க.பொ.த உயர்தரம்
தமிழ் - சங்கப்பாடல்கள்
01. குறுந்தொகை
சங்ககாலத்தில் எழுந்த தனிச்செய்யுள்களின் தொகுதிகளாய் அமைந்த எட்டு நூல்கள் எட்டுத்தொகை எனப்படும். அகத்திணை சார்ந்த செய்யுள்கள். அவற்றின் அடிகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் யாப்பின் அடிப்படையிலும் வேறு வேறு நூல்களாக தொகுக்கப்பட்டன. அவற்றுள் நாலடியை சிற்றெல்லையாகவும், எட்டடியை பேரெல்லையாகவும் கொண்ட நானூறு செய்யுள்களின் தொகுதியாய் அமைந்த நூலே குறுந்தொகை ஆகும்.
குறுந்தொகை - 126 ஆம் செய்யுள்
ஆசிரியர் - ஒக்கூர் மாசாத்தியார்
இவர் சங்ககால பெண்பாற் புலவர்களுள் ஒருவர். குறுந்தொகையில் 05 பாடல்களும், புறநானூற்றில் ஒரு பாடலும் அக நானூற்றில் 03 பாடல்களுமாக மொத்தம் 109 பாடல்கள் இவரால் பாடப்பட்டன.
திணை - முல்லை
துறை - பருவங் கண்டு இரங்கியது.
செய்யுள் -
இவணும் வாரா ரெவண ரோவெனப்
பெயல் புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை யிலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே
பதப்பிரிப்பு -
இளமை பாரார் வளம் நசையிச் சென்றோர்
இவணும் வாரார் எவரோ எனப்
பெயல் புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி நறும் தண் காரே.
பேசுபொருள் (பாடல் பாடப்பட்ட சந்தர்ப்பம்) -
பொருளீட்டச் சென்ற தலை மகன் குறித்த பருவத்தில் வராமை கண்டு வருந்திய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பொருள் -
தன்னுடையதும் என்னுடையதுமான இளமைப் பருவத்தின் அருமையை கருதாது, தலைவன் பிரிந்து சென்றது பொருள் மூலம் வரும் வளமான வாழ்க்கையை விரும்பியே. தலைவன் குறித்துச் சொன்ன கார்காலம் வந்துவிட்டது. ஆனால், அவன் இன்னும் இங்கு வரவில்லை. அவன் எங்குள்ளானோ? என்று கேட்டு, (கார்கால மழையால்) செழித்து வளர்ந்த முல்லையின் கொத்துக் கொத்தான அரும்புகளை ஒளிரும் பற்களாகக் கொண்டு கார்காலமானது (ஏளனமாகக்) சிரிக்கிறது.
பாடலின் சிறப்பு -
இளமை நிலையில்லாது போனால் மீளப்பெற முடியாது. ஆனால், பொருள் எக்காலத்திலும் தேடக்கூடியது. இளமையுள்ள காலத்தில் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கையை விட்டுவிட்டு, பொருளைத்தேடி இளமை கழிந்த பின் வந்து எதை அனுபவிக்க போகிறான்? என்று தலைவனின் அறியாமையை குறித்து கார்காலம் சிரிப்பதாக தன் கருத்தை ஏற்றிச் சொல்கிறாள் தலைவி.
நசைஇ - விரும்பி
எவனரோ - எவ்விடத்தில் உள்ளாரோ?
முகை - அரும்பு
எயிறு - பல்
இவண் - இவ்விடம்
பெயல் - மழை
இலங்குதல் - விளங்குதல்
நகுமே - சிரிக்குமே
குறுந்தொகை - 225 ஆம் செய்யுள்
ஆசிரியர் - கபிலர்
இவர் சங்ககால புலவர்களுள் ஒருவர். குறிஞ்சிப் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்றவர். ஒளவையார், பரணர், இடைக்காடர் முதலானோரின் சமகாலத்தவர். பாரி பேகன் போன்ற குறுநில மன்னர்களுடன் நட்போடு விளங்கியவர். 'வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்’ என்றும்,"பொய்யா நாவிற் கபிலன்' என்றும் புலவர்களால் பாராட்டப்பெற்றவர். ஐங்குறுநூறில் மூன்றாம் நூறும், பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தும் இவரால் பாடப்பட்டவை. இவை தவிர. நற்றிணையில் 20 செய்யுள்களும், குறுந்தொகையில் 34 செய்யுள்களும், அகநானூற்றில் 17 செய்யுட்களும், கலித்தொகையில் 27 செய்யுட்களும், புறநானூற்றில் 28 செய்யுட்களும் இவரால் பாடப்பட்டவை. குறிஞ்சிப்பாட்டு இவரால் இயற்றப்பட்டது.
திணை - குறிஞ்சி
துறை - திருமணத்தின் அவசியத்தை வலியுறுத்துதல் (வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி கூறியது)
கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற்
றினைபிடி யுண்ணும் பெருங்கன் னாட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்னவிவள்
ஒலிமென் கூந்த லுரியவா நினக்கே.
