நிலமானிய முறை
மானியம் என்பது சேவையாகும். நிலம் என்பது பூமி. இதன்படி மானியத்துடன் கூடிய நிலம் நிலமானியமுறை' எனப்படும். நாட்டின் பொருளாதார, அரசியல், சமூகப், பண்பாடு என்பவற்றினை அடிப்படையாகக் கொண்ட முறை மானியமுறை எனப்படுகின்றது.
மத்திய காலத்தில் ஐரோப்பாவிலுள்ள அநேகமான நாடுகளில் மானிய முறை நிலவி வந்தது. நிலம் அரசனுக்குச் சொந்தமாக இருந்தது. நாட்டை நிர்வாகம் செய்வதற்கு அரசனுக்கு வேண்டிய சேவைகளை ஆற்றுவோர் வேதனத்துக்குப் பதிலாக நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இப்படியாக நிலத்தைப் பெற்ற பிரபுக்கள் அந்நிலங்களைப் பயன்படுத்தியமைக்கு கைமாறாக அரசனுக்கு சேவை செய்தனர்.
பிரபுக்கள் அந்நிலங்களைத் தமக்குக் கீழ் மட்டத்திலிருந்தவர்களுக்குப் பயிர் செய்தற் பொருட்டுப் பகிர்ந்து கொடுத்தனர். இப்படியாக நிலங்களைப் பெற்றவர்கள் அவற்றைப் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தியதோடு அதற்குப் பதிலாக பிரபுக்களுக்கு வேண்டிய பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்கினர்.
ஒருவன் செய்யும் சேவைக்கு வழங்கும் வேதனத்திற்குப் பதிலாக அவனுக்கு நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு சேவையை வழங்குதல் நிலமானிய முறை எனப்படும். மத்திய காலத்தில் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பொதுவாக இம்முறை நிலவியது.
மத்திய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு ரீதியில் மானிய முறைக்குப் பழக்கப்பட்டு இருந்தன. அது புராதன காலத்தினின்றும் நவீன காலத்தினின்றும் வேறுபடும் விசேட பண்பாகும்.
நிலமானிய முறையின் ஆரம்பம்
உரோமப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலப்பகுதியான கி.பி 5 ஆம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் மானிய முறை ஆரம்பமானது. மானிய முறை ஆரம்பமாவதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாகும். கி.பி.5ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பா இரண்டு ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகியது.
01. உரோமப் பேரரசுக்கு எதிராகக் கொத்,ஹன், பிரேங், அங்லே ஜஸ்லாவ் சக்சன் ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு முதலாவது ஆக்கிரமிப்பாகும். அன்றைய உரோமப் பேரரசிற்கு உட்படாத இன்றைய ஜேர்மனிப் பிரதேசத்திலிருந்தே அவர்கள் வந்தனர்.
02. கி.பி 1000 ஆண்டளவில் வடக்கிலுள்ள வைக்கின்ஸ் எனப்பட்ட கோத்திர மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு இரண்டாவது ஆக்கிரமிப்பாகும். நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய பிரதேசங்களிலிருந்தே இவர்கள் வந்தனர்.
வெளிநாட்டு ஆக்கிரமிப்பால் உரோமப் பேரரசு வீழ்ச்சியுற்றதால் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க ஆட்சியாளர்களால் முடியவில்லை. ஆதலால் பெருந்தொகையான மக்கள் தம்மிடமிருந்த நிலங்களைப் பிரபுக்களுக்குக் கையளித்து, அவர்களுக்கு சேவை செய்வதாக வாக்களித்ததுடன், பிரபுக்களின் பாதுகாப்பையும் எதிர்பார்த்தனர். இதன்படி ஆரம்பத்தில் பிரபுக்கள் உரோமப் பேரரசின் மக்களின் நிலங்களையே தமதாக்கிக் கொண்டனர்.
