தமிழ் கட்டுரை - இன்றைய உலகில் பெண் - WOMEN IN TODAY IS WORLD


இன்றைய உலகில் பெண்


தமிழ் கட்டுரை - இன்றைய உலகில் பெண் - WOMEN IN TODAY IS WORLD

மாதர்கள் மானிடம் தழைக்க, இறைவன் படைத்த உயர்ந்த படைப்பினர் ஆவர். ஞாலத்தின் பொறுமையும், அழகுக் கோலத்தின் பெருமையும் பெற்ற பெண்களாலே மானிட சமுதாயம் வெற்றி நடை போடுவதை காண முடிகின்றது. உலக சரித்திரத்தில் மனிதர்களின் சுதந்திரம். உரிமைகள் சிறந்த நிலையை கடந்து வந்தமைக்கு பெண்களின் வளர்ச்சியே சான்றாகின்றது. அக்காலத்திலும், இக்காலத்திலும், எக்காலத்திலும் பெருமை சேர்த்த தரப்பினராக பெண்கள் விளங்குகின்றனர் என்றால் அது மிகையாகாது. அரசியலில் சாணக்கியம் பெற்ற பெண்கள், அறிவியலில் ஆதிக்கம் பெற்ற பெண்கள், பொருளியலில் புதுமை படைத்த பெண்கள். இலக்கியத்தில் எழுச்சி பெற்ற பெண்கள், கலைகளின் பொக்கிசமாய் விளங்கும் பெண்கள் என்றெல்லாம் மன மகிழ்ச்சியுடன் நாம் புகழ்ந்தாலும், சவால்களைக் கடந்தே பெண்கள் சாதனை புரிகின்றனர் என்பது நிதர்சனமாகும்.

அன்றைய உலகில் பெண்கள் பொதுவாக உயர்ந்த நிலை பெற்றிருந்தமையை காண முடிகின்றது. தாய்வழிக் கோட்பாட்டு அறிஞர்களின் கருத்துப்படி ஆரம்ப நாகரிக வாழ்க்கையில் பெண்கள் தலைமை தாங்கிய சமுதாயம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. சான்றாக ராகுல சங்கிருத்தியயன் என்பவரின் "வொல்கா முதல் கங்கை வரை" எனும் நூலில் ஐரோப்பிய நாகரிகம். சிந்து வெளி நாகரிகம் முதலிய நாகரிகங்களில் பெண்கள் குடும்பங்களின் தலைமைத்துவத்தை வழிநடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

சங்ககாலத்தில் பெண்கள் பெருமரியாதையாக நடத்தப்பட்டதாக சான்றுகள் உள்ளன. ஔவையார் முதலிய பெண்பாற்புலவர்களும். அரசியரும் சிறந்த கௌரவத்துடனும், மரியாதையாகவும் வாழ்ந்துள்ளனர். பாரி பெற்றெடுத்த அங்கவை, சங்கவை முதலான மாதர்கள் சமூகத்தில் மாண்பு பெற்றிருந்தனர். புலவர்களில் ஔவையாருக்கு தனிமரியாதை இருந்துள்ளது. அதியமான் நெடுமானஞ்சி எனும் சேரமன்னன் ஔவையாரோடு சேர்ந்து தமிழும் நீண்ட நாள் வாழ்வதற்காக அரிய மருத்துவ குணம் படைத்த மலையில் விளைந்த கருநெல்லிக்கனியை பரிசாக அளித்ததாக இலக்கியம் இயம்புகின்றது. மன்னர்களுக்கிடையே ஒளவையார் தூது சென்றதாக புறநானூறு கூறுகின்றது.

