இராமாயணம் பகுதி - 59 - RAMAYANAM PART - 59


இராமாயணம் பகுதி - 59


இராமாயணம் பகுதி - 59 - RAMAYANAM PART - 59

விபீஷணன் கூறியதை கேட்ட இராவணன் மிகவும் கோபங்கொண்டான். விபீஷணிடம், நீ அந்த இராமனை திருமாலின் அவதாரம் எனக் கூறுகிறாய். நான் இந்திரனை சிறையில் அடைத்தவன். தேவர்களை ஓட ஓட விரட்டினேன் என்பதை மறந்துவிட்டு பேசுகிறாய். உனக்கு என்னுடன் போருக்கு வருவது பயமாக இருக்கிறது என்றால் நீ இங்கேயே இரு என்று சொல்லி விபீஷணனை பார்த்து ஏளனமாக சிரித்தான். இதை பார்த்த விபீஷணன், அண்ணா! இந்த கோபத்தை குறைத்துக் கொள். திருமாலுடன் போரிட்டு மாண்டவர் பலர் உண்டு. அவற்றுள் ஒருவன் தான் இரண்யன் என்பவன். இரண்யன் உன்னைக் காட்டிலும் பல மடங்கு வலிமை உடையவன். காசிப முனிவருக்கும், திதி என்பவளுக்கும் பிறந்தவன் தான் இரண்யன். அவனின் தம்பி இரண்யாட்சன். இவன் மக்களுக்கு பெரும் துன்பங்களை செய்ததால் திருமால் வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். இதனால் கோபங்கொண்ட இரண்யன் திருமால் மீது கோபங்கொண்டான்.

இரண்யன் கடுமையான தவம் இருந்து பிரம்மனிடம் வரன் கேட்டான். தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், ஐம்பெரும் பூதங்கள், படைக்கலன்கள், பகல் நேரத்தில், இரவு நேரத்தில், வீட்டுக்கு உள் அல்லது வெளியில் தனக்கு இறப்பு என்பது வரக்கூடாது என வரம் பெற்றான். தான் பெற்ற இவ்வரத்தால் இவன் மக்கள் அனைவரையும் துன்புறுத்தினான். உலகத்தில் உள்ள அனைவரையும் தன்னை கடவுளாக வணங்கும் படி கட்டளையிட்டான். அனைவரும் பயந்து இரண்யனையே கடவுளாக வணங்கினர். அப்போது தேவேந்திரன் இரண்யனைப் பழிவாங்க நினைத்து, இரண்யனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளைச் சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான். இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ்ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன்.

அனைவரும் இரண்யனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான். அதைப் பொறுக்க முடியாத இரண்யன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான். தீயில் தள்ளிவிட்டும், கடலுக்குள் தள்ளிவிட்டும், நச்சுப் பாம்புகளை கடிக்க விட்டும் எத்தனையோ கொடுமைகளை செய்தான். ஆனால், எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார். ‘தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்’ என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரண்யன், ‘அந்த ஹரி எங்கே இருக்கிறான்? ’ என்று கேட்டான். அதற்கு பிரகலாதன், ‘எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் ’ என்று ஒரு தூணைக் காட்டினான்.

இரண்யன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, ஸ்ரீமந் நாராயணனாகிய மகாவிஷ்ணு, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்ம அவதாரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார். அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரண்யன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி, மாலையாக அணிந்து கொண்டார். பூமியிலும், ஆகாயத்திலும் அவன் உடல் படாமல், தமது மடியில் வைத்துக் கொன்றார். அந்த நேரம் இரவுமின்றி, பகலுமின்றி மாலை வேளையாக இருந்தது. மகாவிஷ்ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவர்கள் எல்லோரும் அருகில் வரப் பயந்து, தூரத்திலிருந்தபடியே வணங்கினார்கள். பக்தன் பிரகலாதன் அவர் அருகில் சென்று இனிய பாடல்களைப் பாடி வணங்கினான். அப்போது, ஸ்ரீநரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தார்.