அரசர்கள் பலவீனர்களாக இருந்ததால் அவர்கள் தங்களது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு (தக்க வைத்துக் கொள்வதற்கு) பிரபுக்களின் உதவி தேவையாக இருந்தது. எனவே அரசனிடமிருந்த நிலங்கள் பிரிக்கப்பட்டுப் பிரபுக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. அவற்றைப் பயன்படுத்துவதற்காகப் பிரபுக்கள் அரசனுக்கு சேவை செய்தனர்.
இந்த நிலங்களைப் பிரபுக்களிடையே பகிர்ந்தளித்தல், அதன் பொருட்டு செய்யப்பட வேண்டிய சேவைகள் என்பவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் போன்ற தொடர்பான பழக்கவழக்கங்கள் இருந்தன. இவை தொடர்பான எழுத்து மூலமான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை. மரபு ரீதியாக இவை நடைபெற்றன.
உரோமப் பேரரசிற்கும் அதன்பின்னர் 10 ஆம் நூற்றாண்டில் பிரான்சைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்ட பேரரசிற்கும் எதிராக ஏற்பட்ட வெளிநாட்டு ஆக்கிரமிப்பைக் காரணமாகக் கொண்டு பல விடயங்கள் வெளியாகின.
அரசியல் நிலை தளர்ந்தமை
அரசர்கள் பலவீனமடைந்தமை
பேரரசு முழுவதும் நிலைகொண்ட கோத்திர மக்களிடையே நிலையான
அரசியல் முறைமை இல்லாமை.
ஐரோப்பா முழுவதிலும் கவலைக்குரிய நிலைமை ஏற்படல்
மக்களுக்குப் பாதுகாப்பின்மை.
இந்தப் பின்னணியில் பிரபுக்கள் பலம் வாய்ந்தவர்களானார்கள். அரசர்கள் பலவீனமானவர்கள். இந்நிலையில் பணப்பரிமாற்றம் இல்லாது நிலத்தை அனுபவிப்பதற்கான சேவையை வழங்கும் முறையான நிலமானிய முறை தோன்றியது.
நிலமானியப் பொருளாதார முறையின் விசேட பண்புகள்
நிலம் முக்கிய உற்பத்திக் காரணியாகியமை.
கிராமத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம்.
விவசாயம் பொருளாதாரத்தின் அடிப்படையானமை
சுயதேவைப் பொருளாதாரம் உருவானமை.
நகரங்கள் இல்லாமை.
பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. வர்த்தகம் சிறிதளவே நடைபெறல்.
அதுவும் பண்டமாற்று முறையில் நடைபெறல்.
மானியமுறையின் பொருளாதார அமைப்பானது விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பண்ணை அதன் முக்கியமான பொருளாதாரக் கூறாக இருந்தது.
ஒவ்வொரு பண்ணையிலும் பற்றைக் காட்டு நிலம், பொதுவான புல்வெளி, பாழ்நிலம் எனப்பல பகுதிகள் காணப்பட்டன. பண்ணை மக்கள் அனைவரும் இவற்றை, மந்தைகளை மேய்த்தல், விறகு சேகரித்தல், தேன் சேகரித்தல், வேட்டையாடுதல் போன்ற கருமங்களுக்கு பயன்படுத்தினர்.
பிரபுக்களின் நிலம் பயிர் செய்யும் பொருட்டு பொதுமக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டன. இவர்கள் தமியர்கள் எனப்பட்டனர். தமியர்கள் தமக்குக் கிடைத்த காணியை அனுபவிப்பதற்கு கைமாற்றாக பிரபுக்களின் நிலத்தில் ஊதியமின்றி வேலை செய்வதற்கு அல்லது அறுவடையில் ஒரு பகுதியை கொடுப்பதற்கு அல்லது குறிப்பிட்ட ஒரு தொகைப் பணத்தை செலுத்துவதற்கு கடமைப்பட்டிருந்தனர்.
பண்ணையின் உயர்ந்த இடத்தில் அந்தப் பண்ணைக்குச் சொந்தமான பிரபுவின் மாளிகை இருந்தது.
