தேம்பாவணி - காட்சிப்படலம்
(க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான)
மாதிரி வினாவிடைகள்
தென்னிந்தியாவின் தமிழ் நாட்டில் ஆங்கிலேயர், பிரான்சியர் ஆகியோர் சமகாலப்பகுதியில் குறிப்பாக 18ம், 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த காலமே ஐரோப்பியர் காலம் என வரலாற்று அறிஞர்களால் குறிப்பிடப்படுகின்றது. இவ் ஆட்சியின் போது பாதிரிமார் பலரும் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து கிறிஸ்தவ மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு, தமிழைக் கற்று தென்னாட்டிலே தங்கி பழைமை வாய்ந்த இனிய தமிழ் மொழிக்கு அரிய தொண்டுகளை ஆற்றியமையை அறியக்கிடக்கின்றது. இத்தாலியில் இருந்து வருகை தந்து தமிழ் மொழிக்கு அளப்பெரிய சேவை புரிந்தவராக பெஸ்கி எனும் இயற்பெயருடைய வீரமா முனிவர் திகழ்கின்றார். பழம்பெரும் காலத்தில் சான்றோர்களான முனிவர்களே தமிழ் மொழிக்கு எல்லையற்ற தொண்டுகள் ஆற்றினர் என்பதை அறிந்த கொன்ஸ்தாந்தியஸ் பெஸ்கி அவர்களும் தனது பெயரை முனிவர் என அடையாளப்படுத்திக் கொண்டார். முனிவர்கள் போல காவியுடுத்தி, சைவ உணவு பூசித்து தனது வாழ்க்கையை வாழ்ந்து தமிழுக்காக அர்ப்பணித்த மகானாக விளங்கிய வீரமாமுனிவர் தமிழ் உரைநடையின் தந்தை என போற்றப்படுவதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
தமிழின் இனிமை கருதி அம்மொழியில் யேசுபிரானின் வரலாற்றை காவியமாகப் பாடிய வீரமாமுனிவர் அதற்கு தேம்பாவணி எனத் தலைப்பிடக்காரணம் தேன் போன்ற பாமாலைகளால் ஆன காவியம் என்ற காரணத்தினாலாகும். அது மட்டுமன்றி தேம்பா+அணி எனக் கருதும் போது வாடாத மாலை எனவும் பொருள் கொள்ள முடியும். தேம்பாவணி மூன்று காண்டங்களையும், ஒரு காண்டத்திற்கு 12 படலங்கள் வீதம் 36 படலங்களையும் மொத்தமாக 3615 விருத்தப் பாக்களையும் கொண்டுள்ளது. கி.பி 1726இல் இயற்றப்பட்ட இக்காவியம் வளன் எனப்படும் சூசையின் வரலாற்றைக் கூறுகின்றது. முதலாவது காண்டத்தின் பதினொராவது படலமாக காட்சிப்படலம் காட்சிப்படலம் உள்ளது. இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பினை அறிந்த இடையர்களும், வானநூல் வல்லுநர்களான மூவரசர்களும் அக்குழந்தையை நேரில் கண்டு வணங்கிய செய்திகள் இப்படலத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
எமது பாடப்பரப்பில் காட்சிப்படலத்தில் இடம்பெறும் 1 - 34 வரையான செய்யுட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் திருக்குழந்தையை நேரில் கண்டு இடையர்கள் வணங்கிய விதமும். குழந்தைநாதனின் பெருமைகளும் வண்ணத்தமிழில் வீரமாமுனிவரால் எடுத்தாளப்பட்டுள்ளன. வானவர் இறைவனை வணங்க இடையர்களை அழைத்தல், இடையர்கள் இறைவனை வணங்குதல், உள்ளமுருகி இறைவனைப் போற்றுதல், இறைவனின் தாயையும், தந்தையையும் வாழ்த்துதல், காணிக்கையை அளித்தல், இடையர்களின் மகிழ்ச்சி, இடையர் வீடு திரும்புதல், திருக்குழந்தையை வாழ்த்துதல், இடையர்கள் அனுதினமும் குகைக்கு வருதல், இடையர்கள் அடைந்த இன்பம், சாந்தி என்ற இடைச்சி எழுப்பிய ஐய வினாக்கள், மரியாள் விடையிறுத்தல், சாந்தி தான் கேட்ட வேதவுரைகளைக் கூறல் ஆகிய விடயங்கள் எமது பாடப்பரப்பில் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.
