திருஞான சம்பந்தர்
நீராடிவிட்டுக் கரையேறிய சிவபாதவிருதயர் பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிந்திருப்பதைக் கண்டார். யார் தந்த பாலை உண்டாய்? என்று அதட்டிக் கேட்டார். அப்பொழுது வானிலே உமையம்மையாரோடு விடைமீது தமக்குக் காட்சி கொடுத்தருளிய சிவபெருமானைச் சுட்டிக் காட்டி, தோடுடைய செவியன்..... என்று பிள்ளை பாடத் தொடங்கியது. தந்தையார், மிக மகிழ்ந்து பிள்ளையுடன் கோயிலுக் குச் சென்று தோணியப்பரை வணங்கினார். இறைவனால் ஆட்கொள்ளப்பட் டமையால் ஆளுடைய பிள்ளையார்' என்றும் சிவஞான சம்பந்தம் பெற்றமையால் 'திருஞானசம்பந்தர்' என்றும் அப்பிள்ளை பெயர் பெற்றது. அன்று தொடக்கம் பிள்ளையாரை அவருடைய தந்தையார் தம் தோளிலே சுமந்து கோயில்களுக்குச் சென்று வணங்குவது வழக்கமாயிற்று.
பிள்ளையார் ஒரு நாள் திருக்கோலக்கா என்னும் திருப்பதியை அடைந்தார். அங்கு அவர், தன் கையினால் தாளமிட்டு மடையில் வாளை என்னும் பதிகத்தைப் பாடினார். அவருடைய கை வருந்தும் எனக் கருணை கூர்ந்த இறைவன், ஐந்தெழுத்துப் பொறித்த பொற்றாளம் ஒன்றை அவர் கையிற் கிடைக்கச் செய்தார்.
ஆளுடைய பிள்ளையாரின் பெருமை சோழ நாடெங்கும் பரவியது. அடியார்கள் திரள்திரளாக வந்து பிள்ளையாரைத் தத்தம் பதிகளுக்கு எழுந்தருளுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய பிள்ளையார் பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு சீர்காழிப் பதியை அடைந்தார். சிதம்பரத்தை அடுத்துள்ள திருவெருக்கத்தம்புலியூரில் வாழ்ந்து வந்த திருநீலகண்டப் பெரும்பாணரும் அவருடைய மனைவி மதங்க சூளாமணியும் சீர்காழிக்கு வந்து திருஞானசம்பந்தரை வணங்கிப் பாடினர். அதனைக் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார், தாம் பாடும் பதிகங்களை யாழில் இசைக்குமாறு பாணர்க்கு அருள்செய்தார்.
தந்தையார் தோளிற் சுமந்து செல்ல, சிதம்பரம் முதலிய பல தலங்களையும் தரிசித்த பின், பிள்ளையார் திருப்பெண்ணாகடத் திருத்தூங்கானை மாடத்தைத் தொழுதார். பின் திருவரத்துறையை வணங்குவதற்குத் தந்தையாரின் தோளிலிருந்து இறங்கித் தாமே நடந்துசென்றார். அவர் நடப்பதைப் பொறாத அரத்துறைநாதர், அவ்வூர் அந்தணர்களுக்குக் கனவிலே தோன்றி, "ஞான சம்பந்தன் நம்பால் அணை கின்றான். அவனுக்காக முத்துச் சிவிகையும் முத்துக்குடையும் முத்துச் சின்னங்களும் நம் திருக்கோயிலில் வைத்திருக்கின்றோம். அவற்றை அவன்பாற் கொண்டு செல்லுங்கள்'' என்று பணித்தருளினார்.
பிள்ளையாருக்கும் அன்றிரவு கனவில் இறைவன் இச்செய்தியைத் தெரிவித்தார். பிள்ளையார் திருவருள் வடிவாக வந்த அச்சிவிகைமீது எழுந்தருளினார். முத்துக் குடை நிழற்றியது. முத்துச் சின்னங்கள் ஒலித்தன. தொண்டர்கள் அரஹர வொலி செய்தனர். திருவரத்துறையை அடைந்த பிள்ளையார், இறைவனை வணங்கி எந்தை ஈசன் எம்பெருமான் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.