அதியுயர் இடத்தில் ஆலயம் அமைந்திருந்தது. திராட்சை இரசம் (வைன்) செய்யும் இயந்திரங்கள், பாண் செய்யும் பேக்கரிகள், கோதுமை அரைக்கும் தொழிற்சாலைகள் என்பன பிரபுக்களிடம் இருந்தன. தமியர்கள் செலவு செய்து (பொருட்களின் மூலம்) அவற்றில் பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நிலமானிய முறையின்மூலம் பண்ணைகள் சுயதேவையைப் பூர்த்தி செய்யும் கூறாக இருந்தது.
நிலமானிய அரசியல் முறையின் விசேட பண்புகள்
நாட்டின் அனைத்து இடங்களும் அரசனுக்குச் சொந்தம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அரசனுக்குத் தேவையான சேவையைப் பெறும்- பொருட்டு நிலங்கள் பிரபுக்களிடையே பகிர்ந்தளிக் கப்பட்டன. இதன்படி பிரபுக்களுக்கு ஏராளமான நிலம் உரிமையாக இருந்தது.
அரசர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கவில்லை.
நாட்டில் பல பாகங்களிலும் பிரபுக்கள் பலம் வாய்ந் தவர்களாக திகழ்ந்தனர்.
அவர்கள் தமது பிரதேசங்களில் சட்டங்களை விதித்தல், வரிஅறவிடுதல் போன்றவற்றைச் செய்யக்கூடிய நிலையைப் பெற்றிருந்தனர்.
அரசாங்கத்தில் பதவி வகித்தல், நிலங்களை உரிமையாக்கிக் கொள்ளல் என்பன பிரபுக்களுக்கு மாத்திரமே உரியதாக இருந்தது.
படையைக் கூட்டுதல், அதனைப் பரிபாலித்தல் போன்றவையும் பிரபுக்களுடைய கையிலேயே இருந்தது.
அரசனுக்கு படை தேவைப்படும்போது அவன் பிரபுக்களின் உதவியை நாட வேண்டியிருந்தது.
பிரபுக்கள் தமது அதிகாரத்தைப் பரவலாக்கும் பொருட்டு அடிக்கடி தம்மிடையே சண்டையிட்டனர். அவை இருசாராரிடையேயான சண்டை என அழைக் கப்பட்டது.
மானிய அரசியல் முறையானது பலம் வாய்ந்த பிரதேச ஆட்சியாளர்களைக் கொண்ட ஒரு வகையில் கவலைக்குரிய ஆட்சியாக விளங்கியது.
நிலமானிய முறையின் அரசியலில் அதிகாரம் பரவலாக்கப்பட்டமை.
நிலமானிய சமூக முறை
நிலமானிய முறையில் மக்களிடையே சமூக சமமின்மை காணப்பட்டது. பிறப்பின்படி சமுதாயத்தில் உயர்வு, தாழ்வு காணப்பட்டமை.
பிறப்பிலேயே உயர்வாகக் கருதப்பட்டவர்கள் பிரபுக்களாவர். அரசன், பிரபுக்கள், குருமார் என்போர் அப்பிரிவினுள் அடங்குவர்.
பிறப்பிலேயே கீழானவர்களாகக் கருதப்பட்டோர் சாதாரண மக்களாவர். இதன்படி மக்களே சமுதாயத்தில் பெரும்பான்மையினராகக் காணப்பட்டனர்.
பிரபுக்கள் மாளிகைகளில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தனர்.
தமியர்கள் குடிமக்கள் சிறு இல்லங்களில் எளிய வாழ்க்கை வாழ்ந்தனர்.
எவ்வித சலுகையும் பெற்றிராத தமியர்கள்(குடிமக்கள்) அரசனுக்கும், பிரபுக்களுக்கும் திருச்சபைக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
மானியமுறை காலத்தில் தனிமனிதன் முக்கியத்துவம் பெறவில்லை. பொதுத்தன்மையும் கூட்டுறவுமே முக்கியத்துவம் பெற்றன.
தமியர்கள் வேளாண்மை உட்பட அனைத்துச் செயற்பாடுகளையும் ஒன்றிணைந்து (ஒற்றுமையாக) செய்தனர். வர்த்தகம் மற்றும் கொடுக்கல் வாங்கலின் போது "Guild" என்ற பொதுவான அமைப்புக் காணப்பட்டது.
