிமன்யூவிர்க்கு மிகவும் நெருக்கமானவன். அபிமன்யூவை கொன்ற கௌரவ படைகளை பழி வாங்க காத்து கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த நேரமும் வந்தது. கொடுத்த பொறுப்பை ஏற்ற கடோத்கஜன், தந்தை பீமனின் காலில் விழுந்து ஆசிபெற்றான். பின்னர் தர்மர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர்களிடம் ஆசி பெற்று கிருஷ்ணரிடம் சென்றான். என்றும் இல்லாமல் அன்று கிருஷ்ணர் அவனை நெஞ்சோடு தழுவி கொண்டார். சற்று நேரம் அவனை உற்று நோக்கிய கிருஷ்ணர் “ உன் புகழ் நிலைத்து நிற்கட்டும் “ என்று வாழ்த்தினார். புது தெம்போடும், அபிமன்யூவின் நினைவுகளோடும் போர்க்களம் நோக்கி தன் வீர பயணத்தை தொடங்கினான்.

கௌரவர்கள் தரப்பில் துரோணர் வெறி கொண்டு போர் புரிந்து கொண்டிருந்தார். எதிர்த்து வரும் அனைவரையும் மண்ணோடு சாய்த்தார். தான் அர்ஜுனனின் குரு என்பதை போர்களத்தில் நிரூபித்து கொண்டிருந்தார். பாண்டவ படைகள் தடுமாறியது. அஸ்திரங்கள் அவர் வில்லில் இருந்து புறப்படும் சத்தம் அனைவரையும் நடுங்க செய்தது. “ துரியோதனா!!! அர்ஜுனனை மட்டும் என்னை நெருங்க விட வேண்டாம். என் ஆற்றலை தடுக்கும் சக்தி அவனிடம் மட்டுமே உள்ளது ” என்றார் துரோணர். துரியோதனனும் அர்ஜுனன் மீது பல படைகளை ஏவி அவனை தடுத்து கொண்டே இருந்தான். துரோணர் தன்னை எதிர்த்து வந்த சிபி என்னும் மன்னனின் தலையைக் கொய்தார். தன்னை எதிர்த்த திருஷ்டத்துய்மனின் மைந்தர்களான தேறேஷ்டகா மற்றும் தேரேஷ்டாரா ஆகியோரை கொன்றார். அர்ஜுனனை தொடர்ந்து பாண்டவ தளபதியும் புத்திர சோகத்தை சந்தித்தார்.

போர்களத்தின் மற்றொரு திசையில் பீமன் துரியோதனனின் தம்பியரான துர்மதனையும், துஷ்கர்ணனையும் கொன்றான். சாத்யகி சோமதத்தனை எதிர்த்தான். சகுனி சோமதத்தனுக்கு உதவினான். இரு தரப்புகளுக்கும் இழப்பு என்ற நிலையில் போர் சென்று கொண்டிருந்தது.

பீமனின் மகன் கடோத்கஜன் ஒரு புறம் கடும் போர் புரிந்தான். பல ஆயிரம் வீரர்களை ஒருவனாக நின்று கொன்று குவித்தான். ஒரு கட்டத்தில் இவனின் ஆற்றலை கண்டு கௌரவ படை பின் வாங்கியது. அவன் மகன் அஞ்சனபர்வா அஸ்வத்தாமாவை எதிர்த்து போரிட்டான். அஸ்வதாமனின் தாக்குதல்களை நேர்த்தியாக சமாளித்தான் அஞ்சனபர்வா. நீண்ட நேரம் நடந்த போருக்கு பின் அஞ்சனபர்வா அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டான். மகனை இழந்த ஆத்திரத்தில் அஸ்வத்தாமாவுடன் கடும் போரிட்டான் கடோத்கஜன். இருவரும் சளைக்கவில்லை. இறுதியில் அஸ்வத்தாமன் நிலை தடுமாறி விழுந்தான். மயங்கினான். மயக்கத்தில் இருந்த அஸ்வதாமனை விட்டு விட்டு அங்கிருந்து சென்றான் கடோத்கஜன். மகனை இழந்த சோகத்தை கோபமாக மாற்றி போர் ஆற்றலாய் வெளிபடுத்தி கொண்டிருந்தான்.

கோபத்தின் உச்சியில் இருந்த கடோத்கஜன் கர்ணனிடம் வந்தான். அவனது பேராற்றலைக் கண்ட துரியோதனன் நடுங்கினான். கர்ணன் தளரவில்லை. அவனின் கண்களை பார்த்து அரக்கனே! முடிந்தால் என் அம்புகளுக்கு பதில் சொல் என்றான். படை வீரர்கள் அழிந்து கொண்டிருப்பதை பார்த்த துரியோதனனோ கர்ணனிடம் சக்தி அஸ்திரத்தை பயன் படுத்தும்மாறு வேண்டினான். கர்ணன் அதை தான் அர்சுனனுக்காக வைத்துள்ளதாகவும், அந்த அஸ்திரம் இல்லாமலே கடோத்கஜனை தன்னால் கொல்ல முடியும் என்று கூறினான். துரியோதனனின் பயம் மேலிட்டதால் அவன் மீண்டும் கர்ணனிடம் சக்தி அஸ்திரத்தை பயன் படுத்துமாறு வற்புறுத்தினான். தன் நண்பனால் கட்டாய படுத்தப்பட்ட கர்ணன் வேறு வழியின்றி, தன் சக்தி அஸ்திரத்தை எடுத்தான். சக்தி அஸ்திரம் மிகவும் வலிமையானது. அது இந்திரனிடம் இருந்து பெற்றான் கர்ணன். அந்த சக்தி அஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே பயன் படுத்த முடியும். பயன் முடிந்தவுடன் அது மீண்டும் இந்திரனிடமே சென்று விடும். அதை கர்ணன் அர்ச்சுனனைக் கொல்ல வைத்திருந்தான்.

எடுத்த அஸ்திரத்தை தன் வில்லில் பூட்டினான் கர்ணன். நான் ஏற்றி இலக்கை குறித்தான். இலக்கு கடோத்கஜன். விடுத்தான் அஸ்திரத்தை. காற்றை கிழித்து கொண்டு, மின்னல் வேகத்தில், சீறிப்பாய்ந்தது சக்தி அஸ்திரம்.

தொடரும் .....

Post a Comment

0 Comments