இரண்டாம் உலக மகாயுத்தம் - WORLD WAR II


இரண்டாம் உலக மகாயுத்தம்


இரண்டாம் உலக மகாயுத்தம் - WORLD WAR II

1918 ஆம் ஆண்டில் முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற்றதாக இதற்கு முன் நாம் கற்றோம். முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற்று இரு தசாப்தங்கள் கழியுமுன் மீண்டுமொரு உலக மகாயுத்தம் ஏற்படுவதற்கான அடித்தளம் இடப்பட்டிருந்தது. அதன் விளைவாக மீண்டும் உலக மகாயுத்தமொன்று ஏற்பட்டது. 1939 செப்டெம்பர் மாதம் முதல் 1945 ஆகஸ்ட் வரை 6 வருடங்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் நடைபெற்ற இந்த பயங்கரமான யுத்தத்தை இரண்டாம் உலக மகாயுத்தம் என அழைப்பர்.

இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கான காரணிகள்

இரண்டாம் உலக மகாயுத்தமானது 1939 ஆம் ஆண்டில் ஆரம்பமாகிய பொழுதிலும் அது திடீரென ஏற்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற்று ஒரு தசாப்தம் சென்றபின் ஐரோப்பாவில் குறிப்பிட்ட சில நாடுகளின் செயற்பாடுகளும் வல்லரசுகளிடையே நிலவிய போட்டியும் மீண்டும் யுத்த மொன்றுக்கு அடித்தளமிட்டது. இந்நிலைமையை ஆராய்ந்து பார்க்கும்பொழுது இரண்டாம் உலக யுத்தத்திற்கு உரமிட்ட காரணிகள் பலவற்றை அடையாளம் காணலாம்.

ஜேர்மனியில் ஹிட்லரின் எழுச்சியும் அவரின் நடவடிக்கைகளும்.

முதலாம் உலக மகாயுத்தத்தின் பின் மேற்குலக நாடுகளின் தலையீட்டால் ஜேர்மனியில் புதிய அரசொன்று அமைக்கப் பட்டதோடு அதனை வைமார் கூட்டரசு என அழைத்தனர். அக்காலத்தில் ஜேர்மன் முகங்கொடுத்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் வைமார் அரசிடம் காணப்பட்ட பலவீனத் தால் ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வரக்கூடிய நிலையொன்று ஏற்பட்டது. வேர்சேல்ஸ் ஒப்பந்தத்தின்படி ஜேர்மனி யுத்த நட்ட ஈடாகப் பெருந்தொகைப் பணத்தை செலுத்தவேண்டி ஏற்பட்டது. 1920 ஆம் ஆண்டுக்குப் பின் ஜேர்மனியின் வருமானம் முழுமையாக யுத்த நட்ட ஈட்டை வழங்குவதற்குச் செலவழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டமையால் வைமார் அரசு விரைவாகப் பணம் அச்ச டிக்க ஆரம்பித்தது. இதனால் பணத்தின் பெறுமானம் விரைவாக வீழ்ச்சியடைந் தமையால் நாட்டில் பெரும் வறுமை ஏற்பட்டது. நாட்டின் பொருள்களின் விலை மிகவும் அதிகரித்ததோடு வேலையற்றோர் பெருந்தொகையினராக உருவாகினர். ஹிட்லரின் ஆதரவாளர்கள் இந்நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். 1929 இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபொழுது அது ஜேர்மனியை மிக மோசமாகப் பாதிப்படையச் செய்தது. இதனால் ஜேர்மனியில் வேலை வாய்ப்பின்மை மிக அதிகரித்ததோடு பொருள்களின் விலை மேலும் அதிகரித்தது. சில நகரங்களில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் கூட ஏற்பட்டன. உலகில் அதிகமான நாடுகள் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த பொழுதிலும் ஹிட்லரின் ஆதரவா ளர்கள் ஜனநாயக வைமார் அரசுக்குப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆற்றல் இல்லை எனத் திரிபுபடுத்தினர்.

அடோல்ப் ஹிட்லர் என்பவர் ஓர் ஆஸ்திரியர். முதலாம் உலக மகாயுத்தத்தின்போது அவர் ஜேர்மனிக்காகப் போரிட்டார். வைமார் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தமையால் சிறையிலிடப்பட்டார். சிறை வாழ்க்கையின்போது அவர் தனது புகழ்பெற்ற எனது போராட்டம்  என்ற நூலை எழுதினார். அந்த நூலில் ஜேர்மனிய நாசிசவாதம் குறித்து அவர் தமது கருத்தை வெளியிட்டார். சிறையில் இருந்து சுதந்திரம் அடைந்த பின் ஜேர்மனியில் உச்ச இனவாதத்தைப் பரப்பிய ஹிட்லர் 1933 இல் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஜேர்மனியின் சான்சலரானார். ஹிட்லரின் கட்சி தேசிய சோசலிசக் கட்சி  என அழைக்கப்பட்டது. இப்பெயரிலிருந்தே நாசி என்ற சொல் உருவாக்கப்பட்டது.