தேம்பாவணியின் காட்சிப்படலத்தில் ,
அ) இயேசு நாதரின் பெருமைகள்
ஆ) அன்னை மரியாளின் சிறப்புக்கள்
இ) சூசையின் பெருமைகள்
ஈ) இயேசுநாதரைக் கண்ட, இடையர்கள் அடைந்த மகிழ்ச்சி
உ) இடையர்கள், இயேசு நாதரை வாழ்த்திய விதம்
ஊ) இயேசுநாதரைப் பிரிந்ததால், இடையர்கள் அடைந்த துன்பம்
எ) சாந்தியின் ஐயம்
ஏ) மரியாள் சாந்திக்குக் கூறிய பதிலுரை
ஐ) வீரமாமுனிவர் கையாண்ட அணிகளின் சிறப்பு என்பவற்றை தெளிவுபடுத்துக.
அ) இயேசு நாதரின் பெருமைகள்
கனியமுது படைத்த காவியம் தேம்பாவணியில் தீந்தொடைச் செய்யுட்களால் காட்சிப்படலத்தில் யேசுபிரானின் பெருமைகள் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தை நோக்கும் போது கிறிஸ்தவ மதக்கருத்துக்களுடன் வரலாற்றுச் செய்திகளும் இழையோடியுள்ள தன்மை புலப்படுவதை காண முடிகின்றது.
வேதங்களுக்குத் தலைவன்.
மின்னலைப் போன்ற அன்னை ஈன்றவன்.
கணிப்பிற்கு அடங்காத உயர் மாட்சிமை பூண்டு, விண்ணுலகில் பொலிவுடன் மகிழ்ந்திருப்பவன்.
வானவர்க்கு அரசன்.
வானவர் வணங்குகின்ற பராபரன்.
மண்ணுலகத்தோர் நல்வாழ்வு வாழும் பொருட்டு விண்ணுலகில் மதிக்கு ஒப்பான குளிர்ந்த வெண்கொற்றக் குடையைத் தாங்கிய இனிய அன்பு கொண்ட மன்னவன்.
மாணிக்கப் பாத்திரத்தில் ஊற்றி வைத்த தேவ அமுதம் போன்ற மார்பினன்.
நோய் கொண்ட மனித குலத்தில் பிறந்தவன்.
சொற்களால் ஆராய்ந்து கூற முடியாத பெருமை உடையவன்.
சூரிய கிரகணங்கள் பட்டு மலர்ந்த தாமரை ஈன்ற முத்துப் போன்றவன்.
யாரையும் வெல்லத்தக்க கொடையிற் சிறந்தவன்.
குறையில்லாமல் கதிரவன் தந்த கதிரைப் போன்றவன்.
தன் ஒரே ஆணை எங்கும் செல்ல ஏகனாகி ஆள்பவன்.
மாடுகள் தங்கியுள்ள தொழுவத்தில் வந்து பிறந்தவன்.
வானத்து நீர் கொண்ட மேகம் மின்னுவது போல் இடையர்களைக் கண்களால் நோக்கி. அவர்களது உள்ளத்தில் ஞானவொளி கொடுத்ததுடன், பேரின்ப மழையைப் பெய்யச் செய்தவன்.
மனிதர் விரும்பியதற்கும் அதிகமாய் கொடுப்பவன்.
வானத்தில் தனியரசு செலுத்தும் செங்கோலை உடையவன்.
தன் துணை அல்லால் வேறு எவ்விதமான பணபலம், படைபலம் வேண்டாதவன்.