சாதாரண மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர். பிரபுக்கள் அதிகாரத்தின் பொருட்டு தம்மிடையே அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.
நிலமானிய முறையில் சமூகத்தில் சமநிலை காணப்படவில்லை. மக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பாகுபாடு காணப்பட்டது.
நிலமானியமுறைப் பண்பாடு
மத்தியகால ஐரோப்பாவில் நடைமுறையிலிருந்த மானிய முறையில் காணப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக அமைப்பிற்கு ஏற்றதாகவே பண்பாடும் இருந்தது. அதன்படி மத்தியகாலப் பண்பாடு புராதன காலத்தையும், நவீன காலத்தையும் விட வேறுபட்டதாகக் காணப்பட்டது.
நிலமானிய முறைக் காலத்தில் ஐரோப்பாவில் காணப்பட்ட பண்பாட்டு இயல்புகள்
பாப்பரசரைத் தலைவராகக் கொண்ட கத்தோலிக்கத் திருச்சபை முதன் நிலையில் இருந்தது.
கல்விச் செயற்பாடுகள் திருச்சபையை மையமாகக் கொண்டதாக இருந்தது.
மக்கள் வாழ்க்கை சமயத்தோடு தொடர்புடையதாக இருந்தது.
அனைத்துப் பண்பாடுகளும் சமயத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தன.
சங்கீதம்,நாடகம்,சித்திரம், சிற்பம் என்பன லௌகீகத்தைப் பிரதிபலிப்பதாக அமையில்லை. அவை சமயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்தது.
மக்களது வாழ்க்கை ஒழுக்கமுடையதாககக் காணப்பட்டது.
நிலமானிய முறையின் வீழ்ச்சி
கி.பி 5ஆம் நூற்றாண்டு முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்த நிலமானிய முறை 13 ஆம் நூற்றாண்டுமுதல் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதற்கான காரணங்கள் பல உண்டு.
அடுத்த அத்தியாயத்தில் நாம் கற்க உள்ள சிலுவை யுத்தம் நிலமானிய முறை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நிலமானிய முறை சிலுவை யுத்தத்தின் காரணமாக வீழ்ச்சியடைந்தது.
சிலுவையுத்த காலத்தில் ........
வர்த்தகம் முன்னேற்றமடைந்தது.
நகரங்கள் வளர்ச்சியடைந்தன.
பணப்புழக்கம் அதிகரித்தது.
நீண்ட கால யுத்தத்தில் ஈடுபட்ட பிரபுக்கள் பலர் இறந்தனர்
யுத்தத்திற்கு சென்ற தமியர்கள் மீண்டும் பண்ணைகளுக்குச் செல்லாது நகரங்களில் தங்கி வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டனர். இதனால் மானியமுறை வீழ்ச்சியடைந்தது.
அரசர்கள் பலம் வாய்ந்தவர்களாகிப் பலம் வாய்ந்த இராச்சியங்களைக் கட்டியெ- ழுப்பியதால் நிலமானிய அரசியல் முறை வீழ்ச்சி அடைந்தது.
பணப்புழக்கம் அதிகரித்ததால் நடுத்தர வகுப்பினர் எழுச்சியுற்றனர்.
பண்ணைமுறை வீழச்சியடைந்ததுடன் பிரபுக்களின் சமூகநிலையும் தளர்ச்சியுற்றது. அத்தோடு நிலமானிய முறையும் வீழ்ச்சியடைந்தது.
12 ஆம் நூற்றாண்டு முதல் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக நிலமானியமுறைக் காலத்தில் இருந்த சமய சமூக நிலைமைகள் வீழ்ச்சியடையத் தொடங்கின.
15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவின் சகல நாடுகளிலும் நிலமானிய முறை வீழச்சியடைந்தது. நவீன ஐரோப்பாவின் உதயம் ஆரம்பமாகியது.
நன்றி
0 Comments