பதப்பிரிப்பு -
கன்று தன் பயமுலை மாந்த மூன்றில்
தினைப்பிடி உண்ணும் பெருங்கல் நாட
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென்சீர் கலிமயிற்
கலாவத்து அன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவால் நினக்கே.
பேசுபொருள் (பாடல் பாடப்பட்ட சந்தர்ப்பம்) -
தலைவியோடு கொண்ட உறவை மறவாது, அவளை விரைந்து மணம் செய்து கொள்ளுமாறு தோழி தலைவனை வற்புறுத்தல். இது வரைவு கடாவுதல்.
பொருள் -
யானைக்கன்று. தன் தாய் மடியில் பால் அருந்திக் கொண்டிருக்கும் போதே, வீட்டின் முற்றத்தில் விளைந்த தினையினை உண்ணுதற்கு இடமாகிய பெரிய மலைநாட்டின் தலைவனே. கேடு வந்துற்றபோது விருப்புடன் ஒருவர் செய்த உதவியை, அரசு கட்டில் அமரும் சிறப்புப் பெற்றபின் மறந்த அரசனைப் போல, (களவுக் காலத்தில்) உனக்கு நாம் செய்த நன்மையை/உதவியை மறவாது ஒழுகுவாய் ஆயின், தலைவியின் உடைய, மெல்லிய மயில் இறகு போன்ற கூந்தல் உனக்கே உரிமை உடையதாகும்.
தலைவியின் மதிநுட்பம் -
1. தலைவனின் ஆற்றலை உள்ளுறை இறைச்சியூடாக விளக்குதல்
2. உவமையூடாகத் தலைவன் நன்றி மறக்காது. தனக்குரிய கடமையைச் வேண்டும் என்று வற்புறுத்தல்
தனது கருத்தை வலியுறுத்துவதற்காக தோழி கையாண்டு தலைவனது செயல்களை விளக்குகிறாள். உவமை. இறைச்சி என்பவற்றைக்
1. பெண்யானை முற்றத்துத் தினையைத் தின்றபடியே தன் கன்றுக்குப் பாலூட்டுகின்றது. அங்ஙனமே நீயும் பொருள் தேடும் உன் கடமையை நிறைவேற்றுவதோடு, இவளது நலனையும் பேண வேண்டும். (இவ்வாறு குறிப்புத் தோன்றலினால் இது இறைச்சி அணியாகும்)
2. தலைவனே. நீ இதுவரை தலைவியிடம் அனுபவித்த நலங்களை மறந்தவனாக. அவளை விட்டுச் சென்று விடாமல், அவளை மணமுடித்து இல்லறம் நடத்துவாய் எனின்,அவள் மகிழ்வாள். அழகோடு துலங்குவாள். அவளது அழகு உனக்கு உரியதாய் அமையும். (நீ பிரியின் அவள் துன்புறுவாள். அழகிழப்பாள். அவளது அழகு உனக்கு உரியதல்லாததாக ஆகி விடும் என்பது உட்கருத்து)
3. தான் பலமிழந்து இருந்த காலத்தில் பிறரின் உதவியைப் பெற்று அரசு கட்டில் ஏறிய பின், தனக்கு முன்பு உதவி செய்தவர்களை மறந்து விடும் மன்னன் போல நன்றி மறந்தவனாக நீ அமையவில்லை எனில், தலைவியின் நலமெல்லாம் உனக்கு உரியதாகும் என்னும் தோழியின் அறிவுரையில் தலைவன் தலைவியைப் விட்டுப்பிரிவது அறமன்று என்ற கருத்து தொனிக்கின்றது.
இதன்மூலம் விரைவாக தலைவியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.
தோழியின் மதிநுட்பம் -
தலைவனது செயலை யானையின் செயலுக்கு உவமித்து, குறிப்பின் மூலம் அவன் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துதல்
நன்றி மறந்தவரது செயற்பாட்டை எடுத்துக்கூறி. தலைவனது தற்போதைய நிலையை எடுத்துக்காட்டல்
இவற்றின் மூலம் தலைவனது கடமையையும், பொறுப்பையும் எடுத்து விளக்குதல்
பிடிபெண் - யானை
கெட்டித்து - கேடு நேர்ந்த இடத்து
கலாபம் தோகை - அல்லது பீலி
முன்றில் - முற்றம்
பெருங்கல் நாடு - பெரிய மலை நாடு
கலிமயில் - ஆரவாரமிக்க மயில்
கட்டில் - அரசு கட்டில் அல்லது அரியணை
குறுந்தொகை - 226 ஆம் செய்யுள்
ஆசிரியர் - மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார்
மதுரையைச் சார்ந்தவராகவும், ஏடெழுதும் பணியில் இருந்தமையாலும், மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் என அழைக்கப்பட்டவர். சேந்தன் என்பாரின் மகனாகிய இவர் குறிஞ்சி, முல்லை. நெய்தல் திணைச் செய்யுள்களைப் பாடியுள்ளார். நற்றிணை 02 பாடல்கள். குறுந்தொகை 03 பாடல்கள், அகத்திணை 02 பாடல்கள் முதலான நூல்களில் இவரது பாடல்கள் இடம்பெறுகின்றன.
