இராமாயணம் பகுதி - 45
சுக்ரீவன், இப்படி எல்லா இடங்களிலும் சீதையை தேடி ஒரு மாதத்திற்குள் இங்கு வந்தடைய வேண்டும். ஆதலால் எல்லோரும் காலத்தை தாமதிக்காமல் உடனே புறப்படுங்கள் என்றான். பிறகு இராமன் அனுமனை தனியாக அழைத்துச் சென்று, வீரத்தில் சிறந்தவனே! நிச்சயம் நீ சீதையை கண்டுபிடித்து வருவாய் என நம்புகிறேன். சீதையை பற்றி நான் உன்னிடம் கூறுகிறேன். சீதை அழகில் சிறந்தவள். தாமரைப்பூ போன்றவள். மிகவும் நளினம் உடையவள் என சீதையைப் பற்றிக் கூறினார். பிறகு இராமர், சீதையிடம் இக்கணையாழியை என் அடையாளமாக காண்பித்து என்னுடைய நலத்தை கூறுவாயாக என வாழ்த்தி அனுமனுக்கு விடை கொடுத்தார்.
பிறகு அனுமன், அங்கதன், ஜாம்பவன் மற்றும் தன் பெரிய படைகளுடன் தென்திசை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் விந்திய மலையை அடைந்தார்கள். அங்கு சீதையை தேடி அலைந்த பின்னர் நர்மதா ஆற்றை கண்டார்கள். அங்கும் சீதையை வெகுண்டு தேடினார்கள். அதன்பின் நர்மதை ஆற்றை கடந்து அங்கிருந்து சீதையை தேடி ஏமகூட மலையை அடைந்தனர். அங்கு சீதையை தேடும் போது ஒரு பாலைவனத்தை அடைந்தனர். அவர்கள் பாலைவனத்தின் வெப்பத்தை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஒரு பாதாளம் தென்பட்டது. வெப்பத்தை தாங்க முடியாத அவர்கள் பாதாளத்துக்குள் நுழைந்தனர்.
அப்பாதாளத்துக்குள் மனிதர்கள் நடமாட்டமே இல்லாத ஒரு நகரத்தை கண்டனர். அங்கு சேலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, உணவுகளும், உடைகளும் இருந்தது. சிலர் இது தான் இராவணன் சீதையை சிறை வைத்துள்ள இடம் என்று நினைத்தனர். அங்கு ஓர் அழகிய மண்டபத்தில் ஓர் பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள். அவள் பெயர் சுயம்பிரபை. அப்பெண் நகரக்குள் யாரோ வந்துள்ளார்கள் என்பதை அறிந்து கண் விழித்து பார்த்தாள். அனுமனை பார்த்து, தாங்கள் யார்? என வினவினாள். அனுமன், நாங்கள் இராமருடைய அடியேன்கள். என் பெயர் அனுமன் என்றார். பிறகு அனுமன் சுயம்பிரபையை பார்த்து, தாங்கள் யார்? தாங்கள் தனியாக இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என வினவினான்.
சுயம்பிரபை, முன்னொரு காலத்தில் தேவலோகத்தை சேர்ந்த மயன் என்பவன் இந்த பகுதியில் அழகிய ஊரை அமைத்தான். அவன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் பெற்றான். அத்துடன் தெய்வப்பெண்ணான ஹேமையுடன் தான் அமைத்த அழகிய நகரில் கூடா ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு நான் துணை புரிந்தேன். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த இந்திரன் மயனைக் கொன்று விட்டு ஹேமையை தேவலோகத்திற்கு அனுப்பிவிட்டார். என்னை இங்கேயே தனியாக இருக்கும்படி கூறினார். உனக்கு இராமரின் தூதுவனான அனுமன் விமோட்சனம் தருவார் என கூறிவிட்டு சென்றார்.
நான் தங்களுக்காக தான் இத்தனை நாள் தவம் செய்து கொண்டு இருந்தேன். தாங்கள் எனக்கு இதிலிருந்து மோட்ச பதவியை அளிக்க வேண்டும் என்றாள். பிறகு அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்து, அந்த பாதாளத்தை வேருடன் பிடுங்கி மேலே நிலமட்டம் வரும்போது மற்ற வானர வீரர்களை அங்கிருந்து இறங்கச் செய்தார். அப்பாதாளத்தை கடலில் வீசி விட்டார். சுயம்பிரபைக்கு மோட்சத்தை அளித்தார். சுயம்பிரபை தேவலோகத்தை சேர்ந்தாள். பிறகு வானர வீரர்கள் பொய்கையை அடைந்தனர். அங்கு அவர்கள் காய், கனிகளை உண்டு இளைப்பாறினார்கள். பொய்கை கரையில் அன்றிரவை கழித்தனர்.
