அருணந்தி சிவாச்சாரியார் - சந்தான குரவர்களின் இரண்டாம் குரு - ARUNANTHI SIVACHARYAR

அருணந்தி சிவாச்சாரியார்
 

அருணந்தி சிவாசாரியார் - சந்தான குரவர்களின் இரண்டாம் குரு - ARUNANTHI SIVACHARYAR

அருணந்தி சிவாசாரியார், திருத்துறையூரில் அவதரித்தவர். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். இளமையிலேயே ஆகமநூல் அறிவு மிகவும் நிரம்பப் பெற்றவர்; இதனால் சகலாகம பண்டிதர் எனும் சிறப்புப் பெயர் வழங்கப் பெற்றவர்; மெய்கண்டதேவரின் தந்தையான அச்சுதக்களப்பாளரின் ஆசிரியர்.

ஒருநாள், அருணந்தி சிவாசாரியார், தமது மாணவரான அச்சுதக்களப்பாளரின் மகனாகிய மெய்கண்டார். பலருக்குச் சைவசித்தாந்த பாடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டார்; குழந்தைதானே எனும் அலட்சியத்தோடு, "ஆணவத்தின் சொரூபத்தை விளக்க முடியுமா?" என, மெய்கண்டாரைக் கேட்டார். மெய்கண்டாரோ எதுவும் பேசவில்லை; தனது பிஞ்சுவிரலால் அருணந்தி சிவாசாரியாரையே சுட்டிக் காட்டினார். அந்நிலையில் மெய்ஞ்ஞான விழிப்புப் பெற்றார் அருணந்தி சிவாசாரியார்; குழந்தை என்றும் கருதாது மெய்கண்டாரைக் குருவாகக் கொண்டார்.

புறச்சந்தான குரவர்களுள் மெய்கண்டாரை அடுத்து முக்கியத்துவம் பெறுபவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். இவர் ஆகமங்களைத் துறைபோக கற்றமையால் அவரை "சகலாகம பண்டிதர்" என அழைத்தனர். அத்தோடு அவர் சீர்காழித் திருத்தலத்தில் சில காலம் வசித்து அங்கு சிவப்பணிகள் பல புரிந்தமையால் இவரை "சண்பையர்தலைவர்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். அவர் மெய்கண்டார் வாழ்ந்த 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மெய்கண்டாரது சைவ மெய்யியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்ததோடு பலதரப்பட்ட சைவப் பணிகளை ஆற்றியவராக இவர் விளங்குகின்றார்.

வயதில் முதுமை பெற்ற திருநாவுக்கரசர் எவ்வாறு ஞானசம்பந்தரை வணங்கிச் சேவை செய்தாரோ அதேபோல் வயதில் முதியவராகிய அருணந்தி சிவாச்சாரியார் தம்மிலும் வயது குறைந்த மெய்கண்டதேவரைக் குருவாகக் கொண்டார். மெய்கண்டதேவர் தமக்கு உபதேசித்த சிவஞானபோதத்தை மறவாத அருணந்தி சிவாச்சாரியார் "மெய்கண்டான் நூல் சென்னியிற் கொண்டு சைவத்திறத்தினைத் தெரிகல் உற்றாம்" எனவும் "எம்குருநாதர்.... தீதகல எமக்களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப் பேன் சிவஞான சித்தி" எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் தனது குருவாகிய மெய்கண்டாரது வேண்டுகோளுக்கமைய அவரது சிவஞானபோதத்துக்கு விளக்கம் கூறும்முகமாக "சிவஞான சித்தியார்" என்ற வழி நூலை உருவாக்கினார்.

இந்நூல் பதின்நான்கு சித்தாந்த சாத்திர நூல்களுக்குள் விரிவானது. அது 301 விருத்தப்பாக்களைக் கொண்டதோடு பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டு பிரிவுகளை உடையது. இவற்றுள் பரபக்கம் என்பது உலகாயதம், செளத்திராந்திகம், யோகசாரம், மாத்தியமிகம், வைபாடியம், நிகண்டவாதம், ஆசீவகம், பட்டாசரியம், பிரபாகரம், சத்தப்பிரம வாதம், மாயாவாதம், பாற்கரியம், நிடிச்சுர சாங்கியம், பாஞ்ச ராத்திரம் ஆகிய சமயவாதிகளது கொள்கைகளை எடுத்துக் கூறி அவற்றை அளவை முறையினால் மறுப்பது ஆகும். சுபக்கம் என்பது சாத்திர நூல்களுக்குரிய அளவை கூறிய பின், முப்பொருள்களின் உண்மை, அவற்றின் பொது இயல்பு, சிறப்பியல்பு, பாசத்தினின்றும் நீங்கி கடவுளை அடைவதற்கான வழிகள், கடவுளை அடைந்தோர் தன்மை, ஆகிய பொருள்களை விபரித்துக் கூறுவதாகும்.