திணை - நெய்தல்
துறை - ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது.
பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல் வனப்பெய்திய தோளும் பிறையென
மதிமயக் குறூஉநுதலு நன்றும்
நல்லமன் வாழி தோழி யல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே.
பதப்பிரிப்பு -
பூவொடு புரையும் கண்ணும் வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதிமயக் குறூஉம் நுதலும் நன்றும்
நல்மன் வாழி தோழி அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண்பூக்
குருகு என மலரும் பெரும் துறை
விழிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
பேசு பொருள் -
பிரிந்த தலைவன் திரும்பி வந்து மணமுடிக்கும் வரையிலான பிரிவுத்துயரை தலைவி தாங்க மாட்டாள் என கருதி வருந்திய தோழியை நோக்கித் தலைவி கூறியது.
தலைவனைப் பிரிய முன்னர் இருந்த தலைவியின் அழகினை. உவமையணி மூலம் ஆசிரியர் விபரிக்கின்றார்.
இவளது பூவை ஒத்தனவாய் விளங்கும் கண்கள்
மூங்கிலைப் போல அழகும் வெற்றியும் பெற்ற தோள்கள்
பிறை என்று சொல்லும் படியாக. கண்டார் அறிவை மயங்கச் செய்யும் நெற்றி
பொருள் -
இராக்காலங்களில் மெல்லிய அலைகளால் தாக்கப்படும் தாழை மரங்களிலே, வெண்ணிறமான பூக்கள் கடற்பறவைகள் போல மலர்ந்து காட்சி அளிக்கின்ற பெரிய துறையை உடைய விரிந்த கடல்நிலத் தலைவனோடு இவள் சிரித்துப் பழகுவதற்கு முன்பு, பூவையொத்த கண்ணும் மூங்கிலை ஒத்த தோளும் பிறையை ஒத்ததான நெற்றியும் பெரிதும் நன்றாய் அமைந்திருந்தன.
தாழையின் வெண்ணிறமான பூக்கள் வெண்ணிறமான கடற் பறவைகள் போலத் தோன்றுகின்றன என்பதன் மூலம் தாழம்பூக்களைக் குருகு எனக் கருதிப் பிறர் அவற்றைக் கொய்து பயன் கொள்ளாதது போல. தலைவனும் தலைவியின் உண்மை நிலையினை உணராது திருமணம் செய்யாது அவளது அழகையும் வாழ்க்கையையும் வீணாக்குகிறான் என்பது குறிப்புப் பொருள்.
"அல்கலும் தயங்குதிரை பொருத தாழை வெண்பூ என்பதன் மூலம் தலைவி இரவுதோறும் விரக வேதனையால் அலைக்கப்படுதல் குறிப்பால் உணர்த்தப்படுகின்றது.
நெய்தல் நிலச் சிறப்பு -
அகன்ற நெய்தல் நில நீர்ப்பரப்பு, பெருந்துறை விரிநீர்" எனச் சிறப்பிக்கப்படல்
தாழையின் வெண்ணிறப் வெண்ணிறப் பூவை நாரை பூ நாரைக்கு உவமிக்கப்படுகின்றது. தாழையினது எனக் கருதி துய்க்கப்படாது விடுபடுதல் போல, துய்க்கப்படாது வாழும் தலைவியின் நிலை குறிப்பால் உணர்த்தப்படல்.
புரைதல் - ஒத்தல்
வேய் - மூங்கில்
விறல் - வெற்றி
அல்கலும் - இரவெல்லாம்
நுதல் - நெற்றி
திரை - அலை
குருகு - நாரை / கடற்பறவை
பெருத - மோதிய
துறை - அடைகரை
சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன்
நுகாஅ வூங்கே - மகிழ்வதன் முன்சிரித்து / மகிழ்வதன் முன்
முன் நகுதல் - சிரித்தல் / மகிழ்தல்
குறுந்தொகை - 258 ஆம் செய்யுள்
ஆசிரியர் - பரணர்
கடைச்சங்கப் புலவரான இவர் எண்பத்திரண்டு பாடல்களைப் பாடியவர். சோழன் உருவப்பஃதேர் இளஞ்சேட் சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், வையாவிக் கோப்பெரும் பேகன் முதலான மன்னர்கள் பலரைப் பாடியுள்ளார். கபிலரின் நண்பராக விளங்கியர்.
