இலக்கியமும் கலையும்
நிறைந்த ஒரு அழகான
மனிதனை உருவாக்குவோம்.
இறைவன் படைத்த ஜீவராசிகளிலே சமயோசித புத்தியும். பகுத்தறிவும் படைத்த ஒரே உயிரினம் மனிதன் தான். மற்ற உயிரினங்களிலே இருந்து மனிதன் மாறுபடக் காரணம் ஆறாம் அறிவான பகுத்தறிவு மனிதனிடத்தில் தங்கியுள்ளமை ஆகும். சிந்தித்து திட்டமிட்டு செயல்களை ஆற்றக்கூடிய அறிவே பகுத்தறிவு எனலாம். பகுத்தறிவு மனிதனிடம் உறைந்திருந்தாலும், மனிதனின் நடத்தை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றைத் தேடி அலைந்து காலத்தை வீணடிக்காமல், இந்நிலையை மாற்றுவதற்கு உபாயம் ஏதும் உண்டா? என பகுத்தறிவைக் கொண்டு நாம் சிந்திக்கும் போது காலில் தட்டுப்படும் கல்லைப்போல எம் முன்னே காட்சி தருவது இலக்கியமாகும்.
இலக்கியம் என்பது இலக்கு + இயம் எனப்பகுத்து பொருள் கொள்ளும் போது நோக்கத்தை அல்லது இலட்சியத்தை வெளிப்படுத்த எழுந்த கலைப்படைப்பு என்பது உறுதியாகும். காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி எனப்படும் இலக்கியம் மூலம் ஞாலத்தையும், அதில் உறைந்துள்ள மனிதர்களையும் மாற்ற முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும். உழைப்பில் உழன்ற மனங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமன்றி ஆறுதலையும் கொடுப்பது கலையாகும். ஆடல், பாடல், இசை, ஓவியம், சிற்பம் என்றெல்லாம் கலை பரந்து விரிந்து சென்றாலும், அனைத்து கலைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் கலைவடிவம் இலக்கியம் என்றால் அது மிகையாகாது.
கலைகளிலே திளைத்த மனங்களுக்கு மகிழ்ச்சி உண்டு. ஆனால் சொற்ப கணங்களில் அம் மகிழ்ச்சி மறைந்து விடும். இலக்கியத்தைக் கற்கும் போது அழகான மனிதனை சிற்பம் போல செதுங்கக் கூடிய நற்கருத்துக்களும், படிப்பினைகளும் கற்பவரின் வாழ்க்கையை தடம் மாற்றும் உன்னதநிலை அடையக்கூடிய நிலையை உருவாக்குகின்றது. அதுமட்டுமன்றி இலக்கியத்தில் பல வகையான கலைகளும் நிறைந்துள்ளன. கற்பவர் நீரைத் தவிர்த்து பாலை அருந்தும் அன்னப்பறவை போல தீயதை களைந்து நற்கருத்துக்களை மட்டும் தம்முள் ஈர்த்துக் கொள்ள வேண்டும். இலக்கியமும், கலையும் கற்பவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவை என்பதற்கு வரலாற்றில் தக்க சான்றொன்று உண்டு.
சத்தியத்திற்கும், அகிம்சைக்கும் பேர் போன பாரத பிதா மகாத்மா காந்தி சிறுவயதிலே அரிச்சந்திர புராணத்தை கற்றதுடன். அதை நாடக கலை வடிவிலும், கண்டு களித்தார். இங்கு இலக்கியமும், கலையும் காந்தியடிகளுக்கு உண்மையின் மகத்துவத்தை உ ணர்த்தி நின்றமையால் அவ் உயர்ந்த பண்பு காந்தியின் வாழ்க்கையானது. பராக்கிரமம் படைத்த ஆங்கிலேயர்களை எவ்வழியிலும் வெற்றி கொள்ள முடியாத நிலையில் அகிம்சை எனும் வல்லமை படைத்த ஆயுதம் மூலம் காந்தி அடிகள் விரட்டி அடித்தார். இப்பண்பை பாரதியார் தனது கவிதைகளில் பாடியுள்ளதை "வாழ்க நீ எம்மான் .....'' காணக்கிடக்கின்றது. எனும் வரிகள் மூலம்
காந்தி மட்டுமன்றி பல அறிஞர்களும், மகான்களும் தன்னிலை உயர இலக்கியமும், கலையும் உரமாக அமைந்தன என்பதை ஏற்றுக்கொள்வர். இலங்கை தேசம் கிழக்கின் விடிவெள்ளி எனப் புகழும் விபுலானந்த அடிகள் சிலப்பதிகாரத்தை கற்றமையாலே இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்களில் விருப்புக் கொண்டு முத்தமிழ் இலக்கியங்களைப் படைத்து "முத்தமிழ் வித்தகர்" எனப் பெருமை பெற்றார். அடிகளாரின் தமிழ் இலக்கியப் பற்றும், கலை ஈடுபடுமே உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் எனும் மாண்பினை அளித்தது. இலக்கியமும், கலைகளுமே மனிதனுக்கு அழகிய வாழ்க்கையை அளிக்க வல்லது.
