மணிமேகலை - MANIMEGALAI


மணிமேகலை


மணிமேகலை - MANIMEGALAI

சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்த மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார்.

சாவக நாட்டினை புண்ணிய ராஜன் எனும் மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சோழ நாட்டில் பூம்புகார் நகரில் கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை மகளாகப் பிறந்து வளர்ந்து வருகிறாள். தனது தந்தையான கோவலன் மதுரையில் பாண்டிய அரசனால் கொலை உண்ட செய்தியை கேட்டு மனம் வருந்தி கொண்டிருந்த மணிமேகலையை அவளது தாயான மாதவி ஆறுதல் படுத்த விரும்பி அவளை வெளியே அனுப்ப நினைத்தாள். அதற்காக மாதவி மணிமேகலையிடம் நீ தொடுக்கும் பூமாலை உனது கண்ணீரால் நனைந்து பூசைக்கு ஆகாததாகி விட்டது. ஆகவே நீ சோலைக்குச் சென்று புதிய மலர்களைப் பறித்து கொண்டு வந்து பூமாலை தொடுப்பாயாக என்று கூறி மணிமேகலையை சோலைக்கு அனுப்பினாள். மணிமேகலையும் தனது தோழியான சுதமதியோடு பூப்பறிப்பதற்காக உபவனம் என்ற சோலைக்கு சென்றாள்.

இந்த செய்தி மணிமேகலையை விரும்பியிருந்த அந்நகரத்து அரசன் கிள்ளிவளவனின் மகனான உதயகுமாரனுக்கு அவனது தோழர்கள் மூலமாக தெரியவருகிறது. உடனே உதயகுமாரன் மணிமேகலையோடு பேசும் எண்ணத்தோடு தேரில் ஏறி வந்தான். சோலையினுள் அவன் புகுவதைக் கண்ட சுதமதி மணிமேகலையை அங்கிருந்த பளிங்கு அரையினுள் அமர்த்தி விட்டு சற்று தூரமாக வந்து நிற்றாள்.  உதயகுமாரனும் சுதமதியை கண்டு மணிமேகலை எங்கே என்று கேட்க அதற்கு சுதமதியும் அவள் இருப்பதை கூராது உதயகுமாரனுக்கு பலவிதமான நீதி உரைகளை கூறினாள் ஆனால் அவள் கூறிய நல்லுரைகள் யாவும் உதயகுமாரனின் மனதில் ஏறவில்லை. உடனே உதயகுமாரன் நான் மணிமேகலையை அவளது பாட்டி சித்திராபதி மூலமாக அடைவேன் என்று கூறி சென்றுவிட்டான்.

உதயகுமாரன் சென்றதும் மணிமேகலை பளிங்கரையிலிருந்து வெளியே வந்து சுதமதியோடு உரையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு மணிமேகலா தெய்வம் வந்து தம்மீது பக்தி பூண்டிருந்த கோவலனின் மகளானவள் உலகியலில் ஈடுபடலாகாது எனக் கருதி, ஒரு பெண் உருவத்தில் மாறிவந்து அவர்களிடம் நீங்கள் இங்கிருந்தால் உதயகுமாரனால் மென்மேலும் துன்பங்கள் உண்டாகும் ஆகையால் முனிவர்கள் வசிக்கும் சக்ரவாளக் கோட்டத்திற்கு செல்லுங்கள் என்றது. அவர்களும் அவ்வாறே செய்தனர். பொழுதும் சாய்ந்தது இருவரும் உறங்கினார்கள். அப்போது மணிமேகலா தெய்வம் வந்து மணிமேகலை மட்டும் மயங்குமாறு செய்துவிட்டு அவளை எடுத்துக்கொண்டு ஆகாயவழியால் தெற்கில் 30 யோசனை தூரம் சென்றது. அங்கே மணிவல்லவம் என்னும் தீவில் அவளை விட்டு வந்து மணிமேகலையைக் காணவில்லை என்று கவலையோடு இருந்த சுதமதியிடம் தான் மணிமேகலையை மணிவல்லவ தீவில் விட்டதை கூறி கவலைப்படாதே என்று கூறியது. அவ்வாறே மணிமேகலை தனது பூர்வஜென்ம நிகழ்வுகளை அறிந்து கொண்டு ஏழாம் நாள் திரும்பி வருவாள் என்றும் சொல்லிவிட்டு சென்றது. சுதமதியும் மாதவியிடம் சென்று நிகழ்ந்தவற்றையெல்லாம் கூற இருவரும் மணிமேகலையின் நினைவினால் கவலையோடு அவளுக்காக காத்திருந்தார்கள்.