ஹிட்லர் தனது பிரசாரங்களின் முன்னிலையில் சொற்பொழிவாற்றி மக்களின் மனதினைக் கவரும் விதத்தில் மக்கள் முன் உரையாற்றுவதற்குப் பயிற்சிகள் கூடப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிட்லர் 1933 இல் பாராளுமன்றத்தின் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடனேயே அதிகாரத்திற்கு வந்தார். எனினும் படிப்படியாகத் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதோடு சர்வாதிகாரியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் ஜேர்மனியின் சான்சலர் பதவிக்கு நியமிக்கப்படும்போது வொன் ஹின்டன் பர்க் என்பவர் ஜேர்மனியின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். வயோதிப ஜனாதிபதியாகிய ஹின்டன் பர்க் சிறிது காலத்தில் இறக்கவே ஹிட்லர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆதரவாளர்களைப் பயன்படுத்தி ஜேர்மன் பாராளுமன்றக் கட்டடத்துக்குத் தீ வைத்ததோடு அக்குற்றத்தைக் கம்யூனிஸ்டுக்கள் மீது சுமத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் சகல அரசியல் கட்சிகளையும் தடை செய்ததோடு சமவுடைமைவாதிகளையும் யூதர்கள் போன்ற எதிரிகளையும் கூண்டோடு கொலை செய்ய ஆரம்பித்தார். இதன்போது ஹிட்லரின் எஸ். எஸ் (S.S) இராணுவமும் கெஸ்டாபோ என்னும் இரகசிய பொலிசாரும் மிலேச்சத் தனமான கொலைகளில் ஈடுபட்டனர். ஹிட்லர் ஊடகங்களைத் தனக்கு வாய்ப்பாக உச்சமாக பயன்படுத்திய ஒருவர். அவரின் ஊடக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த கொபெல்ஸ் என்ற அமைச்சர் ஊடக தர்மங்கள் அனைத்தையும் அத்துமீறித் தலையிட்டு ஹிட்லருக்குச் சார்பான மக்கள் கருத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்தினார். ஜேர்மனியின் ஜனநாயக சுதந்திரம் முழுமையாக அத்துமீறப்பட்டன. பத்திரிகை சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் அனைத்தும் தடைசெய்யப்பட்டன. ஹிட்லர் வாக்குறுதி அளித்த உன்னத ஜேர்மனியைக் கட்டியெழுப்புவதற்காக அக்கால ஜேர்மனியர்கள் இவ்வாறு பொறுமை காத்தனர். ஹிட்லர் ஜேர்மனியில் கம்யூனிசவாதத்தை நகக்குவதைக் கண்ணுற்ற மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள் கம்யூனிசவாதம் அழிவடைவதில் மனநிறைவடைந்து ஹிட்லருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொண்டனர். இதனால் ஹிட்லர் மேலும் பிடிவாதம் நிறைந்த கடினமுள்ள மனிதரானார்.

1934 இல் சர்வதேச சங்கத்தில் இருந்து விலகிய ஹிட்லர் ஜேர்மனியை மீண்டும் யுத்தத்தை நோக்கி இட்டுச் சென்றார். 1938 இல் அயல் நாடாகிய ஆஸ்திரியாவை ஆக்கிரமித்த ஹிட்லர் அதனை ஜேர்மனியுடன் இணைத்துக் கொண்டு அங்கு நாசிச வாத ஆட்சியொன்றை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து செக்கொஸ்சிலோ வேக்கியா மீது தனது அவதானத்தைச் செலுத்திய ஹிட்லர் அங்கிருந்த மக்களை செக்கொஸ்லோவேக்கியர், ஜேர்மனியினர் என அவர்களை இனரீதியாகப் பிரித்து சுடேட்டன்லாந்து என்னும் பெயரில் தனிநாடு ஒன்றை உருவாக்க உதவினார். அதனைத் தொடர்ந்து சுடேட்டன்லாந்தை மட்டுமல்ல செக்கொஸ்லோவேக்கியாவையும் ஆக்கிரமித்த ஹிட்லர் அந்நாட்டை ஜேர்மனியின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்தார். ஹிட்லர் போலந்தை ஆக்கிரமிக்கும் வரை மேற்குலக நாடுகளில் இருந்து குறிப்பிடக்கூடிய எதிர்ப்புகள் எதுவும் கிளம்பவில்லை. எனினும் ஹிட்லர் போலந்தை ஆக்கிரமித்ததோடு பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஹிட்லருக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தன. அதுவே இரண்டாம் உலக மகாயுத்தத்தின் ஆரம்பமாகும். 1933 இல் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் 6 வருடங்கள் ஜேர்மனியைப் பலப்படுத்தி இரண்டாம் உலக மகா யுத்தத்தை ஆரம்பித்ததோடு ஹிட்லரைத் தோற்கடித்து ஜேர்மனியின் நாசிச வாதத்தை உலகில் இருந்து துடைத்தெறிய ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ஆறு வருடங்களாக தொடர்ந்து ஹிட்லரோடு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இக்காலகட்டத்தில் ஹிட்லரால் வதை முகாம்கள் அமைக்கப்பட்டு அப்பாவி யூதர்களும் ரஷ்யர்களும் இலட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்டனர். அவுட் விட்ஸ், பர்கன் பெல்ஷன், பெல்ஷெக், சொபிபோர் போன்றவை அத்தகைய முகாம்களுக்குச் சில உதாரணங்களாகும். இவ்வாறு ஹிட்லர் மற்றும் நாசிச வாதிகளின் தலைவர்கள் கொண்டு சென்ற ஆக்கிரமிப்புக் கொள்கையால் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது முழு உலக மக்களும் துயரங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முழு உலகமும் யுத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்ததால் முழு உலக முன்னேற்றமும் பல வருடங்களுக்குப் பின்தள்ளப்பட்டது. முதலாம் உலக மகாயுத்தத்தின் பின் நிகழ்ந்த மாபெரும் அழிவு இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலும் நிகழ்ந்தது. அந்த பேரழிவிற்குப் பொறுப்புக் கூற வேண்டிய நபர் ஹிட்லர் என்பதில் எந்த வாதப் பிரதிவாதமும் இல்லை.

