சுவாமி விபுலாநந்தர்
இலங்கையின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு மாநகருக்குத் தெற்காக சுமார் 35 கி.மீ. தூரத்தில் கடலோரமாக அமைந்துள்ளது காரைதீவு. அங்கு சாமித்தம்பி கண்ணம்மை தம்பதிக்குத் தவப்புதல்வனாக 03.05.1892 இல் சுவாமி விபுலாநந்தர் பிறந்தார். மயில்வாகனம் என்பது அவரது இயற்பெயர்.
மயில்வாகனம்,தனது கிராமத்திலேயே ஆரம்பக்கல்வியைப் பெற்றார். ஆங்கில வழிக் கல்வியை கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் பின் மட்டக் களப்பு புனித மைக்கேல் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். 1908இல் கேம்பிறிச் சீனியர் (Cambridge Senior) தேர்வில் சித்தியடைந்ததும், தான் கற்ற கல்லூரிகளில் சிறிதுகாலம் ஆசிரியராகக் கடமையாற்றினார். பின், கொழும்பு ஆங்கில அரசினர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிபெற்று, மீண்டும் ஆசிரியப் பணியில் இணைந்து கொண்டார். 1915இல் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து, விஞ்ஞானத்தில் பட்டயச் சான்றிதழ் (Diploma in Science) பெற்றார். கொழும்பில் இருந்த காலத்தில், தமிழறிஞர்கள் பலரோடு அவருக்குத் தொடர்பு உண்டானது. அவர்களிடம் பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணத்தையும் பயின்றார். வடமொழியிலும் தேர்ச்சிபெற்றார். அவற்றின் காரணமாக மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் பரீட் சைக்குத் தோற்றி, சிறப்புச்சித்தி எய்தினார். அதனால் 'பண்டிதர் மயில்வாகனனார்' என அழைக்கப்படலானார்.
மயில்வாகனனார் விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்றவராதலால் 1917இல் யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில், விஞ்ஞான ஆசிரியரானார். அங்கிருந்த காலத்திலேயே அவர், இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானமாணிப் பரீட்சைக்குத் தோற்றி (B.Sc) பட்டதாரியானார். 1920இல் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அப்பொறுப்பினை ஏற்குமாறு அவரை வேண்டியவர், அக்கல்லூரியின் முகாமையாளரும் சைவசிந்தாந்தப் புலமையாளருமான மு.திருவிளங்கம் அவர்கள். அறிவுநாட்டம் காரணமாக இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். திருவிளங்கம் அவர்கள், எதிர்பாராத வகையில் காலமாக நேர்ந்தது. அவரது இழப்பு, மயில்வாகனனாரின் உள்ளத்தில் தீவிரமான துறவு நாட்டத்தை ஏற்படுத்தியது. அக்காலகட்டத்தில் அவர் யோகர் சுவாமிகளோடும் தொடர்புபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகியலில் சலிப்புற்ற மயில்வாகனனார் தமது பதவியைத் துறந்து, 1922 இல் சென்னை நகரை அடைந்து, அங்கே மயிலாப்பூரில் அமைந்த இராமகிருஷ்ண மடத்தில் இணைந்து கொண்டார். அக்காலத்தில் இராமகிருஷ்ண சங்கம், உலகளாவிய நிலையில் செல்வாக்குப் பெற்றிருந்தது. அச்சங்கத்தைச் சார்ந்த துறவிகள் பலர், இலங்கை க்கு விஜயம் செய்து இந்துமக்கள் மத்தியில் ஆன்மிக உணர்வை வளர்த்தார்கள். மயில்வாகனனாரின் துறவு மனப்பான்மை வலுப்பெறுவதற்கு அவர்களது போதனை களும் காரணமாய் அமைந்தன. இராமகிருஷ்ண சங்கத்தினரால் உண்டான உத்வேகத்தின் காரணமாகவே தமது துறவு வாழ்க்கைக்கான களமாக இராமகிருஷ்ண மடத்தை அவர் தேர்ந்துகொண்டார்.
அங்கு, ஆன்மிகப் பயிற்சிகளை முறையாகப் பெற்றுக்கொண்ட மயில் வாகனனார், பிரபோதசைதன்யர் என்ற பிரமச்சரிய நாமத்தோடு பணியாற்றினார். இராமகிருஷ்ண சங்கம் வெளியிட்டுவந்த இராமகிருஷ்ண விஜயம் என்னும் தமிழ் மொழிமூலச் சஞ்சிகைக்கும் வேதாந்த கேசரி என்னும் ஆங்கில மொழிமூலச் சஞ்சி கைக்கும் ஆசிரியராக விளங்கி, ஆன்மிக அறிவினைப் பரப்பினார்.
பிரபோதசைதன்யர், 1924இல் சித்திராபௌர்ணமி தினத்தில் துறவறத்தை மேவினார். மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தின் தலைவராக விளங்கியவரும் இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர்களுள் ஒருவருமான சுவாமி சிவாநந்தர், அவருக்கு ஞானோபதேசம் செய்து விபுலாநந்தர் என்னும் துறவுத் திருநாமத்தைச் சூட்டினார். அன்றுமுதல் அவர் சுவாமி விபுலாநந்தர் ஆனார்.