மணிமேகலை தனது முற்பிறவியின் வரலாற்றை அறிந்து பக்குவ நிலையை பெற்றதன் பின் மணிமேகலா தெய்வம் அவள் முன் தோன்றி, அவளிடம் முற்பிறவியில் உன்னுடைய கணவனாக இருந்த ராகுலன் என்பவனே தற்போது உதயகுமாரனாக பிறந்திருக்கிறான் என்று கூறியதோடு அவளுக்கு ஆகாய வழியில் பறந்து செல்வதற்கும், உணவின்றி உயிர் வாழ்வதற்கும், விரும்பிய உருவத்தை எடுத்துக் கொள்வதற்குமான வரங்களை கொடுத்து விட்டு சென்றது.

அப்போது அந்த தீவில் மணிமேகலையின் எதிரில் ஒரு பெண் வந்து மிகுதியான துன்பத்தோடு இந்த தீவில் திரிந்து கொண்டிருக்கும் நீ யார் என்று கேட்டாள். அதற்கு மணிமேகலை தனது முற்பிறவி மற்றும் இப்பிறவி வரலாற்றை கூறிவிட்டு அவளிடம் நீ யார் என்று கேட்டாள். அதற்கு அவள் எனது பெயர் தீவதிலகை இந்த தீவின் அருகில் இரத்தின தீவு எனும் தீவொன்று இருக்கிறது. அதில் உள்ள சம்பந்தம் கூடம் எனும் மலை உச்சியில் இருக்கும் புத்த தேவரின் பாதங்களை தரிசித்து விட்டு இந்த தீவுக்கு முன்னொரு காலத்தில் நான் வந்திருக்கிறேன். அதுவுமன்றி இந்திரனின் கட்டளையினால் இங்குள்ள புத்தபீடிகையை பாதுகாத்தும் வருகிறேன் என்றாள்.

மேலும், தீவதிலகை மணிமேகலையை நோக்கி இந்த புத்தபீடிகைக்கு முன்னே குவளை மலர்களும், நெய்தல் மலர்களும் நிறைந்த கோமுகி எனும் பொய்கை இருக்கிறது. அந்த பொய்கைக்குள் அமுதசுரபி எனும் அட்சய பாத்திரமும் அமர்ந்து கிடக்கிறது. அது ஒவ்வொரு ஆண்டும் புத்தருடைய பிறந்த நாளாகிய வைகாசி பௌர்ணமி அன்று மேலே எழுந்து வரும். அந்த நாள் இன்றுதான் அதுமட்டுமல்ல  அப்பாத்திரம் வெளியே தோன்றுகின்ற நேரமும் கூட எனவே அந்தப் பாத்திரம் இன்று உனது கைக்கு வரும் அதிலிருந்து எடுக்கும் உணவு அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருக்கும். அதன் வரலாற்றை பின்னர் அறவண அடிகளிடம் இருந்து தெரிந்து கொள்வாயாக என்று கூறினாள். அதன்படியே மணிமேகலையும் அப்பொழுகை வலம் வர அட்சய பாத்திரமும் அவளது கையில் வந்தது. இதை கண்ட தீவதிலகை மணிமேகலையிடம் பசி துயரத்தின் கொடுமையையும் அதனை போக்குபவரின் சிறப்பையும் கூறினாள்.