பாணரின் தாயாரின் பிறப்பிடமாகிய திருத்தருமபுரத்தைப் பிள்ளையார் அடைந்தபொழுது, பாணரின் சுற்றத்தார் அவர்களை எதிர்கொண்டு வணங்கினர். அப்பொழுது பாணர், பிள்ளையாரின் திருப்பதிகங்களை யாழிலிட்டு வாசிக்கும் பேறு தமக்குக் கிடைத்ததெனக் கூறினார். அதைக்கேட்ட பாணரின் உறவினர்கள், பாணர், திருப்பதிகங்களை யாழில் இட்டு வாசிப்பதனால் அவற்றின் சிறப்பு உலகில் விளங்குகின்றது. என்றனர். உடனே பாணர் மனம் நடுங்கி, பிள்ளையாரை நோக்கி, சுவாமீ, தங்கள் திருப்பதிக இசை அளவுபடாத அரிய தன்மை உடையது என்பதனை எல்லோரும் அறிய ஒரு திருப்பதிகம் பாடவேண்டும். என்று வேண்டினார். பிள்ளையார் மாதர் மடப் பிடியும்....என்னும் பதிகத்தைப் பாடியருளினார். பாணரால் அதனை யாழில் இட்டு வாசிக்க முடியவில்லை. அவர், பிள்ளையாரை வணங்கி சுவாமிகளின் திருப்பாடல்களை யாழிலே ஏற்பேன் என்று கூறப்பண்ணியது இந்த யாழே என்று கூறி அதனை உடைக்க முற்பட்டார். பிள்ளையார் அவரைத் தடுத்து, இதனை உடைப்பதேன்? இறைவனின் அருட்டிறம் எல்லாம் இக்கருவியில் அமையுமோ? இயன்ற அளவு வாசித்தலே சால்பு என்று கூறினார். இப்பதிகப் பண் யாழ்முரி என வழங்குகிறது.
திருஞானசம்பந்தர் திருப்பாச்சிலாச்சிரமத்தை அடைந்த பொழுது, அங்கு ஆலயத்தினுள்ளே கொல்லிமழவன் என்ற அரசனின் மகள், முயலகன் நோயினால் வருந்துவதைக் கண்டு, துணிவளர் திங்கள் என்ற பதிகத்தைப் பாடி அவளுடைய நோயை நீக்கினார். பின்னர் கொடிமாடச் செங்குன்றூர் என்னும் இடத்தில், பனியின் கொடுமையால், தம் அடியார்களும் பிறரும் குளிர்ச் சுரத்தால் வருந்துவதைக் கண்டு, அவ்வினைக்கிவ்வினை என்ற பதிகத்தைப் பாடி வருத்தம் தீர்த்தார். ஒருபொழுது பிள்ளையாருடைய தந்தையார் யாகம் செய்வதற்குப் பொன் தேவைப்பட்டது. அப்பொழுது இடரினும் தளரினும் என்ற பதிகம் பாடி, சிவனருளால் ஆயிரம் பொன் பெற்றுத் தந்தையாருக்குக் கொடுத்தார். பிள்ளையார் திருமருகலை அடைந்தபொழுது கன்னி ஒருத்தியுடன் வழிப் பயணமாக வந்த வணிகன் ஒருவன் அரவு தீண்டி இறந்து கிடந்தான். இதனைக் கண்டு இரக்கமுற்ற திருஞானசம்பந்தர் சடையா யெனுமால் என்னும் பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். பின்னர் இருவருக்கும் திருமணம் செய்வித்து அனுப்பினார்.
