இராமாயணம் பகுதி - 60 - RAMAYANAM PART - 60


இராமாயணம் பகுதி - 60


இராமாயணம் பகுதி - 60 - RAMAYANAM PART - 60

அனுமன் வானர வீரர்களின் கூச்சலைக் கேட்டு துமிந்தன், மயிந்தன் என்னும் இரு வீரர்களை அழைத்து, அங்கே! என்ன நடக்கிறது என அறிந்து கொண்டு வரும்படி கூறினான். பிறகு துமிந்தன், மயிந்தன் சென்று கூட்டமாய் நின்று கொண்டிருந்த வானர வீரர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்திருப்பது யார் எனப் பார்த்தனர். அவர்கள் விபீஷணனின் அருகில் வந்து நன்றாக உற்று கவனித்தனர். பிறகு இவர்களை பார்த்தால் ஞானமும், அறநெறியும் உடையவர்கள் என்பதை தெரிந்து கொண்டனர். பிறகு விபீஷணனை பார்த்து, நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? எனக் கேட்டனர். விபீஷணன், நான் இராவணனின் தம்பி. நாங்கள் ரகு குலத்தில் பிறந்த இராமனின் திருவடியில் சரணடைய வந்துள்ளோம்.

நான் பிரம்மனின் பேரனான விபீஷணன் வந்துள்ளதாக இராமனிடம் சென்று கூறுங்கள் என்றான். நான் இராவணனிடம் அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். ஆனால் அவன் என் மீது கோபங்கொண்டு, உயிர் பிழைத்து இங்கிருந்து ஓடி விடு. இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் எனக் கூறினான். ஆதலால் நாங்கள் இராமனிடம் சரணடைய வந்துள்ளோம் என்றான். பிறகு துமிந்தன், மயிந்தன் இராமனிடன் சென்று நடந்தவற்றை கூறினார்கள். விபீஷணன் தங்களிடன் சரணடைய வந்துள்ளான். அவர்கள் மிகுந்த கவலையுடன் காணப்படுகிறார்கள். இராவணன் அவர்களை விரட்டியடித்தாக கூறினார்கள். நாங்கள் அவர்களிடம் தங்களின் அனுமதியைப் பெற்று வருவதாக கூறிவிட்டு வந்துள்ளோம்.

அவர்களை இங்கே வர அனுமதிப்பதா? இல்லை இங்கு இருந்து அவர்களை விரட்டியடிப்பதா? தாங்கள் உத்தரவு அளித்தால் அதன்படி நடப்போம் என்றனர். இவர்கள் சொல்வதைக் கேட்ட இராமர், எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன் மற்றவர்களிடம் ஆலோசிப்பது தான் சிறந்தது என எண்ணினார். இராமர் சுக்ரீவன் பார்த்து, சுக்ரீவா! விபீஷணன் அடைக்கலம் வேண்டி இங்கு வந்துள்ளான். அவனுக்கு அடைக்கலம் தரலாமா? இல்லை அவனை நிராகரித்து விடலாமா? எனக் கேட்டான். சுக்ரீவன், பெருமானே! விபீஷணன் நல்லவன் இல்லை. அவன் இராவணனை பகைத்துக் கொண்டு நம்மை காட்டிக் கொடுக்கத் தான் இங்கு வந்துள்ளான். அவன் நம்மிடம் வஞ்சனை செய்ய தான் இங்கு வந்துள்ளான் என்றான். 

ஜாம்பவான், பெருமானே! பகைவர்களை நம்முடன் சேர்த்துக் கொள்ளுதல் கூடாது. இராவணன் அன்னை சீதையை யாரும் இல்லா நேரம் பார்த்து கவர்ந்து சென்றுள்ளான். இவனோ இராவணனின் தம்பி இவனை எப்படி நாம் நம்புவது? இவனை நாம் நிராகரிப்பது தான் சிறந்தது என்றான். இராமர், படைத்தலைவன் நீளனை பார்த்து உனது கருத்தை கூறுவாயாக என்றார். ஐயனே! அரக்கர்கள் மாய வேலைகள் செய்வதில் வல்லவர்கள். அரக்கர்களை நாம் ஒரு போதும் நம்பக் கூடாது. ஆதலால் நாம் விபீஷணனை நம்பக் கூடாது என்றான். அங்கதன், ஐயனே! தாங்கள் அனைத்தும் அறிந்தவர். அரக்கர்கள் தீய செயல்கள் செய்வதில் வல்லவர்கள். ஆதலால் நாம் அவர்களை நம்பக் கூடாது என்றான். இதேபோன்று மற்ற வானர வீரர்களும், விபீஷணனுக்கு தாங்கள் அடைக்கலம் தரக்கூடாது எனக் கூறினர்.