பின்னர் மணிமேகலை சிறிது நேரம் தீவதிலகையோடு உரையாடிவிட்டு அவளைப் பணிந்து விடைபெற்றும் சென்றாள். ஆகாய வழியாக செல்லும் மந்திரத்தை உச்சரித்து பறந்து சென்று புகார் நகரை அடைந்து தனது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாதவி மற்றும் சுதமதியின் முன்னிலையில் தோன்றினாள். அவர்களிடம் தனது முற்பிறப்பு கதையை கூறி கையில் இருந்த அட்சய பாத்திரத்தையும் காட்டி அதன் சிறப்பை எடுத்துக் கூறி அதனை வணங்கவும் செய்வித்தாள். பின்னர் தவவழியை மேற்கொள்ளும் பொருட்டு அறவண அடிகளை அடைந்து தனக்கு தர்ம உபதேசம் புரிந்து ஆபுத்திரன் வரலாற்றையும் கூற வேண்டும் என்று பணிவுடன் கேட்டாள். அதற்கு அவர் ஆபுத்திரன் வரலாற்றை கூறிவிட்டு சில நாட்கள் கழித்து உனக்கு தர்மபிரதேசம் அளிக்கிறேன் அதுவரை நீ அமுதசுரபியை கொண்டு இங்கு பசியோடு இருக்கும் மக்களின் பசிப்பினியை போக்குவாயாக என்று கூறினார்.

அதன் பின்னர் மணிமேகலை புகார் நகரத்திலிருந்து சென்று ஆதிரை எனும் கற்புடைய மங்கையின் கையால் அட்சய பாத்திரத்தில் முதன் முதலில் பிச்சை பெற்று அதிலிருந்து பெருகும் உணவினை கொண்டு பசி என்று வந்தோரின் பசிப்பினியை போக்கும் பணியினை செய்தாள். அவ்வாறே காய சண்டிகை எனும் வித்தியாதர மங்கையின் யானைத்தீ எனப்படும் தீரா பசிநோயும் தீர்த்தாள். பிறகு விசேட நிகழ்ச்சிகள் பலவும் அவளது வாழ்க்கையில் இடம்பெற்றது.

பின்னர் அவள் அறவண அடிகளிடம் இருந்தது விடை பெற்றுச் சென்று சாவக நாட்டில் ஒரு நகர்புறத்தில் உள்ள சோலையில் வாழ்ந்து வருகிறாள். அந்த  இடம் பற்றிய தகவல்களை அங்கிருந்தோரிடமிருந்து அறிந்து கொள்கிறாள். அதாவது இது நாகபுரம் என்னும் நகரத்தின் புறத்திலிருந்த சோலை இதை ஆள்பவன் புண்ணிய ராஜன் ஆவார். இவர் பிறந்த நாளிலிருந்து நாட்டில் மலைவளம் பிழைத்ததே இல்லை. பூமியும் மரங்களும் தங்கள் பலன்களை தக்கவாறு அளித்து கொண்டேதான் இருக்கின்றன. உயிர்கள் நோயின்றி சுகமாக வாழ்ந்து வருகின்றன என்று மேலும் அந்த அரசனின் பெருமைகளை எல்லாம் அறிந்து கொள்கிறாள். அந்த சமயம் புண்ணிய ராஜன் தனது தேவியோடு அந்த சோலைக்கு வந்து அங்கே தர்ம சாவகன் என்ற முனிவரிடம் தர்ம உபதேசம் கேட்டு அவன் அருகில் இருந்த மணிமேகலையை பற்றியும் வினவுகிறான்.

அப்போது அங்கிருந்த அமைச்சன் ஒருவன் முன்னொரு காலத்தில் கிள்ளிவளவன் என்னும் அரசனோடு நட்பு கொள்ள அறவண அடிகள் காவிரிப்பூம்பட்டினம் சென்றார். அவர் அங்கிருந்து திரும்பிய பொழுது இந்த பெண்ணின் வரலாற்றை விளக்கி உரைத்தார் என்று முன்னரே உங்களுக்கு நான் கூறி இருந்தேன் அல்லவா அந்தப் பெண் தான் இவள் என்று கூறினான்.