திருவீழிமிழலைக்கு அவர் அப்பரடிகளுடன் சென்றபொழுது அங்கு மாரிவளம் குன்றிப் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. அடியார்கள் யாவரும் பசிப் பிணியால் வருந்தினர். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சிவபெருமானைப் பாடிப் படிக்காசு பெற்று, அடியார்க்கு அமுது செய்வித்தனர். திருமறைக்காட்டில், தேவாரம் பாடித் திருநாவுக்கரசர் திறந்த கதவை சதுரம் மறை என்ற பதிகத்தைப் பாடி மூடச் செய்தார்.
பாண்டி நாட்டை ஆண்ட கூன்பாண்டியன் என்பவன் சமணசமயத்தைத் தழுவியிருந்தான். அந்நாட்டு மக்களும் அச்சமயத்தைச் சார்ந்தனர். அதுகண்டு பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் மனம் வருந்தினர். சைவத்தைத் தழைத்தோங்கச் செய்ய வல்லவர் திருஞானசம்பந்தரே எனக் கண்டு அவர்கள் பிள்ளையாரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு வந்த பிள்ளையார் ஒரு மடத்தில் அடியார் குழாத்துடன் தங்கினார். அன்றிரவு சமணர்கள் அரசனுடன் சேர்ந்து ஆலோசித்துச் சூழ்ச்சி செய்து, அம்மடத்துக்குத் தீ இட்டனர். இதனை அறிந்த பிள்ளையார் செய்யனே திருவாலவாய் என்ற பதிகம் பாட, அத்தீயானது தணிந்து வெப்பு நோயாகச் சென்று பாண்டியனை வருத்தியது.
அரசனுடைய நோயைத் தீர்ப்பதற்குச் சமணர்கள் செய்த மந்திர தந்திரங்க ளினால் நோய் தீரவில்லை; மாறாக மிகுந்தது. அப்பொழுது அங்கு அழைத்துவரப்பட்ட பிள்ளையாரை அரசன் வேண்ட, அவர் சிவபெருமானை வணங்கி, மந்திரமாவது நீறு என்ற பதிகம் பாடி, அரசனுடைய மேனியிலே திருநீறு இட, வெப்பு நோய் தீர்ந்தது. பிள்ளையாரின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத சமணர்கள் அவரை அனல் வாதத்திற்கு அழைத்தனர். பிள்ளையார் போகமார்ந்த பூண்முலையாள் என்ற பதிகம் எழுதப்பட்ட ஏட்டைத் தீயில் இட்டார். சமணர்களும் தமது சமய உண்மை எழுதப்பட்ட ஓர் ஏட்டைத் தீயில் இட்டனர். சமணர்களுடைய ஏடு எரிந்து சாம்பராக, பிள்ளையாரின் ஏடு எரியாது பசுமையாக இருந்தது. அதனையும் ஏற்காத சமணர்கள், பிள்ளையாரைப் புனல் வாதத்திற்கு அழைத்தனர். சமணர்கள், அத்தி நாத்தி என்று எழுதிய ஏட்டை வைகையில் விட, பிள்ளையார் வாழ்க அந்தணர் என்ற பதிகம் எழுதிய ஏட்டை இட் டார். சம்பந்தரின் ஏடு ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்ல, சமணரின் ஏடு ஆற்றோடு சென்றது. பிள்ளையார் தம் பதிகத்தில் 'வேந்தனும் ஓங்குக' என்று அருளியமையால் அரசனது கூன் நிமிர்ந்தது. அவன் சைவத்தைத் தழுவினான்.
சில நாள்கள் கழிந்தபின், பிள்ளையார் தம் அடியார்களோடு, இராமேஸ்வரத்தை அடைந்து திருப்பதிகம் பாடியருளினார். அங்கிருந்தே ஈழநாட்டிலுள்ள திருக்கே தீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்னுந் தலங்களையும் வணங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
திருமயிலாப்பூரில், சிவநேசர் என்ற அடியாரின் மகள் பூம்பாவை என்பவள், பாம்பு தீண்டி இறந்தாள். தந்தையார் அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் இட்டு வைத்திருந்தார். மயிலாப்பூரை வந்தடைந்த சம்பந்தர் சிவநேசரின் வேண்டுதலுக்கு அமைய, அக்குடத்தைக் கபாலீசுவரர் திருமுன் வைத்து, மட்டிட்ட புன்னை..... என்ற பதிகத்தைப் பாடி, பூம்பாவையை உயிர்ப்பித்தார்.