திணை - மாருதம்
துறை - வாயில் நேர்ந்தது, வாயில் மறுத்தது
வாயில் நேர்ந்தது - பரத்தையிடம் சென்ற தலைவன், தலைவியிடம் வந்து கபாடம் / கதவு / கடை திறக்கக் கேட்டல், வாயில் மறுத்தது - தலைவன் / தோழி ஊடல் கொண்டு கடை திறக்க மறுத்தல்
வாரலெஞ் சேரி தாரனின் றாரே
அலரா கின்றாற் பெரும காவிரிப்
பலரொடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்துகோட் டியானைச் சேந்தன் றந்தை
அரசியலம் புகவினங் கோட்டு வேட்டை
நிரைய வொள்வா ளிளையர் பெருமகன்
அழிசி யார்க்கா டன்னவிவள்
பழிதீர் மாணலம் தொலைவன கண்டே
பதப்பிரிப்பு -
வாரல் எம் சேரி தாரல் நின் தாரே
அலரா கின்றால் பெரும காவிரிப்
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அம் கோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே
பேசுபொருள் -
பரத்தையிடம் சென்று வந்த தலைவன் மேல் தலைவி கொண்ட ஊடல், தோழியால் தலைவனுக்கு எடுத்துரைக்கப்படல்,
பொருள் -
பெருமானே, பலரும் வந்து நீராடும் காவிரியின் நீர்த்துறையின் கரையிலே, மருத மரத்தில் கட்டப்பட்ட நிமிர்ந்த கொம்புகளோடு/தந்தங்களோடு கூடிய யானைகளையுடையவன் சேந்தன். சேந்தனது தந்தை, கள்ளாகிய உணவையும் அழகிய விலங்குக் கூட்டங்களை வேட்டையாடும் தொழிலை உடைய அழிசி என்பனனாவான். அந்த அழிசி பகைவருக்கு நரகத்தைப் போலத் துன்பம் தரும் ஒளிபொருந்திய வாளையுடையவன். இளைய வீரர்களுக்குத் தலைவனுமானவன். அழிசியின் ஊரான ஆர்க்காடு என்னும் ஊரைப் போன்ற இவளுடைய (தலைவியினுடைய) குற்றமற்ற மாட்சிமையுடைய நலங்கள் அழிதல் கண்ட பின்பாவது எம் சேரிக்கு வருவதனை நிறுத்திக் கொள்வாயாக. உனது மாலையைத் தருதலையும் கைவிடுக. உனது வருகையால் தலைவிக்குப் பழிச்சொல் உண்டாகின்றது.
உவமையணி கையாளப்படல் -
அழிசி என்பவனின் ஆர்க்காடு நகரம், தலைவியின் குற்றமற்ற மாட்சிமையுடைய நலங்களுக்கு ஒப்பிட்டுக் காட்டப்படல்.
சேந்தன் யானை வேட்டுவனான அழிசியின் மகன். சோழர்களுக்காக காவிரிப் பெருந்துறை அருகே, யானைகளை வசப்படுத்துபவன். கோடை பொருநனாகிய கடிய நெடுவேட்டுவன் போல ஒரு படைத்தலைவன். இவன் சோழருக்குரியவன்.
சேரி - வாழிடம்
அலர் - பழிச்சொல்
பெருந்துறை - பெரிய நீர்த்துறை
தார் - மாலை
பெரும - தலைவனே
மருது - மருதமரம்
கோடு - கொம்பு / தந்தம்
பிணித்த - கட்டிய
அரியல் - கள்
தொலைதல் - அழிதல்/குறைதல்
நிரயம் - நரகம்
நீரிய ஒள் வாள் - பகைவருக்கு நரக வேதனைச் செய்யும் ஒளி படைத்த வாள்
நற்றிணைச் செய்யுள் -
சங்ககாலத்துச் செய்யுள்களின் தொகுதிகளான எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாக நற்றிணை இடம்பெற்றுள்ளது. நானூறு செய்யுள்களைக் கொண்டுள்ளதால் நற்றிணை நானூறு எனவும் குறிப்பிடப்படுகின்றது. அகத்திணை சார்ந்த ஒன்பதடியைச் சிற்றெல்லையாகவும் பன்னிரண்டடியைப் பேரெல்லையாகவும் கொண்ட அகவல் யாப்பிலான செய்யுள்களைக் கொண்ட நூல் இதுவாகும்.
02. நற்றிணை - 172
ஆசிரியர் - பெயர் தெரியவில்லை.
திணை - நெய்தல்
துறை - பகற் குறியில் சந்திக்காது, விரைந்து மணம் செய்து கொள்ள வேண்டியதைத் தோழி வற்புறுத்தல்.
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இரங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவுமா ருளவே.
பதப்பிரிப்பு -
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்
துறைகெழு கொண்க நீ நல்கின்
நிறைபடு நீழல் பிறவுமா உளவே.
பேசுபொருள் -
பகலில் தலைவியைச் சந்திக்க வந்த தலைமகனை நோக்கி, அவ்வாறு சந்திப்பதிலுள்ள இடஞ்சலை விளக்கிய தோழி மணமுடித்துக் கொள்ளுமாறு அவனை வலியுறுத்தியது.
செய்யுள் விளக்கம் -
தலைவியோடு பகற்குறியில் சந்தித்தலைத் தவிர்த்து. விரைவாக தலைவியை மணஞ்செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை, தலைவனுக்குத் தோழி உணர்த்துதல்.