பொய்கை கரையில் அனுமன், அங்கதன், ஜாம்பவான் மற்ற வானர வீரர்கள் அன்றிரவை கழித்தனர். துமிரன் என்ற அரக்கன் கருநிறமுடன், பெரிய உடலும், நீண்ட கைகளுடன் நடுஇரவில் அங்கு வந்தான். என் ஆட்சிப் பகுதியான பொய்கை கரையில் இவர்கள் எவ்வளவு துணிவுடன் உறங்கி கொண்டு இருப்பார்கள் எனக் கூறி அங்கதனின் மார்பில் ஓங்கி குத்தினான். யார் தன் மார்பில் குத்தியது என்பதை அறிய அங்கதன் எழுந்து பார்த்தான். அங்கு அரக்கன் அவன் முன் பெருங்கோபத்தில் நின்று கொண்டு இருந்தான். பிறகு இருவரும் போர் புரிய தொடங்கினர். நெடுந்நேரம் இவர்களின் யுத்தம் தொடர்ந்தது. ஒரு வழியாக அங்கதன் அரக்கனை கொன்று விட்டான். மற்ற வானரங்கள் இவர்களின் போரின் போது ஏற்பட்ட சத்தங்களை கேட்டு எழுந்து பார்த்தனர். அப்போது அரக்கன் மாண்டு கிடந்தான். உடனே அனுமன் அங்கதனை பார்த்து இவன் யார்? எனக் கேட்டான்.
அதற்கு அங்கதன், இவன் யாரென்று எனக்கு தெரியவில்லை என்றான். அப்போது ஜாம்பவான், இவனை எனக்கு தெரியும். இவன் துமிரன் என பெயர் கொண்ட அரக்கன். இவன் பொய்கையை தன்னுடையது என எண்ணிக் கொண்டு இருந்தான். இவனை அங்கதனை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என்றான். பிறகு வானர வீரர்கள் அங்கிருந்து சீதையை தேட புறப்பட்டனர். அவர்கள் விதர்ப்ப நாடு, பாண்டு மலை, தண்டகவனம், கோதாவரி நதி போன்ற இடங்களில் சீதையை மிகுந்த சிரத்தையுடன் தேடினர். இங்கு சீதையை கண்டுபிடிக்க முடியாததால் மிகவும் கவலையுற்று சோனை நதியை அடைந்தனர். அங்கும் சீதையை கண்டுபிடிக்க முடியாததால் அங்கிருந்து அருந்ததி மலையை அடைந்தனர். அங்கு தேடிய பின் திருவேங்கட மலையை அடைந்தனர். அங்கு திருவேங்கட மலையை வணங்கிவிட்டு சீதையை தேடினர்.
பிறகு அவர்கள் அங்கிருந்து அந்தணர் வேடமணிந்து தொண்டை நாட்டை அடைந்தனர். அங்கு சீதையை தேடிய பிறகு வளமிக்க சோழ நாட்டை அடைந்தனர். அங்கும் சீதையை கண்டுபிடிக்க முடியாததால் பாண்டிய நாட்டுக்குச் சென்றனர். அங்கு தேடியும் சீதை கிடைக்காததால் மிகவும் கவலையுற்றனர். பிறகு அவர்கள் கடைசியாக சுக்ரீவன் குறிப்பிட்ட மகேந்திர மலையை அடைந்தனர். அங்கு அவர்கள் பரந்து விரிந்து இருந்த கடல்பகுதியைக் கண்டனர். வானர வீரர்கள் எவ்வளவு முயன்றும் சீதையை தேடி கண்டுபிடிக்க முடியாததால் மிகவும் கவலையுடன் சோர்வடைந்தனர். அது மட்டுமின்றி சுக்ரீவன் கொடுத்த ஒரு மாதக்காலம் முடிவடைந்ததால் மிகவும் கவலையுற்றனர். நம்மை ஒரு மாதக்காலம் சீதையை கண்டிபிடித்து வரச்சொன்ன சுக்ரீவனும், இராமரும் நம் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருப்பார்கள்.
நாம் இன்னும் சீதையை கண்டுபிடிக்கவில்லை என்ற செய்தி இராமருக்கு தெரிந்தால் அவர் மிகவும் வேதனைப்படுவாரே? நாம் சீதையை கண்டுபிடிக்காமல் எவ்வாறு நாடு திரும்ப முடியும் என பலவாறு புலம்பி கவலையுற்றனர். அப்போது அங்கதன் அவர்களிடம், நாம் இராமரிடம் சீதையை நிச்சயமாக கண்டுபிடித்துவிட்டு வருவோம் என அவரிடம் ஆணையிட்டு வந்தோம். ஆனால் நம்மால் அக்காரியத்தை செய்து முடிக்க முடியவில்லை. நமக்கு சுக்ரீவன் கொடுத்த கால அவகாசமும் முடிந்து விட்டது. இதற்கு மேலேயும் நம்மால் சீதையை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. சுக்ரீவன் நமக்கு கொடுத்த கட்டளையை செய்து முடிக்கவில்லை என்று நம்மை தண்டிப்பான். நாம் சீதையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்ற செய்தி இராமர் அறிந்து மிகவும் வருந்துவார். இதையெல்லாம் நாம் கண்ணால் பார்ப்பதற்கு பதில் நம் உயிரை இங்கேயே மாய்த்துக் கொள்ளலாம். இதற்கு உங்களின் கருத்து என்ன? என்று கேட்டான்.
தொடரும்.....
0 Comments