இராமாயணம் பகுதி - 39 - RAMAYANAM PART - 39


இராமாயணம் பகுதி - 39 


இராமாயணம் பகுதி - 39 - RAMAYANAM PART - 39

இராமர், இலட்சுமணர், சுக்ரீவன், அனுமன் மற்றும் ஏனைய வானரங்களும் ஒரு சோலையில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது சுக்ரீவன் இராமரை வணங்கி, பெருமானே! நாங்கள் ஒரு சமயம் மலையின் உச்சியில் இருந்தபோது வான வழியாக இராவணன் ஒரு பெண்மணியை கவர்ந்து செல்வதை கண்டோம். அந்தப் பெண் அழுது கொண்டு இருந்தாள். அப்பெண் தங்களின் தேவியாக தான் இருக்க வேண்டும் என்றான் சுக்ரீவன். இராவணன் அப்பெண்ணுடன் இம்மலையை கடக்கும் போது, அப்பெண் தான் அணிதிருந்த அணிகலன்களை கழற்றி ஓர் துணியில் சுற்றி எங்களை நோக்கி எறிந்தாள். அந்த அணிகலன்களை நாங்கள் பத்திரமாக எடுத்து வைத்துள்ளோம். தாங்கள் அந்த அணிகலன்களை பார்த்து அது தேவியின் அணிகலன் தானா என்று சொல்லுங்கள் என்றான் சுக்ரீவன்.

பிறகு சுக்ரீவன் அணிகலன்களை இராமரிடம் காண்பித்தான். இராமர், துணியால் சுற்றப்பட்டிருந்த அணிகலன்களை அவிழ்த்து பார்த்தார். அனைத்தும் சீதையுடைய அணிகலன்கள். இவை அத்திரி மகரிஷி யின் மனைவி அனுசூயை சீதைக்கு கொடுத்த அணிகலன்கள் என்று கூறி உணர்ச்சி வசப்பட்டு சீதையின் நினைவால் மிகவும் வருந்தினார். பிறகு இலட்சுமணரிடம், இந்த அணிகலன்களை காட்டி இது சீதையின் அணிகலன்கள் தானா என மறுபடியும் கேட்டார்.

தம்பி! இலட்சுமணா! தலையில் அணியும் இந்த நவரத்ன மாலை உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று தெரியவில்லை என்றார்.

தம்பி! இலட்சுமணா! காதில் அணியும் இந்த காதணி உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

தம்பி! இலட்சுமணா! இந்த கழுத்தணி உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

தம்பி! இலட்சுமணா! இந்த வளையல்கள் உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

தம்பி! இலட்சுமணா! இந்த ஒட்டியாணம் உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

தம்பி! இலட்சுமணா! இந்த மெட்டி உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். இலட்சுமணர்! அண்ணா! ஆம் அன்னையின் அணிகலன் தான் என்றார்.

உடனே இராமர் இலட்சுமணரிடம் இத்தனை அணிகலன்கள் காண்பித்தும் இவை உன் அன்னையின் அணிகலன்களா என்று உனக்கு தெரியவில்லை. இந்த மெட்டி மட்டும் எப்படி அடையாளம் தெரிந்தது என்று கேட்டார். இலட்சுமணர் இராமரிடம், அண்ணா! இந்த பதினான்கு ஆண்டுகளில் என் அன்னை சீதைக்கு பாத பூஜை செய்யும் போது அவர்களின் பாதங்களை மட்டும் தான் நான் பார்த்துள்ளேனே தவிர அவர்களின் திருமேனியை நான் பார்த்ததில்லை என்றார். அதனால் தான் எனக்கு மெட்டி மட்டும் தான் அடையாளம் தெரிந்தது. மற்ற அணிகலன்கள் அடையாளம் தெரியவில்லை என்றார்.  இதை கேட்டுக் கொண்டிருந்த சுக்ரீவன், அனுமன் மற்றும் ஏனைய வானரங்கள், தம்பி என்றால் இவரை போல் அல்லவா இருக்க வேண்டும். நற்குணத்தின் நாயகன், ஒழுக்கத்தின் சிறந்தவன் என்று இலட்சுமணரை பாராட்டினார்கள்.

இராமர், கற்புடைய பெண்கள் கணவர் இறந்தபின் தான் அணிகலன்களை கழற்றி எறிவார்கள். நான் உயிருடன் உ இருக்கும்போதே சீதை இந்த அணிகலன்களை கழற்றி எறிந்துவிட்டாள். இதனால் நான் இறந்ததிற்கு சமமாகிவிட்டேன் என்று புலம்பி வருந்தினார். சுக்ரீவா! நான் ராஜ குலத்தில் பிறந்தும் என் மனைவியை காப்பாற்ற முடியாமல் இவ்வளவு துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். மக்கள் அனைவரும் என்னை பழி தூற்றுவார்களே. நான் என்ன செய்வேன் என புலம்பி அழுதார். சுக்ரீவன், தங்களின் தேவி எங்கு இருந்தாலும் தங்களிடம் சேர்ப்பேன். தாங்கள் மனம் தளர வேண்டாம் என்றான்.