சினமாகிய நெருப்பு மூண்டுவிட்டால், அதை எவராலும் முறியடிக்கவியலாத தன்மையவன்.
ஊழிக்காலத்தின் போது முன்னர் "சோதோமம்” முதலான ஐந்து நகரங்களை எரித்தவன்.
முடிவு என்று எதுவுமில்லாதவன்.
வேதங்கள் கூறியபடி தாயும், தந்தையும் இல்லாது தானாகத் தோன்றியவன்.
ஆ) அன்னை மரியாளின் சிறப்புக்கள்
திருக்குழந்தையை ஈன்றெடுத்த கன்னி மரியாளின் பெருமைதனை வீரமாமுனிவர் தீந்தமிழ்ச் சொற்களால் வர்ணித்த விதத்தை பின்வருமாறு சித்தரிக்கலாம்.
மின்னலைப் போன்ற கன்னித்தாய்.
இயேசு நாதரைப் பெற்ற ஒப்பற்ற அன்னை.
இயேசுவாகிய திருக்குழந்தையைத் தன் கன்னிமைக்குப் பழுதில்லாமல் பெற்றவள்.
மாலை போன்றவள்.
மின்னொளியை உட்கொண்டு விளங்கிய மென்மையான பாதங்களை உடையவள்.
மின்னொளி நீங்காத கண்களால் கண்ணீரைச் சொரிந்தவள்
.
ஆண்டவன் மண்ணில் வந்து பிறந்து அருள் காட்டிய சிறப்பு, தன் உள்ளத்து உணர்வில் பொருந்தியதால் உள்ளம் உருகுகின்றவள்.
ஆண்டவன் மண்ணில் வந்து பிறந்து அருள் காட்டிய சிறப்பு, தன் உள்ளத்து உணர்வில் பொருந்தியதால் உள்ளம் உருகுகின்றவள்.
சாந்தி என்ற இடையர் குலப்பெண்ணின் ஐய வினாக்களுக்கு ஆண்டவனின் பெருமை பற்றி எடுத்துக் கூறியவள்.
முடிவேயில்லாத இறைவனின் அன்னை.
ஆதவனின் ஒளியை ஆடையாக அணிந்தவள்.
ஞான அணிகளை உடையவள்.
தேன் மலர் போன்ற திருவாயினை உடையவள்.
விண்மீன்களை முடியாகச் சூடியவள்.
இ) சூசையின் பெருமைகள்
திருக்குழந்தையின் அவதரிப்புக்கு தன்னை அர்ப்பணித்த வளன் சூசையின் குறிப்பிட்ட சில பெருமைகளே காட்சிப்படலத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
உயர்ந்த காவலன்.
வேத உருவினனான மாடமை பூண்ட மரியாளின் துணைவனான பெருந்தவ வடிவில் தோன்றிய மன்னன்.
இடையர்களால் வணங்கப்பட்டவன்.
திருக்குழந்தையைத் தாயுடன் இணைந்து வாழ்த்தியவன்.
ஈ) இயேசுநாதரைக் கண்ட, இடையர்கள் அடைந்த மகிழ்ச்சி
திருக்குழந்தையின் ஆசியினைப் பெற குகைக்குச் சென்ற இடையர்களும், இடைச்சியர்களும் அடைந்த பேரின்பமானது வெகுவாக கவிஞரால் வர்ணிக்கப்படுகின்றது. முதலில் இடைச்சியர் அடைந்த இன்பத்தை நோக்கினால் தூவி ஓடிய வாரிது வற்றொடு..." எனும் செய்யுளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மழை பொழிந்து ஓடிய வெள்ளம் மிகுதலால் அதனுடன் காட்டில் ஓடிக் கரையில் ஒதுங்கிய முத்துப் போன்று. ஏவப் பெற்றுப் பாய்ந்த அம்பு போன்ற கண்களையுடைய அவ்விடைச்சியர், திருக்குழந்தை மேல் கொண்ட அன்பினால், தம் நாவிற் பொருந்திய நல்லுரைகளைக் கூறி வாழ்த்தினார்.