பொருள் -
புதியராய் வந்த பாணர்களது மெல்லிசை முழக்கைப் போல, வலம்புரிச்சங்கினது வெள்ளிய கோடானது ஒலித்துக் கொண்டிருக்கின்ற, நீர் விளங்கும் கடற்றுறை பொருந்திய நாட்டின் தலைவனே, விளையாட்டை விரும்பும் ஆய மகளிரோடு வெண்மணலிடத்தே புன்னைக் காய்களை அழுத்திய படியாக விளையாடியிருந்தோம். அவற்றுள் ஒன்றை எடுக்க மறந்து போனோம். அங்ஙனம் யாம் அழுத்திய புன்னைக்காய் முளைவிட்டுத் தோன்றியது. அதனை நோக்கி மகிழ்வுற்றோம்.
நெய் பெய்து, கலந்த பாலினைப் பெய்து அதனை இனிதாக வளர்க்கவும் செய்தோம். அதனைக் கண்டனள் எம் அன்னை. நெய் பெய்த பாலினைப் பெய்து வளர்த்தது இதுவாதலின் நும்மைக் காட்டிலும் சிறப்பானது. நுமக்குத் தங்கை போல்வது என்று கூறினாள். ஆதலினாலே இப்புன்னையின் நிழற்கிழாக நும்மோடு நகைத்து விளையாடி இன்புறுவதற்கு நாமும் நாணமடைகின்றோம். அவ்வாறன பிற புன்னை நிழல்கள் இலவாகலின். பகலில் வராது, அவளை வரைந்து கொள்வாயாக.
புன்னை எங்கள் தங்கை. தங்கையின் அருகிலே நின்று காதலனோடு சல்லாபிப்பது முறையானதன்று. நீங்கள் சல்லாபிப்பதற்கு இந்தப் புன்னையை விட, நிறைவான நிழலும் வேறு இல்லை. ஆகவே அவளோடு பேசி மகிழ விரும்பினால், அவளை மணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
பாடற் சிறப்பு -
உறவினராகிய புன்னை நிழற் கீழ் விளையாடி மகிழ்வதற்கு நாணமடைகின்றோம். என்று கூறுவதனால் தலைவன். தலைவி களவு ஒழுக்கத்தை (காதல்) ஊரார் அறிந்து கொள்வதாகிய அலர் தூற்றுதலையும் அதனாற் பகற் குறியிடத்து தலைவனைச் சந்திக்க அஞ்சுவதையும் கூறி, விரைவாகக் தலைவியை மணஞ்செய்து கொள்ளுமாறு தலைவனுக்கு தோழி கூறுகிறாள்.
தனது கருத்தை வலியுறுத்துவதற்கு, தோழி கையாளும் உபாயங்கள் -
புன்னை மரத்தை கருப்பொருளாகக் கொண்டு. அதன் காரணமாக தலைவி பகற்குறிக்கு அஞ்சுவதைக் குறிப்பிடல் •தலைவன் ஊரறியத் திருமணம் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தல்.
அரும்பதங்கள் -
காழ் - புன்னை
அகைய - வேருன்றி முளை தோன்ற
நெய் பெய் தீம்பால் - நெய் கலந்த இனிய பால்
நாணுதம் - வெட்கப்படுகிறோம்
நுவ்வை - நும்முடன் பிறந்த தங்கை (நுமது தங்கை)
வுலம்புரி - வலம்புரிச்சங்கு
வலம்புரி வான்கோடு - வெள்ளிய வலம்புரிச் சங்கு
நரலும் - ஒலிக்கும்
இலங்கு - விளங்கிய
விருத்திற் பாணர் - புதியராய் வந்த பாணர்
விளர் இசை கடுப்ப - மெல்லிய இசைப்பாட்டு ஒலி
விளர் - மென்மை / இளமை
03. அகநானூறு
இது எட்டுத்தொகை நூல்களுள் அகத்திணை கூறும் 400 செய்யுட்களைக் கொண்டுள்ளது.12 அடியை சிற்றெல்லையாகவும், 31 அடியை பேரெல்லையாகவும் உடைய பாடல்களைக் கொண்டுள்ளதால் நெடுந்தொகை எனவும் அழைக்கப்படுகின்றது. 145 புலவர்கள் அகநானூறு பாடல்களைப் பாடியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அகநானூறு - 154
ஆசிரியர் - பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்
திணை - முல்லை
துறை - வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது.
படுமழை பொழிந்த பயமிகு புறவின்
நெடுநீர் அகல பகுவாய்த் தேரை
சிறுபல் லியத்தின் நெடுநெறிக் கறங்கக்
குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண்ணயிர் வரிப்ப.
வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன
தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழத்
திரிமருப் பிரலை தெள்ளறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதியக்
காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர்மிகுபு
நம்வயிற் புரிந்த கொள்கை
அம்மா அரினையைத் துன்னுகம், விரைந்தே!
பேசுபொருள் -
தலைவியைப் பிரிந்து வினை மேற்சென்ற தலைவன். வினை முடிந்து திரும்ப வேண்டிய கார்காலமும் வந்துவிட்டதால், பாகனை அழைத்துக் கார்கால வருகை பற்றிக் கூறித் தேரை விரைந்து செலுத்துமாறு கூறியது.