தமது தீட்சாகுருவான சுவாமி சிவாநந்தரின் பணிப்பின்பேரில், 1925இல் இலங்கை திரும்பிய விபுலாநந்தர், இங்கே இராமகிருஷ்ண சங்கத்தின் சார்பாக பல பாடசாலைகளை மட்டக்களப்பு, திருகோணமலை முதலான இடங்களில் நிறுவினார். அவற்றுள் மட்டக்களப்பு கல்லடியில் நிறுவிய பாடசாலைக்கு சிவாநந்த வித் தியாலயம் என்று, தமது குருவின் பெயரையே சூட்டினார். இராமகிருஷ்ண சங்கத்தின் பாடசாலைகளின் பொது முகாமையாளராகவும் அவற்றுள் சிலவற்றின் அதிபராகவும் கடமையாற்றினார். இராமகிருஷ்ண சங்கத்தினூடாக இலங்கையில் வெளிவந்த விவேகாநந்தன் இதழின் ஆசிரியராகவும் 1926இலிருந்து கடமையாற்றினார்.
தமிழ் நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டு, அங்கு தமிழ்த்துறை நிறுவப்பட்ட வேளையில் அத்துறைக்கான பேராசிரியராக சுவாமி விபுலாநந்தரே நியமிக்கப்பட்டார் (1931-1933). அதன்மூலம் உலகில் தமிழுக்கான முதலாவது பேராசிரியர் என்ற பெருமைக்கும் உரியவரானார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், அவர் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அவற்றுள் பண்டைத் தமிழரின் இசை மரபு பற்றிய ஆராய்ச்சி, பின்னர் யாழ்நூல் என்ற பெயரில், நூலாக வெளிவந்தது.
சுவாமிகள், தமிழ்நாட்டில் இருந்த காலப்பகுதிகளில் மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், சைவசித்தாந்த மகாசமாசம், சென்னை மாகாணத் தமிழர் சங்கம், சென்னைப் பல்கழைக்கழகம் முதலான பிற நிறுவனங்களோடும் தொடர்புபட்டு பல பணிகளை மேற்கொண்டார். நாடகத்துறை தொடர்பான ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய ஒரு சொற்பொழிவு, 1926இல் அச்சங்கத்தால், மதங்கசூளாமணி என்ற பெயரில் நூலாக வெளியிடப் பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிறுவனங்கள் பலவற்றின் மாநாடுகளில் சுவாமிகள் தலைமைவகித்தும் சொற்பொழிவாற்றியும் சிறப்பித்தார். அவற்றுள் 1936 டிசம்பர் மாதம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் பச்சையப்பன் கல்லூரியில் இடம்பெற்ற கலைச்சொல்லாக்க மாநாட்டுக்குத் தலைமை வகித்தமை குறிப்பிடத்தக்கது. 1937இல் திருக்கயிலாயத்துக்கு யாத்திரை மேற்கொண்ட சுவாமிகள் தாய்நாடு திரும்பினார்.
சுவாமிகள் இலங்கை திரும்பியபின் சிறிது காலத்தில் மீண்டும் இந்தியாவுக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது. இராமகிருஷ்ண சங்க வெளியீடாக, இமயமலைச் சாரலில் அமைந்த மாயாவதி ஆசிரமத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பிரபுத்தபாரத என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்குமாறு வந்த அழைப்பை ஏற்று, 1939-1941 காலப் பகுதியில் மாயாவதி ஆசிரமத்தில் தங்கியிருந்து பணியாற்றினார்.
அக்காலகட்டத்தில் (1942) இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி, பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்தப்பட்டது. அங்கு 1943இல் நிறுவப்பட்ட தமிழ்த்துறைக்கான பேராசிரியர் பதவியைப் பொறுப்பேற்குமாறு சுவாமிகள் கேட்டுக்கொள்ளப்பட்டார். மாயாவதியிலிருந்து நாடு திரும்பிய சுவாமிகள், அப்பதவியைப் பொறுப்பேற்றதன் மூலம் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கான முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்கு உரியவரானார். 1947 வரை அப்பதவியினை அவர் வசித்தார். தமிழ் நாட்டிலிருந்த காலத்தில் தொடங்கிய இசையாராய்ச்சி முற்றுப்பெற்ற நிலையில் யாழ்நூல் வெளியானது. அதன் அரங்கேற்றம் 1947 ஜூன் மாதம் தமிழ்நாடு திருக்கொள்ளம்பூதூர் ஆலயத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. அந்த விழாவுக் குச் சென்று திரும்பிய சுவாமிகள், ஜூலை மாதம் 19 ஆம் திகதி இவ்வுலகை நீத்தார்.
சுவாமிகள், இளமைக் காலம் முதற்கொண்டு கல்வியில் நாட்டம் கொண்ட வராய் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலான மொழிகளில் தேர்ச்சி பெற்றவராய் விளங்கியவர்; தமது பன்னிரண்டாவது வயதுமுதலாகவே கவிபாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர்; பத்திரிகை ஆசிரியராக, பாடசாலை நிறுவுநராக, ஆசிரியராக, அதிபராக, பல்கலைக்கழகப் பேராசிரியராக, ஆய்வாளராக விளங்கியவர்; இராமகிருஷ்ண மடம் முதலான சமய நிறுவனங்கள், ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் முதலான கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்காளராகப் பணியாற்றியவர்; சமூகத் தொண்டராக, சுதந்திர ஆர்வலராகத் திகழ்ந்தவர். அவர் பல நூல்களை, ஏராளமான கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிச் சென்றுள்ளார். இனிமையும் கருத்தாழமும் மிக்க கவிதைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவையெல்லாம் எமக்கு என்றும் வழிகாட்ட வல்லன.
நன்றி.
0 Comments