முதலாம் உலக மகாயுத்தம் - WORLD WAR I

 

முதலாம் உலக மகாயுத்தம்


முதலாம் உலக மகாயுத்தம் - WORLD WAR I

1914 - 1918 வரையிலான காலப் பகுதியில் உலகம் முழுவதும் பரவிய யுத்தம் முதலாவது உலக மகாயுத்தம் என அழைக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் உலகின் சகல கண்டங்களுக்கும் வியாபித்த யுத்தம் ஒன்று குறித்து வரலாற்றில் குறிப்பிடப் படவில்லை. இந்த யுத்தம் ஐரோப்பாவில் ஆரம்பித்து பின் ஐரோப்பியர்கட்டியெழுப்பிய குடியேற்ற நாடுகளுக்கும் பரவியது. இறுதியில் ஐக்கிய அமெரிக்காவும் யுத்தத்தில் ஈடுபட்டமையால் சகல கண்டங்களுக்கும் பரவிய உலக மகாயுத்தமாக இது மாறியது. 

முதலாம் உலக யுத்தத்திற்கான காரணங்கள்.

ஜேர்மனியை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையின்போது பிரான்சும் ஜேர்மனியும் பகைமை நாடுகளாக உருவெடுத்தமை.

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜேர்மன் மொழி பேசிய மக்கள் வாழ்ந்த 350 சிறிய நாடுகள் இருந்தும் ஜேர்மனி என அழைக்கக்கூடிய ஒரு நாடு இருக்கவில்லை. இத்தகைய பின்னணியில் மேலே குறிப்பிடப்பட்ட சிறிய நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஜேர்மனி என்னும் நாடொன்றை ஒட்டோவொன் பிஸ்மார்க் என்னும் திறமையான தலைவன் உருவாக்கினான். 1870 இல் பிஸ்மார்க் ஐக்கிய ஜேர்மனியை உருவாக்கி அதனைப் பலம் வாய்ந்த நாடாக்குவதற்காக பிரான்சுடன் யுத்தத்தில் ஈடுபட்டான். அந்த யுத்தத்தில் பிரான்ஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அன்று முதல் அயல் நாடுகளான பிரான்சும் ஜேர்மனியும் பரஸ்பர பகைமை நாடுகளாக மாறின.

ஜேர்மன் பேரரசனாகிய இரண்டாம் வில்லியத்தின் செயற்பாடுகள்.

ஜேர்மனியினை உருவாக்கிய பிஸ்மார்க் ஜேர்மன் பிரதேசத்தில் பலமானதொரு ஜேர்மனியை உருவாக் கியதில் மனநிறைவு கொண்டான். ஜேர்மனிக்கு வெளியே குடியேற்ற நாடுகளை உருவாக்குவதில் அவன் அக்கறை காட்டவில்லை. எனினும் 1887இல் ஜேர்மன் பேரரசனான் (கெய்சர்) இரண்டாம் வில்லியம் ஜேர்மன் பிரதேசத்தோடு மாத்திரம் திருப்தி அடையவில்லை. பிஸ்மார்க்கின் நோக்கங்களுக்கு மாறாக ஜேர்மனிக்குக் குடியேற்றங்களை அமைத்து ஜேர்மன் பேரரசு ஒன்றை உருவாக்குவதே அம்மன் னனின் நோக்கமாக இருந்தது. அதனால் ஜேர்மனியின் வெளிநாட்டுக்கொள்கை உலகின் ஏனைய நாடுகளுக் குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஜேர்மன் பேரரசு ஒன்றை உருவாக்குவதற்காக ஜேர்மனி இராணுவத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தான். அதனால் கவலையடைந்த பிரித்தானியாவும் ஜேர்மனிக்குப் போட்டியாகப் படைப் பலத்தை அதிகரித்தது. இதனால் ஐரோப்பாவில் யுத்த மேகங்கள் படிப்படியாகக் கருக்கொண்டன.

