இலங்கையின் தேசிய மறுமலர்ச்சி - NATIONAL RENAISSANCE OF SRI LANKA


இலங்கையின் தேசிய மறுமலர்ச்சி

 

இலங்கையின் தேசிய மறுமலர்ச்சி - NATIONAL RENAISSANCE OF SRI LANKA

ஐரோப்பியர் ஆசியாவில் கைப்பற்றிய பிரதேசங்களை ஆட்சி புரிகையில் தமக்குச் சார்பான மக்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்காக தமது சமயத்தையும் கலா சாரத்தையும் பரப்புவதில் ஈடுபட்டனர். போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இந்நாட்டின் கரையோரப் பிரதேசத்தை ஆட்சி செய்தபோது கண்டி இராச்சியத்தில் சுதந்திரமான அர சொன்று காணப்பட்டமையால் அவர்களின் சமய கலாசார நடவடிக்கைகள், அவர்கள் ஆட்சிசெய்த பிரதேசங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. என்றாலும் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்ட பின்னர் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் மேலைத்தேய கலாசாரம் முழுநாட்டிலும் பரவிச் செல்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டன.

மிஷனரிகளின் செயற்பாடுகள்

பிரித்தானியர் ஆட்சியின்போது இந்நாட்டிற்கு வந்த வெளிநாட்டு அமைப்புகள் பலவும் கிறிஸ்தவ சமயத்தை இந்நாட்டில் பரப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவை மிஷனரி இயக்கங்கள் எனப்பட்டன. 1804 - 1818 காலகட்டத்தில் இந்நாட்டிற்கு வந்த சில மிஷனரி அமைப்புக்கள் வருமாறு,

லண்டன் மிஷனரி சங்கம் - 1804
பெப்டிஸ்ட் மிஷனரி சங்கம் - 1812
வெஸ்லியன் மிஷனரி சங்கம் - 1814 
அமெரிக்கன் மிஷனரி சங்கம் - 1816
சேர்ச் மிஷனரி சங்கம் - 1818

இம்மிக்ஷனரி இயக்கங்களின் அங்கத்தவர்கள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் சமயத்தைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். பெப்டிஸ்ட் இயக்கத்தினர் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டனர். வெஸ்லியன் மிஷனரியினர் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் செயற்பட்டனர். அமெரிக்கன் மிஷனரியினர் யாழ்ப்பாணம் வடக்குப் பிரதேசங்களில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சேர்ச் மிஷனரியினர் கொழும்பு, காலி, கற்பிட்டி, மன்னார், கண்டி பிரதேசங்களில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். மிஷனரியினர் தமது சமயத்தைப் பரப்புவதற்கு நூல்கள், சொற்பொழிவு, கல்வி என்னும் மூன்று துறைகளையும் பயன்படுத்தினர்.

எழுத்து ஊடகத்தைப் பயன்படுத்தல்

இலங்கைக்கு வந்த மிஷனரியினரிடம் அச்சகங்களை அமைப்பதற்கும் நூல்கள், சஞ்சிகைகள் அச்சிடுவதற்கும் தேவையான பணமும் ஒழுங்கமைப்புத் திறனும் காணப்பட்டன. அவர்கள் எதிர்கொண்ட முக்கிய பிரச்சினை மொழியாகும். தேசிய மொழியில் அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக மிஷனரி மதகுருமார் சிங்களத்தையும் தமிழையும் கற்றுக் கொண்டனர். பின்னர் பைபிளை சிங்களத்திலும் தமிழிலும் மொழி பெயர்த்தனர். பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றை அச்சிட்டு விநியோகித்தனர். அவ்வாறு அச்சிடப்பட்ட வெளியீடுகள் சில வருமாறு,

சேர்ச் மிஷனரி சங்கம் - 1832 - மாசிக்க தேக்க
சமய பூஸ்திகா சங்கம் - 1840 - லங்கா நிதானய
பெப்டிஸ்ட் மிஷனரி - 1842 -உரகல

