இராமாயணம் பகுதி - 94 - RAMAYANAM PART - 94


இராமாயணம் பகுதி - 94


இராமாயணம் பகுதி - 94 - RAMAYANAM PART - 94

ஜாம்பவான் விபீஷணனின் இந்த நிலைமையைக் கண்டு அவனின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினான். மதிநலம் படைத்தவரே! தாங்கள் இவ்வாறு புலம்பி அழுவது அறிவுடைமையாகாது. இவ்வுலகில் விதியை வென்றவர் யார்? விதி இராவணனை வேரோடு அழித்துவிட்டது. நீ அழுவதால் ஒன்றும் நடைபெற போவதில்லை. ஆதலால் நீ உன் தமையனுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை செய்வாயாக எனக் கூறினான். இராவணன் இறந்தச் செய்தி மண்டோதரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வந்தாள். வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுந்தது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்தது. மண்டோதரியுடன் ஏனைய மனைவிமார்களும், அரக்கியர்களும் உடன் வந்தனர். 

போர்க்களத்தில் இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து புலம்பி அழுதாள். என் ஆருயிரே! பஞ்சணையில் காண வேண்டிய உங்களை இன்று உதிரங்கள்(இரத்தம்) நிறைந்திருக்கும் போர்க்களத்தில் காண நேரிட்டதே. உங்களின் வலிமை மிகுந்த தவம் மற்றும் நீங்கள் பெற்ற வரம் ஒரு சாதாரண மனிதனின் அம்பால் வீழ்த்த முடியுமா? உங்களை இராமனின் பாணம் வீழ்த்தி விட்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் கணவனை யாராலும் வீழ்த்த முடியாது என்று எண்ணியிருந்தேனே. சீதையின் பேரழகும், சீதையின் கற்பும், அவள் மேல் கொண்ட காதலும், சூர்ப்பனகை இழந்த மூக்கும், தசரதன் போ என்று இராமனிடம் சொன்ன சொல்லும் எல்லாம் சேர்த்து இந்திரனின் தவத்திற்கு துணை போய் உங்களை கொன்று விட்டதே. 

இராமனுடன் பகை கொள்ள வேண்டாம். சீதையை சிறைப் பிடித்து வந்தது தவறு என்றும், சீதையைக் கவர்ந்து வந்தது அறத்துக்குப் புறம்பானது எனவும் சீதையை இராமனிடம் சேர்த்துவிடுங்கள் என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன்! நான் சொன்ன சொல்லை நீங்கள் கேட்கவில்லை. நல்லது செய்தவனுக்கு நல்லதே நடக்கும். தீமை செய்பவனுக்கு தீமையே நடக்கும். உன்னுடன் பிறந்த சகோதரன் நன்மை செய்தான். அதனால் இன்று அவன் நலமுடன் இருக்கிறான். தாங்களோ தீமை செய்தீர்கள். அதனால் தான் இன்று இறந்து கிடக்கிறீர்கள். சீதையின் அழகில் வீழ்ந்த நீங்கள், உயிர் பெற்று வருவது என்பது இயலாத ஒன்று. பதிவிரதையின் கண்ணீரானது, பூமியில் விழுந்தால், ஏதேனும் ஒன்று நடந்தே தீரும். அதுதான் தங்களை இன்று பழிவாங்கியது! பெண்ணாசை என்பது அழிவில் தான் முடியும். 

தங்களை இழந்த பின் இனி நான் உயிருடன் இருந்து என்ன செய்யப்போகிறேன் என கூறிக்கொண்டு இராவணனின் மார்பில் விழுந்தாள். அப்பொழுது மண்டோதரி பெருமூச்சுவிட்டாள். அத்துடன் மண்டோதரியின் உயிரும் பிரிந்தது. இதனைப் பார்த்து அனைவரும் மண்டோதரி கற்புக்கரசி எனப் போற்றி வாழ்த்தினர். பிறகு விபீஷணன், இராவணனையும், மண்டோதரியையும் ஒன்றாக வைத்து பன்னீரால் குளிர்வித்து, மலர் மாலை சூட்டி, சந்தனம் முதலிய வாசனை கட்டைகளை அடுக்கி அவர்களுக்கு தீமூட்டி இறுதி சடங்குகளை செய்தான். விபீஷணன், இராவணனின் ஈமச்சடங்குகளை செய்து முடித்த பின் இராமரிடம் சென்றான்.

