மச்ச அவதாரம்
விஷ்ணுவின் முதல் அவதாரமாக மச்சா அவதாரம் கருதப்படுகிறது. பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரிலே உருவாகியது. அப்படியேதான் பிரளய காலத்தின் போது விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து உலகை காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் பகவான் விஷ்ணு உலகை காப்பதற்காக மீன் அவதாரம் எடுத்தார்.
ஒருமுறை சத்தியவிரதன் என்ற அரச முனிவர் மகாவிஷ்ணுவை நோக்கி நீரையே உணவாகக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பூஜைக்காக நதி நீரை கையால் அள்ளும் போது கையில் ஒரு சிறிய மீன் அகப்பட்டது. அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை அந்த முனிவர் அறிந்திருக்கவில்லை. எனவே மீனை மீண்டும் நதியினுள் விடுவதற்கு முயன்றார். அப்போது அந்த மீன் முனிவரை பார்த்து மகரிஷியே என்னை நீரிலுள் விடாதீர்கள். இந்நதியில் பல பெரிய மீன்கள் உள்ளன. அவை என்னை இராக்கிவிடும். என்னை காப்பாற்றுங்கள். என்று வேண்டியது.
அதன்படியே அந்த முனிவரும் மீனை தனது கமண்டலத்தினுள் போட சிறிது நேரத்தில் அந்த கமண்டலத்தின் அளவுக்கு மீன் பெரிதாக வளர்ந்துவிட்டது. பிறகு அதை ஒரு பெரிய பாத்திரத்தினுள் விட்டார் சிறிது நேரம் கழித்து பார்த்தால் மீன் அந்த பாத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. பின்பு ஆற்றினுள் விட்டார் அது மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டே சென்றது. இறுதியில் சமுத்திரத்தில் கொண்டு போய் விட முயன்றார். அப்போது அந்த மீன் முனிவரிடம் இந்த சமுத்திரத்தில் பெரிய திமிங்கலம் இருக்குமே அது என்னை கொன்று விடுமே என்றது.
அந்த மீன் விஷ்ணு தான் என்பதை உணர்ந்து கொண்ட முனிவர் அவரிடம் தாங்கள் இந்த உருவத்தைப் எடுத்தமைக்கும், என்னிடம் வந்தமைக்கும் என்ன காரணம் என்று கேட்டார். அதற்கு விஷ்ணு மகரிஷியே பிரம்மன் உறக்கத்தில் இருக்கிறார். இதனால் சகல லோகங்களிலும் பிரளயம் ஏற்பட்டு மூழ்கப் போகின்றது. அச்சமயம் பெரிய ஓடம் ஒன்று இங்கே வரும். அதில் சப்தரிஷிகளோடு நீங்களும் மூலிகை வித்துக்களை ஓடத்தில் ஏற்றிக்கொண்டு பிரளய வெள்ளத்தில் பயணம் செய்திருப்பீர்கள். எனவே நான் பிரம்மனின் உறக்கம் முடியும் வரை மீன் வடிவத்தில் ஓடம் கவிழ்ந்து விடாமல் உங்களை காப்பாற்றி வருவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.
அதன் பிறகு மீன் உருவத்தில் தோன்றிய விஷ்ணுவை நோக்கி சத்திய விரதன் தியானம் செய்து கொண்டிருந்தார். பிரம்மர் உறங்கி ஏழாவது நாளும் வந்துவிட மாபெரும் பிரளயமும் ஏற்பட்டது. அப்போது விஸ்ணு கூறியவாறே சப்தரிஷிகளோடு, மூலிகை வித்துக்களையும் ஏற்றியபடி பெரிய ஓடம் ஒன்று வந்தது. அப்போது காற்று பலமாக வீசியது ன. ஓடமும் கவிழுலும் நிலைக்கு வந்தது. எனவேதான் விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து படகை ஒரு பாம்பால் இருக கட்டி கவிழ்ந்து விடாதவாறு இழுத்துச் சென்றார். பின்பு விஷ்ணு மகரிஷிக்கு மச்ச புராணத்தையும் உபதேசித்தார். பிரம்மரும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்.
அச்சமயத்தில், குதிரை முகம் கொண்ட சோமுகாசுரன் என்னும் அரக்கன் தன் யோக சித்தியினால்,வேதங்களைக் களவாடிக் கடலுக்குள் புகுந்து, ஒளித்து மறைத்துவிட்டான்.அடுத்து சிருஷ்டித் தொழில் செய்ய வேண்டும். அப்போதுதான் வேதங்கள் காணாமல் போனது பிரம்மனுக்குத் தெரிந்தது.
பிரம்மதேவர் ஸ்ரீஹரியை நோக்கி தியானம் செய்தார். அதுசமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து ஹயக்ரீவ அவதாராமாக வெள்ளத்திற்குள் புகுந்து ஹயக்கிரீவனை வெள்ளத்தில் கண்டு அவனுடன் போர் புரிந்தார். வேதங்களை மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார். பிரம்மனும், தன் சிருஷ்டித் தொழிலைத் தொடங்கினார்.
நன்றி.
0 Comments