சித்திர புத்திர நாயனார் கதை - CHITRA PUTRA NAYANAR STORY

 

சித்திர புத்திர நாயனார்


சித்திர புத்திர நாயனார் கதை - CHITRA PUTRA NAYANAR STORY

நமது முன்னோர்கள் விரதகாலங்களிலும் ஏனைய விசேடகாலங்களிலும் பலதரப்பட்ட சைவ நூல்களைப் படித்துப் பயன் பெற்று சமய இலக்கியங்களில் ஆழமான அறிவுடையவர்களாக விளங்கினர். அதனால் அந்த இலக்கியங்கள் சார்பான கலாசார பாரம்பரியங்கள் அவர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றின. இத்தகைய சமய இலக்கிய மரபு வழியாகவந்த மற்றுமொரு சமய இலக்கியமாக சித்திரபுத்திரனார் கதை அமைகின்றது.

சித்திரபுத்திரனார்கதை இந்திய மொழிகள் பலற்றில் காணப்படுகின்றது. அந்தவகையில் புகழேந்திப் புலவர் பாடிய சித்திரபுத்திரனார் கதையே தமிழகத்திலும் இலங்கையிலும் பெருமளவில் படித்துப் பயன் சொல்லப்படுகின்றது. இந்நூலை எழுதிய புலவர் சோழப் பெருமன்னர் காலத்தில் வாழ்ந்து, நளவெண்பா பாடிய புகழேந்திப்புலவர் அல்லவென்றும் அவரது பெயரைப் பயன்படுத்திப் பிற்காலத்தில் தமது படைப்புக்களை வெளியிட்ட புலவர்களுள் ஒருவராலேயே இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் அறிஞர்களது கருத்தாகும். சித்திரபுத்திரனார் கதையானது வெண்பா மற்றும் விருத்தப்பாக்களால் பாடப் பட்டுள்ளது.

சித்திரபுத்திரனார் கதையில் சித்திரபுத்திரனாரது திரு அவதாரமும் அதற்கான காரணங்களும் அவரை வழிபடுவோர் பெறும் பயன்களும் விபரிக்கப்பட்டுள்ளன. திருக்கைலாயத்தில் சிவபெருமானை வணங்கிய யமதர்மராஜன் உயிரினங்களின் பாவ புண்ணியக்கணக்குகளைக் கணக்கிடுவதற்குத் தனக்கு உதவியாக ஒருவர் அவசியம் என வேண்டுகோள் விடுத்தார். அதனைக் கேட்ட சிவன் தங்கப் பலகையிலே ஏடும் எழுத்தாணியுடன் கூடிய புத்திரன் ஒருவரது ஓவியத்தை வரைந்தார். அப்புத்திரனுக்கு உயிர் கொடுத்து அவர் சித்திரத்தில் இருந்து தோன்றியதால் சித்திரபுத்திரர் என அழைத்தனர். சித்திரபுத்திரர் பல்வேறு உலகங்களிலுள்ள உயிரினங்களின் பாவ புண்ணியக் கணக்கினை செவ்வனே எழுதிவந்தார். அப்போது தேவேந்திரன் தமக்கு குழந்தைப்பாக்கியம் இன்மையால் வருந்தி, சிவனை நோக்கித் தவம் செய்வதற்காக ஆயத்தமானார். அத்தருணத்தில் இந்திரன் கௌதம முனிவரின் மனைவியாகிய அகலிகை மீது ஆசை கொண்டு அவரை அடைய எண்ணினான். அதனால் கெளதம முனிவரின் சாபத்துக்கு ஆளாகி வருந்திநின்றான். அகலிகையும் தனது கணவனது சாபத்துக்குட்பட்டு பின்னர் இராமனது திருப்பாதங்கள் பட்டு சாபவிமோசனம் பெறுகின்றாள்.

இவ்வாறு சிலகாலம் சென்றதும் சிவனது திருவருளால் சாபவிமோசனம் பெற்ற இந்திரன் தனக்குப் புத்திர பாக்கியம் அருளுமாறு வேண்டி நிற்கின்றான். இந்திரனது வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் சித்திரபுத்திரரை நோக்கி இந்திரனது இல்லத்தில் பிறக்குமாறும் சிறிது காலம் உயிரினங்களின் பாவ புண்ணியக் கணக்கினை மகா விஷ்ணுவை எழுதுமாறும் வேண்டுகோள் விடுத்தார். சிவனது திருவருளால் இந்திரனது இல்லத்தில் தோன்றிய காமதேனு என்னும் தெய்வீகப் பசு ஏடும் எழுத்தாணியுடன் சித்திரபுத்திரரை சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரத்தில் பிரசவித்தது. சித்திரபுத்திரர் தக்க குருவினிடத்தில் கல்வி கற்று, பின்னர் சிவனது அழைப்பின் பிரகாரம் திருக்கைலாயத்தை அடைந்து மீண்டும் தனது பொறுப்புக்களை ஏற்று நடக்கலானார்.