செய்யுள் விளக்கம் -
தலைவியைப் பிரிந்து செயல் காரணமாகச் சென்ற தலைவன் வினை முற்றி மீண்டு வருவதான கார்காலம் வந்து விட்டதால், தலைவியைக் காணும் விருப்பினனாகத் தனது தேர்ப்பாகனிடம் "விரைந்து தேரைச் செலுத்துவாயாக" இதுவாகும். எனக் கூறுவதான செய்யுள்
பொருள் -
மிகுந்த மழை பொழிந்து பசுமைப் பயன் மிகுந்துள்ள முல்லை நிலத்தின் நீர் நிறைந்துள்ள பள்ளங்களில், பிளந்த வாயினையுடைய தவளைகள், சிறிய பலவாய வாத்தியங்கள் ஒலிப்பது போல நீண்ட வழியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும். குறுகிய புதர்போல விளங்கும் பிடவஞ் செடிகளின் நீண்ட காம்புகளையுடைய பூக்கள் செம்மண் நிலத்தின் நுண்ணிய மணலில் உதிர்ந்து அழகு செய்திருக்கும்.
கடுங் கோபங் கொண்ட பாம்பின் படமானது மேல்நோக்கி விளங்குவது போலக் குளிர்ச்சியும். வாசனையும் மிக்க காந்தள் மலரின் மொட்டுக்கள் கட்டவிழ்ந்து மலர்ந்திருக்கும். முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண் மானானது தெளிந்த சுனை நீரினைக் குடித்தபடி தன் அழகிய பெண் மானுடன் கூடி இன்பமுடன் தங்கியிருக்கும்.
இவ்வாறு காடே அழகு பெற்று விளங்கும் குளிர்ந்த பருவத்தில், நாம் செல்ல வேண்டிய நீண்ட வழியில் ஓடுகின்ற வேகத்தில் குறைவுபடாத, கொய்யப்பட்ட பிடரி மயிரினை உடைய குதிரைகளின் கால்களில் வந்து பொருந்தும் அளவிற்குத் தாழ்ந்து தொங்கும் மாலைகளின் மணிச் சதங்கைகள் அசைந்து ஒலிக்கும்படி விரைவாகத் தேரினைத் செலுத்துவாயாக. சிறப்பு மிகும்படி நம்மிடம் விரும்பிய கொள்கையை உடையவளும், அழகிய மாமை நிறத்தை உடையவளுமாகிய நம் தலைவியை விரைவாகச் சென்றடைவோமாக.
04. புறநானூறு
சங்ககாலத்தைச் சார்ந்த புலவர்கள் பாடிய புறத்திணை சார்ந்த நானூறு செய்யுள்களின் தொகுப்பே புறநானூறு என்னும் நூல் ஆகும். வீரம், கொடை முதலிய பண்புகளையும் ஒழுகலாறுகளையும், நிலையாமைக் கோட்பாடுகளையும் கூறுவனவாக இச்செய்யுள்கள் அமைந்துள்ளன. இச்செய்யுள்கள் சிலவற்றின் பாட்டுடைத் தலைவர்களாக சங்ககாலத்து தமிழகத்து சேர, சோழ, பாண்டிய வம்சத்து முடி மன்னர்களும் பாரி.ஓரி முதலிய குறுநிலத் தலைவர்களும் பிறரும் விளங்குகின்றனர். சங்ககால மக்களின் வாழ்வியல் அம்சங்கள் இச்செய்யுள்களினூடு நன்கு புலனாகின்றன.
புறநானூறு
ஆசிரியர் - தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
திணை - காஞ்சி
துறை - வஞ்சினக் காஞ்சி
தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனால் பாடப்பெற்றது. இவனுக்கும் பதை கடும்போர் மூண்டது. அரசர்கள் எழுவருக்குமிடையில் தலையாலங்கானம் என்னுமிடத்தில் பகை அரசர் போர்க்களத்தில் எதிர்ப்படக் கூறிய புல்லிய வார்த்தைகளை (சிறு வார்த்தைகள்) பொறாது, கடுங்கோபமுற்று வெகுளியும் எள்ளலும் வெளிப்படுவதாகிய வஞ்சின வார்த்தைகளால் பாடப்பெற்றது. இப்பாடல்.
நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளைய னிவனென வுளையக் கூறிப்
படுமணி யிரண்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையுந் தேரு மாவும்
படையமை மறவரு முடையம் யாமென்
றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினஞ்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத்தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பி
குடிபழி தூற்றங் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா வின்மையா னுறவே.
பதப்பிரிப்பு -
நகுதக் கனரே நாடும் கூறுநர்
இளையன் இவன் என உளையக் கூறி
படுமணி இரட்டும் பா அடிப் பணை தாள்
நெடு நல் யானையும் தேரும் மாவும்
படை அமை மறவரும் உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அருஞ் சமம் சிதைய தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப்படேன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி
குடிபழி தூற்றங் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பில்
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போம் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே.
