இராமாயணம் பகுதி - 58 - RAMAYANAM PART - 58


இராமாயணம் பகுதி - 58


இராமாயணம் பகுதி - 58 - RAMAYANAM PART - 58

அனைவரும் மகேந்திர மலையை அடைந்தனர். அப்பொழுது இரவாகிவிட்டதால் அன்றைய பொழுதை மகேந்திர மலையில் கழித்தனர். இலங்கையில் அனுமன் சேதத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டான். இராவணன் ஏவலாட்களுக்கு இலங்கையை முன்பு விட பன்மடங்கு அழகாக்கும் படி ஆணையிட்டான். பிறகு அரக்கர்கள் பொன்னாலும், தங்கத்தாலும், நவமணிகளாலும் இலங்கையை முன்பை விட அழகாக்கினர். இராவணன் இவற்றை கண்டு அவர்களுக்கு பரிசுகளை அளித்தான். இராவணன் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். அக்கூட்டம் அனுமனால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவு பற்றிய ஆலோசனைக் கூட்டமாகும். அக்கூட்டத்திற்கு தனக்கு நெருக்கமானவர்களை தவிர வேறு யாரையும் அவன் அனுமதிக்கவில்லை. அக்கூட்டத்திற்கு பலத்த காவல் ஏற்பாடு செய்திருந்தான். இராவணன் தன் அனுமதியின்றி எவரும் உள்ளே வரக்கூடாது எனக் கட்டளையிட்டான்.

ஆலோசனை கூட்டத்தில் இராவணன், ஒரு குரங்கு என் வீரத்தையும், என் ஆற்றலையும், என் பெருமையையும் அழித்துவிட்டு சென்றுவிட்டது. இதைக் காட்டிலும் பெரிய அவமானம் வேறு என்ன வேண்டும்? இலங்கை நகரை எரித்துவிட்டு சென்றுள்ளது. இலங்கை நகரம் பெரும் அழிவைக் கண்டுள்ளது. எனக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டு அக்குரங்கு சென்றுவிட்டது. இவ்வளவு ஏற்பட்ட பின் நான் மட்டும் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறேன் என புலம்பினான். அனுமன் இலங்கைக்கு வைத்த தீ இன்னும் அணையக்கூட இல்லை. ஆனால் நாம் சுகமாகத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அந்த அனுமன் இலங்கைக்கு ஏற்படுத்திவிட்டு சென்ற அழிவினால், நம் படைகள், நம் உறவினர்கள் என அனைவரையும் இழந்துள்ளோம். இது என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. ஆனால் அக்குரங்கை நாம் கொல்லாமல் விட்டுவிட்டோம் என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது எனக் கூறி மிகவும் வருந்தினான்.

இதனைக் கேட்ட படைத்தலைவன் எழுந்து, அரசே! நான் முன்பே சொல்லி இருந்தேன். சீதையை கவர்ந்து வருவது மட்டும் ஒரு வீரனுக்கு அழகல்ல. நான் சொன்னதை அப்பொழுது நீங்கள் கேட்கவில்லை. கரனையும் நம் அரக்கர்களையும் கொன்று, சூர்ப்பனைகையின் மூக்கையும் அறுத்த அந்த இராம இலட்சுமணரை அன்றே கொன்றிருக்க வேண்டும். அப்பொழுது விட்டுட்டு இன்று வருந்துவது ஒரு பயனும் இல்லை. நாம் பகைவரை எதிர்க்காமல் இங்கு இன்பத்தை அனுபவித்து கொண்டிருப்பதில் என்ன பயன்? இப்படி இருந்தால் குரங்கு மட்டுமல்ல சிறு கொசுவும் நம்மை எதிர்க்கும் என்றான். இவன் பேசிய பிறகு துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்ரு, வேள்வியின் பகைஞன், தூமிராட்சன் முதலான அரக்க வீரர்களும் எழுந்து பேசினார்கள். அரசே! எலிகளை கண்டு புலிகள் பயம் கொள்ளுமா? எங்களுக்கு அனுமதி தாருங்கள். நாங்கள் அந்த மனிதர்களையும், குரங்குகளையும் கொன்று தின்று வருகிறோம் என்றனர்.

அப்பொழுது இராவணனின் தம்பி கும்பகர்ணன் எழுந்து, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கூறி அவர்களை அமர வைத்தான். பிறகு கும்பகர்ணன் இராவணனிடம் சென்று, உன் தம்பியாகிய நான் உனக்கு நல்லதை மட்டும் தான் சொல்வேன். நீ உன்னை உலகம் போற்ற வேண்டும் என நினைக்கிறாய். அவமானம் நடந்து விட்டது எனக் கூறுகிறாய். உன் மீது ஆசை கொண்ட மனைவிமார்கள் பலர் இருக்கையில் இராம இலட்சுமணர் இல்லாத நேரத்தில் நீ சீதையை கவர்ந்து வந்துள்ளாய். இது நியாயமா? நீ என்று சீதையை கவர்ந்து வந்து இங்கு சிறை வைத்தாயோ அன்றே அரக்கர்களின் புகழ் அழிந்து விட்டது. தீய செயல்களை செய்துவிட்டு புகழ் கிடைக்கவில்லை என்று புலம்புவதில் ஒரு பயனும் இல்லை. நம் அரக்க குலத்திற்கு அழிவைத் தேடித்தரும் செயலை நீ செய்துள்ளாய். இராமர் தன் ஒரு அம்பினால் கரன் முதலிய பதினாயிரம் அரக்கர்களை கொன்றுள்ளான்.