சிவனது பணிப்பின்படி யமலோகம் சென்ற சித்திரகுப்தர் உலகிலுள்ள ஜீவராசிகள் செய்கின்ற பாவபுண்ணியங்களையும் அவற்றுக்கான தண்டனைகளையும், எழுதி வைத்து அற்றின்படி தண்டனை வழங்குமாறு யமதர்மராஜனுக்கு ஆணை இடுவார். அவ்வாறு சித்திரபுத்திர நாயனார் பாவங்களுக்கு ஏற்ப வழங்கும் தண்டனைகள் சில வருமாறு.

பூலோகத்தில் செய்யும்  பாவங்களுக்கு நரகலோகத்தில் வழங்கப்படும் தண்டனைகள்

உயிரினங்களை வதைத்தல் - மாட்டுக்குப் பதிலாக வண்டியைத் தானே இழுத்தல்.

பிறர் சொத்தைக் களவெடுத்தல் - சுழலும் செக்கில் இட்டு, ஈட்டியால் குத்திக்கொல்லுதல்.

தகாத உறவில் ஈடுபடல் - தீக்கிடங்கில் தள்ளிவிடுதல்.

வரி செலுத்தாமை - அரிவாளால் உடல் அறுக்கப்படல்.

மது அருந்துதல் மற்றும் புகைத்தலில் ஈடுபடுதல் - கொடிய நச்சுப்பாம்புகள் தீண்டுதல்.

பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றுதல் - கழுமரத்தில் ஏற்றிக் கொல்லுதல்.

பெற்றோரை வருத்துதல். - ஆணிப் பலகையில் படுக்கவைத்து வாளால் அரிதல்.

ஒவ்வொருவரும் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப சுகபோகங்களும் கிடைக்கப் பெறுகின்றன. அன்னதானத்துக்கு மடம்கட்டுதல், தாகசாந்தி நிலையம் அமைத்தல், பாழடைந்த கோயில்களைப் புணருத்தாரணம் செய்தல், நாற்றிசையும் நந்தவனம் அமைத்தல், ஆறுகள் குளங்களுக்கு அணைகட்டுதல், பெரியோர்களைப் பேணிநடத்தல், சிவவிரதமிருத்தல், குருபத்தியுடையமை, கணவனின் சொல்லைக் கேட்டுநடத்தல், பசுவைத் தெய்வமாக வணங்குதல், கன்று குடித்தபின்னர் பாலைக் கறத்தல், பாடசா லைகள் அமைத்தல், பெற்றோரைத் தொழுதல், வேதாகமங்கள் கூறும் முறைப்படி நடத்தல், சிவனை வணங்கி, சிவபூசை செய்தல். பிள்ளைகளுக்குப் பால் கொடுத்தல், நோயுற்றவர்களுக்கு மருந்து கொடுத்தல், அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தல், தொழிலாளர்களுக்கு ஏற்ற சம்பளம் வழங்குதல் என்றவாறான பலதரப்பட்ட நற்செயல்களைச் செய்வோர் சுவர்க்கத்தில் நற்பேறுகளைப் பெறுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இவர்கள் திருக்கைலாயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே அமைக்கப்பட்டுள்ள இனிய நறுங்கனிச் சோலைகளில் அமர்ந்திருந்து எந்நாளும் சிவபூசை செய்து, இன்பமாக வாழ்வர் என்றும், இதுபோன்று வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் அங்கே தேவர்களைப் போன்று சிறப்பாக உபசரிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரபுத்திரனார் கதையில் இடம் பெறும் மற்றுமொரு கிளைக்கதை மார்கண்டேயர் கதையாகும். சிறந்த சிவபக்தராகிய மிருகண்டர், தனக்கு குழந்தை வரம் வேண்டி சிவனை நோக்கி பதினாறு ஆண்டுகள் தவம் இருந்தார். அவரது வேண்டுதலை நிறைவேற்றச் சென்ற சிவபெருமானும் உமாதேவியாரும் அவருக்கு அருள் புரிந்து நீண்ட ஆயுளையுடையை கல்வியறிவற்ற கசடப்பிள்ளை தேவையா? அல்லது சிறந்த கல்வியறிவுடைய ஆனால் பதினாறு வயது ஆனதும் இறந்து விடும் பிள்ளை தேவையா? என வினவ, கல்வி அறிவில் சிறந்தவனும் உம்மிடத்தில் மிகுந்த பக்தியுடையவனுமாகிய ஆண்பிள்ளை ஒன்று அருளவேண்டும் என வேண்டி நின்றார். அவரது வேண்டுதலுக்கேற்ற பிள்ளை இறைவனால் அருளப்பட்டது. அதற்கு மார்க்கண்டேயன் என நாமம் சூட்டினர். மார்க்கண்டேயன் வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் கற்றுத் தேறினார். நிதமும் சிவபூசை செய்து சிவனை வழிபட்டார்.

மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயது ஆனது. இயமன் தூதர்களை அனுப்பி உடன் அழைத்துவருமாறு கட்டளை பிறப்பித்தான். மார்க்கண்டேயரிடம் சென்ற இயமதூதுவர்கள் அவர் சிவபூசையில் இருப்பதைக் கண்டு அஞ்சி, இயமனிடம் மீளவந்து முறையிட்டனர். இயமன் மிக்க கோபம் கொண்டு காட்டெருமையில் ஏறி பாசக்கயிறு கொண்டு மார்க்கண்டேயனை நெருங்கினார். தன்னைக் கொண்டு செல்ல இயமன் வருவதை அறிந்த மார்க்கண்டேயன் தான் சிவபூசை செய்த சிவலிங்கத்தை இறுகப் பற்றிப் பிடித்தார். அப்போது இயமன் பாசக்கயிற்றை வீசினான். அது மார்க்கண்டேயனையும் சிவலிங்கத்தையும் சேர்த்து இழுத்தது. அப்போது சிவலிங்கத்தில் இருந்து வெளிவந்த சிவபெருமான், இயமனை சங்காரம் செய்தார். அத்துடன் மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதுடன் இருக்க அருள்பாலித்தார்.

இயமன் இறந்தமையால் பூமியில் உயிரினங்கள் அதிகரித்தன, அவற்றின் பாரம் தாங்காமல் பூமாதேவி வருந்தி, சிவனிடம் முறையிட்டாள். பிரம்மனும் தனது படைப்புத் தொழிலைச் செவ்வனே ஆற்ற முடியாதுள்ளதாக சிவனிடம் முறையிட்டார். அப்போது சித்திரபுத்திரரும் அங்கே தோன்றி, இயமனை உயிர்ப்பிக்குமாறு சிவனை வேண்டினார். இவர்களது வேண்டுதல்களை ஏற்ற சிவபெருமான், இயமதர்மராஜனை உயிர்ப்பித்தார். பின்னர் உயிர்பெற்ற இயமனும் சித்திரபுத்திரரும் யமலோகம் செல்கின்றனர்.

சித்திரபுத்திரனார் கதையில் இடம் பெறும் மற்றுமொரு கதை அமராவதி கதையாகும். அமராவதி செல்வங்கள் வாய்க்கப் பெற்ற செட்டியாரின் மனைவி ஆவார். அவர் பலதரப்பட்ட தானதருமங்களைச் செய்து வந்தார். ஆனால் அவர் விரதங்கள் எவற்றையும் நோற்பதில்லை. அதனால் கோபம் கொண்ட சித்திரபுத்திரர் அமராவதியை எமலோகம் அழைத்துவருமாறு கட்டளையிட்டார். மூன்று தடவைகள் வெவ்வேறான தூதுவர்கள் சென்றும் அவளது உபசரணைகளையும் தான தருமங்களையும் கண்டு அவர்களால் அவளிடத்தில் நெருங்க முடியவில்லை. ஈற்றில் பால்கறக்கும் போது பசுவின் கொம்பு முட்டி அமராவதி இறக்கின்றாள். யமலோகம் அழைத்துவரப்பட்ட அமராவதியைக் கண்டதும் யமலோகத்தில் தர்ம செயல்கள் அதிகரித்தன. அவளைச் செக்கிலிட்டு ஆட்டும்போது அதன் கால் உடைகின்றது.