குடியேற்றங்கள் குறித்த போட்டி.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் பலம் பொருந்திய நாடுகள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் குடியேற்றங்களை அமைப்பதற்கான போட்டியில் ஈடுபட்டமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதில் அதிக குடியேற்ற நாடுகளுக்குப் பிரித்தானியா உரிமையாளராக இருந்தது. பெல்ஜியம், பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் ஒல்லாந்து ஆகிய நாடுகள் வரிசைக்கிரமப்படி அதற்கடுத்த இடங்களை வகித்தன. ஐக்கிய ஜேர்மனி உருவானபின் கைத்தொழில் துறையில் துரித வளர்ச்சியடைந்தது. ஜேர்மனி தனது முடிவுப் பொருள்களை விற்பனை செய்து கொள்வதற்காக வர்த்தகச் சந்தைகளைத் தேடுவது அவசியமாகியது. ஆசிய, ஆபிரிக்கப் பிரதேசங்களில் ஜேர்மனியின் இத்தகைய வருகை ஏனைய நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதுவரை வல்லரசாக இருந்த பிரித்தானியா இதனை மிகுந்த அச்சுறுத்தலாக எண்ணியது. இவ்வாறு குடியேற்ற நாடுகள் தொடர்பான போட்டி எதிர்த் தரப்பு சக்திகள் ஒன்றோடொன்று பகைமையை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியது.

ஆயுதப் போட்டிகளும் தேசியவாதம் வளர்ச்சியடைதலும்

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐரோப்பாவில் அனைத்து முக்கிய நாடுகளும் (ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா) தமது தேசிய பலத்தை விருத்தி செய்வதற்காகப் போர் ஆயுதங்கள் சகிதம் இருப்பதில் அதிக நம்பிக்கைக் கொண்டன. "ஆயுத பலத்தால் ஐந்து வருடங்களில் பெற்றவைகளைப் பாதுகாக்க மேலும் 50 வருடங் கள் ஆயுதம் தரித்த நிலையில் இருக்க வேண்டி வரும்" என ஜேர்மனிய சேனாதி பதியாகிய வொன் வோல் கே கூறியுள்ளார். ஜேர்மனிக்கு ஆயுத பலத்தின் மீது இருந்த நம்பிக்கையை இக்கூற்று தெட்டத் தெளிவாக்குகின்றது. இவ்வாறு ஒவ்வொரு நாடும் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைத்ததால் ஐரோப்பிய நாடுகளிடையே ஆயுதப் போட்டிகள் தீவிரமடைந்தன.

அத்தோடு இத்தாலி மற்றும் ஜேர்மனியில் தேசியவாதத்தின் மூலம் அந்நாட்டை ஐக்கியப்படுத்தியதோடு ஐரோப்பாவில் தேசியவாத எழுச்சி வளர்ச்சி அடைந்தது. இதன் முக்கிய இலட்சணம் என்னவெனில் தமது நாட்டின் மீது பற்றுக் கொள்வதும் ஏனைய நாடுகளை ஒழிப்பதுவுமாகும். இந்நிலை நாடுகளிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்குரிய பின்புலத்தை ஏற்படுத்தியது.

பிரான்சை ஐரோப்பாவில் தனிமைப்படுத்துவதற்குப் பிஸ்மார்க் பின்பற்றிய வெளிநாட்டுக் கொள்கை