சங்ககாலத்தில் பெண்கள் சவால்மிக்க வாழ்க்கை வாழ்ந்தமையையும் சான்றுகள் பல் எடுத்தியம்புகின்றன. உடன்கட்டை ஏறுதல், காளை அடக்குதல் முறையுடனான மணமுறை முதலியவற்றுடன் பரத்தமை தொழிலும் பெண்களுக்கு இழிவையே சுட்டிநிற்கின்றன. பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப் பெண்டீர் உடன்கட்டை ஏறியமை பற்றி புறநானூறு விளக்குவதுடன், பரத்தையரில் சேரிப்பரத்தை. காமப் பரத்தை, காதல் பரத்தை எனும் வகையினர் இருந்ததாகவும் இலக்கியங்கள் விளக்குகின்றன.

இடைக்காலத்தில் பல காரணங்களால் மாதர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியது. சமூக. அரசியல், பொருளாதார, அந்நியப் படையெடுப்புக்களால் விளிம்புநிலை பெண்களின் வாழ்க்கை பெரு இன்னல் நிறைந்ததாக மாறியது. சொத்துரிமை, பேச்சுரிமை, கல்வி, தொழில். அடிப்படை மனித உரிமைகளில் பெண்கள் சீரழிவுக்கு ஆளாகினர். சிறுவர் திருமணம், மண விலக்கு, சீதனம், உடைமை மறுப்பு. மறுமண மறுப்பு. சாதிப்பாகுபாடு, பெண்ணடிமைத்தனம் என்றெல்லாம் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தனர், இவை ஆணாதிக்கத்தின் நிலையை சுட்டுவதாக அமைந்தன.

சோழர்காலத்தில் பெண்கள் யர்நிலை பெற்றிருந்தமைக்கு இராஜராஜ சோழன் தமக்கையாரான குந்தவையின் ஆலோசனையின் பேரில் ஆட்சி நடத்தியமையும், சைவத்தைக் காக்க தஞ்சைப் பெருங்கோவில் போன்ற திருத்தலங்களை அமைத்து அறப்பணி ஆற்றியமையும் தக்க சான்றுகளாம். ஆனால் சோழர்காலத்தில் பெண்கள் அவமரியாதை பெற்றமைக்கு இக்கால ஔவையார் பாடிய "தையல் சொல் கேளேல்" எனும் செய்யுள் அடி சான்றாகின்றது. அத்துடன் பெண்கள் கலைகளின் நிமித்தம் அடிமைகளாக நடத்தப்பட்டமையும் சோழர்கால இலக்கியங்களில் அறியக்கிடக்கின்றது. நடனத்தொழிலுக்குரிய மாதர்கள், கோவிலுக்கு தொண்டாற்றும் குடும்பத்தைச் சேர்ந்த மாதர்கள் என்றெல்லாம் பல வகை அடிமைகளாக பெண்கள் இருந்துள்ளனர்.

இடையில் தோன்றிய பழமொழிகள் பல் பெண்களை இழிவுபடுத்துவதைக்காணலாம். "பெண்புத்தி பின்புத்தி”, “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?" "பொம்பிள சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்ச ஆச்சு" என அவை அமைகின்றன. பெண்களை பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கும் நிலையில் கொடுமையானது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்படும் நிலை இன்றும் மதுரை போன்ற பழங்கிராமங்களில் இல்லாமல் இல்லை. இந்தியாவில் மாமியார் கொடுமை, சீதனக் கொடுமை, உத்தரப் பிரதேசத்தில் தலித் இனப் பெண்கள் மீதான பாலியல் கொடுமை என்றெல்லாம் எம்மால் அடுக்கிக் கொண்டே போகுமளவுக்கு பெண்களின் நிலை மோசமாகத்தான் இருக்கின்றது.