அப்போது சித்திரபுத்திரரை சிந்தனையில் நிறுத்தி வழிபடாது எவ்வளவுதான் தருமங்கள் செய்தாலும் அவற்றால் பலன் இல்லை என அங்கு தோன்றிய அந்தணர் ஒருவர் ஆறுதல் உரைபகன்றார். அந்தணரது ஆலோசனைப்படி அமராவதி சித்திர புத்திரனார் விரதம் இருந்து அவரது அருள் பெற்றாள். ஈற்றில் மீண்டும் பூலோகம் சென்று தனது முன்னைய உடலினுள் சென்று உயிர் பெற்றாள். அனைவரையும் சித்திரை மாதம் சித்தரா பௌர்ணமி தினத்தன்று சித்திரபுத்திரனார் விரதமிருக்குமாறு வேண்டி சித்திரபுத்திரனார் விரதம் நோற்றாள். ஈற்றில் சிவலோகம் அடைந்து விண்ணில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களில் ஒன்றாக முத்திப்பேறு பெற்றாள் என்பதனூடாக தானதர்மங்களோடு சித்திரபுத்திரனார் விரதத்தின் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சித்திரபுத்திரனார் கதையைப் படித்து முடிப்பவர்கள் அடையும் பயன்களும் இந்நூலின் இறுதிப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர்களது குலமானது ஆல் போல் தளைத்து, அறுகுபோல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றங்கள் சூழ்ந்திருக்க பூலோகத்தில் இன்பகரமாக வாழ்வார்கள் என்றும் அவர்களுக்குப் பலம் பொருந்திய செல்வங்கள் வாய்க்கப் பெறுவதோடு அவர்கள் மேலும் நடராஜப் பெருமானது திருவடிகளை அடையும் பாக்கியம் பெற்றவர்களாகவும் காணப்படுவர் என இன் நூலின் பயன் குறிப்பிடுகின்றது.

சித்திரபுத்திரனார் வலது கையில் எழுத்தாணியும் இடது கையில் ஏடும் காணப்படும். அவர் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் புத்தகத்தை அக்கிர சந்தாணி எனக்குறிப்பிடுவர். இவருக்கு ஆலயம் அமைத்து வழிபடும் மரபு இந்தியாவில் காணப்படுகின்றது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற கஜுராகோ ஆலயங்களில் இவருக்குரிய ஆலயம் ஒன்றும் காணப்படுகின்றது. தமிழகத்தின் காஞ்சிபுரம், தேனி ஆகிய இடங்களில் தனி ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈழத்தில் இவருக்கான ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. ஆயினும் சித்திரா பௌர்ணமி தினத்தன்று சித்திர புத்திரனார் கதை படித்தலும் கஞ்சி வார்த்தலும் சிறப்பாக இடம் பெறுகின்றன. இது பெரும்பாலும் ஆகமம் சாராத ஆலயங்களிலேயே சிறப்பாக இடம் பெறுகின்றது. ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் மேலே வெள்ளை வேட்டியைக்கட்டுவர். வாழை, கரும்பு, தோரணம், தென்னம் பாளை, கமுகம் பாளை என்பன கொண்டு மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மேலும் ஈச்சம் குலைகள், நொங்குக் குலைகள் என்பனவும் கட்டித் தொங்கவிடப்பட்டு இருக்கும்.

கீழே நிறைகுடம் வைக்கப்படும் நிறைநாளியும் எழுத்தாணியும் ஏடும் வைக்கப்படும். இதுவே இவருக்குரிய குறியீடாகும். அதற்கு முன்னால் தமது தோட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் மற்றும் பலதரப்பட்ட பழங்களை படைப்பர். கறிசோறு பலதரப்பட்ட பலகாரங்கள் என்பன படைக்கப்பட்டு இருக்கும். பிரதானமாக புழுங்கல் அரிசியில் மரக்கறிகள் இட்டுச் சமைக்கப்பட்ட கஞ்சி படைக்கப்பட்டு இருக்கும். இதனை, 'சித்திரைக் கஞ்சி' வார்ப்பு எனவும் அழைப்பர்.

தீப, தூப ஆராதனைகளின் பின்னர் சித்திரபுத்திரனார் கதை படித்துப் பயன் சொல்லப்படும். அவ்வாறு வழிபடுவதன் ஊடாகத் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும். உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கைகூடும், வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகமாகும். இவ்வாறு ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி இவ் வழிபாட்டை மேற்கொள்வதன் ஊடாக ஆன்மீகப் பக்குவமும் ஊர்மக்களிடையே ஒற்றுமைத் தன்மையும் அதிகரிக்கின்றன.

நன்றி 












Post a Comment

0 Comments