பொருள் -
"இவனுடைய நாட்டை உயர்த்திப் பேசுபவர்கள் நகைப்புக்கு இடமானவர்கள்”. இவன் மிகவும் இளையவன் என்றெல்லாம் என் மனம் நோகும்படி கூறி, எனது பெருவலியைப் பொருட்ப்படுத்தாது, ஒலியெழுப்பும் மணிகள் இருபுறமும் கட்டப்பட்டதும் பரந்த அடியோடு கூடிய பருத்த காலை உடையதுமான உயர்ந்த யானை, தேர், குதிரை என்பவற்றையும் ஆயுதங்கள் பொருந்தப்பெற்ற போர்வீரர்களையும் கொண்டவர்கள் நாம்,என்று செருக்கோடு ஏளன வார்த்தைகளைப் பேசிய சினம் மிகுந்த அரசர்களை அரிய போரிலே சிதறும்படியாகத் தாக்கி, அவர்களது முரசத்தோடு அவர்களையும் ஒன்றாகக் கைப்பற்றுவேன். அவ்வாறு செய்யவில்லையெனில், பொருந்தியமைந்த என் நிழலிலே (பாதுகாப்பிலே)வாழ்பவர்கள் சென்று தங்குதற்குரிய வேறு நிழலைக் காணாதவர்களாக, எம் அரசன்,"கொடியவன்" என்று கூறிக் கண்ணீர் விட்டு, குடிகள் பழி தூற்றுகின்ற கொடுங்கோலை உடையவனாகுவேன். சிறந்த புகழையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட உலகத்தோடு நிலைபெற்ற பலராலும் புகழப்படுகின்ற சிறப்பினை உடைய புலவர்களால் என் நாட்டு எல்லை பாடப்படாததாகட்டும். என்னால் பாதுகாக்கப்படுவோர் துயருறுமாறு என்னிடம் இரப்போருக்கு ஒன்றும் ஈயாதவாறு வறுமை என்னை வந்து அடையட்டும்.
அரும்பதங்கள் -
உளையக் கூறுதல் - வெறுப்பச் சொல்லுதல்
பணைத்தாள் - பெரிய கால்
மறவர் - வீரர்
சிறுசொல் - புல்லிய இழிந்த வார்த்தை
இறை - அரசன்
புரப்போர் - ஆதரித்துக் காப்பவர்
ஈயா இன்மை - கொடா வறுமை
மீக்கூறுநர் - மிகுத்துச் சொல்லுவார்
படுமணி - ஒலிக்கும் மணி
பாவடி - பரந்த அடி
(உறு) துப்பு - (மிக்க) வலிமை
சமம் - போர்
நிலைஇய - நிலைபெற்ற
புன்கண் - துயரம்
புறநானூறு - 101
ஆசிரியர் - ஔவையார் -
சங்ககாலத்துப் பெரும்புலவர்களுள் ஒருவர் ஒளவையார். பாரி, அதியமான் முதலான குறுநீல மன்னர்களுடனும் சேர, சோழ பாண்டியர்களோடும் பழகியவர். ஆயுள் நீடிப்புக்காக தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை அதியமான் தான் உண்ணாது, வயது முதிர்ந்து விளங்கிய ஔவையாருக்குக் கொடுத்தமை ஔவையார் பெற்றிருந்த பெருமதிப்பினைக் காட்டுவதாகும். புறநானூற்றிலும் ஏனைய தொகை நூல்களிலும் அவரியற்ற 59 செய்யுட்கள் உள்ளன. அவை அவரது புலமைத் திறனை மட்டுமன்றிப் பரந்த உலகியல் அறிவினையும் ஆழ்ந்த வாழ்க்கை அனுபவத்தையும் காட்டுவதாகும்.
திணை - பாடாண் திணை -
பாடாண் திணை என்பது புகழ்ந்து பாடத்தக்க ஆண்மகனின் ஒழுகலாறு. ஒருவனுடைய வீரம், கொடை. தண்ணளி, முதலானவை புகழ்ந்து பாடப்படுதல்.
துறை - பரிசில் கடாநிலை -
பரிசில் கடாநிலை என்பது யாவரும் பரிசில் பெற்றார். யான் பெற்றிலன் எனத் தனது பரிசில் பெறும் விருப்பத்தைப் பரிசில் கொடுப்போனிடத்தே புலப்படுத்திக் கூறுதல், பரிசிலரை விட்டு நீங்காமல் இருக்கும். தலைவனுக்குப் பரிசில் விரும்பியோன் தன் சுற்றத்தினரது துன்பம் முதலியவற்றைக் கூறி பரிசில் கேட்டு நின்ற நிலை, பரிசில் தாழ்ப்பினும் தருதல் தப்பாது என்று உரைத்து அதனைத் தருமாறு குறிப்பால் வேண்டுதல் முதலானவை ஆகும்.