சொற்பொழிவும் கல்வியும்

மிஷனரி குருமார் பன்சலை அருகிலும் பொது மக்கள் புழங்கும் இடங்களிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்தித் தமது சமயத்தைப் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். அத்தோடு பாடசாலைகளை அமைத்து, அவற்றை நடத்திச் செல் வதில் அவர்கள் ஈடுபாட்டுடன் செயற்பட்டனர். மிஷனரி கல்வி செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தின் உதவியும் கிடைத்து வந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அரசாங் கப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆங்கில மொழி அறிவு தேவைப்பட்டது. ஆகையால் சிங்கள, தமிழ்ப் பிள்ளைகள் ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு மிஷனரி பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியேற்பட்டது.

பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்

மிஷனரியினரின் எழுத்து, சொற்பொழிவு, பிரசார ஊடகங்கள் சிலை வணக்கத்தைக் கண்டித்தமையாலும் பௌத்த, இந்து பழக்கவழக்கங்கள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டமையாலும் அவற்றிற்குப் பதிலளிக்கும் தேவை எழுந்தது. அதே வேளையில் சிங்கள, தமிழ் மொழியிலான கல்வி நடவடிக்கைகளுக்கு அரசின் உதவி கிட்டாமையினாலும் தேசிய மொழிகளிலான கல்வியை எழுச்சி அடையச் செய்வதற்கான தேவையும் எழுந்தது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பௌத்த குருமார் முன்னோடிகளாகச் செயற்பட்டனர். வலானை சித்தார்த்த தேரர், இரத்மலானை பரமதம்ம சேதிய பிரிவெனாவை ஆரம்பித்தமை பௌத்த கல்வி நடவடிக்கையில் முக்கியமானதாகும். சிங்களம், பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்ற, சுதேச கலாசாரத்தை மதிக்கின்ற கல்விமான்களான பௌத்த குருமார் அப்பிரிவெனாவில் இருந்து தோன்றினர். அவர்களுள் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரர் 1873 இல் மாளிகாகந்த வித்தியோதய பிரிவெனாவைத் தோற்றுவித்தார். இரத்மலானை தர்மாலோக்க தேரர் 1875 இல் பேலியகொடை வித்தியாலங்கார பிரிவெனாவை ஆரம்பித்தார். இவ்வாறு பழைய பிரிவெனாக் கல்வி முறை மீளவும் ஆரம்பமானபடியால் மேலும் மேலும் கல்விமான்கள் தோன்றியமை மறுமலர்ச்சிக் கான ஆசீர்வாதமாக அமைந்தது.

அச்சகங்களை நிறுவுதல்

பௌத்தர்களிடம் இதுவரை அச்சகம் ஒன்றேனும் இல்லாமை குறைபாடாக இருந்தது. அச்சகம் ஒன்றை அமைப்பதற்குப் புலத்கம தம்மாலங்கார ஸ்ரீ சுமண திஸ்ஸ தேரர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்காக இலங்கையின் செல்வந்தர்களிடம் இருந்து பெற்ற உதவித் தொகை போதாமையால் சீய நாட்டு அரசரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு சுமண திஸ்ஸ தேரர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். கிடைத்த பணம் முழுவதையும் செலவிட்டு 1862 இல் காலியில் லங்கோபகார அச்ச கம் நிர்மாணிக்கப்பட்டமை பௌத்த மறுமலர்ச்சியில் மற்றுமொரு முக்கியமான கட்டமாகும். இதன் பின்னர் பெளத்தர்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அச்சகங்கள் பல அமைக்கப்பட்டன. அவற்றுள் சில,