உடனே மணிமேகலையும் அரசரே முற்பிறவியில் உங்கள் கையில் இருந்த அட்சய பாத்திரம்தான் இப்பிறவியில் எனது கையை வந்தடைந்தது. தாங்கள் இப்போது முற்பிறப்பை பற்றி அறிந்திடாமல் இருப்பதனால்தான் தடுமாறுகிறீர்கள். மணிபல்லவம் சென்று அங்குள்ள புத்தபீடிகையை தொழுதால் உங்கள் முற்பிறப்பை பற்றி அறிந்து கொள்ளலாம் என்று கூறி, நான் அங்கு செல்கிறேன் நீங்களும் வருவீர்களாக என்று கூறி ஆகாய மார்க்கத்தினூடாக மணிபல்லவ தீவுக்கு சென்று விட்டாள்.

புண்ணிய ராஜன் அரண்மனைக்குச் சென்று தன்னை வளர்த்த தாயாகிய அமர சுந்தரியிடம் தனது வரலாற்றை பற்றி கேட்டான் அதற்கு அவள் அவனது இந்த பிறவி பற்றிய வரலாற்றைக் கூற அவன் வருத்தமடைந்து அரசாட்சியை வெறுத்து தான் துறவரம் செல்ல போவதாக கூறி மணிவல்லவம் செல்ல வேண்டும் என்ற ஆசையையும் கூறினான்.

அதைக் கேட்ட ஜனமித்ரன் என்ற மந்திரி புண்ணிய ராஜனிடம் உங்களை நமக்கு முன்னாள் அரசர் பெறுவதற்கு முன்பு இந்நாட்டில் 12 ஆண்டுகள் மழை பெய்யாமல் பஞ்சமாக இருந்தது. அப்போதுதான் நீங்கள் கோடை காலத்தில் மழை பெய்வதைப் போல இங்கே தோன்றினீர்கள். அவ்வாறு நீங்கள் தோன்றியதன் பின்பு இங்கு மழைக்கு பஞ்சமே ஏற்படவில்லை. அன்றிலிருந்து இன்று வரை எல்லா வகையான சுகங்களோடுதான் இந்நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்போது நீங்கள் இங்கிருந்து சென்று விட்டீர்கள் என்றால் தாயைப் பிரிந்த கன்றுகளைப் போல நாங்கள் அனைவரும் வருந்துவோம் அல்லவா. நீங்கள் இவ்வாறு சுயநலத்தோடு நாட்டை விட்டு பிரிவது நல்லதல்ல என்று கூறினான். அதற்கு புண்ணிய ராஜன் மணிவல்லவ தீவுக்கு சென்று புத்தம் பீடிகையே வணங்க வேண்டும் என்ற ஆவல் கரை கடந்து எனது உள்ளத்தை மிஞ்சுகிறது எனவே நான் அங்கு சென்று திரும்பி வரும் காலம் வரை நீ எனது சார்பாக இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று கூறி கப்பலேறி மணி பல்லவ தீவிக்கு சென்றுவிட்டான்.

அங்கு மணிமேகலை அவனுக்கு பூத்த பீடிகை எங்கிருக்கிறது என்று காட்ட அவனும் அதை வலம் வந்து வணங்கி தனது முற்பிறவி வரலாற்றை அறிந்து கொள்கிறான். பிறகு முற்பிறவியில் தனக்கு அமுதசுரபியை அளித்த சிந்தாதேவியை வணங்குகிறான். அவ்வாறே அங்கிருந்து சென்று ஒரு புன்னை மர நிழலில் இருக்க, அந்தத் தீவின் காவல் தெய்வமான தீவதிலகை அவனிடம் வந்து நீதானே முற்பிறவியில் ஆபுத்திரான வாழ்ந்தவன். அந்தக் காலத்தில் இத்தீவில் உன்னை தனியே விட்டுவிட்டு கப்பல் ஏரிச்சென்ற ஒன்பது செட்டிமார்களும் மீண்டும் உன்னை காணாமல் இத்தீவுக்கு வந்தார்கள். ஆனால் நீ இறந்து போன வரலாற்றை அறிந்ததும் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார்கள். அவ்வாறே அவர்களுடன் வந்த சிலரும் பிரிவாற்றாமையால் உயிர் துறந்தார்கள். இதோ இவைதான் அவர்களுடைய எலும்புகள். இதே மர நிழலில் தான் உனது எலும்புகளும் புதைந்து கிடக்கின்றன. இவ்வாறு உன் உயிரையும் போக்கிக் கொண்டு உனக்கு இறங்கிய பிறரின் உயிர்களையும் கொலைக்கு ஆளாக்கிய நீ அல்லவா இப்போது புண்ணிய ராஜன் என சாவக நாட்டை ஆள்கிறாய் என்று கூறினாள்.

