பஞ்சபுராணம் - PANJAPURANAM


பஞ்சபுராணம்


பஞ்சபுராணம் - PANJAPURANAM

தேவாரம் 

திருச்சிற்றம்பலம்

அங்கமும் வேதமும் ஓது நாவர் அந்தணர் நாளும் அடிபரவ 
மங்குல் மதி தவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் 
செங்கயல் ஆர்புனல் செல்வம் மல்கு சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள் 
கங்குல் விளங்கெரி ஏந்தி ஆடும் கணபதீச்சரம் காமுறவே.

திருச்சிற்றம்பலம்

பொழிப்புரை - வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் ஓதுகின்ற நாவினை உடைய அந்தணர்கள், உமது திருவடிகளை எப்போதும் துதிக்க, வானத்தில் உள்ள சந்திரன் தவழுகின்ற மாடமாளிகைகள் நிறைந்த வீதியுள்ள திருமருகலில் உறையும் வல்லாளரே! கயல்மீன்கள் புரள்கின்ற நீர்வளமும் செல்வமும் நிறைந்த, சிறப்பு வாய்ந்த திருச்செங்காட்டங்குடியில் இரவிலே ஒளிவீசுகின்ற அனல் ஏந்தி ஆடும் கணபதீச்சரத்தை விரும்பியதற்கான காரணத்தைக் கூறுவீராக.

பாடியவர் - சம்பந்தர்

தலம் - திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்

பண்- நட்டபாடை


திருவாசகம் 

திருச்சிற்றம்பலம்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே.

திருச்சிற்றம்பலம்

பொழிப்புரை - குழந்தையின் பசியை நினைந்து குழந்தை கேட்பதன்முன் தானாகவே பால் ஊட்டுகின்ற தாயைவிட மிகவும் இரங்கி, பாவியாகிய என்னுடைய உடம்பை உருகச் செய்து, உள்ளே ஞானமாகிய ஒளியைப் பெருகச் செய்து, அழிவற்ற பேரின்பமாகிய தேனைச் சொரிந்து, என்பின்னே தொடர்ந்து திரிந்த என் செல்வமே! சிவபெருமானே! நான் உன்னைத் தொடர்ந்து இறுகப்பற்றிக் கொண்டேன். இனி நீ என்னைவிட்டு எங்கே செல்வாய்? என்னை விட்டு உன்னால் விலக முடியாது.

பாடியவர் - மாணிக்கவாசகர்

தலம் - சீகாழி


திருவிசைப்பா 

திருச்சிற்றம்பலம்

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை
கரையிலாக் கருணை மாகடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம்
குளிர என் கண் குளிர்ந்தனவே.

திருச்சிற்றம்பலம்

பொழிப்புரை - ஞான நூல்களைக் கற்றறிந்தவர்கள் பேராவலோடு விழுங்கும் கற்பகக் கனியாக இருப்பவரை, எல்லையில்லாத பெரும் கருணைக் கடலானவரை, மெய்ஞான நூல்களைக் கல்லாதவர்கள் அல்லது பிறர் அறிந்து கொள்ள முடியாத மாணிக்க மலை போன்றவரை, மதித்து வழிபடுவர்களது மனதில் தூண்டாமணி விளக்குப்போல பிரகாசிப்பவரை, கோபித்தவர்களது அசுரர்களது முப்புரங்களையும் அழித்த பெருமானை, திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானைக் கண்டு என்மனம் குளிர, கண்களும் குளிர்ந்தனவே.

பாடியவர் - சேந்தனார்

தலம் - திருவீழிமிழலை

பண் - பஞ்சமம்


திருப்பல்லாண்டு 

திருச்சிற்றம்பலம்

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட
பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்கு சக்கரம் அன்று அருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து, நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

திருச்சிற்றம்பலம்

பொழிப்புரை - வியாக்கிரபாதர் என்னும் முனிவரது மகனான உபமன்யு என்னும் பாலகன் பால் வேண்டி அழுதபோது, அவனுக்கு திருப்பாற்கடலையே அழைத்து உண்ணக் கொடுத்த பெருமானும், திருமாலுக்குச் சக்கரப் படையைக் கொடுத்தருளிய பெருமானும், நிலைபெற்ற தில்லை என்னும் திருப்பதியில் வேதங்களை இடையறாது ஓதுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தையே தனது இடமாகக் கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடுபவனும் ஆகிய சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்து 'பல்லாண்டு வாழ்க' என வாழ்த்து வோமாக.

பாடியவர் - சேந்தனார்

தலம் - கோயில்

பண் - பஞ்சமம்


பெரியபுராணம் 

திருச்சிற்றம்பலம்

தண்ணளி வெண்குடை வேந்தன் செயல்கண்டு தரியாது 
மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூமழை சொரிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல் 
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப்பெருமான்.

திருச்சிற்றம்பலம்

பொழிப்புரை - மனுநீதிகண்ட சோழனின் நீதித் திறத்தைக் கண்டு தாங்கமுடியாத வர்களாய் மக்கள் மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கினார்கள். தேவர்கள் மலர்மழை பொழிந்தார்கள். அப்போது அப்பெருந்தகையோனான மனுநீதிகண்ட சோழனின் கண்முன்னே, தேவர்கள் வழிபடும்படியாக, வீதிவிடங்கப் பெருமான் (திருவாரூர் இறைவன்) இடபாரூடராகக் காட்சி கொடுத்தருளினான்.

பாடியவர் - சேக்கிழார்

நன்றி.

Post a Comment

0 Comments