திருநல்லூர்ப்பெருமணத்தில் வாழ்ந்த நம்பாண்டார் நம்பிகளின் மகளைப் பிள்ளையாருக்குத் திருமணஞ் செய்து கொடுக்க ஏற்பாடாயிற்று. பிள்ளையார் மணமகளைக் கையிற் பிடித்து அக்கினியை வலம்வரும்பொழுது இந்த இல் லொழுக்கம் வந்து சூழ்ந்ததே, இவள் தன்னோடும் அந்தமில் சிவன்தாள் சேர்வன்" என்று எண்ணி, கல்லூர்ப் பெருமணம்..... என்னும் பதிகத்தைப் பாடினார். அப்பொழுது காதலியும் நீவிரும் திருமணம் காணவந்தோர் அனைவரும் நம்பாற் சோதியிற் கலமின் என்று ஓர் ஒலி கேட்க, சோதி ஒன்று தோன்றிற்று. பிள்ளையார் 'காதலாகிக் கசிந்து' என்னும் பஞ்சாட்சரப் பதிகத்தை ஓதி, எல்லோரையுஞ் சோதியுட் புகுமாறு பணித்தார். பின்னர் தாமும் மணமகளுடன் அதனை வலம்வந்து அச்சிவசோதியுட் கலந்தார். ஒரு வைகாசி மாத மூல நட்சத்திரத்தன்று இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
திருஞான சம்பந்தரின் பணிகள்
பாடல்பனை தாளம் பாலைநெய்தல் - ஏடெதிர்வெப்பு
என்புக் குயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்
என்று திருஞானசம்பந்தரின் பலதரப்பட்ட பணிகளை மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றான திருக்களிற்றுப்படியார் குறிப்பிடுகின்றது. கி.பி 640 - கி.பி 656 வரையான காலப்பகுதியில் 16 வயது வரை வாழ்ந்தவராகக் கருதப்படும் திருஞானசம்பந்தரது சைவசமயப்பணிகளால் அக்காலத்தில் நலிவுற்ற சைவ நெறியானது தழைத்தோங்கியது.
சைவ சமயப் பணிகள்
தமிழ் நாட்டில் வாழ்ந்தவர். வட நாட்டில் இருந்து வருகைதந்த பௌத்த துறவிகளாலும், சமண சந்நியாசிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தத்தம் சமயப்பிரசாரங்களால் மன்னன் முதல் சாதாரணகுடிமகன் வரை இச்சமயங்களைத் தழுவத்தொடங்கினர். இந்நிலையில் சைவ நெறியின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும் சமண, பௌத்த சமயங்களின் போலித்தன்மைகளை நிரூபிக்குமுகமாகவும் ஞானசம்பந்தர் பலதரப்பட்ட சைவ சமயப் பணிகளை மேற்கொண்டார்.
பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் புத்துயிர் பெறுதல்.