இன்றைய நிலையில் பெண்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள், அவர்கள் அடைந்த சாதனைகள் என்பவற்றை நாம் ஆராய முன்னர் பெண்கள் பெற்றிருந்த இறுக்கமான சூழ்நிலையை எம்மால் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்திய தேசத்தில் பாரதியார் தோன்றி பெண்ணடிமைக்கு எதிராக பேசும் வரை இந்திய தேசம் பெண்களை கண்டு கொள்ள வில்லை. எரிமலைக் கவிஞரான சுப்பிரமணியப் பாரதியார் பெண்ணடிமையை நீக்குவதைப் பற்றி பல கவிதைகளில் விளக்கியுள்ளார். புதுமைப்பெண், பெண் விடுதலைக் கும்மி, பெண்மை, பாஞ்சாலி சபதம். எனப் பல தரப்பட்ட கவிதைகளில் பெண்ணைப் பற்றிப் பாடியுள்ளார். "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் -ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்களின் குணங்களாம்" என்றும் பாரதியார் பாடியதைக் குறிப்பிடலாம். ஆணும் பெண்ணும் நிகராக நடத்தப்பட வேண்டும். கற்பு ஆணுக்கும். பெண்ணுக்கும் பொதுவானது. பெண்ணாக விளங்குவது அன்னை பராசக்தி என்றும் கடவுளின் நிலையைக் கொடுத்து பாரதியார் போற்றியுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

எம் ஈழத்திருநாட்டிலும் பெண் பெருமை பேசும் இலக்கியப் படைப்புக்கள் எழுந்துள்ளதை திருகோணமலையைச் சேர்ந்த தி.த சரவணமுத்துப் பிள்ளை எனும் அறிஞர் பாடிய "தத்தை விடுதூது" மூலம் "பெண்ணைக் கூட்டிற் பசுங்கிளி போல் பூட்டி வைத்தார்..." எனும் வரிகளும், வ.அ இராசரெத்தினம் படைத்த ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கின்றது எனும் நாவல் வலியுறுத்தும் பெண் கல்வி பற்றிய செய்தியும் உறுதிப்படுத்துகின்றன.

பெண்களை போற்றும் நிலையில் இன்று மகளீர் தினம் அன்னையர் தினம் என பல சிறப்பு தினங்கள் கொண்டாடப் படுகின்றன. பெண்கள் இன்று விண்வெளியில் சாதிப்போராகவும், நோபல் பரிசை வென்றெடுப்போராகவும். உலக நாடுகளின் தலைவர்களாகவும், சட்டத்துறை வல்லுனர்களாகவும், அறிவியல் மேதைகளாகவும் திகழ்வதை காண முடிகின்றது. இந்திய விண்வெளி வீராங்கனைகளான மரணித்த கல்பனா சௌலா எனும் பெண்மணியும். சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரும், ரஸ்யாவின் வெலன்ரீனா தெரஸ்கோவா எனும் பெண்ணும் விண்வெளியில் சாதித்தமை சிறப்பிற்குரியது. இமய மலையின் சிகரத்தைத் தொட்ட யுங்கொ இசுவசி எனும் யப்பானியப் பெண்ணும், நோபல் பரிசு வென்றெடுத்த மேரி ஹியுரி, அன்னை தெரேசா, கொங்சாங் சூகி போன்றோரும், தற்கால அவுஸ்ரேலியா, நியுசிலாந்து. பங்களாதேஷ். தென்கொரியா. பிறேசில் நாட்டுத் தலைவர்களாக பெண்கள் விளங்கி அரசியலில் சாதித்தமையும், பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை பெற்ற தேசமாக எம் நாடு விளங்குவதையும். உலகத்தின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க எமது நாட்டவர் என்பதும் பெருமைக்குரியது.

எனவே "பெண்கள் நாட்டின் கண்கள்” என்பதற்கிணங்க, பெண்களின் எழுச்சி முழு உலகின் எழுச்சி எனவும், பெண்களின் வீழ்ச்சி முழு உலகின் வீழ்ச்சி எனவும் விளங்கி மானிடர்களாகிய நாம் ஆணையும். பெண்ணையும் சமமாக மதித்து வாழ தலைப்படுவோமாக.

ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் BA (Hons)

நன்றி.

Post a Comment

0 Comments