சிலுவை யுத்தம்
கிறிஸ்தவ சமயத்தின் ஸ்தாபகரான இயேசு பலஸ்தீனத்தில் பெத்தலகேம் எனும் ஊரில் பிறந்தவரென்றும் ஜெருசலேமில் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தவரென்றும் நாம் கற்றுள்ளோம். இந்த இடங்களை இப்பொழுதும் கிறிஸ்தவர்கள் புனித பூமியாகக் கருதுகிறார்கள். எனவே இந்த இடங்களை முன்னிட்டு பிற மதத்தினரால் சவால்கள் ஏற்படும்போது அவர்கள் ஆத்திரமடைகிறார்கள்.
இஸ்லாமியர்களால் அப்பிரதேசங்களுக்கு சவால்கள் ஏற்பட்டபோது ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்த பாப்பரசரைத் தலைவராகக் கொண்ட கிறிஸ்தவர்கள் ஆத்திரமடைந்தனர். இவற்றை மனதிலிருத்தி சிலுவை யுத்தம் என்றால் என்ன என்பதனைக் கற்போம். பல நூற்றாண்டுகளாக உரோமப் பேரரசின் கீழிருந்த பலஸ்தீனர் 7 ஆம் நூற்றாண்டில் அரேபியர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தனர். எனினும் கிறிஸ்தவர்கள் பலஸ்தீனத்திலிருந்த புனிதத் தலங்களுக்கு எவ்வித இடையூறுமின்றி சென்று வந்தனர். கி.பி.11 ஆம் நூற்றாண்டளவில் செல்யுக்ஸ் துருக்கியர்கள் அப்பிரதேசங்களைக் கைப்பற்றினர். அதன்பின்னர் கிறிஸ்தவர்கள் அப்பிரதேசங்களில் திருயாத்திரை செல்வதற்குத் தடையேற்பட்டது. புனித யாத்திரையை மேற்கொண்டவர்கள் துன்புறுத்தப்பட்டதுடன், சிலர் கொல்லப்பட்டனர்.
இதனைக் கண்டு கலக்கம் அடைந்த பாப்பரசர் புனித பூமியைப் பாதுகாப்பதற்காக ஒன்று திரளும்படி ஐரோப்பாவிலிருந்த கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார். இதன் விளைவாகப் பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி போன்ற சகல கிறிஸ்தவ நாடுகளும் அரசர்கள், பிரபுக்களின் தலைமையின் கீழ் பெருந்திரளாக அணி திரண்டனர். இவர்கள் செய்த யுத்தம் கிறிஸ்தவ சமயத்தை முன்னிட்டு செய்த படியால் "சிலுவை யுத்தம்" என்று குறிப்பிட்டனர்.
வெற்றி தோல்விகள் இரு சாராருக்கும் மாறி, மாறி ஏற்பட்டதுடன் இரண்டு நூற்றாண்டுகள் வரை சிலுவை யுத்தங்கள் நடைபெற்றன. எனவே சிலுவை யுத்தம் என்பது ஒரு யுத்தம் மட்டுமல்ல. அது பல யுத்தங்களாக இருந்தன. இந்த யுத்தங்களின் இறுதி விளைவாகக் கிறிஸ்தவர்களால் புனித பூமியைக் கைப்பற்ற முடியாது போனதுடன் ஐரோப்பாவின் அரசியல், பொருளாதார பண்பாட்டின் மத்திய நிலையமாக விளங்கிய கொனஸ்தாந்திநோபிள் கி.பி. 1453 ஆம் ஆண்டு துருக்கியர் வசமானதும் கிறிஸ்தவர்கள் சமய ரீதியாகவும், பொதுவாக ஐரோப்பியர்கள் அரசியல், பொருளாதார சமூக ரீதியாகத் தோல்வியடைந்திருந்தனர்.
சிலுவை யுத்தத்தின் விளைவுகள்
சிலுவை யுத்தமானது ஐரோப்பாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
சிலுவை யுத்தம் நிலமானிய முறையின் வீழ்ச்சிக்கு பலவிதத்திலும் வழிவகுத்தது.
மத்தியகால ஐரோப்பாவில் காணப்பட்ட பல இயல்புகள் வீழ்ச்சியுற்று நவீன காலம் தோன்றவதற்கு வழி வகுத்தது.
கீழ் நாடுகளில் காணப்பட்ட அறிவும், உற்பத்திப் பொருட்களும் ஐரோப்பாவைச் சென்றடைந்தன.
எடுத்துக்காட்டாக,
இந்தோ அராபிய இலக்கங்கள் கேத்திரக் கணிதம், கீழ்நாட்டு மெய்யியல், கடதாசி, மாலுமிகளின் திசையறிகருவி என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
கீழ்நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட வாசனைத் திரவியங்கள், துணிவகைகள், மஸ்லின், சீன, மருந்துவகைகள், பெறுமதி வாய்ந்த இரத்தினக்கற்கள், கண்ணாடி, பழவகைகள் என்பனவற்றுக்கு ஐரோப்பிய நாடுகளில் கேள்வி அதிகரித்தது.
இவ்வாறு பொருட்களுக்கு கேள்வி அதிகரிக்கவே மேல்நாட்டு - கீழ் நாட்டு வர்த்தகம் விருத்தி அடைந்தது.
மத்தியகால ஐரோப்பாவில் நிலமானிய முறையில் கட்டுப்பட்டிருந்த மக்கள், சிலுவை யுத்தத்தின் காரணமாக வெளி உலகுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கால ஐரோப்பாவை நவீன கால ஐரோப்பாவாக மாற்றுவதற்கு சிலுவை யுத்தம் உதவியது.
நன்றி
0 Comments