இத்தாலியில் முசோலினியின் செயற்பாடுகள்

முதலாம் உலக யுத்தத்தில் இத்தாலி வெற்றி பெற்ற அணியில் இருந்தாலும் யுத்தத்தின் பின் ஏற்படுத்திய சமாதான ஒப்பந்தங் களின்படி அந்நாட்டிற்குப் பெரிதும் நன்மை எதுவும் கிடைக் கவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அந்நாடு எதிர்பார்த்த அளவிற்கு குடியேற்ற நாடுகளைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் இத்தாலியில் யுத்ததத்தின் பின் வேலையின்மை, உணவுத் தட்டுப்பாடு போன்ற பொருளாதாரப் பிரச்சினைகள் உக்கிரமடைந்தன. வேலைநிறுத்த அலை நாடெங்கும் வீசியது. இத்தாலியில் நிலவிய இத்தகைய உறுதியற்ற நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட பெனிடோ முசோ லினி 1922 இல் பாசிசவாத அரசியல் கட்சி ஊடாக இத்தாலி யின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார். முசோலினியின் அரசியல் முறை பாசிசவாதம் என அழைக்கப்படுகின்றது. பாசிச் வாதம் என்பது ஹிட்லரின் நாசிசவாதத்தைப் போல் தனிக்கட்சி சர்வாதிகார ஆட்சி முறையாகும். இத்தாலியின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட முசோலினி கருஞ்சட்டை இராணுவம் என்னும் பெயரில் ஆயுதப் படையை அமைத்துப் பாசிச வாதத்திற்கு எதிரானவர்களை அழித்தான். இவ்வாறு சர்வாதிகார ஆட்சியின் மூலம் முசோலினி இத்தாலியின் பொருளாதாரத்தை ஓரளவு பலப்படுத்தினாலும் 1929 ஆம் வருடம் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடிக்கு முன் அவரின் முயற்சி தோல்வி அடைந்தது. உள்நாட்டு அரசியல் அதிகாரத்தை எல்லாத் துறைகளிலும் தனது கைக்குள் கொண்டு வந்த முசோலினி அடுத்து இத்தாலியின் அதிகாரங்களை வெளிநாடுகளுக்கு விஸ்தரிக்கும் இயக்கத்தில் கால் பதித்தார். ஜேர்மனியைப் போலவே இத்தாலியும் 1870 இல் ஐக்கியம் அடைந்தது. அவ்வேளையில் உலகின் பெரும்பாலான வளம் நிறைந்த பிரதேசங்களைஐரோப்பிய நாடுகள் கைப்பற்றி இருந்தன. இதனால் இத்தாலி குடியேற்ற நாடுகளை உருவாக்க முயற்சித்தபோது ஐரோப்பிய நாடுகளிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. 1936 இல் முசோலினி ஆபிரிக்காவின் அபிசீனியா அல்லது இன்றைய எத்தியோப்பியாவைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர் ஹிட்லருடன் இணைந்து கொண்ட முசோலினி பாசிச அதிகாரத்தை மேன்மேலும் வியாபிக்கும் நோக்குடன் இரண்டாம் உலக யுத்தத்தில் இணைந்தார். அப்போது நாசிசவாத, பாசிச வாத முகாம்கள் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எதிராக யுத்தம் புரிந்தன. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் கைது செய்யப்பட்ட முசோலினி அதன் பின் கொல்லப்பட்டான்.

ஜப்பானின் நடவடிக்கைகள்

19 ஆம் நூற்றாண்டின் இறுதி அரைப்பகுதியில் இருந்து ஆசிய நாடுகளில் ஜப்பான் முன்னேற்றகரமான நாடாக வளர்ச்சியடைந்தது. இந்நாட்டின் பொருளாதார நடவடிக் கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களைப் பெறவும் முடிவுப் பொருள்களை விற்பனை செய்யவும் வர்த்தகச் சந்தைகளைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் அப்போது ஆசியாவின் பெரும்பாலான பிரதேசங்கள் ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடுகளாக இருந்தன. அதனால் ஜப்பானின் மேற்கூறிய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயலும்போது அல்லது ஆசியாவில் ஜப்பானிய பேரரசு ஒன்றைக் கட்டியெழுப்பும் போது கண்டிப்பாக ஐரோப்பிய நாடுகளுடன் மோதல்களை ஏற்படுத்தும் பின்புலம் உருவாகி இருந்தது. 1934 இல் ஜப்பான் வட சீனாவில் மஞ்சூரியாவை ஆக்கிரமித்து அதனைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்தது. ஜப்பானின் ஆக்கிரமிப்புக் கொள்கை சர்வதேச சங்கத்தின் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட பொழுது ஆக்கிரமிப்பு சம்பந்தமாக சர்வதேச சங்கத்தின் முன் ஜப்பான் குற்றவாளியாகியது. இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச சங்கத்திலிருந்து விலகிய ஜப்பான் சீனாவின் முக்கியத் துறைமுகங்கள் மற்றும் நகரங்கள் சிலவற்றைக் கைப்பற்றித் தனது ஆக்கிரமிப்புக் கொள்கையைத் தொடர்ந்தது. ஹிட்லரினதும் முசோலியினதும் நடவடிக்கைகள் ஐரோப் பாவில் ஆரம்பத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தினவோ அதேபோன்றதொரு தாக்கத்தை ஜப்பானின் நடவடிக்கைகள் ஆசியாவில் ஏற்படுத்தின.

இதனால் இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பிக்கும் பொழுது ஜப்பான் ஆசிய நாடுகளின் ஆக்கிரமிப்பாளராக உருவெடுத்தது. இவ்வாறு போர் என்னும் கொடும் நெருப்பு ஆசியாவில் விரைவாகப் பற்றுவதற்கு ஜப்பானின் நடவடிக்கைகள் காரண மாக அமைந்தன.

சர்வதேச சங்கத்தின் பலவீனம்

சர்வதேச சங்கம் அமைத்ததன் அடிப்படை நோக்கம் உலக அமைதியைப் பேணுவதும் யுத்தங்களைத் தவிர்ப்பதுமே என்று மேலே விளக்கமளிக்கப்பட்டது. எனினும் யுத்தமொன்றைத் தடுப்பதற்குத் தேவையான அதிகாரமோ சக்தியோ அச்சங்கத்திடம் இருக்கவில்லை.

உலக அமைதியைப் பேணுவதற்காக உலக நாடுகளைத் திரட்டி அமைக்கப்பட்ட சர்வதேச சங்கமானது அதனைச் சாதிப்பதில் தோல்வி அடைந்தமையால் பல்வேறு நாடுகள் நட்பு உடன்படிக்கையை செய்ய ஆரம்பித்தன. இதன் விளைவாகப் பலம் வாய்ந்த நாடுகள் தமது அணியின் பாதுகாப்புக் கருதி ஆயுதந்தரிக்க ஆரம்பித்தன. இவ்வாறு பல்வேறு நாடுகளாகப் பிரிந்து ஆயுதமயத்தின் மூலம் யுத்தத்தை நோக்கிய பின்புலம் ஒன்று தோன்றியது.