லங்கா பிநவ விஷ்ரத அச்சகம்
கவடகதிக அச்சகம்
சுதர்ஷண அச்சகம்
சரசவி சந்தரெஸ அச்சகம்

1862 இன் பின்னர் அச்சகங்கள் பலவும் அமைக்கப்பட்டபடியால் சஞ்சிகைகள், பத்திரிகைகள் பலவும் அச்சிட பெளத்தர்களுக்கு இயலுமாக இருந்தது. பௌத்தர்களின் இவ்வாறான வெளியீடுகளில் சில வருமாறு,

லக்மினி பஹன
லங்கா லோகய
சரசவி சந்தரெஸ
சிங்ஹள ஜாதிய
சிங்ஹள பௌத்தயா

பகிரங்க விவாதங்கள் நடத்துதல்

சமயத்தைப் பரப்புவதற்கு மிஷனரிமார் சொற்பொழிவு முறையைக் கையாண்டது போல பௌத்தர்களும் சொற்பொழிவு முறையைக் கையாண்டமையை, பகிரங்க விவாதங்களில் ஈடுபட்டதன் மூலம் அவதானிக்கக் கூடியதாயிருந்தது. மிஷனரி குருமாருடன் இவ்விவாதங் கள் இடம்பெறுகையில் பௌத்த குருமார் முன்னணியில் திகழ்ந்தனர். கொட்டாஞ்சேனை தீபதுத்தாராமயவில் வசித்த மீகெட்டுவத்தே குணானந்த தேரர் விசே டமாக விளங்கியவர். அவர் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்துக்குப் பெருஞ் சேவையாற்றினர். குணானந்த தேரரின் தலைமையில் கிறிஸ்தவ அணியினருடன் நடந்த விவாதங்களில் ஹிக்கடுவே சுமங்கல தேரர், வஸ்கடுவே சுபுதி தேரர், பொத்துவில இந்திர ஜோதி தேரர், இரத்மலானை தம்மாலோக தேரர் போன்ற கல்விமான்களின் உதவி கிட்டியது. அத்தகைய ஐந்து விவாதங்கள் எனப்படுகின்றன.

ஐம்பெரும் விவாதங்கள் நடைபெற்ற இடங்கள்

பத்தேகம - 1865
வராகொட- 1865
உதன்விட - 1866
கம்பளை - 1871
பாணந்துறை - 1873

இவ்விவாதத் தொடர்களில் பாணந்துறை விவாதத்திற்கு சர்வதேச பிரசித்தம் கிடைத்தது. அவ்விவாதத்திற்குப் பௌத்தத்தின் சார்பில் குணானந்த தேரர் தலைமை தாங்கினார். இவ்விவாத விவரங்கள் அடங்கிய நூல் ஒன்றை வாசித்ததன் மூலம் பௌத்த சமயம் தொடர்பான விளக்கம் பெற்ற ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் இலங்கைக்கு வந்தார்.

பெளத்த பாடசாலைகளை ஆரம்பித்தல்

1880 ஆம் ஆண்டளவில் பௌத்தர்கள் எழுத்து, பேச்சுத் துறைகளில் முன்னணிக்கு வந்திருந்தாலும் மிஷனரி கல்வி முறைக்குப் பொருந்தும் வண்ணம் பௌத்த பாட சாலைத் தொகுதியொன்றை உருவாக்கிக்கொள்ள இயலாதவர்களாகவே இருந்து வந்தனர். பாடசாலைகளை அமைப்பதற்கும் அவற்றைக் கொண்டு நடத்துவதற்கும் தேவையான பலமும் அவற்றிற்கான அமைப்பு ரீதியிலான பலமும் போதியதாக இல்லாததால் அது சாத்தியமாகாது இருந்து வந்தது. இதற்கான கதவுகள் திறக்கப்பட்டது ஒல்கொட் அவர்களின் காலத்திற்குப் பின்னரேயாகும். வெளிநாட்டவரான அவர், இந்நாட்டிற்கு வந்து பௌத்த சமயத்தைத் தழுவிக் கொண்டு, பௌத்த பாடசாலை களை அமைப்பதில் முன்னோடியாகச் செயற்பட்டார்.