"ஏந்தி, ஓங்கு உளத்து இன்ப நெடுங்கடல்..." எனும் பாடலில் சாந்தி எனும் இடைச்சி அடைந்த இன்பமானது பின்வருமாறு உரைக்கப்படுகின்றது. சாந்தி எனும் பெயருடைய ஓர் இடைச்சி, திருக்குழந்தையின் அருள் நோக்குக் கிடைத்த பரவசத்தால் நிறைந்து நின்ற தனது உள்ளத்தில், ஊற்றெடுத்த, பேரின்பமாகிய நெடிய கடலை நீந்தி நீந்திப் பார்த்தும் நிலை கொள்வதற்கான கரையினைக் காண முடியாமையால் காணப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஐம்பொறிகளாகிய அரங்கில் இன்பம் நுகர்ந்ததால் கிடைத்த வரம் என்னும் அழகிய கடலைத் தோண்டி, அதனுடன் மகிழ்ந்து மூழ்கி, உள்ளத்தில் பேரின்பம் பெருகப் பெற்றும் அடங்காமல் வாய் வழியாய் வார்த்தைகளைக் கூறி நின்றவர்கள் என இடையர்களின் குதூகலம் விளக்கப்பட்டுள்ளது.
“அண்ணி, நீர் தவழ் தீயென..." எனும் பாடலில் திருக்குழந்தையின் அருள் நோக்கத்தினால் வானவர்க்கு ஒப்பான விரிந்த ஞானத்தைப் பெற்றதுடன், வானுலக இன்பத்தையும் பெற்றுக் கொண்டவர்கள் எனவும், சூசையும், மரியாளும் சொல்லிய இனிய வார்த்தைகளால் நெஞ்சம் குளிர்ந்து மின்னலொடு மழை தூவுகின்றதை ஒத்ததாக ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவர்கள் எனவும் திருக்குழந்தையின் பேரன்பினால் உள்ளத்தில் ஒளியைப் பெற்றதுடன், பேரின்ப மழையில் நனைந்தவர்கள் எனவும் இடையர்களினதும், இடைச்சியரினதும் மகிழ்ச்சிப் பெரு வெள்ளம் புலப்படுத்தப்பட்டுள்ளது.
எ) சாந்தியின் ஐயம்
சாந்தி என்னும் பெயருள்ள இடைச்சி திருக்குழந்தையாற் கிடைத்த பேரின்ப பரவசத்தால், அந்தப் பேரின்பமாகிய நெடிய கடலுக்குக் கரை காண முடியாமல், மரியாளை நோக்கி பின்வருமாறு கூறலுற்றாள்.
மாலை போன்றவளே, இடைச்சியின் வாய்மொழி பழுதெனக் கருதி விலக்காது. கருணை கூர்ந்து நான் கூறுவதைக் கேட்பாயாக. கிளி அறியாமையாற் கூறிய எதனையும் இவ்வுலகில் எவரும் கேட்காமல் விட்டு விடுவதுண்டோ?
எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னரேயறிந்து, மனிதர்களின் ஆசைக்கு அதிகமாய் அளிக்கின்ற ஆண்டவன், வானத்திலிருந்து தனியரசு செலுத்தும் ஆண்டவன், துன்புறுவதே தனக்கு இன்பமெனக் கருதி, எளிமைக் கோலத்த்தில் மண்ணுலகில் மானுடராக வந்து பிறந்தாரோ?
வேல், வாள். வில், சக்கராயுதம், ஆகிய படைக்கலங்கள் துணையுடன், ஆட்சி செய்யும் ஓர் அரசனுக்குத் துணையாகச் செல்லக்கூடிய வீரவெஞ்சேனை இவனுக்கு இவனுக்கு இல்லாமல் போனது ஏன்?
சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட கூம்புடைய உயர் மாட மாளிகைகளும், தூய பொன்னால் செய்யப்பட்டு மணிகள் பதித்த அணிகலன்களும், இங்குள்ள நாடுகளின் அரசர்களிடமுள்ள பிற் செல்வங்களும் ஆகியவற்றுள் ஏதேனும் இவனுக்கு இல்லாதது ஏன்?
குடியிருக்கும் இல்லமின்றி மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது ஏன்? மானுடருக்குச் சுவர்க்கமடைய வழிகாட்டப் பிறந்தாரெனில் அதற்குரிய வானுலக உருவில் வராமல் உருவத்தை மறைத்து வந்தது நல்லதோ?
துன்பமே உருவான இக்குழந்தை நாதனை நினைப்பிற் கொண்டு என் உள்ளத்தில் எழுந்த ஐயங்கள் இவையே, ஞான அணிகளை உடையவளே! உன் மலர் போன்ற இனிய வாயைத் திறந்து, எனக்குரிய கட்டளைகளையும் மனங்கொண்டு மறுமொழி கூறுவாயாக என இடைச்சியர்களில் சிறந்த பெண்ணான சாந்தி தனது சந்தேகத்தை மரியாளிடம் வினவினாள்.
ஏ) மரியாள் சாந்திக்குக் கூறிய பதிலுரை
நம் தந்தையாகிய ஆண்டவன் மனுக்குலத்தில் தானும் ஒருவனாய்த் தோன்றி அருள் புரிந்த சிறப்பு உள்ளத்தில் எழுந்த ஒன்ற, மனமுருகிய மரியாள், சாந்தி கேட்ட வினாக்களுக்கு விடை கூறத் தொடங்கினாள்.
இடையிலே துவண்டு விழக்கூடிய கொடிதான் கொழு கொம்பைப் பற்றிப் படர்ந்து போகும். அதுபோல் தனித்து நின்று பகைவரைத் தாக்கக்கூடிய வீரர்களைத் துணை கொள்வர். எம்பிரான் வலிமைக்கு இவ்வித துணை வேண்டுவதில்லை.
தான் விரும்பியதை நினைத்த மாத்திரத்தில் செய்து முடித்து, தனிச் உலகையெல்லாம் ஆளும் ஆண்டவனிடம், நெருப்பை மூட்டி விட்டது போன்ற சினம் தோன்றுமானால், அதைத் தாண்டிச் செல்லக் கூடியவர் இவ்வுலகில் இருக்க முடியாது.
மக்கள் அனைவரும் இறந்து படுமாறு பொழியும் மழை வெள்ளம் உலகை மூடி மறைத்ததும். அக்கினி மழையால் சோதோம் முதலான நகரங்கள் எரிந்து அழிந்ததும், இந்த ஆண்டவனால் தூய்மை பொருந்தவரும் ஏனைய பல வல்லமையுடைய செயல்களையும் தொகை சொல்லிக் காட்ட முடியாது.
இவ்வாறு மரியாள் திருவாயால் உரைத்ததும், சாந்தி மீண்டும் மரியாளிடம் பின்வருமாறு பதிலுரை பகர்ந்தாள். சொல்லாலே விளக்க முடியாத கருணைச் செயல்களைக் கடவுள் சொல்லும் காலம் இதுவென்று மரியாள் கூறவும் அதை உணர்ந்து கொண்ட சாந்தி, மேலும் பயன்தரும் சொற்களைக் கூறலானாள்.
முடிவில்லாத என் தந்தையின் தாயே! கூறுபடுத்தும் கொலை வாளின் குணத்தைப் போல என் உள்ளத்தைக் கிழிக்கும் மேலுமொரு சந்தேகமும் உள்ளது. அது தெளிவுபெறுமாறு இதனைக் கூறுகின்றேன்.