இரண்டாம் உலக யுத்த அணிகள்

நேச நாடுகள்

பிரான்ஸ்
பிரித்தானியா 
ஐக்கிய அமெரிக்கா
ரஷ்யா

அச்சு நாடுகள் 

ஜேர்மன்
இத்தாலி
ஜப்பான்

இரண்டாம் உலக யுத்தம் என்பது ஒன்றுக்கொன்று பகைமையான நாடுகளிடையே ஏற்பட்ட பயங்கரமான யுத்த மோதல்களாகும். இங்கு யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு அணிகளை நட்பு நாடுகள் மற்றும் அச்சு நாடுகள் என அழைத்தனர். நட்பு நாடுகள் பிரித்தானியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு லிபரல்வாத நாடுகள் பல இந்த அணியில் சேர்ந்தன. கம்யூனிச ரஷ்யாவும் நட்பு நாடுகள் அணியைச் சேர்ந்த ஒரு நாடாகும்.

அச்சு நாடுகளில் ஜேர்மன், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகள் இரண்டும் 1937 இல் ஜப்பானுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்தன. அந்நாடுகள் மூன்றினதும் தலைநகரின் பெயர்களின்படி இந்த அணியினர் பெர்லின், ரோம், டோக்கியோ ஆகிய அச்சுப் பெயரால் அழைக்கப்பட்டனர். பின் இந்நாடுகள் மூன்றையும் அச்சு வல்லரசு கள் என்ற சொல்லால் அழைத்தனர்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பரவல்

ஜேர்மனியில் ஹிட்லர் கி.பி.1939 செப்டெம்பர் முதலாந் திகதி போலந்தை ஆக்கிரமித்ததோடு இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியது. போலந்தை பாதுகாக்க ஒப்பந்தம் செய்திருந்த பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஜேர்மனிக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்ததோடு இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பிரவேசித்தன. ஜேர்மனி நான்கு வாரங்களுக்குள் போலந்தை தோற்கடித்தது. தனது போர் நடவடிக்கைகளை முன்னெடுத்த ஹிட்லர் நோர்வே, டென்மார்க், ஒல்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினான். 1940 ஜூன் மாதத்தில் பிரான்ஸைத் தாக்கி அதன் தலைநகர் பரிஸ் நகரைக் கைப்பற்றினான்.

ஜேர்மன் படைகள் பரிஸ் நகரினுள் புகுந்ததோடு முசோலினியும் யுத்தத்தில் ஈடுபட்டு இத்தாலி நாட்டின் எல்லையைக் கடந்து பிரான் சின் பல்வேறு பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டான். இவ்வாறு ஜேர்மனும் இத்தாலியும் பிரான்சை அடிபணிய வைத்தபின் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ் ஜேர்மனியின் கீழ் வந்தது.

பிரான்சின் தோல்வி பிரித்தானியா மீது மேற் கொண்ட பலமிக்க அடி எனக் கருதிய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் அடுத்து நடக்கப்போகும் ஆபத்துக்களுக்கு முகம் கொடுப்பதற்காகத் தந்திரோபாயமாக நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டார். சிறந்த பேச்சாற்றலோடு திறமையான தலைவராகவும் திகழ்ந்த சேர்ச் சில் ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களையும் நாசி களுக்கெதிரான போரில் ஈடுபடுத்துவதில் வெற்றி கண்டார். அத்தோடு அவர் பிரித்தானிய பேர ரசுக்குச் சொந்தமான கனடா, அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து, தென் ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளையும் பங்குபற்ற வைத்து ஜேர்மனிக்கு எதிரான யுத்த முன்னெடுப்புகளைக் கட்டியெழுப்பினார். இதற்கு மேலதிகமாக ஐக்கிய அமெரிக்க அரசும் பிரித்தானியாவுக்குப் பாரிய உதவிகளை வழங்கியது.

ஐக்கிய அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபடுதல்

ஜேர்மனியும் இத்தாலியும் ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது ஜப்பான் ஆசியாவின் பேரரசைக் கட்டியெழுப்பும் பொருட்டு ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டமை பற்றி முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. யப்பான் இவ்வேளையில் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா ஐக்கிய நாடுகளுடன் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மோதல்களின்போது பேர்ள் துறைமுகத்தின் இராணுவ முகாம் ஜப்பானுக்குப் பெருந்தடையாக இருந்தது. இதனால் 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜப்பான் பேர்ள் துறைமுகத்தின் கடற்படை முகாமைக் குண்டு வீசித் தாக்கியது. இந்த நிகழ்வினால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜனாதிபதியான பிராங்ளின் ரூஸ் வேல்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தார். அதன்படி ஜப்பானுடன் இணைந்திருந்த ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தன. எனவே 1941 ஆம் ஆண்டின் இறுதிவரை ஐரோப்பாவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த யுத்தம் உலக மகாயுத்தமாக மாறியது.

ஜேர்மனியின் அடுத்த இலக்காக பிரித்தானியா இருந்தது. ஹிட்லர் விமானப் படைகள் மூலம் பிரித்தானியாவை ஆக்கிரமிக்கத் தீர்மானித்தார். அதன்பின் ஜேர்மன் விமானப் படைகள் பிரித்தானிய விமான நிலையங்களையும் நகரங்களையும் குண்டு மழை பொழிந்து அதிரவைத்தன. பிரித்தானியாவிடம் பலம் வாய்ந்த கடற் படையும் விமானப்படையும் இருந்தன. பிரித்தானியாவும் அந்தப் பலத்தைப் பயன்படுத்தி எதிரிகளின் விமானங்களை அழிப்பதற்காகத் தாக்கும் விமானங்களைப் பயன்படுத்தியது. 1940 செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி இரு அணியினரிடையேயும் மிகவும் கொடிய வான்போர் நிகழ்ந்தது. அதன் பொழுது பிரித்தானிய விமானப்படையினரால் ஜேர்மனியின் 56 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. பிரித்தானியாவின் போர்ப் பலம் ஹிட்லர் நினைத்ததை விட மிகவும் முன்னிலையில் இருப்பதையும் அதன் வீரமிக்க செயல்திறனையும் உணர்ந்து கொண்ட ஹிட்லர் பிரித்தானியாவைத் தாக்கும் தனது முயற்சியை நிறுத்தினான்.

