மகாபாரதம் பகுதி - 74
அந்தப்படைகள் குரு÷க்ஷத்ரத்தை நோக்கி புறப்பட்டன. அரவான் களப்பலியானதும் ஆத்திரமடைந்த துரியோதனன் பீஷ்மரிடம், உடனடியாக நமது படையும் தயாராக வேண்டும். நீங்களே நால்வகை ரதப்படைக்கும் சேனாதிபதிகளை நியமியுங்கள், என உத்தரவிட்டான். அதன்படியே பீஷ்மர் துரோணர், அஸ்வத்தாமன், பூரிச்ரவஸ் ஆகியோரைக் கொண்ட ஒரு படையையும், சோமதத்தன், பகதத்தன், துர்மர்ஷணன் ஆகியோரைக் கொண்ட படையையும், கிருதவர்மராஜன், கிருபாச்சாரியார், சகுனி, சல்லியன், ஜெயத்ரதன் ஆகியோரைக் கொண்ட படையையும் நியமித்தார். கர்ணனுக்கு இந்தப் படையில் முக்கியத்துவம் தரப்படவில்லை. அவனை அர்த்தரத சேனாதிபதியான கடைப்பதவியில் நியமித்தார்.
இதனால் கர்ணன் மிகவும் ஆத்திரமடைந்தான். தனது வாளை உருவிக்கொண்டு பீஷ்மர் மீது பாய்ந்தான். என்னை கடைப்பதவியில் நியமித்த உம்மைக் கொன்றால்தான் என் மனம் ஆறும், எனச்சொன்னவன், என்ன காரணத்தாலோ வாளை மீண்டும் உறையில் போட்டுவிட்டான். பின்னர், இந்த யுத்தத்தில் எக்காரணம் கொண்டும் நீர் இறக்கும்வரை நான் ஆயுதத்தை தொடமாட்டேன், என சபதம் செய்துவிட்டு அகன்றான். கவுரவப்படைக்கு இது மிகவும் பின்னடைவாக அமைந்தது. கர்ணன் போன்ற வீரர்களின் கையில் ஆயுதங்கள் இருக்குமானால், பாண்டவர் படையில் கடும் சேதத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், தர்மத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த போரில் துரியோதனன் பின்னடைவை சந்திக்க இது இயற்கையாகவே அமைந்துவிட்டது. இரண்டு படைகளும் எதிரெதிரே நின்றன.
அப்போது துரியோதனன் பீஷ்மரிடம், தாத்தா! பாண்டவர்களின் படையும் மிகப்பெரிய அளவில்தான் இருக்கிறது. இந்தப்படையை அழிக்க உங்களுக்கு எத்தனை நாள் வேண்டும்? எனக்கேட்டான். பீஷ்மர் மிகுந்த தைரியத்துடன், நானாக இருந்தால் இந்த சேனைகளை ஒரே நாளில் அழித்துவிடுவேன். துரோணருக்கு மூன்று நாட்களும், கர்ணனுக்கு ஐந்து நாட்களும் வேண்டும். அஸ்வத்தாமன் ஒரே நாழிகையில் (24 நிமிடம்) அழித்து விடுவான். ஆனால் இதே அளவுள்ள நமது படையை அழிப்பதற்கு அர்ஜுனனுக்கு ஒரு கண நேரம் போதும், என்றார். இந்த நேரத்தில் அர்ஜுனனின் மனதில் கலக்கம் உண்டாயிற்று. தன் எதிரே தனது குரு பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன் முதலிய பெரியவர்களைப் பார்த்தான். துரியோதனன் உள்ளிட்ட எதிரிகள்கூட உறவினர்களாகத்தான் அவன் கண்ணில் தெரிந்தார்கள். அந்த உறவுகளை எல்லாம் அழித்துதான் நாட்டை மீட்கவேண்டுமா? இதைவிட நம் நாட்டை அவர்களே வைத்து கொண்டு போகட்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது.
அர்ஜுனனின் இந்த மன உணர்வை கண்டுபிடித்துவிட்டார் பகவான் கிருஷ்ணர். அவரிடமே சென்று சரணடைந்த அர்ஜுனன், கிருஷ்ணா! எனது தாத்தா, உறவினர்கள், அண்ணன், தம்பிகள் என் எதிரே நிற்கிறார்கள். இவர்களை எல்லாம் நான் கொல்ல வேண்டும் என்பது என்ன கட்டாயம்? அப்படி கொன்றாலும் எனக்கு என்ன கிடைத்துவிடும்? கேவலமான இந்த பூமிக்காக இந்த சண்டை அவசியம் தானா? அது மட்டுமல்ல. இப்போதுகூட எங்கள் ராஜ்ஜியம் என் சகோதரர்களின் கையில்தானே இருக்கிறது. யாரிடம் இருந்தால் என்ன? அவர்களைக் கொல்வது கொடிய பாவம் என்று எண்ணுகிறேன். எனவே நான் இந்த போர்க்களத்திலிருந்து வெளியேறப் போகிறேன், என்று சொல்லியபடியே அங்கிருந்து புறப்பட்டான்.
அவனைத்தடுத்து நிறுத்தினார் கிருஷ்ணர். அர்ஜுனா! பந்தபாசத்தை அகற்றிவிடு. இந்த உலகில் தர்மமே நிலைக்க வேண்டும். அதுவே எனது விருப்பம். இங்கே நிற்கும் அனைத்து உயிர்களும் எனக்குள் அடக்கம். நீ ஒருவேளை இவர்களைக் கொல்லாவிட்டாலும்கூட, இவர்கள் என்றாவது ஒருநாள் மரணமடைந்து என்னை அடையத்தான் போகிறார்கள். அதுவரை இந்த பூமியில் தர்மம் அழிந்தே கிடக்கும். தர்மத்தை நிலைநிறுத்துவது ஒவ்வொரு மனிதனின் கடமையுமாகும். எனவே உன்னிடமுள்ள பாசத்தை நீக்கிவிட்டு போருக்குத் தயாராகு, என்று சொன்னவர் விஸ்வரூபம் எடுத்தார். அந்த ரூபத்திற்குள் களத்தில் நின்ற அத்தனை வீரர்களும் தெரிந்தார்கள். என்றேனும் ஒருநாள் இறைவனை அடைந்துதான் தீரவேண்டும் என்ற ஞான உபதேசத்தைப் பெற்ற அர்ஜுனன் மனமயக்கம் நீங்கி போருக்குத் தயாரானான். அத்துடன் தனது குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணரிடம் வேண்டிக் கொண்டான். இந்த நேரத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரு கேள்வி கேட்டார். அர்ஜுனா! நீ இங்கு நிற்கும் படைவீரர்களில் ஒருவர்கூட விடாமல் அழித்துவிடலாம் என எண்ணுகிறாயா? என்றார்.
0 Comments