பாண்டிய நாட்டின் மன்னனாகிய கூன்பாண்டியன் சமணசமயத்தைத் தழுவினான். அவனைத் தொடர்ந்து மக்களும் தழுவத்தொடங்கினர். அதனால் பாண்டிய மன்னனின் மனைவி மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் வருந்தினர். ஞானசம்பந்தருக்குத் தமது நிலையைத் தெரியப்படுத்தினர். அவர்களது வேண்டுதலுக்கு இசைந்த ஞானசம்பந்தர் பாண்டிநாட்டுக்கு வருகைதந்தார். அவரது வருகையை அறிந்த சமணர்கள் அவர்தங்கி இருந்த திருமடத்துக்குத் தீ மூட்டினர். அத்தீயில் நின்று தப்பிய ஞானசம்பந்தர், அத்தகைய கொடியவர்கள் வாழும் நாட்டின் வேந்தனின் குற்றம்தான் கொடியது எனக்கூறி "செய்யனே திருஆலவாய் மேவிய ஐயனே......." என்ற பதிகத்தைப்பாடினார். பாண்டிய மன்னனுக்கு வெப்புநோய் ஏற்பட்டது.பாண்டியன் தனது தவறை உணர்ந்தான். மீண்டும் சைவ சமயத்தைத் தழுவினான். மீண்டும் சைவசமயம் பாண்டிய நாட்டில் தழைக்க ஞானசம்பந்தர் வழிவகுத்தார்.
சைவசமயமே மேலான சமயம் என நிரூபித்தல்
ஞானசம்பந்தர் சமணர்களோடு வாதிட்டு சைவசமயமே உண்மையான சமய நெறி என வாதிட்டு நிலைநாட்டினார். பாண்டிய மன்னனும் பாண்டிய நாடும் மீண்டும் சைவசமயத்தைத் தழுவியதை அறிந்த சமணர்கள், தம்மோடு தத்தம் சமய உண்மைகள் சார்பாக வாதிட வருமாறு ஞானசம்பந்தரை அழைத்தனர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் அவர்களோடு அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றை மேற்கொண்டு அவர்களது சமய நெறி போலியானது என நிரூபித்து சைவ நெறியே மேலானது எனநிரூபித்து அக்காலச் சைவ சமய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றினார். ஞானசம்பந்தர் சமணர்களோடு வாதிட்டது மாத்திரமன்றிப் பௌத்தர்களோடும் வாதிட்டு சைவ சமய உண்மைகளை மேல்நிலைப்படுத்தினார். "புத்தநந்தி” என்னும் பௌத்தமதத் தலைவனோடு வாதிட்டு அவனையும் அவனது கூட்டத்தினரையும் சைவர்களாக மதம்மாற வழிவகுத்தார்.
ஆலயவழிபாட்டின் அவசியத்தை வலியுறுத்தல்
சைவநெறியின் கருவூலமாக அமைகின்ற ஆலயங்களும் அவற்றின் முக்கியத்துவமும் உணரப்படாமையால் அவை கவனிப்பார்களின்றி அழிவடையத் தொடங்கின. இந்நிலையைக் கண்ணுற்ற ஞானசம்பந்தர் ஆலயவழிபாட்டின் அவசியத்தை வலியுறுத்தி அவற்றின் மீது தலயாத்திரை மேற்கொண்டு தலங்களின் பெருமைகளைத் தெளிவுப்படுத்தினார். இவரது மூன்று வயதில் தொடங்கிய தலயாத்திரை பதினாறு வயது வரையும் தொடர்ந்தது. இவர் 220 தலங்களைப்பற்றி பதிகங்கள் பாடியுள்ளார். இப்பதிகங்களிலே குறித்த ஆவயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது சிறப்புக்கள், அத்தலம் தொடர்பான புராண நிகழ்ச்சிகள், அதன் தீர்த்தம் மற்றும் அதனை வழிபடும் அடியவர் எய்தும் சிறப்புக்கள், அதன் இயற்கை வர்ணனை என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய புரட்சிமிக்க இப்பணிகளால் குறித்த ஊருக்கென மாத்திரம் காணப்பட்ட ஆலயங்கள், அனைத்துத் தேசத்தவர்களும் எக்காலத்திலும் வழிபட்டு ஏக, வழிவகுத்த செம்மலாக இவர் விளங்கினார். இதனால் இவரை ஆலயப்பிரவேச வழிகாட்டி எனச் சிறப்பித்து அழைப்பர்.