ஜேர்மனி ரஷ்யாவை ஆக்கிரமித்தல்

அதனைத் தொடர்ந்து ஹிட்லரால் தெளிவான காரணங்கள் எதுவுமில்லாமல் ரஷ்யா ஆக்கிரமிக்கப்பட்டது. எவ்வித சிரமமுமின்றி ரஷ்யாவைக் கைப்பற்ற முடியும் என்று ஹிட்லர் எண்ணினார். பிரான்சின் சக்கரவர்த்தியான நெப்போலியன் பொனாபட் இதற்கு முன் ரஷ்யாவை ஆக்கிரமிக்கச் சென்று படுதோல்வி அடைந்து பல்லாயிரத்துக்கும் அதிகமான காயமடைந்த வீரர்களுடன் பின்வாங்கினான். இந்நிகழ்விற்கு 125 வருடங்களின் பின் ஹிட்லரும் அத்தகைய தோல்வியைத் தழுவினான். சோவியத் படைகளும் காத்திருந்து ஜேர்மனியுடன் இத்தகைய யுத்தமொன்றை மேற்கொள்ள ஆயத்தமாக இருந்தன. அதனால் எதிரியை சிக்க வைப்பதற்குத் தேவையான சகல தந்திரோபாயங்களையும் பயன்படுத்தின. கடும் குளிர் பருவம் ஆரம்பமாகும் வரை ஜேர்மன் படைகளைத் தக்க வைப்பது ரஷ்யா கடைப்பிடித்த அத்தகையதோர் தந்திரோபாயமாகும். அன்று நெப்போலியனின் படைகள் கடும் குளிர் பருவத்தில் முகங்கொடுத்த தலைவிதியையே நாசிப் படைகளுக்கும் முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டது. ஜேர்மன் படைகளோ நீண்ட கடுங்குளிர் பருவத்திற்கு ஆயத்தமாக இருக்கவில்லை. இதனால் அதிக குளிரும் உணவுத் தட்டுப்பாடும் நோய் நொடிகளும் ஜேர்மனியப் படையில் பெருந்தொகையானோர் இறப்பதற்குக் காரணமாக அமைந் தன. தந்திரோபாயமாக தமது படைகளைப் பின்வாங்கச் செய்யும் புத்தி சாதுரியம் ஹிட்லரிடம் இருக்கவில்லை. ரஷ்ய மண்ணில் தனது இராணுவம் முகங்கொடுத்துள்ள உண்மையான நெருக்கடிகளைப் புரிந்துகொள்ளாத ஹிட்லர் தனது படைகள் முன்னோக்கிச் சென்று தாக்குதல் நடத்தக் கட்டளையிட்டான். அங்கு ஜேர்மன் படைகளுக்கு மோசமான தோல்வியை ஏற்படுத்துவதில் ரஷ்யாவின் செம் படைகள் வெற்றிகண்டன.

ஜேர்மனி அடிபணிதல்

ரஷ்யப் படைகள் போரைத் தொடர்ந்து நடத்தி முன்னோக்கிச் சென்று கிழக்கு ஐரோப்பாவில் நாசி ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்களை விடுவித்துக் கொண்டு ஜேர்மனியை நோக்கி விரைந்தன. இதற்கிடையில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் படைகள் மேற்குத் திசையில் தாக்குதல்களை நடத்தின. 1945 மார்ச் மாதமளவில் ஜேர்மனிக்கு வருகை தந்த நேச நாடுகளின் படைகள் மே மாதமளவில் பேர்ளின் நகருக்குள் பிரவேசித்தன. தோல்வி நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த ஹிட்லர் உள்ளிட்ட அவனின் கட்டளைத் தளபதிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். அதன்படி 1945 மே மாதம் ஜேர்மனி நிபந்தனையின்றிச் சரணடைந்தது.

ஜப்பான் சரணடைதல்

ஜப்பான் தனது போர்ப்பலத்தை நிரூபித்து சிங்கப்பூர், மலேசியா, பர்மா, ஹொங்கொங் முதலிய பிரித்தானியக் குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றியது. அடுத்ததாகப் போர்னியோ, ஜாவா, சுமாத்திரா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும் கைப்பற்றியது. இவ்வாறு கி.பி. 1942 அளவில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளைத் தவிர முழு தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளையும் ஜப்பான் கைப்பற்றியது.

1942 ஏப்பிரல் 05 ஆந் திகதி கொழும்புக்கும் ஏப்பிரல் 7 ஆந் திகதி திருகோணமலைக்கும் குண்டு வீசப்பட்டன. இதனால் ஜப்பான் இராணுவம் இலங்கையை ஆக்கிரமிக்கலாம் என எண்ணிய பிரித்தானியர்கள் தமது படை அணிகள் சிலவற்றை இலங்கைக்கு நகர்த்தினர். எனினும் இரு அணிகளுக்குமிடையே எவ்வித மோதல்களும் இலங்கையில் நடைபெறவில்லை.

ஜப்பானுக்கும் நட்பு நாட்டு படைகளுக்கும் இடையே கடுமையான போர் மூண்டதோடு அந்தப் போர்களின் மூலம் ஜப்பான் தோல்வியடைந்தது. தோல்வியடைந்த வண்ணம் இருந்த ஜப்பானுக்கு நட்பு நாடுகள் மூலம் விடுக்கப்பட்ட இறுதி அறிவித்தல்களையும் ஜப்பான் நிராகரித்தமையால் கி.பி. 1945 ஆகஸ்ட் 6 ஹிரோசிமா மீதும் ஆகஸ்ட் 9 ஆந் திகதி நாகசாக்கி நகர் மீதும் ஐக்கிய அமெரிக்காவினால் அணுகுண்டுகள் வீசப்பட்டன. சில விநாடிகளில் இரு நகரங்களும் அழிந்ததோடு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அதனை விடப் பெருந்தொகையானோர் காயமடைந்தனர். அணுகதிர் வீச்சின் தாக்கத்தால் பெருந்தொகையானோர் பரம்பரை ரீதியான நோயாளர்கள் ஆனார்கள். இந்தப் பேரழிவைக் கண்ணுற்ற ஜப்பானின் ஹிரோஹித்தோ பேரரசன் 1945 ஆகஸ்ட் 14 ஆந் திகதி நிபந்தனையற்ற விதத்தில் சர ணடைய இணங்கியதோடு இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் விளைவுகள்

இரண்டாம் உலக மகா யுத்தத்தினால் ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளின் அணி தோல்வியைத் தழுவின.