 1870 இல் பிரான்சை யுத்தத்தில் தோற்கடித்த ஜேர்மனியின் பிஸ்மார்க், பிரான்சி டம் இருந்த அல்சேஸ் மற்றும் லொரையின் ஆகிய வளமான இரு பிரதேசங்க ளையும் கைப்பற்றினான். இதனால் எதிர்காலத்தில் என்றோ ஒரு நாள் பிரான்ஸ் ஜேர்மனியைப் பழிவாங்கும் பொருட்டு யுத்தம் புரியும் என்றும் அல்சேஸ் மற்றும் லொரைன் பிரதேசங்களை மீளப் பெற்றுக் கொள்ளும் என்றும் ஜேர்மனிக்கு அச்சம் ஒன்றிருந்தது. இதனால் ஐரோப்பாவின் வல்லரசுகளுடன் ஜேர்மனி நட்புறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் பிரான்சுக்கு ஐரோப்பாவில் நட்புக் கொள்ள எதுவும் இல்லாமல் செய்வதுமே 1870 க்குப் பின் ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையாக இருந்தது. இதனால் தனிமையடைந்த பிரான்ஸ் ஐரோப்பாவில் நண்பர்களைத் தேடிச் சென்றமையால் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைமையில் இரு முகாம்கள் உருவாகின. இதன் விளைவாக ஜேர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் முகாம் ஒன்றும் பிரித்தானியா பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட முகாம் ஒன்றும் என இரு அணிகள் உருவாகின. இதன்போது ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் மத்திய ஐரோப்பிய (வல்லரசு) அணி நாடுகள் எனவும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நேச நாடுகள் எனவும் அழைக்கப்பட்டன. ஏனைய நாடுகள் அவர்களின் தேவைகளைக் கருதி இந்த இரு முகாம்களில் ஒன்றில் இணைந்து கொண்டன. அன்றுமுதல் 1914 வரை இவ்விரு அணிகளிடையேயும் முரண்பாடுகள் அதிகரித்தன.

ஆஸ்திரிய முடிக்குரிய இளவரசனின் கொலை.

மேற்குறிப்பிட்டபடி யுத்ததிற்காக ஐரோப்பாவில் பெரும் ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்ட வேளையில், ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசனாகிய பிரான்சிஸ் பேர்டினன்ட்டும் அவரது மனைவியும் பொஸ்னியாவின் தலைநகராகிய சரஜிவோ நகரத்தில் சுற்றுலா மேற்கொண்டபோது கொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கொலைகளை இரு சேர்பியர்களே செய்தனர். இந்த நிகழ்வு தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி எனத் தீர்மானித்த ஆஸ் திரியா நிபந்தனைகள் சிலவற்றை முன்வைத்து சேர்பியாவிடம் நட்டஈடு கேட்டது. சேர்பியா அதனை நிராகரித்தமையால் கி.பி. 1914 ஜூலை மாதம் 28 ஆந் திகதி ஆஸ்திரியா சேர்பியாவுக்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்தது. "சராஜிவோ நிகழ்வு" என அழைக்கப்படும் இது, முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பமாவதில் தாக்கத்தை ஏற்படுத்திய உடனடிக் காரணமாகக் கருதப்படுகின்றது.

முதலாம் உலக மகாயுத்தத்துடன் தொடர்புபட்ட நாடுகள்

நேச நாடுகள்

பிரான்ஸ்
பிரித்தானியா
ரஷ்யா
ஐக்கிய அமெரிக்க அரசுகள்

மத்திய ஐரோப்பிய அணி நாடுகள்

ஜேர்மனி
ஆஸ்திரியா
இத்தாலி
துருக்கி
பல்கேரியா
ஹங்கேரி

முதலாம் உலக மகாயுத்தத்தின் பரவல்

சராஜீவோ சம்பவத்தில் ஆஸ்திரியா சேர்பியாவுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்ததை ஆஸ்திரியாவின் நட்பு நாடாகிய ஜேர்மனியும் அனுமதித்தது. அதன்படி ஆஸ்திரியாவும் அதேபோல் சேர்பியாவும் யுத்தம் புரிவதற்காக தமது நட்பு நாடுகளின் உதவிகளைப் பெறும் நிலை உருவாகியது. ஆஸ்திரியாவின் போர்ப் பலத்தைக் கண்டு அச்சமடைந்து சேர்பியா ரஷ்யாவின் உதவியைக் கோரியது. ரஷ்யா அதற்கு உதவி அளிக்க ஆயத்தமாகியது.

அச்சந்தர்ப்பத்தில் ஆஸ்திரியாவுக்குச் சார்பாக செயல்பட்ட ஜேர்மனி சேர்பியாவுக்கு உதவி வழங்க வேண்டாமென கோரிய போதிலும் அது நடைபெறவில்லை. இதனால் ஆஸ்திரியாவின் சார்பு நாடு என்ற ரீதியில் ஜேர்மனியும் யுத்தத்தில் இறங்கியது. அதன் விளைவாக 1914 ஆகஸ்ட் முதலாம் திகதி ஜேர்மனி ரஷ்யாவுக்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்தது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் நட்புறவு நிலவியதால் ஜேர்மனி ரஷ்யாவைத் தாக்கும்போது பிரான்ஸ் ரஷ்யாவுக்கு உதவலாமென எண்ணிய ஜேர்மனி சற்றும் சிந்திக்காமல் பிரான்சுக்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்தது. ஜேர்மனி ஐக்கியமடைந்த காலம் தொட்டு ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் கடுமையாக பகைமை உணர்வு தொடர்ந்தன. இதனால் பிரான்ஸ் யுத்தத்தில் இறங்குவதற்கு முன்பாக அதனைத் தாக்குவதற்கு எண்ணிய ஜேர்மனி பெல்ஜியத்திற்குள் புகுந்து பெல்ஜியம் வழியாக பிரான்சைத் தாக்க ஆரம்பித்தது. ஜேர்மனியின் இந்தத் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் இங்கிலாந்தின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதாலும் பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே நட்புறவு நிலவியமையாலும் பிரித்தானியா ஜேர்மனிக்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்து பிரான்சுக்கு உதவிக் கரம் நீட்டியது. பிரித்தானியா என்பது அக்காலகட்டத்தில் உலகமெங்கும் குடியேற்ற நாடுகளுக்கு உரிமை கொண்டாடிய தொரு நாடாகும். அதனால் பிரித்தானியா யுத்தத்தில் இறங்கியதோடு அதன் குடியேற்ற நாடுகளை நோக்கியும் யுத்தம் விரிவடைந்தது.

இரு அணிகளுக்கிடையேயும் தரைவழிப் போரோடு கடற் போரும் ஏற்பட்டது. அதி நவீன போர் ஆயுதங்களைப் பயன்படுத்தி நீண்ட யுத்தம் ஏற்பட்டது. ஜேர்மனி தொடர்ந்து நீர்மூழ்கித் தாக்குதல்களை நடத்தியது. அதனால் பிரித்தானியத் துறை முகத்திலிருந்து புறப்படும் நான்கு கப்பல்களில் ஒன்று வீதம் ஜேர்மனியின் நீர்மூழ்கித் தாக்குதலுக்கு இரையாகியது.

இக்காலகட்டத்தில் வல்லரசாகத் திகழ்ந்த ஐக்கிய அமெரிக்கா ஆரம்பத்தில் நடுநிலை வகித்தது. ஆனால் அமெரிக்கர்கள் பயணம் செய்த லூசிடானியா என்னும் பயணிகள் கப்பலொன்று ஜேர்மனியின் நீர்மூழ்கிக் கப்பலின் மூலம் மூழ்கடிக்கப்பட்டமையால் ஐக்கிய அமெரிக்கா யுத்தத்தில் இறங்கியது. ஐக்கிய அமெரிக்கா நட்பு நாடுகளின் வல்லரசுகளுடன் இணைந்தமை ஜேர்மனியின் தோல்விக்கு மிக முக்கிய காரணியாக அமைந்தது. அந்நாட்டின் வசம் இருந்த பெருந்தொகையான உணவு கையிருப்பு இரு மில்லியனைக் கொண்ட காலாட்படை மற்றும் கடற்படை என்பவற்றோடு புத்தம் புதிய நவீன போர் ஆயுதங்கள் என்பன எதிரணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுப்பதில் வெற்றி கண்டது.

ஆரம்பத்தில் மத்திய ஐரோப்பிய வல்லரசு நாடுகளின் பக்கம் இருந்த இத்தாலி இரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம் நட்பு நாடுகளின் பக்கம் இணைந்து கொண்டு ஜேர்மனிக்கெதிராகப் போர் பிரகடனம் செய்தமை ஓர் முக்கிய நிகழ்வாகும். இத்தாலியின் இச்செயற்பாட்டால் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவுக்கிடையில் இருந்த போர் இரகசியங்கள் எதிரிகள் கைகளுக்குச் சென்றமை ஜேர்மனிக்குப் பேரிழப்பாக அமைந்தது.