பாடல் பாடப்பட்ட சந்தர்ப்பம் -
ஒளவையார் அதியமானிடம் பரிசில் வேண்டிப் பாடிச்சென்ற சமயம் அரசன் அதனை உடன் வழங்கவில்லை. அதியமான் ஔவையாரிடம் பெரும் மதிப்பும் விருப்பும் உடையவன். பரிசில் வழங்கத் தாமதித்த போதும் ஔவையார் அதியமானின் உண்மை உள்ளத்தைக் கருத்திற் கொண்டு, கொடையின் நிச்சயத்தன்மையை தன் நெஞ்சிற்கு உரைப்பதாய் அமைகிறது.
செய்யுள் -
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ
அணிபூ ணணிந்த யானை யியறேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினு நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்கவன் றாளே.
பதப்பிரிப்பு -
ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ
அணி பூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டிடை வைத்த கவளம் போல
கை அகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே.
பாடலின் பொருள் -
நாம் ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல பலநாளும் மீளமீளப் பலரோடு கூடச் சென்றாலும் முதல் நாளினைப் போலவே விருப்பமுடன் உதவும் பண்புடையவன். அணிகலன் அணிந்த யானையையும் தேரையும் உடையவன் அதியமான். அவன் பரிசில் தரக் காலம்சிறிது தாழ்ப்பினும் தாழ்த்தாவிடினும் அப்பரிசில் யானையினது கொம்பினிடையே வைக்கப்பட்ட கவளம் போல நம் கையகத்தது அது தப்பாமல் கிடைக்கும். உண்ண ஆசைப்பட்ட நெஞ்சே,நீ பரிசிலுக்கு வருந்த வேண்டாம். அவன் தாள் வாழ்க.
அதியமான் நெடுமானஞ்சியின் கொடை மாண்பு சிறப்பிக்கப்படல் -
ஒருநாள், இருநாள். பலநாள், சென்றாலும் பலரோடு சென்றாலும் முதலில் சென்ற நாள் போன்ற விருப்பினன் என்றதனால் அதியமானின் சலியாத கொடைத்திறம் புலனாகின்றது.
உவமை அணியினூடாகக் கொடைச்சிறப்பு கூறப்படல் -
"கோட்டிடை வைத்த கவளம் போல..." யானையினது கோட்டிடை வைத்த கவளம் எப்படியும் அதன் வாயத்தே போய்ச் சேரும். அது போல காலம் தாழ்ந்தாமல் தாழாவிட்டாலும் எப்படியும் கைவந்து சேரும்.
அரும்பதங்கள் -
பூண் - அணிகலன்
கோடு - கொம்பு
கவளம் - உணவுத்திரள்
ஏமாந்த - ஆசைப்பட்ட
பாடப்பட்டோன் சிறப்பு -
அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களில் ஒருவன். தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை தன் நன்மை கருதாது ஒளவையாரின் நன்மை கருதி அவருக்குக் கொடுத்தவன். இவன் சேரமானின் உறவினன். கோவலூரை வெற்றி கொண்டவன்.
புறநானூறு - 142
ஆசிரியர் - பரணர்
திணை - பாடாண்
துறை - இயன்மொழி வாழ்த்து
பாடப்பட்டோன் - வையாவிக் கோப்பெரும் பேகன் -
பாடல் பாடப்பட்ட சந்தர்ப்பம் - கடையேழு வள்ளல்களில் ஒருவனான வையாவிக் கோப்பெரும் பேகனைப் புகழ்ந்து பரணர் பாடியது.
அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான்பிறர் படை மயக் குறினே!
பொருள் -
நீரற்ற குளத்தில் சொரிந்தும், அகன்ற வயலில் பெய்தும், வேண்டிய இடத்துத் தந்து உதவாது கடலிற் பெய்தும், திட்டமிலா இயல்புடைய மழையைப் போல, மதச் செருக்குற்ற யானையையும், வீரக் கழலணிந்த கால்களையும் உடைய பேகன், கொடையில் அறியாமையால் முறைகேடு அமைதலன்றிப் பிறரோடு போரிடும் போது முறைகேடு அமைதல் இல்லாதவன்.
பாடலின் சிறப்பு -
வயலில், குளத்தில், களர் நிலத்தில் ஒரே தன்மையாய் பெய்யும் மழையைப் போன்று. இரவலர் எத்தகுதியினராயினும் வேண்டியவரா, வேண்டாதவரா, நல்லவரா, கெட்டவரா, எனப் பாராது வரையாது கொடுக்கும் இயல்பினன் பேகன் என இச் செய்யுள் குறிப்பிட்டுள்ளமை அவனது கொடைச்சிறப்பைக் காட்டுகின்றது.
உவமை அணியினூடாகக் கொடைச்சிறப்பு கூறப்படல் -
"வரையா மரபின் மாரி போலக்" என்னும் வரிகளில் உவமையணி கையாளப்பட்டுள்ளது. இங்கு அளவில்லாமல் அறியாமையுடன் கொடைமடம் படும் பேகனின் கொடைச்சிறப்பு திட்டமிலா எவ்விடத்தும் பெய்யும் மாரி மழைக்கு உவமித்துக் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் BA (Hons)
நன்றி
0 Comments