ஹென்றி ஸ்டீல் ஒல்கொட்

இவரது வழிகாட்டலில் 1880 ஜூன் மாதம் கொழும்பில் பௌத்த பிரம்ம ஞான சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அது துறவிகளையும் இல்லறத்தாரையும் ஒன்றுபடுத்திய அமைப்பாகும். காலப்போக்கில் இதன் கிளைகள் காலி, கண்டி, இரத்தினபுரி போன்ற இன்னும் சில பிரதான நகரங்களிலும் உருவாக்கப்பட்டன. இச்சங்கத்தின் முக்கிய நோக்கம் பௌத்த மாணவர்களுக்கான பௌத்த பாடசாலைகளை ஆரம்பிப்பதாகும். அதற்கு ஒல்கொட் அவர்களின் வழிகாட்டுதலில் பெளத்த பாடசாலைகளின் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்நிதியத்திற்கு உதவி பெறுவதற்கு ஒல்கொட் அவர்கள், பௌத்த குருமாருடன் கிராமங்கள் தோறும் விஜயம் செய்ததால் பாடசாலைகளை அமைப்பது தொடர்பாக பௌத்தர்களிடையே பெரும் உத்வேகம் ஏற்பட்டது. பௌத்த பாடசாலைகளை உருவாக்கும் இயக்கத்தில் முன்னணியில் நின்று செயற்பட்ட வர்களின் பெயர்கள் வருமாறு,

ஹென்றி ஸ்டீல் ஒல்கொட்
ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரர்
இரத்மலாலேன ஸ்ரீ தர்மாலோக தேரர்
வஸ்கடுவே ஸ்ரீ சுபுதி தேரர்
மீகெட்டுவத்தே குணானந்த தேரர்
அமாரிஸ் த சில்வா படுவன் துடாவ
தொன் ஸ்பெட்டர் சேனாநாயக்க
அநகாரிக தர்மபால
ஜெரமியஸ் வீ. தியெஸ்
டொன் கரோலிஸ் ஹேவாவிதாரன

பௌத்த பாடசாலைகளை நிறுவுவதில் இங்கு குறிப்பிட்டோரில் சிலர் பணத்தால் உதவி புரிந்தோர் ஆவர். இவ்வாறு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமையால், இலங்கையில் முக்கிய நகரங்களில் பௌத்த பாடசாலைகளை நிறுவிக் கொள்ளும் ஆற்றல் கிட்டியது. அவ்வாறு அமைக்கப்பட்ட பாடசாலைகள் சிலவற்றின் பெயர்கள் வருமாறு, 

கண்டி தர்மராஜ கல்லூரி
கொழும்பு ஆனந்தாக் கல்லூரி
காலி மஹிந்த கல்லூரி
மாத்தளை விஜய கல்லூரி
கம்பளை ஜினராஜ வித்தியாலயம் 
நாவலப்பிட்டி அநுருத்த வித்தியாலயம்

பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தால் அச்சகத்துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. பல்வேறு நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவற்றை வாசித்தமையால் நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சியுற்றது. கல்வி மறுமலர்ச்சியால் மக்களின் எழுத்தறிவு மேம்பாடடைந்தது. ஆங்கிலக் கல்வியை மேம்பாடடையச் செய்ததற்கு மிஷனரி இயக்கங் களாலும் பெருஞ்சேவை ஆற்றப்பட்டது. ஒல்கொட் அவர்களின் தலையீட்டினால் அரசாங்கத்தின் மூலம் வெசாக் பௌர்ணமி தினத்தை விடுமுறை நாளாக்கிக் கொள்ள முடிந்தது. இன்றுவரை பயன்படுத்தப்படும். பௌத்தக் கொடி ஆக்கப்பட்டமையும் பௌத்த மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான விடயமாகும்.