தேவாரங்களை அருளியமை
ஞானசம்பந்தர் அருளிய தேவாரங்களின் தொகை 14000 என நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுள்ளார். ஆயினும் நமக்குக் கிடைத்துள்ள தேவாரங்களின் தொகை 4169 ஆகும். சம்பந்தர் தேவாரங்களைப் பாடும்போது அதற்கு திருநீலகண்டயாழ்ப்பாணர் பண்ணிசைப்பார். தேவாரப் பண்ணிசைமரபில் யாழ்முரிப் பண் ஞானசம்பந்தரது 'மாதர் மடப்பிடி என்னும் பதிகத்தில் மாத்திரமே காணப்படுவதாகத் தமிழிசை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
சமூகப் பணிகள்
திருஞானசம்பந்தர் சைவ சமயப்பணிகளை ஆற்றி, சைவசமயத்தினை மறுமலர்ச்சி அடையச் செய்தது போல, சமூகப்பணிகள் பல மேற்கொண்டு அக்கால சமுதாயத்தினரின் விடிவுக்குக் காரணமாக அமைந்தார். இறைவனை வழிபடுவதனால் இறை அருளால் நோய் போன்ற துன்பங்களையும் வினைகளையும் வெல்லலாம்; அனைவருக்கும் வீடுபேறு எளிதாகக் கிடைக்கும் என்று வலியுறுத்தினார். மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து இறையருளால் எதையும் சாதிக்கமுடியும் என்று வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார்.
பஞ்சம் தீர்த்தல்
திருவீழிமிழலை திருத்தலத்துக்கு அடியவர்களோடு வருகை தந்த ஞானசம்பந்தர் அங்கு நிலவிய பஞ்சத்தினைக் கண்டு வருந்தினார். " வாசி தீரவே காசு நல்குவீர் மதசில் மிழலையீர்.." என்ற பதிகத்தைப் பாடினார். இறைவன் திருவருளால் பொற்காசு பெறப்பட்டு அதனைக் கொண்டு பொருள்வாங்கி அவ்வூர் மக்களதும் அடியவர்களதும் பசிப்பிணியை நீக்கினார். இதனைப்போன்று ஊரில் பஞ்சங்கள் நீங்கி நன்மைகள் பெருகவேண்டும் என்பதற்காக ஞானசமபந்தரின் தந்தையார் திருவாவடுதுறையில் வேள்வி செய்ய எண்ணினார். அதற்குப் பணவசதியில்லையே என வருந்தினார். அதனை அறிந்த ஞானசம்பந்தர், இடரினும் தளரினும்..... என்னும் பதிகத்தைப்பாடினார். இறைவன் திருவருளால் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட உலவாக்கிளி கிடைக்கப் பெற்றது. அதனைக் கொண்டு தந்தையார் யாகம் செய்து அவ்வூரில் பஞ்சம் நீங்க வழிவகுத்தார்.
நோய் தீர்த்தல்
ஞானசம்பந்தர் இறைவன் திருவருளால் தான் சென்ற இடங்களில் மக்களுக்கு ஏற்பட்ட நோய்களைத் தீர்த்து அருளினார். திருபாச்சிலாச்சிரமம் என்ற இடத்தில் கொல்லிமழவன் என்ற சிற்றரசனது மகன், முயலகன் என்னும் நோயினால் வருந்திய போது அதனைக் கண்ட ஞானசம்பந்தர் துணிவளர் திங்கள்..... என்னும் பதிகத்தைப்பாடி இறையருளால் அந்நோயை நீக்கினார். இதனைப் போன்று ஞானசம்பந்தர் திருக்கொடிமாடச் செங்குன்றூருக்குத் தலயாத்தரை மேற்கொண்டபோது அங்குள்ள மக்கள் பனிக்காலக் குளிர் நோயினால் வருந்தினர். அவர்களைக் குளிர் துன்புறுத்தாது இருக்கவேண்டி அவ்வினைக்கு இவ்வினை..... என்ற பதிகத்தினைப்பாடினார். இறைவன் திருவருளால் குளிர் நோய் நீங்கி மக்கள் மகிழ்வுற்றனர்.