இத்தகைய தத்துவச் சிறப்புக்களை உடைய அருணந்தி சிவாச்சாரியாரின் சிவஞான சித்தியார் நூலை அறிஞர்கள் பலவாறு போற்றியுள்ளனர். "சிவத்தின் மேல் தெய்வமில்லை; சிவஞான சித்திக்கு மேல் ஒரு சாத்திரமில்லை" என்றும் "பார் விரிந்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஒரு விருத்தப் பா போதும்" என்பன குறிப்பிடத்தக்கவையாகும். அருணந்தி சிவாச்சாரியார் சைவசித்தாந்த சாத்திரவிருத்திக்கு ஆற்றிய பணிகளில் மற்றொன்று "இருபா இருபஃது" என்னும் சாத்திர நூலை உருவாக்கியமையாகும். இதில் அருணந்தி சிவாச்சாரியார் தமது குருவாகிய மெய்கண்டதேவரை முன்னிலைப்படுத்தி அவரை நோக்கி, தாம் வினாக்களை வினாவுவதாகவும், அதற்கு மெய்கண்டதேவர் விடையளிப்பது போலவும் சைவ சித்தாந்தக் கருத்துக்களை இருபது செய்யுள்கள் மூலம் விபரித்துள்ளார்.

இவரும் தனது குருவின் வழியில் நின்று சைவசித்தாந்த உண்மைகளைப் பல மாணாக்கருக்குப் போதித்துள்ளார். சந்தான குரவர்களுள் மூன்றாவதாக விளங்கும் மறைஞான சம்பந்தர் இவரது நேரடி மாணாக்கராவார். அருணந்தி சிவாச்சாரியார் தனது சொத்துக்களைக் கூட சைவப்பணிக்காகத் தானமாக வழங்கியதை அறிய முடிகின்றது. தமிழகத்தின் திருத்துறையிலுள்ள அவரது நிலங்களை சைவ சித்தாந்த வளர்ச்சியின் பொருட்டு நன்கொடையாக வழங்கினார். இன்று அந்த நிலத்தை திருக்கைலாய ஞானப்பரம்பரையால் உருவாக்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீனம் பொறுப்பேற்றுள்ளது.

இவ்வாறு சைவசித்தாந்த வளர்ச்சிக்காக பலதரப்பட்ட பணிகளை ஆற்றிய இவர் புரட்டாதிப் பூர நாளில் அகண்ட பரிபூரண சச்சிதானந்த நிலையை எய்தினார். அவரது சமாதி திருக்கோயில் திருத்துறையில் அமைந்துள்ளது.

மெய்கண்டாரிடம் சைவசித்தாந்த உண்மைகளைப் பாடங்கேட்டு, அவரின் முதன் மாணாக்கராக விளங்கிய இவர், சிவஞான போதத்தின் வழிநூலாக, சிவஞான சித்தியார் எனும் பெருநூலை எழுதியருளினார். சைவசித்தாந்த முதனூலாகிய சிவஞான போதம் மிகவும் சுருக்கமானது; பன்னிரண்டு சூத்திரங்களால் ஆனது. அதன் பொருளை உள்ளவாறு உணர்ந்து, தத்துவ ஈடுபாடுள்ள அனைவரும் விளங்கத்தக்க வகையில் விரிவாக விளக்கி உரைத்த பெருமை, அருணந்தி சிவாசாரியார்க்கே உரியது.

அவ்வகையில் சைவசித்தாந்த வரலாற்றில் இவர் அருளிய சிவஞான சித்தியார் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. "சிவனுக்குமேல் தெய்வம் இல்லை; சித்திக்கு விஞ்சிய நூல் இல்லை" என்பது ஆன்றோர் வாக்கு. இப்பெருநூல் பரபக்கம், சுபக்கம் எனும் இரண்டு பகுதிகளை உடையது. பிற சமய தத்துவங்களின் பொருந்தாமைகளைக் கண்டிக்கும் பகுதி பரபக்கமாகும். சைவசித்தாந்த அடிப்படைகளை விளக்கிநிற்கும் பகுதி சுபக்கமாகும்.

சிவஞான சித்தியார் தவிர, இருபா இருபஃது எனும் தத்துவ நூலையும் இவர் அருளினார். இதுவும் பதினான்கு சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாக ஏற்கப்பட்ட சிறப்புடையது. சைவசித்தாந்தக் கருத்துக்களை, மாணவரின் வினா ஆசிரியரின் விடை என்ற அமைப்பில் இந்நூல் விளக்கி உரைக்கின்றது.

புரட்டாதி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் அருணந்தி சிவாசாரியார் இறைவன் திருவடியை அடைந்தார்.


நன்றி 

Post a Comment

0 Comments