தாய் தந்தையின்றித் தானாகக் தோன்றிய ஆண்டவன். என் போன்ற மனிதரை மீட்டுக் காப்பற்ற இவ்வுலகில் தோன்றும் காலத்தில் மின்னலைப் போல வேடமெடுத்து வந்தால் அவனை அனைவரும் பணிந்து வணங்குவார்கள். இவ்வுலகை ஆள்பவர்கள் அவன் முன் அஞ்சி நடுங்குவர். அவனை வணங்குவோர் மட்டும் இவ்வுலகில் மீதியாக உயிர் வாழ்வர் என்று தேவ வாக்காகப் பெருந்தவ முனிவர்கள் சொல்லியுள்ளார்களே என்று சாந்தி உரைத்தாள்.
இதற்கு பதிலளித்த மரியாள் தனது பெறுமதியான வார்த்தைகளில் உலக முடிவு நாளினைப் பற்றி அதிகமாகச் சொல்லப்பட்ட செய்திகளை வெல்லும் வகையில், கேட்பவர்கள் அஞ்சி நடுங்குமாறு நிகழவிருக்கும் அருஞ் செயல்களை நீர் விரும்பிக் கேட்பீராயின் நான் கூறுவேன் என மரியாள் உரைத்தாள்.
மரியாள் கூறியதைக் கேட்டதும், வாள் போன்ற கண்களையுடைய சாந்தியுடன் ஏனைய இடைச்சியரும், தண்டில் எழுந்த தாமரை கதிரவன் கதிரை உண்டு மலர்ந்தது போல் ஆணையிட்ட முறையில் எழுந்து நின்று "புரியும் படி சொல்" என்று கூற, மரியாள் மேலும் கூறுலுற்றாள்.
ஐ) வீரமாமுனிவர் கையாண்ட அணிகளின் சிறப்புக்கள்
தமிழின் இனிமை இலக்கியத்தில் தனித்துவமானது என்றும், அதற்குக் காரணம் பல வடிவமான அணிகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளடங்கி இருத்தலே எனும் உண்மையை உணர்ந்த வீரமாமுனிவர் உவமை, உருவகம், உயர்வு நவிற்சி முதலான பொருளணிகளையும், மடக்கு எனும் சொல்லணியையும் கையாண்டு தேம்பாவணி எனும் காவியத்திற்கு இனிமை சேர்த்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
உவமைகள் :
''மின்னல் நேரும் அன்னை ...'' (1)
''மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என ...'' (3)
''தேறல் கொண்ட அன்பு கொற்றவா ...'' (6)
''வானமிர்த மார்பினன் ...'' (7)
''கஞ்சம் ஈன்ற இலகு முத்தம் ஏய்ந்துவெல் புரவில் வேய்ந்த சேயை ...'' (8)
''முடித்த திங்களைத் தொடுத்து உடுக்கள் துற்றல் ...'' (9)
''ஏதம் இன்றி மாலி ஈனற் காந்தி என்று தோன்றலைக் கோது அகன்று உயிர்த்த கோதை ...'' (10)
''பாதம் ஒன்று சோமன் ஈன்ற பால் நிலவு ...'' (10)
''பதுமம் நேரு கண் ...'' (11)
மின்ன மாரி தூவல் ஒத்த விழும் நாட்ட மாரியே ...'' (12)
ஓவல் ஆகி வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே ...'' (13)
நீர்தவழ் தீயெனட ...'' (16)
விண்ணின் நீர்முகில் மின்னென நோக்கல் ...'' (16)
காவில் ஓடிய முத்தெனக் காதலால் நாவில் ஓடிய நல்புகழ் ...'' (17)
கோல்விழி ...'' (17)
சான்சரி தூண்டும் ஓர்சினம் ...'' (27)
மின்னை ஒன்றிய வேடமெ டுத்தவன் ...'' (31)
வாளெ ழுந்தகண் ...'' (34)
உருவகங்கள் :
பஞ்ச அரங்கு (2)
இன்ப நெடுங்கடல் (18)
மடக்கு அணி :
மாலை என்னும் சொல் செய்யுளில் வெவ்வேறு பொருளைத் தரும் வகையில் அமைந்துள்ளது. (03)
ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் BA (Hons)
நன்றி




0 Comments