நேசநாடுகள் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்களின் காரணமாக ஜேர்மனியின் படைப் பலம் ஒடுங்கியது. போரிடும் சக்தி பலவீனமடைந்தது. நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டதோடு அது இராணுவத்தின் மத்தியில் அமைதி இன்மையைத் தோற்றுவித்தது. அதோடு மக்கள் கிளர்ச்சியும் ஏற்பட்டு நாடுமுழுவதும் கலவரங்கள் உச்சநிலை அடைந்தன. ஜேர்மனியின் கடற்படையினர் கிளர்ச்சி செய்து பேரரசனை நீக்குவதற்கு ஆர்ப்பாட்டங்கள் புரிந்த காரணத்தால் அவன் சிங்காசனத்தைக் கைவிட, ஜேர்மனியின் தோல்வி விரைவுபடுத்தப்பட்டது. இவ்வாறு 1914 முதல் 1918 வரை நடந்த முதலாவது உலக மகாயுத்தம் ஜேர்மனியின் தலைமையிலான அச்சு நாடுகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

முதலாம் உலக மகாயுத்தத்தின் விளைவுகள்

யுத்தத்தில் மத்திய ஐரோப்பிய அணி நாடுகள் தோல்வியைத் தழுவி நட்பு நாடுகள் வெற்றி பெற்றமை முக்கிய விளைவாகும்.

யுத்த ஆயுதப் பாவனையால் பெருந்தொகையான மனித உயிர்களும் சொத்துக்களும் அழிந்தன. லட்சக்கணக்கான மக்கள் ஊனமுற்றனர்.

வேர்சேல்ஸ் உடன்படிக்கை ஏற்படல். போரின் முடிவில் சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்காகப் 1919 ஜனவரி மாதம் பிரான்சின் பரிஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஜனாதிபதி - வூட்ரோ வில்சன்
பிரித்தானிய பிரதமர் - லொயிட் ஜோர்ஜ்
பிரான்ஸ் பிரதமர் - க்ளெமன் ஷோ
இத்தாலியப் பிரதமர் - விட்டோரியோ ஒலெண்டோ

இந்தச்சமாதானப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகத் தோல்வி அடைந்த அணிகளுடன் சில ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அவற்றில் ஜேர்மனியுடன் கைச்சாத்திடப் பட்ட வேர்சேல்ஸ் ஒப்பந்தமும் அடங்கும். போருக்கான மூலகர்த்தா என்ற ரீதியில் ஜேர்மனிக்கு வேர்சேல்ஸ் ஒப்பந்தத்தின்படி கடுந்தண்டனைகள் விதிக்கப்பட்டன.

வெற்றி பெற்ற நாடுகளுக்குப் பெருந்தொகையான பணத்தை நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டிய நிலை ஜேர்மனிக்கு ஏற்பட்டது.

இராணுவத்தை வைத்துக்கொள்ளல் மற்றும் போர்த் தளபாடங்களைத் தயாரிக்கும் விடயத்தில் ஜேர்மனிக்கு வரையறை விதிக்கப்பட்டது. 

பிரான்சிடமிருந்து ஜேர்மனி கைப்பற்றி வைத்திருந்த அல்சேஸ் லொரையின் பிரதேசங்களை மீண்டும் பிரான்சுக்கு வழங்கவேண்டி ஏற்பட்டது.

ஐரோப்பாவிற்கு வெளியே ஜேர்மனி வசமிருந்த குடியேற்ற நாடுகள் வெற்றிபெற்ற நாடுகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஐரோப்பாவில் நிலவிய சர்வாதிகார மன்னராட்சி வீழ்ச்சியடைந்தமை. முதலாவது உலக மகாயுத்தத்தின் காரணமாக ஜேர்மன் பேரரசு, ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசு, துருக்கிப் பேரரசு போன்ற சர்வாதிகார முடியாட்சிகள் வீழ்ச்சியடைந்தன. அதன் விளைவாகப் பல்வேறு இனங்களை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர அரசுகள் பல இப்பிரதேசங்களில் தோன்றின.