சங்கச் செய்யுட்களைக் கற்று. அதில் மிளிர்கின்ற இலக்கியச் சுவை. அணிகள் என்பன பற்றி அறிந்தால் கற்பவரின் அறிவு உன்னத நிலையை அடைவதுடன், தமிழின் தரத்தை வேறு உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றல் எங்களுக்குக் கிடைக்கும். தமிழர்தம் உயர் பண்பாடு, தமிழின் செழுமை, ஐவகை நிலங்கள், இயற்கையின் கொடை என்றெல்லாம் உத்தம செய்திகளை எல்லாம் சங்கச் செய்யுட்கள் விளம்புகின்றன. கணியன் பூங்குன்றனார் எனும் சங்கப் புலவர் உலக ஒற்றுமையை "யாதும் ஊரே யாவரும் கேளீர்......" என்று பாடியுள்ள விதம் கவனிக்கத்தக்கது.
இலக்கியமும், கலைகளும் தற்கால சமூகத்திற்கு இன்றியமையாதனவாகும். ஏனெனில் தொழில்நுட்பம் மலிந்துள்ள நவீன உலகிலே மனிதனின் நற்பண்புகள் மறைந்து வருகின்றன. அவற்றை மீளுருவாக்கம் செய்து மனித மனங்களில் விதைக்க இலக்கியமும். கலைகளுமே ஊடகங்களாகத் திகழ்கின்றன, மோசமான பண்புகள் கொண்ட சமூகத் தோற்றத்தை இக்காலத்தில் காண இலக்கியமும் ஆற்றவல்லன. முடிகின்றது. இக்களையைப் பிடுங்கும் காரியத்தை கலையும், இலக்கியமும் ஆற்றவல்லன.
உண்மை, தருமம், நன்றி, கொடை, அன்பு, இரக்கம் போன்ற பல்லாயிரக்கணக்கான நற்பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ள கம்பராமாயாணம். திருக்குறள் போன்ற பொக்கிசங்கள் தமிழில் இருக்கையில் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். அவ்விலக்கியங்களை கல்வி ஊடாக தற்கால சமூகத்திடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் மானுடப் பண்புகள் மனிதனிடம் மேலோங்கும். கொலை, களவு, துஸ்பிரயோகம், போதைப் பொருட் பாவனை போன்ற பாதகச் செயல்கள் மறைந்தே தீரும். கலைகளும், இலக்கியங்களும் நற்கருத்துக்களை வலியுறுத்தும் போது அவை கிடைக்கும் விதத்தில் நாம் தற்காலத்திற்கு ஏற்ப திரைப்படமாகவோ, நாடகங்களாகவோ, காணொளிகளாகவோ மாற்றி தற்கால ரசனைக்குத் தக்கதாக வழங்கும் போது சமூகத்தில் பாரிய மாற்றம் ஏற்படும்.
காலம் மாறும் போது நாமும் மாற வேண்டும். எனும் கருத்திற்கு இணங்க அரிய பெரிய கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்களும், கலைகளும் எம்மிடத்தில் குவிந்துள்ளன. அவை பழையவை என்று கருதாது. அவற்றை தற்காலச் சமூகத்திற்கு ஏற்ற விதத்தில் மாற்ற வேண்டிய தார்மீக கடமை தற்கால அறிஞர்களுக்கு உண்டு. என்பதை அடித்துக் கூற வேண்டும். ஆங்கிலம் போன்ற பிறமொழி இலக்கியங்களை மொழி பெயர்ப்பதோடு மட்டும் நில்லாது எம்மிடமுள்ள தமிழ் இலக்கியங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். கையில் வெண்ணெயை வைத்து விட்டு ஏன் நெய்க்கு அலைய வேண்டும். நாமும், எமது சமூகமும் முன்னேற்றமடைவது இலக்கியத்திலும், கலைகளிலுமே தங்கியுள்ளது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்கூறப்பட்ட கருத்துக்கள் மூலம் இலக்கியமும். கலையும் நிறைந்த ஒரு மனிதனை எம்மால் உருவாக்க முடியும் என்பது திண்ணமாகும்.
ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் B.A (Hons)
நன்றி.
0 Comments