இராமாயணம் பகுதி - 93 - RAMAYANAM PART - 93


இராமாயணம் பகுதி - 93


இராமாயணம் பகுதி - 93 - RAMAYANAM PART - 93

நிருதிப் படையை அழித்த இராமர் ஒரு சிறந்த கணையை இராவணன் மீது ஏவினார். அந்தக் கணை இராவணன் கழுத்தை அறுத்துச் சென்றது. இதைப் பார்த்த தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். ஆனால் அந்த தலை விழுவதற்குள் வேறொரு தலை இராவணனுக்கு முளைத்தது. பிறகு இராமர் மற்றொரு சிறந்த கணையை ஏவினார். அந்த கணை இராவணனின் கரங்களை அறுத்துச் சென்றது. அதேபோல், இராவணனின் கரங்கள் நிலத்தில் விழுவதற்குள் வேறு கைகள் முளைத்தது. இராவணன், மாதலியை நோக்கி ஒரு கணையை ஏவினான். அக்கணையால் மாதலி உடலில் இருந்து இரத்தம் கசிந்தது. இராமர், இராவணனின் பஞ்சமுகப் படையை ஆயிரமாயிரம் கணைகளை ஏவி அழித்தார். இராமரின் இப்போரைப் பார்த்து இராவணன் நிலைதடுமாறினான். இதனால் அவன் வலிமையும் குறைந்தது. பிறகு இராமர், இராவணனை நோக்கி அம்புகளை தொடுத்தார். 

அக்கணைகள் இராவணனின் கவசத்துக்குள் நுழைந்து, அவன் உடலில் துளைத்து வெளியே வந்தது. இராவணனின் உடலில் இரத்தம் ஆறு போல் வலிந்தது. சிறிது நேரத்தில் இராவணன் மயங்கி விழுந்தான். இதைப் பார்த்த இராவணனின் தேர்ப்பாகன் தேரை வேறு வழியில் திருப்பிச் சென்றான். இதைப் பார்த்த மாதலி இராமரிடம், பெருமானே! இராவணனை உடனே விரைந்து கொல்லுங்கள். அவனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டால் அவனை கொல்வது அரிதாகும் என்றான். இராமர் மாதலியிடம், தேர்ப்பாகனே! மயக்கத்தில் இருக்கும் பகைவரை கொல்வது பாவச் செயல் ஆகும். இது ஆண் மகனுக்குரிய ஒரு வீரம் அல்ல எனக் கூறினார். இதைக்கேட்டு விண்ணுலகத்தவர் மகிழ்ந்தனர். சிறிது நேரத்தில் இராவணன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தேர் போர்க்களத்தை விட்டு வந்திருப்பதைப் பார்த்து, தேர்ப்பாகனிடம், அடேய், மூடனே! என் வீரத்திற்கு இழுக்கு தேடி கொடுத்துவிட்டாய்.

தேவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பார்களே. நீ எனக்கு அவமானத்தை தேடி தந்துவிட்டாய். இனி உன்னை கொல்வது தான் சரி என்று தேர்ப்பாகனை கொல்லச் சென்றான். அப்பொழுது தேர்ப்பாகன் இராவணனை வணங்கி, அரசே! தாங்கள் வலிமை குறைந்து மயங்கி விழுந்ததால், தங்களை காக்கும் பொருட்டு நான் தேரை திருப்பி செலுத்தி வந்தேன். தங்கள் உயிரை காக்கவே நான் இவ்வாறு செய்தேன். இல்லையேல் தாங்கள் மாண்டிருப்பீர்கள் என்றான். இதைக் கேட்ட பின் இராவணனின் கோபம் தணிந்தது. பிறகு இராவணன் அங்கிருந்து போர்களத்தை அடைந்தான். இராமருக்கும், இராவணனுக்கும் இடையே கடும்போர் நடந்தது. இராவணன் இராமரை நோக்கி, சீறிக் கொண்டு இலட்சம் கணைகளை ஏவினான்.

இராமர் அக்கணைகளை எல்லாம் தகர்த்து எறிந்தார். பிறகு இராவணன் அங்கிருந்து மேகத்தின் நடுவே நின்று போர் புரிந்தான். இராமரின் தேரும் மேகத்தின் நடுவே சென்று இராவணனின் முன் நின்றது. இராமர் இராவணனை நோக்கி பல கணைகளை ஏவினார். அக்கணைகள் இராவணனின் உடலில் பல இடங்களில் துளைத்து வெளியே வந்தது. பிறகு இராவணன் அங்கிருந்து கீழே வந்தான். இராமரும் கீழ் இறங்கினார். இராவணன் தன்னிடம் இருந்த வாள், வேல், சூலாயுதம் முதலிய அஸ்திரங்களை இராமர் மீது ஏவினான். இராமர், இராவணனிடமிருந்த அஸ்திரங்கள் அனைத்தையும் துகளாக்கினார்.

இராமர், கடைசியில் மந்திரங்கள் கூறி பிரம்மாஸ்திரத்தை எடுத்தார். அக்கணையை இராவணன் நோக்கி ஏவினார். இந்த தெய்வீக கணை இராவணனின் மார்பை துளைத்து, அவனின் உயிரை பறித்து, புனித கங்கையில் நீராடி, இராமரின் அம்புறாத் துணியை வந்தடைந்தது. இராவணன் அந்த இடத்திலே மாண்டு கீழே விழுந்தான். இராவணன் பெற்ற வரம், அவன் செய்த தவம், பிரம்மனிடம் இருந்து பெற்ற சாகாவரம், சிவபிரானிடம் இருந்து பெற்ற மூன்றரைக் கோடி ஆயுள் முதலியவை அக்கணையால் அழிந்தது. இராவணனின் கோபம், அவன் மனதில் இருந்த வஞ்சனை செய்யும் எண்ணங்களும், அவனின் வலிமையும் ஒழிந்து அவனின் முகம் பொலிவுடன் காணப்பட்டது. பிறகு இராமர் தேரை விட்டு கீழிறங்கி, மாதலியை வாழ்த்தி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

வானரங்கள், விபீஷணன் முதலியவர்கள் அங்கு வந்து இராவணனின் உடலைக் கண்டனர். விபீஷணன், இராவணன் மாண்டு கிடப்பதை கண்டு வருந்தினான். பிறகு இராமர், இராவணனை கருணைக் கண்களால் உற்று நோக்கினார். இராவணனின் முதுகில் இருக்கும் புண்களை பார்த்தார். இந்த புண்கள் போரில் ஏற்பட்ட காயங்களாக இருக்குமோ என நினைத்து ஐயமுற்றார். உடனே இராமர் விபீஷணனை அழைத்து, தம்பி விபீஷணா! உன் தமையனின் முதுகில் புண்கள் இருக்கின்றனவே? இப்புண்களுடன் நான் இராவணனைக் கொன்றது வெற்றியாகாது. இதனால் என் வீரமும் குன்றியது என வருந்திக் கூறினார். விபீஷணன், அண்ணலே! என் தமையன் இராவணன் உடலில் இருப்பது புண்கள் அல்ல, வடுக்கள் தான். ஒருமுறை என் அண்ணன் இராவணன் திக்விஜயம் செய்தபோது யானைகளோடு போர் புரிந்தான்.

அப்போது யானைகளின் தந்தங்கள், தமையனின் முதுகில் ஆழமாய் குத்தியது. அதை தான் தாங்கள் வடுக்களாக பார்த்து உள்ளீர்கள். இது போரினால் ஏற்பட்ட புண்கள் அல்ல என்றான். இதைக்கேட்ட பின் இராமர் சாந்தமடைந்தார். விபீஷணன், இராவணனை பார்த்து மிகவும் துயரம் அடைந்தான். விபீஷணனின் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. இராவணன் மேல் விழுந்து கதறி அழுதான். அண்ணா! என்னை விட்டு பிரிந்தாயே! எமன் உன்னை பரமலோகத்திற்கு அழைத்து சென்று விட்டானே! நான் சொன்ன அறிவுரைகளை அன்றே கேட்டிருந்தால் இன்று உனக்கு இக்கதி நேர்ந்திருக்காதே! உன்னால் கவர்ந்து வரப்பட்ட சீதை இராமரிடம் ஒப்படைத்துவிடு. சிறை வைக்காதே எனக் கூறினேனே. என் சொல்லை நீ கேட்கவில்லை.

சீதையின் தவம், கற்பு நெறி, அவளின் நஞ்சுப் பார்வை இன்று உன்னை கொன்றுவிட்டது. பிறரின் மனைவியை விரும்புவது பெரும் பாவமாகும். உன் பெண்ணாசையால் உன் உயிரையே தொலைத்து விட்டாயே. காமம் என்ற ஆசை உன்னை மட்டுமின்றி அசுர குலத்தையே அழித்து விட்டதே. சூர்ப்பனகை, சீதையின் அழகை பற்றி உன்னிடம் கூறி உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டாளே. இனி உன்னை நான் எப்பிறவியில் காணப் போகிறேன். அண்ணா! உனக்கு துணையாக எவரும் இன்றி பரிதாபமாக இறந்து கிடக்கும் உன் நிலையைக் கண்டால் என் நெஞ்சம் நெருப்பு போல் சுடுகிறதே எனக் கூறி புலம்பி அழுதான். ஜாம்பவான் விபீஷணனின் இந்த நிலைமையைக் கண்டு அவனின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினான். 

தொடரும்.....

Post a Comment

0 Comments