செய்ந்நன்றியறிதல்
குறள் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
மு.வ விளக்க உரை - தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
கலைஞர் விளக்க உரை - “வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி” என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா
குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
மு.வ விளக்க உரை - உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்
கலைஞர் விளக்க உரை - தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
குறள் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது
மு.வ விளக்க உரை - இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
சாலமன் பாப்பையா விளக்க உரை - இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
கலைஞர் விளக்க உரை - என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது
குறள் 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
மு.வ விளக்க உரை - ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்
கலைஞர் விளக்க உரை - ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்
குறள் 105
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
மு.வ விளக்க உரை - கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.
கலைஞர் விளக்க உரை - உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்
குறள் 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
மு.வ விளக்க உரை - குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
சாலமன் பாப்பையா விளக்க உரை - உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
கலைஞர் விளக்க உரை - மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது
குறள் 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு
மு.வ விளக்க உரை - தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்
கலைஞர் விளக்க உரை - ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது
குறள் 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
மு.வ விளக்க உரை - ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்
கலைஞர் விளக்க உரை - ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது
குறள் 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்
மு.வ விளக்க உரை - முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை - முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
கலைஞர் விளக்க உரை - ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது
குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
மு.வ விளக்க உரை - எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை - எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை
கலைஞர் விளக்க உரை - எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
நன்றி
0 Comments