பிரிவெனாக்கள், பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டமையால் தேசிய கலாசா ரத்தை மதிக்கும் துடிப்பான வாலிப பரம்பரையொன்று உருவானது. அவ்வாலிப அணியினரிடையே தேசிய கலாசாரத்தின் மகிமையை எடுத்துக் காட்டும் புதிய சமூக வர்க்கமும் தேசிய எழுத்தாளர்கள் கூட்டமும் குறிப்பிடத்தக்கவையாகும். இவர்களுள் அநகாரிக தர்மபால, வலிசிங்க ஹரிச்சந்திர, பியதாஸ சிரிசேன, ஜோன் த சில்வா போன்ற தலைவர்கள் வெவ்வேறு ஊடகங்களைக் கையாண்டு தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் உருவாக்கும் வண்ணம் செயற்பட்டனர். ஆகையால் 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பமாகும்போது பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் ஊடாக சுதேசி களிடையே தேசப்பற்றை வளர்ப்பதற்கும் பெளத்த புனித தலங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் மது ஒழிப்புக்குமான இயக்கங்கள் உருவாகின.

தேசப்பற்றை வளர்க்கும் இயக்கம்

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் மேலைத்தேய நாகரிகம் வேகமாகப் பரவியமை யால் கீழைத்தேய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக தேசிய கலாசா ரத்தை மதிக்க மக்களைத் தூண்டுவதன் மூலம் தேசத்தின்மீது பற்றுக் கொண்ட மக்களை உருவாக்குவது இவ்வியக்கத்தின் நோக்கமாக இருந்தது.

அநகாரிக தர்மபால இந்நாட்டின் பழைமையான கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் பௌத்த சகவாழ்வின் மேன்மையையும் விளக்கி, புதிய சிந்தனைகளை முன்வைத்தார். அவர் பகிரங்க சொற்பொழிவுகளை நிகழ்த்தியும் சிங்கள பௌத் தயா, மஹா போதி போன்ற சஞ்சிகைகளில் கட்டுரைகளை எழுதியும் செயற்பட்டு வந்தார்.

பியதாஸ சிரிசேன அவர்கள் தமது நாவல்கள் மூலமும் சிங்ஹள ஜாதிய என்னும் பத்திரிகை மூலமும் இலங்கையர்கள், ஆய்ந்தறியாமல் மேற்கத்திய நாகரிகத்தை தழுவிக் கொள்கின்ற மையை விமர்சித்தார். இது தவிர பௌத்த பிக்குகளும் கல்விமான்களும் பௌத்த கலாசா ரத்தின் மேன்மையை முன்வைத்து பொது மக்களை அறிவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பெளத்த புனித தலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை

இராசரட்டை நாகரிகம் வீழ்ச்சியுற்றதன் பின்னர் அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய தலைநகரங்களை அண்டியிருந்த பௌத்த நினைவுச் சின்னங்கள் அழிந்தொழிந்து கொண்டிருக்கையில், 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து அவற்றைப் புனரமைத்துப் பழைய பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்துக்கொள்வதில் மக்களிடையே உத்வேக உணர்வு பிறந்தது. ஐரோப்பிய கல்விமான்களான ஜோர்ஜ் டர்னர், ரிஸ் டேவிஸ், எச். சீ. பி. பெல், ஹென்றி பாக்கர் என்போர் வரலாற்று மூலாதாரங்களைத் தேடிக் கண்டறியும் தொல்பொருள் அகழ்வுகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டு, புராதன கலாசாரம் பற்றிய சில விடயங்களை முன்கொணர்ந்தனர். அவர்கள் எழுதிய நூல்களுக்கு விளக்கமாகத் தேசிய கல்விமான்கள் நூல்களை ஆக்கியதனாலும் புரதான நாகரிகமும் பாரம்பரியமும் பற்றிய பொது மக்களின் அறிவு விசாலமடைந்தது. இச்சூழலில் வலிசிங்க ஹரிச்சந்திர மிகுந்த ஈடுபாட்டுடன் அநுராதபுரத்தில் உள்ள புனித இடங்களைப் பாதுகாக்கும் இயக்கத்தை ஆரம்பித்தார். அநகாரிக தர்மபால இந்தியாவில் உள்ள புத்தகயா போன்ற புனித இடங்களைப் பாதுகாப்பதற்கு முன்வந்தார். அத்துடன் 1870களில் ருவான்வெலிசாய தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மது ஒழிப்பு இயக்கம்