இராமர் அனுமனை நோக்கி, உனது கருத்தை கூறுவாயாக எனக் கேட்டார். அனுமன் இராமரை வணங்கி, எனது கருத்துப்படி விபீஷணனை தீயவன் என நான் கருதவில்லை. இங்கு உள்ள அனைவரும் விபீஷணனை நம்ப வேண்டாம் எனக் கூறினார்கள். இராவணன் அழிவது நிச்சயம் என்பதை உணர்ந்து தான் விபீஷணன் தங்களை அடைக்கலம் தேடி வந்துள்ளான். நம்மிடம் அடைக்கலம் என்று தேடி வருபவர்கள் நமக்கு தீங்கு செய்வார்களா? நான் இராவணனின் அரசவையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டபோது, இராவணன் இவனை கொல்லுங்கள் என ஆணையிட்டான். அப்போது விபீஷணன், தூதர்களை கொல்வது பாவச் செயலாகும். இது நம் குலத்திற்கு இழிவாகும் எனக் கூறினான். நான் இலங்கையில் இரவு நேரத்தில் சீதையை தேடிக் கொண்டு போகும்போது விபீஷணனின் மாளிகைக்குச் சென்றேன். அரக்கர்கள் பலர் மாளிகையில் மது பாட்டில்கள் நிரம்பிக் கிடந்தன. ஆனால் விபீஷணனின் மாளிகையில் பூஜைக்குரிய பொருட்கள் நிரம்பிக் கிடந்தன. விபீஷணன் அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும் அவன் நற்குணத்தில் சிறந்தவன்.

அன்னை சீதை அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்றால் அதற்கு விபீஷணனின் மகள் திரிசடை தான் காரணம். தந்தையை போல திரிசடையும் நற்குணமுடையவள். அதனால் தான் அவள் அன்னைக்கு உறுதுணையாக உள்ளாள். இராவணன் தங்களால் அழியக் கூடியவன் என்பதை நன்றாக அறிந்து தான் தங்களை சரணடைய வந்துள்ளான். பகைவனிடம் இருந்து பிரிந்து வந்துள்ள விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பிறர் நம்மை ஏளனமாக அல்லவா நினைப்பார்கள். விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்வதன் மூலம் அரக்கர்களின் மாய வேலைகள் பற்றி நாம் தெரிந்துக் கொள்ளலாம். அனுமன் சொன்னதை கேட்ட இராமர், நல்லது சொன்னாய் என அனுமனை பாராட்டினார். பிறகு இராமர் அனைவரையும் பார்த்து, அனுமன் சொல்வது தான் சரி. விபீஷணன் நம்மை நோக்கி வந்த காலமும் நமக்கு ஏற்ற காலம் தான். நம்மிடம் அடைக்கலம் தேடி வருபவர்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த தருணத்தில் சில வரலாற்றைக் கூறுகிறேன். சிபிச் சக்ரவர்த்தியின் புகழ் தேவலோகத்தை எட்டியது. தேவேந்திரன் சிபியைச் சோதித்துப் பார்க்க அக்னி பகவானை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தான். இந்திரன் ஒரு கழுகு வடிவத்திலும், அக்னி ஒரு புறா வடிவத்திலும் வந்து சேர்ந்தார்கள். புறாவைத் துரத்திக்கொண்டு கழுகு பறந்து வந்து சிபிச் சக்ரவர்த்தியின் அரண்மனையில் விழுந்தது. அந்த புறாவை கவ்வி கொண்டு போக முயன்றது கழுகு. இதைப் பார்த்த சிபி அதைத் தடுத்தான். கழுகு, அரசனே! அந்தப் புறா என்னுடைய பசியைத் தீர்க்கவேண்டிய இரையாகும். புறாவைக் கீழே விடு என்றது. அதற்கு சிபி கழுகிடம், உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதை நான் உனக்குத் தருகிறேன். ஆனால் புறாவை விட்டுவிடு என்று கூறினார்.

அரசே! புறாவின் எடையளவு மாமிசம் எனக்கு வேண்டும். அது மனித மாமிசமாக இருந்தாலும் பரவாயில்லை என்றது கழுகு. அதற்கு ஒப்புக் கொண்ட சிபி, உனக்குத் தேவையானது புறாவின் எடையளவு மாமிசம் தானே! அதை நான் என் உடலிலிருந்தே வெட்டித் தருகிறேன் என்று கழுகிடம் கூறினார். ஒரு தராசின் ஒரு தட்டில் சிபி அந்தப் புறாவை வைத்து மறு தட்டில் தன் உடலிலிருந்து சிறு பகுதியைச் செதுக்கி எடுத்து வைத்தான். புறா அமர்ந்த தட்டு இறங்கவில்லை. எவ்வளவு வெட்டி வைத்தாலும் புறாவின் தட்டுக்குச் சமமாக முடியவில்லை. கடைசியில் சிபி கழுகைப் பார்த்து, நானே தட்டில் ஏறி அமர்ந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டுத் தட்டில் ஏறி அமர்ந்தான். உடனே புறா இருந்த தட்டு சமநிலையில் இறங்கிவிட்டது. உடனே கழுகு இந்திரனாகவும், புறா அக்னி தேவனாகவும் மாறினார்கள். உன்னுடைய கருணையையும் கொடைத் தன்மையையும் புரிந்துகொண்டோம் என்று வாழ்த்தி மறைந்தார்கள்.

தொடரும்.....

Post a Comment

0 Comments