கதையை சொல்லி முடித்த விபீஷணன் இராவணனை பார்த்து, அண்ணா! இக்கதையில் வரும் நரசிம்மர் தான் திருமால். ஆதலால் அவரை பகைத்து அழிவை தேடிக் கொள்ளாதே என்றான். ஆனால் இராவணன் விபீஷணன் கூறியதை எதையும் மனதில் கொள்ளவில்லை. இதைக் கேட்டு இராவணன் மிகவும் கோபங்கொண்டான். இராவணன், விபீஷணா! இக்கதையில் வரும் பிரகலாதனும் நீயும் ஒன்று தான். அவன் தன் தந்தையை கொன்று செல்வத்தை அடைந்தான். அதேபோல் நீ என்னை கொன்று இச்செல்வத்தை அடையலாம் என நினைக்கிறாய். அதனால்தான் அந்த இராம இலட்சுமணர் மேல் உனக்கு பாசம் பொங்கி வருகிறது. இதற்கு மேல் நீ இராம இலட்சுமணரை புகழ்ந்து பேசினால் உன்னை கொன்று விடுவேன் என விபீஷணன் மீது சீறினான். அது மட்டுமில்லை எனக்கு இராமனிடம் சீதையை திரும்பி அனுப்பும் எண்ணமும் இல்லை. ஆதலால் நீ இங்கு இருந்து சென்று விடு. 

நீ என் தம்பி என்பதால் உன்னை கொல்லாமல் விடுகிறேன். இனியும் நீ எனக்கு உபதேசம் சொல்வதை நிறுத்திக் கொள். என் கண்முன் நிற்காதே இங்கிருந்து சென்று விடு. இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என்றான். விபீஷணன், இராவணா! நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சொன்ன அறிவுரைகளை நீ உணரவில்லை. உனக்கு அழிவு காலம் வந்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே. நான் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் என் தவறை மன்னித்துக் கொள் எனச் சொல்லிவிட்டு வான் வெளியில் பறந்தான். விபீஷணனுடன் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நான்கு அமைச்சர்களும் உடன் சென்றனர். அண்ணன் இராவணன், நீ இங்கிருந்து போய்விடு. இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என்று அச்சுறுத்தியதால் இலங்கையை விட்டுச் சென்று கொண்டிருந்தான். இனி என்ன செய்வதென்று தெரியாத விபீஷணன் இராமனிடம் தஞ்சமடைய புறப்பட்டனர்.

இப்படி விபீஷணன் சென்று கொண்டிருக்கும் போது மகேந்திர மலையில் வானரங்கள் அக்கரையில் தங்கியிருப்பதை பார்த்தான். பிறகு தன் அமைச்சர்களோடு இனி என்ன செய்யலாம் என ஆலோசித்தான். அவர்கள் அனைவரும் இராமரிடம் சென்று சரணடையலாம் என்றனர். பிறகு வீபிஷணனும் அவனுடைய அமைச்சர்களும் மகேந்திர மலையை அடைந்தனர். அங்கு இராமர் சீதையின் நினைவில் வாடிக் கொண்டிருந்தார். சீதையை நான் எவ்வாறு காண்பேன். இப்பெருங்கடலை நாம் எவ்வாறு கடக்க போகிறோம் என நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார். இலட்சுமணர் இராமருக்கு ஆறுதல் கூறினார். விபீஷணன், இப்பொழுது இரவு நேரமாகி விட்டதால் நாம் இச்சோலையில் தங்கி விட்டு, விடிந்ததும் இராமரை காண செல்லலாம் என்றான்.

பொழுது விடிந்தது. இராம, இலட்சுமணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் முதலிய வானர வீரர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இராகவா! இராமா! எனக் கூறி கொண்டு இராமரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வானர வீரர்கள், விபீஷணனையும் அவனுடன் வரும் அமைச்சர்களையும் பார்த்தவுடன், அரக்கர்கள் இங்கே வந்துவிட்டார்கள். இவர்களை கொல்லுங்கள் எனக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களை நோக்கி ஓடினர். சில வானர வீரர்கள் இவன் இராவணனாகத் தான் இருக்கக்கூடும் என கூறினர். சில வானர வீரர்கள் இராவணனுக்கு பத்து தலைகளும், இருபது கைகளும் இருக்கும். ஆனால் இவனுக்கு இரண்டு கைகள் தானே உள்ளது எனக் கூறினர். சில வானர வீரர்கள், இவர்களை பிடியுங்கள். இராமரிடம் கொண்டு சொல்வோம் என்றனர். சிலர் எச்சரிக்கையாக இருங்கள் இவர்கள் வானில் பறந்து சென்று விடுவார்கள் என்றனர்.

தொடரும்.....

Post a Comment

0 Comments