இந்த யுத்தம் உலக வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட யுத்தங்களில் மிகவும் பயங்கரமானது. இந்த யுத்தத்தின்போது சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்கள் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகின்றது. சொத்துக்கள் மற்றும் செல்வங்களின் அழிவு கணக்கிட முடியாதவை.

யூதர்களைக் கொலை செய்யும் ஹிட்லரின் வேலைத்திட்டத்தின்படி ஜேர்மனி, போலந்து, ஹங்கேரி போன்ற ஜேர்மனியின் ஆதிக்கம் பரவிய நாடுகளில் யூதர்கள் மில்லியன் கணக்கில் நாசிப்படையினரால் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

அணுகுண்டு போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதோடு இதனால் ஏற்பட்ட பயங்கரவாத அழிவினால் தோல்வியடைந்தவர்கள் மட்டுமல்ல வெற்றிப் பெற்றவர்களும் மிகவும் கவலை அடைந்தனர். அணுகுண்டு வீசப்பட்டதால் அச்சந்தர்ப்பத்தில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டதோடு அதன் பயங்கர விளைவுகள் எதிர்காலப் பரம்பரையினரையும் பாதித்தன.

இதுவரை காலமும் உலக வல்லரசாக இருந்த பிரான்சும் பிரித்தானியாவும் அந்த இடத்தை இழக்க வேண்டி ஏற்பட்டதோடு அவர்களின் பேரரசு எண்ணம் தகர்ந்தது. இதனால் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வசமிருந்த இலங்கை, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட குடியேற்ற நாடுகள் பலவும் சுதந்திரம் அடைந்தன.

அழிவுக்குள்ளான தோல்வியடைந்த ஐரோப்பிய நாடுகளைக் கட்டியெழுப் புவதற்காக ஐக்கிய அமெரிக்கா முன்வந்தது. இந்த உதவும் செயல் திட்டமானது அப்போதைய ஐக்கிய அமெரிக்காவின் அரச செயலாளர் பதவியை வகித்த ஜோன் மார்சல் என்பவரின் பெயரில் மார்சல் திட்டம் என அழைக்கப்பட்டது.

உலக மகா யுத்தத்தின் பின் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் உலக வல்லரசுகளாக எழுச்சி பெற்றன. ஐக்கிய அமெரிக்கா ஜனநாயகத்தின் பாதுகாவலனாக உருவெடுத்தது. அதே வேளை சோவியத் ரஷ்யா சமவுடைமையின் பாதுகாவலனாகத் திகழ்ந்தது. இவ்விரு வல்லரசுகளின் தலைமையில் உலகின் வேறுபல நாடுகள் இணைந்து இரு முகாம்களாகப் பிரிந்தன. ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முதலாளித்துவ முகாம் என்றும் சோவியத் ரஷ்யாவின் தலைமையிலான நாடுகள் சமவுடைமை முகாம் என்றும் அழைக்கப்பட்டன.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் உலகம் இவ்வாறு இரு முகாம்களாகப் பிரிந்து போர் ஆயுதங்களைப் பயன்படுத்தாவிட்டாலும் தமது முகாமை வெற்றி பெறச் செய்வதற்காக பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்தது. இதனைப் பனிப்போர் அல்லது கெடுபிடிப் போர் என அழைப்பர். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் நான்கு தசாப்தங்களாக இது தொடர்ந்தது. இதற்காக இவர்கள் பயன்படுத்திய முக்கிய உபாயங்கள்,

இரகசிய உளவுச் சேவை
அமைப்புகளை அமைத்தல்
உதவும் செயல்திட்டங்களை விரிவுபடுத்தல்.

இரண்டாம் உலகமகாயுத்தத்தின்பின்ஆசிய, ஆபிரிக்க நாடுகள் குடியேற்ற நாடுகள் என்ற நிலையிலிருந்து நீங்கி சுயாதீன நாடுகளாக உருவெடுக்கத் தொடங்கின. அந்நாடுகளின் சமூக, பொருளாதார மேம்பாடுகளைக் கட்டியெழுப்ப உதவிகளை வழங்க ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் முன் வந்தன. அதன் மூலம் அந்நாடுகளைத் தத்தமது முகாம்களுக்குள் உள்வாங்குவதற்கு அவர்கள் எதிர்பார்த்தனர். அப்பொழுது உதவி வழங்கும் பகுதியினருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார் பாகும் நிலை நிகழ்வது இந்நாடுகளின் சுயாதீனத்திற்குப் பிரச்சினையாக இருந்தன. இதனால் எந்தவொரு முகாமையும் சேராமல் செயற்படும் நோக்குடன் கி.பி. 1981 இல் கூட்டுச் சேரா (அணி சேரா) நாடுகளின் மகாநாடு நிறுவப்பட்டது. இந்தியாவின் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இதற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

அப்போதைய யூகோஸ்லேவியாவின் ஜனாதிபதி மார்ஷல் டிட்டோ மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால் நசார் ஆகிய தலைவர்களும் இதற்காகப் பேருதவி புரிந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை தாபிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை

இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இடை நடுவில் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் மற்றும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்லின் ரூஸ்வெல்ட் 1941 ஆகஸ்ட் மாதம் அத்திலாந்திக் பிரகடனத்தில் கையொப்பம் இட்டனர். நட்பு நாடுகள் யுத்தத்தில் ஈடுபட்டதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்திய இந்த ஆவணங்கள் சமாதானத்திற்காக சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற்றுக் கொள்ளுதல், நாடுகளின் சுயாதீனம் மற்றும் சுயாதிபத்தியத்தைப் பாதுகாப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாசிங்டன் நகரில் அச்சு நாடுகளுக்கு எதிராகச் சண்டையிட்ட 26 நாடுகளின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அதன்போது இந்த நாடுகளை அழைப்பதற்கு ஐக்கிய நாடுகள் என்ற சொல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1943 ஒக்டோபர் மாதம் ரஷ்யா, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மொஸ்கோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகச் சர்வதேச நாடுகளின் அமைப்பொன்றை அமைப்பது குறித்துக் கலந்துரையாடினர். கி.பி 1943 டிசெம்பர் மாதத்தில் டெஹரான் நகரில்,