இறந்தவரை உயிர்ப்பித்தல்
திருமயிலாப்பூருக்கு ஞானசம்பந்தர் சென்றபோது அங்கு சிவநேசன் என்னும் அடியவர் ஒருவர் தனது மகளாகி பூம்பாவை என்பவள் பாம்பு தீண்டி இறந்தமையால் மிகவும் வருந்தி நின்றார். அவரது துயரை நீக்கும் பொருட்டு பானையில் இடப்பட்ட பூம்பாவையின் எலும்புகளில் இருந்து அவளை உயிர்ப்பிக்க மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை.... என்ற பதிகத்தைப் பாடினார். பூம்பாவை அழகிய பெண்ணாக உயிர் பெற்று எழுந்தாள். இதுபோன்று ஞானசம்பந்தர் திருமருகல் தலத்தினை அடைந்த போது அங்கே வணிகன் ஒருவன் பாம்பினால் கடியுண்டு இறந்து கிடக்கின்றான். அவனை மணக்க இருக்கும் அவனது முறைப்பெண் செய்வது அறியாது அழுது புலம்பினாள். அதனைக்கண்ட ஞானசம்பந்தர் இறைவனது திருவருளை வேண்டி சடையாய் எனுமால்..... என்னும் பதிகத்தினைப்பாடினார். வணிகன் உயிர்பெற்றெழுந்தான். இருவருக்கும் ஞானசம்பந்தர் திருமணம் செய்துவைத்து அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.
இயற்கையை ஏவல் கொள்ளுதல்
ஞானசம்பந்தர் இறைவனது திருவருளால் மக்களுக்காக இயற்கைத் தன்மையையே மாற்றியமைத்து உதவியவராக விளங்குகின்றார். திருநனிப்பள்ளி பாலை நிலமாக வரண்டு காணப்பட்டமையால் அங்குள்ள மக்கள் வருந்தி நின்றனர். இதனை அறிந்த ஞானசம்பந்தர் காரைகள் கூகை முல்லை.... என்னும் பதிகத்தினைப் பாடினார். அப்போது வரண்ட பாலை நிலம், வளமான நெய்தல் நிலமாக மாறியது. இதுபோன்று திருவோத்தூரில் சிவனடியார் ஒருவர் தனது பனைகள் ஆண்பனைகளாகக் காணப்படுவதால் தன்னை சமணர்கள் ஏளனம் செய்வதாக வருந்தி ஞானசம்பந்தரிடம் முறையிட்டார். பூத்தேர்ந்தாயன கொண்டு நின்பொன்னடி.... என்ற பதிகத்தினைப்பாடினார். அப்போது ஆண்பனைகள் பெண்பனைகளாக மாறி, அவை பூவும் பிஞ்சுமாகப் பூத்துக் குலுங்கின.
அனைவரையும் சமமாக நோக்குதல்
ஞானசம்பந்தரது சமூகப்பணிகளுள் பிரதானமானது அவர் தொண்டர் குலமே தொழுகுலம் என்பதற்கு அமைய அவர் தீண்டாமையை ஒழித்து அனைத்து அடியவர்களிடத்திலும் அன்பு கொண்டு ஒழுகியமையே ஆகும். திருநீலநக்க நாயனார் என்னும் அந்தணர் வீட்டில் ஞானசம்பந்தரும் பாணர் வகுப்பைச் சேர்ந்த திருநீலகண்டரும் அவரது மனைவி மதங்கசூளாமணியும் தங்கினர். சம்பந்தரது சமூகசமரச நோக்கும், பேதங்கள் எவையும் கொள்ளாத உளப்பாங்கும், பத்திலயிப்பினால் அனைவரும் சிவனடியார்களே என்னும் தெளிவும், அவரது சமூக நோக்கங்களாக அமையப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
0 Comments