கும்பகர்ணன், அரசே! சீதையை இராம இலட்சுமணரிடம் ஒப்படைத்து நல்லது செய்வாயாக! இல்லையேல் இராமன் நிச்சயம் நம்மை வெல்வான். அப்படி இல்லையேல் இதற்கு மற்றொரு வழியும் உண்டு. இராமனுக்கு முன்பு நாம் நம் அரக்க படைகளை அழைத்துக் கொண்டு இராமனிடம் போர் புரிந்து இராம இலட்சுமரையும், அவர்களுடன் இருக்கும் வானர படைகளையும் அழித்து விடலாம். இது தான் சரியான வழி என்றான். இப்படி கும்பகர்ணன் பேசியதை கேட்டு கோபங்கொண்ட இராவணன், அவன் கடைசியாக கூறிய ஆலோசனையை மட்டும் ஏற்றுக் கொண்டான். தம்பி கும்பகர்ணா! நீ நல்லது சொன்னாய். நாம் உடனே போருக்கு புறப்படுவோம். பகைவர் அனைவரையும் அழித்துவிட்டு திரும்புவோம். நம் படைகள் அனைவரையும் போருக்கு தயாராகும்படி கூறினான். அப்போது இந்திரஜித் எழுந்து, அரசே! புழுக்களை கொல்வதற்கு தாங்கள் செல்வதா? எனக்கு அனுமதி கொடுங்கள். நான் சென்று அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு வருகிறேன் என்றான்.

அப்போது இராவணனின் தம்பியான விபீஷணன் எழுந்து! மகனே, இந்திரஜித்! நீ சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறாய். நீ இன்னும் அரச நீதிகளை நன்கு உணரவில்லை. அனுபவம் உடையவர்கள் முடிவு செய்வதை நீ முடிவு செய்யலாமா? என்றான். விபீஷணன் இராவணனை பார்த்து, அண்ணா! எனக்கு தாய், தந்தை, அண்ணன், கடவுள் எல்லாம் நீங்கள் தான். உனக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் நான் இல்லை என்றாலும், இவர்கள் கூறிய ஆலோசனை அனைத்தும் தங்களுக்கு தீமை அளிக்கக்கூடியவை. ஆதலால் நான் சொல்வதை கோபப்படாமல் கேட்க வேண்டும். இலங்கையை ஒரு வானரம் தான் எரித்தது என தாங்கள் நினைப்பது தவறு. சீதையின் கற்பின் திறன் தான் இலங்கை நகரை எரித்துள்ளது. தாங்கள் அதனை நன்கு உணர வேண்டும். இதை நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் ஒருவனின் பெருமை இழப்பதற்கு காரணம் பெண்ணாகத் தான் இருக்கக் கூடும்.

அண்ணா! குரங்குகள் என்று நீ அலட்சியம் செய்வது தவறு. குரங்காகிய வாலியினால் நீ அடைந்த துன்பங்களை நினைத்துப் பார். அவர்கள் மனிதர்கள் தான் என அலட்சியம் செய்கிறீர்கள் தானே? கார்த்தவீர்யார்ஜுனன் உன்னை சிறை வைத்ததை மறந்து விட்டாயா? கார்த்தவீர்யார்ஜுனனை கொன்ற பரசுராமனை இராமன் வென்றதையும் நீ மறந்து விட்டாயா? இராம இலட்சுமணரை பகைப்பது உனக்கு தீங்கை விளைவிக்கும். உன் புகழும், உன் குலமும் அழிவதற்கு முன் நீ சீதையை இராம இலட்சுமணரிடம் ஒப்படைத்து விடு. அவ்வாறு செய்வது தான் உனக்கு நன்மை என்றான். இதைக் கேட்ட இராவணன், கோபத்தில் குலுங்க குலுங்க சிரித்தான். பிறகு இராவணன், என் வலிமையைப் பற்றி நீ அறிந்திருந்தும் அந்த மனிதர்கள் என்னை வெல்வார்கள் எனக் கூறுகிறாய். நீ அவர்களை பார்த்து பயப்படுகிறாயா? இல்லை அவர்கள் மீது அன்பு காட்டுகிறாயா? என்றான்.

இராவணன், வாலியை வலிமைமிக்கவன் எனக் கூறினாய். ஆனால் அவனிடம் போர் புரியும் எதிரியின் வலிமையை பாதி பெற்றவன் என்பதை மறந்து விட்டாயா? அவனிடம் யார் போர் புரிந்தாலும் அவன் அவர்களின் வலிமையை பாதி பெற்று விடுவான். இராமனும் வாலியை மறைந்து இருந்து தான் கொன்றான் என்பதை நீ மறந்து விட்டாயா? நீ மட்டும் தான் அந்த மனிதர்களுக்காக மனமிறங்கி பேசிக் கொண்டிருக்கிறாய். உன் பேச்சை கேட்பதில் ஒரு பயனும் இல்லை. ஆதலால் நான் போருக்கு செல்வது நிச்சயம். படைகளே போருக்கு செல்ல தயாராகுங்கள் என்றான். விபீஷணன் மறுபடியும் இராவணனிடம், அண்ணா! நான் சொல்வதை கேளுங்கள். ஒப்பற்ற திருமால் தான் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அரக்கர்களாகிய நம்மை அழிக்க அவதாரம் எடுத்து உள்ளான். ஆதலால் தாங்கள் போருக்கு செல்ல வேண்டாம் என்று இராவணனிடம் கெஞ்சிக் கேட்டான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments