இராமாயணம் பகுதி - 30 - RAMAYANAM PART - 30


இராமாயணம் பகுதி - 30


இராமாயணம் பகுதி - 30 - RAMAYANAM PART - 30

ஜடாயு ஓர் உயர்ந்த மலையின் மேல் கம்பீரமாக வீற்றிருந்தார். இராமர் அவரை பார்த்து ஓர் அரக்கன் பறவை உருவத்தில் நமக்கு இடர் செய்ய வந்து இருக்கிறான் என நினைத்துக் கொண்டார். இராமர், இலட்சுமணர் வருவதை கவனித்து கொண்டிருந்தார், ஜடாயு. இவர்கள் தவ வேடத்தில் இருந்தாலும் தவசிகள் இல்லை. இவர்கள் கையில் வில்லேந்தி இருப்பதால் தேவர்களாக இருக்கக்கூடும் என எண்ணிக் கொண்டு இருந்தார். இவர்கள் உடன் வரும் தேவியை பார்த்தால் திருமகள் போல் தோன்றுகிறாள். இவர்களை பார்க்கும் போது எனக்கு என் நண்பன் தசரத சக்ரவர்த்தி ஞாபகம் வருகிறது. இவர்கள் யாராக இருக்கக்கூடும் என எண்ணிக் கொண்டு இருந்தார்.

இராம இலட்சுமணர் அருகில் வந்தவுடன் குழந்தைகளே! நீங்கள் யார்? என அன்புடன் கேட்டார், ஜடாயு. இராமர், ஐயா! நாங்கள் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்கள் என்று கூறினார். இதைக் கேட்ட ஜடாயுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டானது. தசரதர் என் உடன்பிறவா சகோதரன். அவன் நலமாக இருக்கிறானா? எனக் கேட்டார். இராமர், சத்தியத்தை நிலைநாட்ட என் தந்தை முக்திநிலையை அடைந்து விட்டார் எனக் கூறினார். இதை கேட்ட ஜடாயு அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே இராம இலட்சுமணர் ஜடாயுவை மயக்க நிலையில் இருந்து தெளிய வைத்தனர். ஜடாயு கண்ணீர் மல்க தசரதரை நினைத்து அழுதார். தசரதா! உன் கொடை தானத்திற்கு தோல்வி வந்து விட்டதே. உன் உயிர் பிரிந்த செய்தியை ஒருபோதும் என் மனது ஏற்று கொள்ளவில்லையே. நீயும் நானும் இரு உடல் ஓர் உயிர் போலவே பழகினோம். நீ இல்லா இவ்வுலகில் ஒருபோதும் நானும் இருக்க மாட்டேன்.

இப்பொழுதே நான் தீயில் பாய்ந்து உயிரை விடுகிறேன். நீங்கள் உங்கள் தந்தைக்கு செய்த ஈமச்சடங்குகளை எனக்கும் செய்வீர்களாக! என்று கேட்டார். இராமர் இலட்சுமணர் இதனை கேட்டு மிகவும் வருந்தினார்கள். எங்கள் தந்தையின் உயிர் தோழனாகிய தாங்களே உயிரை மாய்த்து கொள்வேன் என்றால் எங்களுக்கு வேறு யார் ஆதரவு தர முடியும். இராமர் ஜடாயுவை வணங்கி, பெரியப்பா! நாங்கள் வாழும் பொருட்டு ஒருபோதும் தாங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். தந்தை, தாய்க்கு செய்து கொடுத்த வரத்தின்படி வனவாசம் வந்துவிட்ட எங்களை தாங்களும் பிரிந்துவிட்டால் நாங்கள் என்ன தான் செய்வோம். சரி குழந்தைகளே! நான் நீங்கள் அயோத்திக்கு திரும்பும் வரை சாக மாட்டேன் என்றார், ஜடாயு. நீங்கள் இக்கொடிய கானகத்திற்கு வரக் காரணம் என்னவென்று கேட்டார் ஜடாயு. இலட்சுமணர் நடந்த எல்லாவற்றையும் ஜடாயுவிடம் கூறினார். இதைக் கேட்ட ஜடாயு மிகவும் நெகிழ்ந்து போனார். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பதற்காக உன் தம்பி பரதனுக்கு நாட்டை கொடுத்து விட்டு கானகம் வந்த வள்ளலே உன் வாய்மையை நான் பாராட்டுகிறேன் என்றார். சரி அது இருக்கட்டும் தங்களுடன் வந்திருக்கும் இப்பெண்மகள் யார்? எனக் கேட்டார். ஜனக மகாராஜாவின் மகள் அண்ணாவின் மனைவி என்று கூறினார் இலட்சுமணர்.

ஜடாயு சீதையை பார்த்து, உன் புகழ் ஓங்குக. கணவனே கண்கண்ட தெய்வம் என்று கணவன் வந்திருக்கும் கானகத்துக்கு நீயும் வந்துள்ளாய். கற்புக்கரசியே! உன் புகழ் வாழ்க என வாழ்த்தினார். பிறகு அவர்கள் மூவரும் நடந்து செல்ல ஜடாயு குடையை போல தன் சிறகை விரித்து வழிகாட்டி கொண்டு மேலே பறந்து வந்தார். அவர்கள் பஞ்சவடி வனத்தை அடைந்தனர். புண்ணிய நதியான கோதாவரியில் மூழ்கி மகிழ்ந்தார்கள். இலட்சுமணர் அங்கு ஓர் அழகான குடிலை அமைத்தார். இராமரும், சீதையும் அக்குடிலில் வாழ்ந்தனர்.

சூர்ப்பனகை அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கை. விசுவரசு என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சளி என்பவளுக்கு குபேரனும், இரண்டாவது மனைவி கேகயி என்பவளுக்கு இராவணனன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை பிள்ளைகளாக பிறந்தனர். சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வா என்னும் அரக்கன். வித்யுத்ஜிஹ்வா அதிகம் அறிவு உடையவன் என்பதால் தமக்கு அவனால் பெருமை கிடைக்காது. ஆதலால் அவனை கொன்று விட வேண்டும் என நினைத்தான் இராவணன். ஒரு சமயம் போரின் போது தங்கை கணவன் என்பதை பார்க்காமல் அவனை கொன்று விட்டான் இராவணன். கூட சூர்ப்பனகை அடிக்கடி கோதாவரி ஆற்றில் இறங்கி வெகுநேரம் நின்று கொண்டிருப்பாள். அன்றும் பஞ்சவடிக்குத்தான் வந்து கொண்டிருந்தாள். தூரத்தில் வரும்போதே கோதாவரிக் கரையில் புதிதாக ஓர் பர்ண சாலை இருப்பதை பார்த்து விட்டாள் சூர்ப்பனகை. இது முனிவனின் வேலையாக தான் இருக்கும். இந்த வனத்துக்கு நான் அரசி என்னைக் கேட்காமல் இப்படியொரு காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறான். இந்த முனிவன்கள் மேல் இரக்கமே காட்டக் கூடாது என்று நினைத்துக் கொண்டு வேகமாக சென்றாள். அவள் செல்லும் வேகத்தில் பூமியே அதிர்ந்தது. பர்ணசாலை பிய்த்து எறிந்துவிடும் நோக்கத்தில் ஆவேசம் பொங்க சென்றாள். அவள் சென்ற வேகத்தில் சட்டென்று நின்று விட்டாள். இராமர் ஓர் மரத்தின் கீழ் அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார். இராமரை கண்டவுடன் அவளுக்கு இராமரின் மேல் காதல் வந்துவிட்டது. ஆகா! இவர் என்ன அழகு! ஆயிரம் ஆண்கள் சேர்ந்தாலும் இவரின் அழகுக்கு ஈடாக முடியாது. இவரை கடவுள் எனக்காக தான் படைத்து இருக்கிறான். ஆனால் நானோ ஒரு அரக்கி. என் உருவில் சென்றால் அவன் என்னை விரும்ப மாட்டான். ஆதலால் நான் அழகிய ஒரு பெண் உருவில் செல்கிறேன் என்று பெண் உருவம் எடுத்தாள். அன்னம் போல் நடந்து இராமன் முன் நின்றாள். இராமர் அவளை பார்த்து, யாரம்மா நீ ? இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? உன் பெயர் என்ன? உன் தாய் தந்தையர் எங்கே? என வினவினார். ஆனால் இராமருக்கு இவள் தீயவள் என்று அடிமனதில் தோன்றியது.

சூர்ப்பனகை, பெருமானே! தங்களுக்கு வணக்கம்! என் பெயர் காமவல்லி. நான் பிரம்ம தேவரின் பேரன் விஸ்ரவசுவின் மகள் ஆவேன். என் அண்ணன் குபேரன் மற்றும் இராவணனுடைய தங்கை நான். நான் கன்னி பெண். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாள். இராமர், அப்படியா? நீ இராவணின் தங்கையா? இராவணனோ ஒரு அரக்கன். அப்படியென்றால் நீ ஒரு அரக்கியாக தான் இருக்க வேண்டும். நீ எப்படி அழகிய பெண் உருவில் இருக்கிறாய்? என்றார். அதற்கு சூர்ப்பனகை, ஆம் நாம் ஒரு அரக்கி தான். எனக்கு அரக்கியாக இருப்பதில் விருப்பம் இல்லை. ஆதலால் தவம் இருந்து தேவர்களிடம் வரம் பெற்று பெண் உருவம் பெற்றேன் என்று சிறிதும் கவலைப்படாமல் பொய் கூறினாள்.

பெண்மணியே! இக்கொடிய கானகத்தில் தனியாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என வினவினார்.

பெருமானே! எனக்கு அரக்கர்களுடன் வாழ பிடிக்கவில்லை. ஆதலால் இங்கு வந்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அன்புடன் பணிவிடை செய்து கொண்டு இருக்கிறேன் என்றும் மறுபடியும் பொய் உரைத்தாள். இராமர், பெண்மணியே! நீ என்னை காண வந்த நோக்கம் என்ன? என்று சொல்லவில்லையே என வினவினார். சூர்ப்பனகை தன் தந்திரத்தை ஆரம்பித்தாள். பெருமானே நான் தங்களை பார்த்தவுடன் என்னை அறியாமல் என் மனம் தங்களிடம் வந்துவிட்டது. நான் உங்களை விரும்புகிறேன். தாங்கள் என்னை திருமணம் செய்து மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அழகிய குரலில் கொணஞ்சும் விதமாக கேட்டாள்.

தொடரும்.....

Post a Comment

0 Comments