அனுமன் இராமரிடம், பெருமானே! தாங்கள் வருந்த வேண்டாம். நாம் வாலியை வென்று விட்டால் கிஷ்கிந்தையில் உள்ள மற்ற வானரங்களும் நம் வசம் ஆகிவிடுவர். பிறகு நாம் விரைவில் இராவணனை கொன்று சீதையை மீட்டு விடலாம் என்றான். சுக்ரீவன், அனுமனின் சொற்களை கேட்டு இராமர் சமாதானம் ஆனார். ஆதலால், வாலியிடம் சண்டையை நாம் நாளை வைத்துக் கொள்ளலாம் என்றான் அனுமன். இராமரும் அனுமனின் யோசனையை ஏற்றுக் கொண்டார். எல்லோரும் அச்சோலையில் ஓய்வெடுத்தனர். பிறகு அனைவரும் கிஷ்கிந்தை நோக்கி பயணம் செய்தனர். அங்கு அவர்கள் ஒரு சோலையில் தங்கினார்கள்.

இராமர் சுக்ரீவனை அழைத்து, சுக்ரீவா! நீ வாலியை சண்டைக்கு அழைக்கவும். பிறகு நான் வாலியை வதைப்பேன் என்றார். சுக்ரீவனுக்கு வாலியிடம் போர் செய்ய தைரியம் இல்லை என்றாலும் இராமனின் கட்டளையை ஏற்றுக் கொண்டான். பிறகு சுக்ரீவன், வாலி! எங்கே இருக்கிறாய். தைரியம் இருந்தால் என்னுடன் வந்து போரிடு. உன்னை இன்று நான் கொல்வேன் என்று கூக்குரலிட்டு அழைத்தான். அப்போது வாலி அரண்மனையில் பஞ்சணையில் படுத்து இருந்தான். சுக்ரீவனின் குரலைக் கேட்டு சிங்கம் போல் கர்ஜித்துக் கொண்டு எழுந்தான். பிறகு தான் தெரிந்தது அக்குரல் சுக்ரீவனின் குரல் என்று.

தனக்கு பயந்து ஒளிந்து கொண்டு இருந்த சுக்ரீவன், இன்று தன்னை சண்டைக்கு அழைப்பதை நினைத்து ஏளனமாக சிரித்தான் வாலி. பின் அவன் கோபத்தில் அரக்கன் போல் படுக்கையில் இருந்து எழுந்தான். அவன் படுக்கையில் இருந்து எழுந்த வேகத்தில் மரங்கள், மலைகள் எல்லாம் ஆடின. பிறகு, வருகிறேன்! வருகிறேன்! எனக் கூறிக் கொண்டு வெளியே வந்தான். அப்போது வாலியின் மனைவி தாரை போக வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தினாள். வாலி மனைவியிடம், ஒரு செயலில் வெற்றி பெற போகும்போது மனைவி தடுத்தால் அச்செயல் நிறைவேறாது என்பது காலங்காலமாய் பின்பற்றி வரும் நம்பிக்கை என்பதை தெரிந்தும், எதற்காக என்னை தடுக்கிறாய் எனக் கேட்டான். என்னைத் தடுக்காதே! நான் உடனே சென்று சுக்ரீவனை கொன்று வருகிறேன் என்றான் வாலி.

தாரை வாலியிடம், மன்னரே! தங்களைப் பார்த்து ஓடி ஒளிந்த சுக்ரீவன், இன்று தங்களை எதிர்த்து நிற்கிறான் என்றால், அவனுக்கு புதுமையாக வந்த வலிமை அல்ல அவனுக்கு துணையாக யாரோ இருக்கிறார்கள் என்று அர்த்தம் என்றாள். வாலி, பெண்ணே! அனைத்து உலகங்களும் ஒன்று திரண்டு வந்தாலும், யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அது மட்டுமின்றி என்னை யார் எதிர்த்தாலும் அவர்களிடம் உள்ள பாதி வலிமையும், வரமும் என்னிடம் சேரும்படி வரத்தினை பெற்றுள்ளேன். ஆகையால் என்னை எதிர்க்க எவராலும் முடியாது. அதனால் நீ பயம் கொள்ள வேண்டாம் என்றான்.

தொடரும்.....

Post a Comment

0 Comments