விபீஷணன், இராவணனின் ஈமச்சடங்குகளை செய்து முடித்த பின் இராமரிடம் சென்றான். இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பூண்டு வந்து இருப்பதால் அவர் இலங்கை நகருக்குள் செல்வது என்பது ஏற்றதல்ல. இராமர் இலட்சுமணனிடம், தம்பி இலட்சுமணா! நீ விபீஷணன், சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்களை அழைத்து இலங்கை நகருக்குச் சென்று, விபீஷணனுக்கு வேதமுறைகள்படி இலங்கையின் அரசனாக முடிசூட்டி பட்டாபிஷேகம் செய்துவிட்டு வருவாயாக என கட்டளையிட்டார். பிறகு இலட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்கள் புடைசூழ இலங்கை நகருக்குச் சென்று இலங்கை நகரை அலங்கரித்தனர். தேவர்கள், முனிவர்கள் விபீஷணனின் முடிசூட்டு விழாவில் கலந்துக் கொண்டனர்.

புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வரச் செய்து, வேள்வியில் தீ மூட்ட, முனிவர்கள் மந்திரங்கள் சொல்ல, விபீஷணனை அரியணையில் அமர வைத்து, வேத கோஷங்கள் முழங்க, மங்கள ஸ்னானம் செய்வித்து, புத்தாடைகள் அணிந்து, அபிஷேகம் செய்து அனைவரின் முன்னிலையிலும் இலட்சுமணர் விபீஷணனுக்கு இலங்கையின் அரசனாக முடிசூட்டினார். இலங்கையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட விபீஷணன், இலட்சுமணனை வணங்கினான். தேவர்களும், முனிவர்களும் விபீஷணனை வாழ்த்தினர். விபீஷணனின் மனைவி சரமை, விபீஷணனின் மகள் திரிசடை பட்டாபிஷேகத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அரம்பியர்கள் நடனம் ஆட, அரண்மனையில் இசைக்கச்சேரி நடைப்பெற்றது. விபீஷணன் வறியவர்களுக்கு பொன்னும், பொருளும் வழங்கினான். இலங்கை நகரமே விழாக்கோலம் பூண்டது.

பிறகு விபீஷணன் இராமரிடம் ஆசிப் பெற போர்க்களத்திற்கு வந்தடைந்தான். விபீஷணன் இராமரின் திருவடியில் விழுந்து ஆசி பெற்றான். இராமர் விபீஷணனை அன்போடு தழுவிக் கொண்டார். பிறகு இராமர், விபீஷணா! அரசப் பதவியை ஏற்றுக் கொண்ட நீ என்றும் ஏழை மக்களுக்கு உறுதுணையாக தொண்டு செய்ய வேண்டும். உனது ஆட்சியில் அறத்தை நிலை நாட்ட வேண்டும். நான் தான் அரசன் என்று சிறிதும்கூட மனதளவில் ஆணவம் கொள்ளக் கூடாது. மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உனது நாட்டை கண்ணும் கருத்துமாக அறநெறியுடன், நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிய வேண்டும் என வாழ்த்தினார். பிறகு இராமர் அனுமனிடம், அன்பனே! நீ சீதையிடம் சென்று இராவணனின் வதத்தை கூறுவாயாக எனக் கூறினார்.

அனுமன் இராமரிடம் இருந்து விடைபெற்று, மிகவும் மகிழ்ச்சியுடன் அசோகவனத்திற்கு சென்று சீதையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். பிறகு அனுமன், அன்னையே! நான் தங்களுக்கு ஒரு சுபச் செய்தியை கொண்டு வந்துள்ளேன். ஸ்ரீ இராம மூர்த்தி அவர்களின் இராம பாணத்தால் இராவணன் மாண்டான், அது மட்டுமில்லாமல் இப்பொழுது விபீஷணனுக்கு முடிசூட்டு விழா நடைப்பெற்று முடிந்தது எனக் கூறினான். இச்செய்தியைக் கேட்டு சீதை அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில் சீதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள். அனுமன் சீதையைப் பார்த்து, அன்னையே! தாங்கள் இந்த சுபச்செய்தியை கேட்டு ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன்? எனக் கேட்டான். சீதை, மாருதியே! அளவுக்கடந்த மகிழ்ச்சியினால் என்ன சொல்வதென்று தெரியவில்லை என்றாள்.

தொடரும்.....

Post a Comment

0 Comments