அமெரிக்க ஜனாதிபதி பிரேங்களின் டி. ரூஸ்வெல்ட்
பிரித்தானிய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில்
ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின்

ஆகிய உலக வல்லரசுகள் மூன்றின் தலைவர்கள் இது குறித்து மென்மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக உலக அமைப்பொன்றை அமைக்க வேண்டும் என்ற யோசனையை மேற்குறித்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன்படி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கும் கொள்கையாக ஐக்கிய நாடுகளின் கொள்கைப் பிரகடனத்தை வடிவமைப்பதற்காக 1945 ஜூன் மாதத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். மகாநாட்டில் பங்குபற்றாத போலந்தும் பின்னர் பிரகடனத்தில் கைச்சாத்திட்டது. இதன்படி ஆரம்ப அங்கத்தவர் தொகை 51 ஆகும். 1945 ஒக்டோபர் 24 ஆந் திகதி பிரகடனம் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை உத்தியோக பூர்வமாக உதயமாகியது. அதனால் ஒக்டோபர் 24 ஆந் திகதி ஐக்கிய நாடுகளின் தினம் எனக் கருதப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டதன் நோக்கங்கள்

சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்தல்.

நாடுகளிடையே நட்புறவை வளர்த்தல்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிசெய்து சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்தல்.

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் சபை பிரதான ஆறு நிறுவகங்களைக் கொண்டதாகும்.

1. பொதுச் சபை
2. பாதுகாப்புச் சபை
3.சமூகப் பொருளாதார சபை
4. நம்பிக்கை பொறுப்புச் சபை
5.சர்வதேச நீதிமன்றம்
6. செயலகம்

பொதுச் சபை

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத் தும் அமைப்பே பொதுச் சபையாகும். இதன் அங்கத்துவ நாடுகளின் தொகை 193 ஆகும். ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில் இந்தச் சபை கூடும். பொதுச் சபையில் அனைத்து நாடுகளும் சம அந்தஸ்து உடையவை யாகும். ஒவ்வொரு அங்கத்துவ நாட்டிற் கும் ஒரு வாக்கு உரித்துடையது. பொதுச் சபையின் பிரதான செயற்பாடுகளும் அதிகாரங்களும்,

சர்வதேச சமூகத்தின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் தேவையான எந்த வொரு பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அது பற்றிய சிபாரிசு அறிக்கையை முன்வைத்தல். மற்றும் அங்கத்துவ நாடுகளின் பொருளாதார, சுகாதார, மனித உரிமைகள் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான ஆலோச னைகளை முன்வைத்தல்.

ஐக்கிய நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அனுமதி வழங்குவதோடு வழங்க வேண்டிய உதவி நிதியை அங்கத்தவரிடையே பகிர்ந்து ஒதுக் குதல்.

பாதுகாப்புச் சபையின் சிபாரிசின்படி செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்தல்.

சர்வதேச நீதிமன்றத்திற்குரிய நீதிபதிகளை நியமித்தல் மற்றும் புதிய அங்கத்துவ நாடுகளைச் சேர்த்துக் கொள்ளுதல்.

பாதுகாப்புச் சபை

இந்தச் சபையில் 15 நாடுகள் அங்கத்துவம் பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்புரிமை நாடுகளாகும். ஏனைய 10 நாடுகளின் உறுப்புரிமை இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகள் ஐந்திற்கும் வீற்றோ எனப்படும் இரத்துச் செய்யும் அதிகாரம் உண்டு. இரத்துச் செய்யும் அதிகாரம் என்பது நிரந்தர உறுப்புரிமை நாடுகளில் ஒரு நாடு விரும்பாவிட்டாலும் எதிர்த்து வாக்களித்து அத்தீர்மானத்தை இரத்துச் செய்யும் உரிமையாகும். பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து அங்கத்தவர்களும் பொறுப்புடையவர்களாவர்.

சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் மோதல்கள் குறித்து ஆராய்ந்து பார்த்து அவற்றை சமாதானமாகத் தீர்ப்பதற்கு சிபாரிசுகளை முன் வைப்பது பாதுகாப்புச் சபையின் பிரதான கடமையாகும். ஏதாவதொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதும் தேவையேற்பட்டால் போர்ப்பலத்தை உபயோகிப்பது போன்ற செயற்பாடுகள் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.

சமூக பொருளாதார சபை

இச்சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 54 ஆகும். அங்கத்துவக் காலம் மூன்று வருடங் களாகும். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் உலக மக்களின் பொருளாதார, சமூக, கலாசார, கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தியை மேற்கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இச்சபையானது தனது பணியை நிறைவேற்றிக் கொள்வதற்கு இணை நிறுவனங்கள் பலவற்றின் உதவியினைப் பெற்றுக் கொள்கின்றது.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO)
உணவு விவசாயத் தாபனம் (FAO) 
ஐக்கிய நாடுகளின் கல்வி
விஞ்ஞான மற்றும் கலாசார தாபனம் (UNESCO)
சர்வதேச நாணய நிதியம் (IMF)
உலக சுகாதார தாபனம் (WHO) 
ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியம் (UNICEF) 

என்பன அவற்றில் முக்கியமானவையாகும்.

நம்பிக்கை பொறுப்புச் சபை

இச்சபையின் பிரதான கடமை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நம்பிக்கை பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட பிரதேசங்களை நிருவகித்தலாகும். ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நம்பிக்கை பொறுப்பின் கீழ் 11 நாடுகள் இருந்தன. 1994 ஆம் ஆண்டளவில் சகல நம்பிக்கை பொறுப்புப் பிரதேசங்களும் தமது சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொண்டன. அன்று முதல் இச்சபை செயலற்றுக் காணப்படுகின்றது. செயலாளர் நாயகத்தின் சிபாரிசின்படி நம்பிக்கைப் பொறுப்புச் சபையை அகற்றுவதற்கு 2005 இல் உலகத் தலைவர்களின் மகாநாடு தீர்மானித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நீதிமன்றம் சர்வதேச நீதிமன்றமாகும். நெதர்லாந்தின் ஹேக் நகரில் அது அமைந் துள்ளது. அங்கத்துவ நாடுகளின் நீதி மன்றங்களில் உயர் பதவி வகித்தோர் சர்வதேச சட்டம், தொடர்பான சிறப்புத் தேர்ச்சி பெற்றோர் ஆகியோரிலிருந்து நீதிபதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு நிறுவனங்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கல் சர்வதேச நீதிமன்றத்தின் பிரதான செயற்பாடாகும். அவ்வாறே அங்கத்துவ நாடுகளிடையே எழும் சிக்கல்கள் தொடர்பாக சட்டரீதியான தீர்வினைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் இந்த நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.