இவற்றையெல்லாம் கேட்ட புண்ணிய ராஜன் ஆச்சரியமும் துக்கமும் தாங்காமல் மயங்கி நின்றான். தீவதிலகைபின்னர் மணிமேகலையை நோக்கி உனது பிறப்பிடமாகிய பூம்புகாரை கடல் கொண்டது. சில நாட்களுக்கு முன்னால் காவிரிப்பூம்பட்டினத்து அரசனான கிள்ளிவளவன் நாகநாட்டரசன் வளைவணன் என்பவனின் மகளாகிய பீலிவளையை காதலித்து கந்தர்வ மணம் புரிந்து கொண்டான். ஒருநாள் பீலிவளையோ அரசனிடம் சொல்லாமல் தனது இடத்திற்கே சென்று விட்டாள். அரசன் அவளை எங்கு தேடியும் காணாமல் கவலையோடு இருந்தான். அப்போது முக்காலமும் உணர்ந்த சாரணன் ஒருவன் அங்கு வந்து அவனிடம் பீலிவளை இனிமேல் உன்னிடம் வரமாட்டாள் அதற்கு பதிலாக அவளது வயிற்றில் பிறக்கும் மகன் தான் உன்னிடத்தில் வருவான் ஆகவே நீ இதைப் பற்றி வருந்தாதே என்று கூறினான்.

அரசனைப் பிரிந்த பிலிவளை ஓர் அழகான ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். சில நாட்களுக்கு முன்பு அந்த குழந்தையோடு இந்த தீவுக்கும் வந்த அவள் புத்த பீடிகையை வலம் வந்து கொண்டிருக்கும் போது கம்பளச் செட்டி என்னும் வணிகனின் கப்பல் இந்த தீவுக்கு வந்தது. பீலிவளை அவனிடம் சென்று குழந்தையை கொடுத்து இவன் சோழ அரசனின் மகன் இவனை அரசரிடம் சேர்ப்பது உனது கடமை என்று கூற அவனும் அந்த கடமையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். பின்பு அவன் கப்பலை செலுத்திக் கொண்டு சோழ நாட்டை நோக்கி வரும் வேளையில் இடையில் கப்பல் உடைந்து போனது. பலரும் உயிர் துறந்தனர். தப்பிப் பிழைத்த சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்து குழந்தையை பீலிவளை செட்டியிடம் ஒப்படைத்ததையும் கப்பல் உடைந்த விடயத்தையும் கூறினர். அரசன் மிகவும் வருத்தம் அடைந்து கடற்கரையோரமெல்லாம் தேடி திரிந்து கொண்டிருந்தான்.

அதனால் இந்திர விழா நடத்தப்பட வேண்டிய காலத்தில் நடக்காமல் போனது. இதனால் மணிமேகலா தெய்வத்தின் சாபத்திற்கு உள்ளாகிய புகார் நகரம் கடல் பொங்கிதால் அழிந்தது. அரசன் முதலானோர் வேரிடம் சென்றனர். உனது தாயும் தோழியும் அறவண அடிகளோடு வஞ்சி நகரத்திற்கு சென்றார்கள். ஆகவே நீ வஞ்சிமா நகரம் செல்வாயாக என்று கூறினாள். அதன்படியே மணிமேகலையும் வஞ்சிமா நகரம் சென்று அங்கு அறவண அடிகளைக் சந்தித்து அறபுரை பெற்று அங்கிருந்த பல மதத்தினரையும் தனது வாதத்திறமையினால் வெற்றிக் கொண்டு ஒரு முழுமையான புத்தத் துறவியாகித் தவத்தில் ஆழ்ந்தாள். என்று கூறுவதோடு மணிமேகலை எனும் காப்பியம் நிறைவு பெறுகிறது.

நன்றி

Post a Comment

0 Comments