சொற்களின் வகைகள் பகுதி - 01 - TYPES OF WORDS PART - 01

 

சொற்களின் வகைகள் 

குதி - 01


சொற்களின் வகைகள் பகுதி - 01 - TYPES OF WORDS PART - 01


பொருள் உணர்த்தும் அடிப்படையில் மூன்று வகைப்படும்.
ஒரு மொழிச் சொல் 
தொடர் மொழிச் சொல் 
பொது மொழிச் சொல் 

வழக்கு அடிப்படையில்  இரண்டு வகைப்படும்.
தகுதி வழக்குச் சொல்
இயல்பு வழக்குச் சொல்

ஒரு மொழிச் சொல்

பகுபதம் ஆயினும் , பகாப்பதம் ஆயினும் , ஒரு சொல் தனியாக நின்று ஒரு பொருளை உணர்த்தும் இடத்து , அது ஒரு மொழிச் சொல் எனப்படும்.

இது இரண்டு வகைப்படும்
ஓரெழுத்து ஒரு மொழிச் சொல்
ஈரெழுத்து ஒருமொழிச் சொல்

ஓரெழுத்து ஒரு மொழிச் சொல்

உதாரணம்
பூ 
தீ 
நா

ஈரெழுத்து ஒருமொழிச் சொல்

உதாரணம்
கிளி 
கடு
புளி

தொடர் மொழிச்சொல்

ஒரு சொல்லைத் தொடர்ந்து  இன்னொன்றோ, பலவோ  வருமிடத்து  அத்தொடர் பல பொருளை தருமாயின் அது தொடர் மொழிச் சொல் எனப்படும்.

உதாரணம்
இராப்பகல்
பொன்முடி
நிலத்தை கடந்தான்

பொது மொழிச்சொல்

ஒரு சொல்லாய் நின்று பொருளைத் தந்து அதுவே தொடர் மொழியாய் நின்று வேறு பொருளைத்   தருவதாயின்  அது  பொதுமொழி எனப்படும்.

உதாரணம்
தாமரை
வேங்கை

தாமரை என்பது கொடியை குறிக்கும் போது ஒரு மொழி ஆகும். அது  தா + மரை  என தொடர் மொழியாக அமைந்து தாவும் மரையைக் குறிக்கிறது. இதனால் தாமரை பொது மொழியாகும்.

வேங்கை என்பது மரத்தையும் ,  புலியையும் குறிக்கும்போது ஒரு மொழி ஆகும்.  அது வேகும் + கை என தொடர் மொழியாக அமைந்தது வேகும்  கையை  குறிக்கிறது. இதனால் வேங்கை பொது மொழியாகும்.

தகுதி வழக்குச் சொல்

ஒரு பொருளை உணர்த்துவதற்கு உரிய இயல்பான சொல்லால் சொல்வது தகுதி அன்று என்று கருதி , வேறு வார்த்தைகளால் வழங்குவது தகுதி வழக்குச் சொல்  எனப்படும்.

இது மூன்று வகைப்படும்
இடக்கரடக்கல்  
குழுஉக்குறி 
மங்கலம்

இடக்கரடக்கல்

நாம் மக்களிடையே சொல்லத்தகாத சொல்லை மறைத்து வேறு வார்த்தைகளால் சொல்வது இடக்கரடக்கல் எனப்படும்.

உதாரணம்
மலம் கழுவி - கால்  கழுவி
மலம் கழித்தல் - கொல்லைக்கு போதல்

குழுஉக்குறி 

ஓர் குழுவினர் யாதாயினும் ஒரு காரணம் பற்றி ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லைத் தவிர்த்து வேறு வார்த்தையால் குறிப்பது குழுஉக்குறி  எனப்படும்.

உதாரணம்
வேடர்கள் சொல்விளம்பி எனும் சொல்லால்  கள்ளை அழைத்தல்.
பொற்கொல்லர்கள் பொன்னைப் பறி என அழைத்தல்.

மங்கலம்

மங்கலம் இல்லாத வார்த்தைகளை  தவிர்த்து மங்கலமாய் சொல்வது இதுவாகும்.

உதாரணம்
செத்தார் - துஞ்சினார்
சுடுகாடு - மயானம்
நச்சுப்பாம்பு -  நல்ல பாம்பு 

இயல்பு வழக்குச் சொல்

எப்பொருளுக்கு எச்சொல் அமைந்ததோ ,  அப்பொருளை அச்சொல்லால் கூறுதல் இயல்பு வழக்கு எனப்படும்.

இது மூன்று வகைப்படும்.
இலக்கணமுடையது 
இலக்கணப்போலி 
மரூஉ

இலக்கணமுடையது 

இலக்கண நெறி முறையாக வழங்கி வரும் சொற்கள் இலக்கணமுடையதாகும்.

உதாரணம்
காற்று  
நிலம் 
மண்

இலக்கணப்போலி 

இலக்கண நெறிமுறை இல்லையாயினும் , இலக்கணம் உடையது போல  சான்றோரால் தொன்று தொட்டு வரும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

உதாரணம்
இல்முன் -  முன்றில்
நகர்ப்புறம் -  புறநகர்
கோவில் -  கோயில்

மரூஉ

இலக்கணம் உடைய சொற்கள் சில இடையிலே எழுத்துக்கள் கெட்டும் , எழுத்துக்கள் திரிந்தும் , எழுத்துக்கள் தோன்றியும்  , மருவியும் வழங்கி வருதல் மரூஉ எனப்படும்.

உதாரணம்
பாண்டியநாடு -  பாண்டி நாடு
சர்க்கரை - சக்கரை
பெயர் - பேர்
தஞ்சாவூர் - தஞ்சை
கறிவேப்பிலை - கருவேப்பிலை

தொடரும்.....
 

Post a Comment

0 Comments