செயலகம்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிருவாக அலுவலகம் செயலகம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இது அமைந்துள்ளது. பாதுகாப்புச் சபையின் சிபாரிசிற்கு அமைய பொதுச்சபையால் 5 வருட காலம் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்படும். செயலாளரே இதன் பிரதான நிருவாகி ஆவார். சர்வதேச சமாதானத்திற்கு அச்சுறுத் தலாக அமையக்கூடிய எந்தவொரு பிரச்சினைகளையும் பாதுகாப்புச் சபைக்கு முன்வைப்பதற்கு செயலாளருக்கு அதிகாரம் உண்டு. இச்செயலகத்திற்குரிய பல செயலகங்கள் உலகெங்கும் இயங்கி வருகின்றன. அவற்றின் அங்கத்தவர் தொகை ஒன்பதாயிரம் ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபை உலக சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக எடுத்த முயற்சிகள்

எதிர்காலச் சந்ததியினரைப் பேரழிவுமிக்க யுத்த அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அணுவாயுத ஆணைக் குழுவை அமைத்து தனது பணியை ஆரம்பித்தது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண் டினால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக அணுசக்தியைக் கட்டுப்படுத்தும் தேவையை உலகிற்கு உணர்த்த ஆரம்பத்திலேயே இத்தகைய செயலில் இறங்கி இருக்க வேண்டும்.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் தமது தலைமையில் உருவாக்கிய இரு முகாம்களைத் தத்தமது வெற்றிக்காக தந்திரோபாயங்களை கடைபிடித்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முனைந்தன. ஆயுதப் பாவனையைத் தவிர்த்து இவர்கள் மேற்கொண்ட இச்செயற்பாடானது பனிப் போர் அல்லது கெடுபிடி யுத்தம் என அழைக்கப்பட்டது. இந்நிலையின் கீழ் மோதல் ஏற்படவிருந்த பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய நாடுகள் சபை அவற்றில் தலையிட்டு மோதலில்லாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டது. அத்தகைய சம்பவங்களுக்கு சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சுயஸ் கால்வாய் நெருக்கடி

எகிப்திய மிசிர் ஜனாதிபதி அப்துல் கமால் நாசர் சமவுடைமைப் பொருளாதார முறையைப் பின்பற்றி சுயஸ் கால்வாயை மக்கள் மயப்படுத்தினார். இதனால் பிரான்சிய நிறுவனம் நெருக்கடியைச் சந்தித்தமையால் இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் பிரான்சியப் படைகள் சுயஸ் கால்வாய் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை இதில் தலையிட்டுப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைத்தது. 

வளைகுடா நெருக்கடி

இந்த நெருக்கடிக்கு ஈராக் மற்றும் குவைட் என்பவற்றின் எல்லையில் அமைந்திருந்த எண்ணெய் படிவுகளே காரணமாக அமைந்தது. இதனால் ஈராக்கினால் குவைட் ஆக்கிரமிக்கப்பட்டது. உலக யுத்தத்திற்கு அடுத்த மிகப் பெரிய யுத்தம் என்பதால் பேரழிவுகள் ஏற்பட்டன. பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் இந்த நெருக்கடியை சுமுகமாகத் தீர்க்க முடிந்தது.

கியூபாவின் ஏவுகணை நெருக்கடி

கியூபாவில் புரட்சி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்நாட்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற குழுவினர் ஐக்கிய அமெரிக்காவில் யுத்தப் பயிற்சி பெற்று பிடெல் கெஸ்ரோவின் சமவுடைமை அரசுக்கு எதிராக ஆயுதம் தரித்து வருகை தந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா உதவி வழங்கியதாகக் கூறி அந்நாட்டை தாக்கக் கூடிய ஏவுகணைகள் ரஷ்யாவால் கியுபாவில் பொருத்தப்பட்டன. இதனால் அமெரிக்காவால் கியூபா சுற்றி வளைக்கப்பட்டு ரஷ்யாவை இலக்கு வைத்து துருக் கியில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. இந்தப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் தலையீட்டினால் தீர்க்கப்பட்டது.

தற்கால உலகில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நாடுகளிடையே ஏற்பட்ட பல மோதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டினால் தீர்த்து வைக்கப்பட்ட விதத்தை மேலே அவதானித்தோம். நாடுகளிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைத்து உலக சமாதானத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் பல உள்ளன. உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தலையீட்டினால் சிக்கல்களைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு முயற்சி கள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேசரீதியில் சமாதானம், பாதுகாப்பு என்பன நிலவுவதற்கான முக்கிய பொறுப்பு பாதுகாப்புச் சபையிடம் இருப்பது அதற்கான காரணமாகும்.

பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின்படி உலக சமாதானத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பல கீழே தரப்படுகின்றன.

பொருளாதாரத் தடை விதித்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் அந்தத் தீர்மானத்தை செயற்படுத்த சம்பந்தப் பட்ட நாடுகளை இணக்கத்திற்கு உட்படுத்த முடியும்.

அணு ஆயுதங்களைக் குறைக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல்.

குறிப்பிட்ட நாடுகளில் புதிதாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகத் தகவல் கிடைத்ததும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவை அனுப்பி நிலைமையைப் பரிசீலிக்கின்றது. வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரித்த போது இவ்வாறான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

சமாதானப் படையை ஈடுபடுத்தல்

இரு பிரிவினரிடையே கடும் போர் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படை ஈடுபடுத்தப் படுகின்றது.

நன்றி 










Post a Comment

0 Comments