பிரித்தானியர் ஆட்சியின் கீழ் நாட்டில் மது பாவனை அதிகரித்துச் சென்றமையால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர்கள் மதுவுக்கு எதிராக பொதுமக்களுக்கு அறிவூட்டினர் பௌத்த குருமார் இதில் முக்கிய பணியாற்றியதோடு, அநகாரிக தர்மபால, பியதாஸ சிரிசேன, ஜோன் த சில்வா என்போரும் பல்வேறு ஊடகங்களின் மூலமாக மக்களுக்கு அறிவூட்ட ஆரம்பித்தனர். தர்மபால அவர்கள் பகிரங்க சொற்பொழிவு மற்றும் பத்திரிகைகளில் எழுதுதல் மூலம் இப்பணியை மேற்கொண்டார். பியதாஸ சிரிசேன தமது நாவல்களில் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு, மதுவின் தீமைகளை எடுத்துக் கூறினார். ஜோன் த சில்வா நாடகங்கள் மூலம் மதுவினால் விளையும் தீமைகளை எடுத்துக் காண்பித்தார். அவர் பராபவ என்ற சிங்கள நாடகத்தின் மூலம் மது பாவனையின் தீமைகளை வெளிக் கொணர்ந்தார்.

இந்து சமய மறுமலர்ச்சி

மிஷனரிமாரின் மதம் பரப்பும் செயற்பாடுகளால் ஏற்பட்ட சவால்களால் இந்நாட்டு இந்து சமய மக்களிடையே சமய, கலாசார விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. இந்து மத கலாசார மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் தலைமை தாங்கிச் செயற்பட்டவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆவார். மிஷனரி பாடசாலையில் அவர் கற்றிருந்தபடியாலும் மெதடிஸ்ட் சபை குருவானவர் ஒருவரின் கீழ் பணியாற்றியபடியாலும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பாக நல்ல அனுபவம் பெற்றிருந்தார். இதனால் அச்சகத்தை நிறுவி அச்சுப்பிரசுரங்கள் மூலமாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் இந்து மக்களை விழிப்புணர்வூட்டவும் பாடசாலைகளை நிறுவவும் அன்னார் செயற்பட்டார்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

இவரின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் அச்சகம் ஒன்று நிறுவப்பட்டது. அவர் பிரசுரங்கள் மூலம் மக்களை விழிப்படையச் செய்ய நடவடிக்கை எடுத்தார். "உதய பானு" என்ற பத்திரிகை ஒன்றையும் தொடங்கினார். தமிழ் மாணவர்களுக்காக மூன்று படிமுறைகளைக் கொண்டபாடநூல்களை எழுதியமை அன்னாரின் சிறப்பான சேவைகளுள் ஒன்றாகும். அவ்வாறே செய்யுள் வடி விலும், வசன வடிவிலும் பல நூல்களைப் பிரசுரஞ் செய்தார். பெரிய புராணம், கந்த புராணம் என்பவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

தமிழ் மாணவர்களுக்கு இந்து கலாசார அடிப்படை யிலான கல்வியை வழங்குவதற்காக, நாவலர் அவர்களின் வழிகாட்டலில் 1849 ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியா சாலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் உருவாக் கிய சைவ பரிபாலன சபை, இந்து கல்வி சபை மூலம் பாடசாலைகளை ஆரம்பிக்கும் இயக்கத்தை மேலும் செயற்படுத்தினார். தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்காக நாவலரால் 1872 இல் ஆரம்பிக்கப்பட்ட சைவ ஆங்கில வித்தியாசாலை பின்னர் யாழ்பாணம் இந்துக் கல்லூரியாக வளர்ச்சிப் பெற்றது.

பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம்

ஆறுமுக நாவலர் பெருமானின் மறைவின் பின்னர் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரும் இந்து கலாசார மறுமலர்ச்சி இயக்கத்தைப் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்தனர். இவ்விரு தலைவர்களும் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி சிங்கள மக்களிடையேயும் பேரபிமானத்திற்கு உரியவர்களாக இருந்தனர். 1915 ஆம் ஆண்டு அரசாங்கம் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி பௌத்தர்களுக்கு எதிராக அடக்கு முறையைப் பிரயோகித்தபோது, அவர்களுக்காக சேர் பொன். இராமநாதன் குரல் கொடுத்தார். சேர் பொன்.அருணாசலம் சிங்களத் தலைவர்களோடு ஒன்று சேர்ந்து அரசியல் அதிகாரத்தை இலங்கையர் பெற்றுக் கொள்வதற்காக 1919 இல் இலங்கை தேசிய சங்கத்தை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கிச் செயற்பட்டார்.

இஸ்லாமிய சமய மறுமலர்ச்சி

பௌத்த, இந்து மறுமலர்ச்சிக்குச் சமமாக இந்நாட்டு முஸ்லிம் மக்களிடையேயும் சமய, கலாசார மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதற்குத் தலைமை தாங்கியவர் அறிஞர் எம். சி. சித்திலெப்பை அவர்களாவர். 1883 இல் எகிப்து நாட்டிலிருந்து நாடுகடத்தப் பட்டு இங்கு வந்த ஓராபி பாஷா, இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்திற்குப் பக்க துணையாகச் செயற்பட்டார்.

அறிஞர் எம்.சி.சித்தி லெப்பை

முஸ்லிம் மக்களிடையே கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் ஆங்கிலத்தையும் அரபியையும் கற்பதற்கு அவர்களை ஊக்குவிப்பதும் அறிஞர் சித்திலெப்பையின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர் 1882 இல் முஸ்லிம் நேசன் எனும் பெயரில் பத்திரிகை ஒன்றையும் பிரசுரித்தார். பின்னர் அன்னாரது வழிகாட்டுதலில் முஸ்லிம் மாணவர்களுக்காக கொழும்பு சாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் களுடைய கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்காக முஸ்லிம் கல்விச் சபை என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். புதிதாக எழுந்த கல்வித் தேவைக்கு ஏற்ற விதத்தில் மத்ரஸா என்னும் சமய பாடசாலைகளைப் புனரமைப்புச் செய்தார். பாடநூல்களையும் சமய நூல்களையும் எழுதி வெளியிட்டார். இன்று கண்டி நகரில் இயங்கும் சித்திலெப்பை மகா வித்தியாலயம் அன்னாரது சேவையை நினைவுகூர்ந்த வண்ணம் உள்ளது.

டி.பி. ஜாயா

சித்திலெப்பை அவர்களின் பின்னர் டீ. பி. ஜாயா அவர்கள் முஸ்லிம்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறையுடன் ஈடுபட்டார். அவர் கொழும்பு சாஹிரா கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி அதனை வளர்த்தெடுத்தார். இலங்கையின் பல்வேறு பிரதேசங் களிலும் முஸ்லிம் மாணவர்களுக்காகப் பாடசாலைகளை அமைப்பதில் முன்னின்று செயற்பட்ட அவர், அரசியல் துறையிலும் ஈடுபட்டு இலங்கையின் முதலாவது அமைச்சரவையிலும் இடம்பெற்றார்.

நன்றி 


Post a Comment

0 Comments