பின்லாந்து
போலந்து
செக்கோஸ்லோவேக்கியா

முழு ஐரோப்பாவும் பொருளாதாரத் துறையில் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. உற்பத்தித்திறன் பலவீனமடைந்ததாலும் பொருள்களின் விலை அதிகரித்தமை யாலும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. யுத்த முடிவில் ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் உலக வல்லரசுகள் எனத் தலை நிமிர்ந்தன. பிரித்தானியாவின் கடற்படை மேலும் பலப்படுத்தப்பட்டதோடு அவர்களுக்குச் சொந்தமான குடியேற்ற நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

எதிர்காலத்தில் இத்தகையதொரு பேரழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கும் பொருட்டு நாடுகளின் அமையம் என்னும் பெயரில் சர்வதேச சங்கம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சர்வதேச சங்கம் உருவானது

சர்வதேச சங்கம்

1919 இல் நடத்தப்பட்ட பரிஸ் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தவும் மீண்டும் இத்தகையதொரு யுத்தம் ஏற்படு வதைத் தவிர்ப்பதற்காகவும் சர்வதேச அமைப்பொன்றை அமைப்பதன் தேவை உணரப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி வூட்ரோ வில்சன் அதற்காக முனைப்புடன் செயற்பட்டார். அதன்படி 1920.01.10 ஆந் திகதி அவ்வமைப்பு உருவானது அதன் பெறுபேறே ஆகும். ஆரம்பத்தில் இவ்வமைப்பில் 42 நாடுகள் அங்கம் வகித்தன.

சர்வதேச சங்கம் உருவாக்கியதன் நோக்கம்.

நாடுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சமாதானமாகத் தீர்த்தல்.

எதிர் காலத்தில் உலக யுத்தம் ஒன்று ஏற்படுவதைத் தவிர்த்தல். 

சர்வதேசப் புரிந்துணர்வையும் ஒத்தழைப்பையும் கட்டி எழுப்புதல்.

சிறிய நாடுகளின் சுதந்திரம், சுயாதீனம் என்பவற்றைப் பாதுகாத்தல்.

மனித குல ஒற்றுமை மூலம் உலக சமாதானத்தைப் பாதுகாத்தல்.

சர்வதேச சங்கம் சமாதானத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள்

சர்வதேச சங்கம் உருவாகி 20 வருடகாலம் போர் நிகழாமல் தவிர்த்ததில் இச்சங்கம் வெற்றி கண்டது. இச்சங்கம் உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் சிறிய நாடுகளும் பெரிய நாடுகளும் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சர்வதேச சங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு மதிப்பளித்தமையே அதற்குக் காரணமாகும். சர்வதேச சங்கத்தின் முயற்சிகள் வெற்றியளித்த சில சந்தர்ப்பங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

சுவீடனுக்கும் பின்லாந்துக்கும் ஜேர்மனிக்கும் போலந்திற்கும் கிரேக்கத்திற்கும் பல்கேரியாவிற்கும் ஈரான் மற்றும் துருக்கிக்குமிடையே ஏற்பட்ட யுத்த முரண்பாடு களைத் தவிர்த்தமை. 

அகதிகள் புனர்வாழ்விற்காக நடவடிக்கை எடுத்தமை.

முதலாம் உலக மகாயுத்தத்தின் பின் சர்வதேச சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பின் கீழிருந்த குடியேற்ற நாடுகள் குறித்த மேற்பார்வை நடவடிக்கைகளை வெற்றி கரமாகச் செய்தமை.

சட்டவிரோதமான அடிமை வியாபாரத்தையும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் ஒழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டமை.

சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான காரணங்கள்

உலக சமாதானத்தைப் பாதுகாப்பதும் மீண்டும் யுத்தம் மூள்வதைத் தவிர்ப்பதுமே சர்வதேச சங்கத்தை அமைத்ததின் அடிப்படை நோக்கமாக இருந்தது. எனினும் சங்கம் அமைக்கப்பட்டு 20 வருடங்கள் கழிவதற்கு முன் முதலாவது உலக மகா யுத்தத்தின் காரணகர்த்தாவான ஜேர்மனியின் தலைமையில் இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்டது. மீண்டும் யுத்தம் ஏற்படுவதைத் தவிர்ப்பதில் சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி அடைந்தமை இதன் மூலம் தெளிவாகின்றது. இவ்வாறு சர்வதேச சங்கம் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் பின்வருமாறு.

உலகின் செல்வந்த நாடாகவும் போர்ப் பலமிக்க வல்லரசாகவும் திகழ்ந்த ஐக்கிய அமெரிக்க அரசுகள் சர்வதேச சங்கத்தில் இடம்பெறாதது அதன் தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சர்வதேச சங்கம் அங்கத்துவ நாடுகளின் தேவைகளைக் கருதி உருவாக்கப்பட்ட சங்கத்தின் சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ள அமெரிக்காவின் செனட் சபை விரும்பவில்லை. இதனால் வல்லரசான அமெரிக்கா சர்வதேச சங்கத்தில் அங்கத்துவம் பெறாமையால் அதன் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கான தேவை அதற்கு இருக்கவில்லை. இது சங்கத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அதேபோல் உலகின் மற்றொரு வல்லரசாகிய ரஷ்யாவை சர்வதேச சங்கத்தில் இருந்து தூர ஒதுக்கி வைத்தமை அதன் பலவீனத்துக்குக் காரணமாக அமைந்தது.

சர்வதேச சங்கம் எடுத்த தீர்மானங்களைச் செயற்படுத்துவதற்காக அங்கத்தவ நாடுகளை நிர்ப்பந்திப்பதில் சர்வதேச சங்கம் தோல்வி அடைந்தது. சங்கத்தின் தீர்மானத்தை அங்கத்துவ நாடுகளை நிர்ப்பந்தித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான சக்தி அதனிடம் இல்லாமையே இதற்கான பிரதானமான காரணமாகும். இதற்காகப் பயன்படுத்தக்கூடிய இராணுவமொன்று சங்கத்திடம் இல்லாமையும் ஏதாவதொரு சமாதானப் படையைப் பயன்படுத்துவதற்குத் தேவையான பொது இணக்கப்பாடு ஏற்படுத்தப்படாமையும் முக்கிய குறைபாடாகும்.

சர்வதேச சங்கத்தில் அங்கத்துவம் வகித்த பலம் வாய்ந்த நாடுகளுக்கிடையே ஒற்றுமை இன்மையும், சில காரணங்களினால் அவர்கள் பொதுத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி தமது நோக்கங்களைப் பின்தள்ளுவதற்கு விரும்பாமையும் சங்கம் முகங்கொடுத்த பெரும் சவாலாகும். இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன் ஜேர்மனி சர்வதேச சங்கத்தில் இருந்து விலகும் பொழுது சங்கத்தின் அங்கத்துவ நாடுகள் அதனைப் பெரிதும் பொருட்படுத்தவில்லை. ஜேர்மனியின் கம்யூனிசக் கொள்கைகையை நசுக்கும் செயற்பாட்டிற்கு ஏனைய மேற்குலக நாடுகள் மகிழ்ச்சி அடைந்தமையே அதற்கான காரணமாகும்.

உலக சமாதானம் மீறப்பட்ட சில சந்தர்ப்பங்களில் அந்நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள சங்கத்தால் முடியாமல் இருந்தது. இத்தாலி அபிசீனியாவை ஆக்கிரமித்தபோது இத்தாலிக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. எனினும் அதனைச் சரியாக நடத்தச் சங்கத்தால் முடியாமல் போனது.

ஜப்பான் மஞ்சூரியாவை ஆக்ரமித்தபோது ஜப்பானுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

இவ்வாறு சர்வதேச சங்கத்தின் தோல்விகளின் விளைவாக மீண்டும் ஒரு முறை உலக யுத்தமொன்று ஏற்பட்டது. அதுவே இரண்டாம் உலக மகாயுத்தமாகும்.

நன்றி 



Post a Comment

0 Comments