சிறுகதை - இலட்சியம் - CHIRUKATHAI - ILATCHIYAM


இலட்சியம்


சிறுகதை - இலட்சியம் - CHIRUKATHAI - ILATCHIYAM

அன்று வகுப்பறையில் ஒரே மயான அமைதி நிலவியது. ஆசிரியர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். அவருடைய பாதணிகளின் சத்தம் "வராக் வராக்"என்று கேட்டுக் கொண்டிருந்தது. பாடத்தில் வினவப்பட்ட வினாக்களை நன்கு கூர்ந்து வாசித்து விடை எழுதும் எண்ணத்துடன், வினாத்தாளை கையில் எடுத்த பரதனின் கண்கள் ஒளியிழந்து காணப்பட்டன. ஒருவகையான தூக்கம் அவனை வெறிகாரனை போல கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தது. திடீரென்று பரதன் தலையை பொத்திக்கொண்டு எழுந்து வாய்பேச முடியாதவனாக வெளியே ஓடினான். பின்னால் ஆசிரியர் "தம்பி நில்லு" என்று அதிகாரத் தொனியில் கூப்பிட்டார். அதை காதில் வாங்காதவனாய் பரதன் வெளியில் சென்று வாயைத் திறந்து வாய்க்குள் இருந்து "மண்ணெண்ணெய் குடித்தாற் போல: "வகார், வகார்" என்று வாந்தி எடுத்தான். அவனுக்கு பேச நா எழவில்லை. மூக்கிலும் வாயிலும் நீர்தான் அடித்தது. கண்களைக் கையால் பொத்திக்கொண்டு அருகில் இருக்கும் தண்ணீர் பைப்பை திறந்து தண்ணீரை இரு கையாலும் கோலி அள்ளிக்கொண்டு முகத்தை கழுவினான். அதற்குள் ஆசிரியர் மற்றொரு மாணவனை துணைக்கு அனுப்பியிருந்தார். அவன் "என்னடா உனக்கு நடந்தது?" என்று வியப்புடன் விசாரிக்க எந்த பதிலும் கூறாதவனாய், வகுப்பறைக்குள் நுழைந்து மீண்டும் வினாக்களுக்கு விடை எழுத முயன்றான். ஒரு குறிப்பிட்ட நேரம் ஓய்வெடுத்த பரதன் ஓரளவு வினாவுக்கு விடை எழுத முற்பட்டான். ஆனால் பரதன் பரீட்சையின் வினாக்களுக்கு மிகச் சரியாகவும், வேகமாகவும் மணி மணியாக முத்துப்போன்ற எழுத்துக்களால் விடையெழுதக்கூடியவன். அவனது கைகள் "வயது போன கிழவனின் கரங்கள் போல" நடுங்கின. தலைசுற்றி மயக்க மயக்கமாய் வந்தது. திடீரென்று பரதனின் தலை மேசை மீது சாய்ந்தது. ஆசிரியர் ஓடி வந்து "தம்பி" என்று முதுகில் தட்டினார். "சார்" என்று தூக்கக் கலக்கத்துடன் பதில் அளித்தான். அதற்குள் ஆசிரியர் "தம்பி உங்களுக்கு என்ன செய்கிறது? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு ஏதும் வருத்தமா? என்று வினவினார். பரதன் "எனக்கு எந்த வருத்தமும் இல்லை சார்" ஆனால் என்று இழுத்தான். "என்ன தம்பி சொல்லுங்க" என ஆசிரியர் அன்பாக கேட்டார். "எனக்கு எனக்கு நான் இரவு 12 மணி வரை நித்திரை முழிச்சிப் படிச்சனான் அதனால சத்தி, தலையிடி, தூக்கமா வருது சார்" என பதிலளித்தான். ஆசிரியர் "நேரத்திற்கு தூங்க வேண்டும். படிக்கத்தான் வேண்டும் ஆனால் நித்திரை முழித்து படிக்கிறது பரீட்சை எழுதும் போது பெரும் தடையாக அமையும் என்பதுதான் உண்மை. சரி மேசையில் படுத்து கொஞ்சம் ஓய்வெடுத்த பின்பு பரிட்சையை எழுதுங்க" என்று கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். பரதன் எட்டாம் தரத்தில் கல்வி கற்பவன். அவன் மூன்றாம் தவணைப் பரீட்சை எழுதுகின்ற போது இத்தகைய இடரை அவன் எதிர்கொள்வது அவனுடைய இலட்சியத்திற்காக. அது என்ன இலட்சியம்? பரதனின் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களிடத்தில் அதிக போட்டி காணப்பட்டது. ஏனெனில் அநேக மாணவர்கள் கெட்டிக்காரப் பிள்ளைகள். பரதன் தனது சிறுவயதில் இருந்தே படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தாலும் விளையாட்டு அவனை கல்வியில் இருந்து தூரம் பிரித்து வைத்திருந்தது. பரதனின் சித்தி மட்டுமே பரதனின் பரம்பரையிலே முதன்முதல் படித்தவராக காணப்பட்டார். பரதனுக்கு வாய்க்குள் உச்சரிக்க முடியாத தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்த அவர்,தனது மாலை நேரத்தை தனது ஊரிலுள்ள மாணவர்களுக்காகச் செலவழித்தார். பரதனின் சித்தி ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் வீட்டிற்கு வரவழைத்து தமிழ், கணிதம் போன்ற ஆரம்ப கல்விப் பாடங்களை கற்பிப்பார். இவ்வேளையில் பரதனையும் தன்னிடம் கற்க வரும்படி அழைப்பார். ஆனால் பரதன் ஒருநாள் மட்டுமே படிக்கச் சென்றான். மறுநாளில் இருந்து அவன் படிக்கச் செல்வதில்லை. சிறுவர்களுடன் சேர்ந்து பல விளையாட்டுகளில் தனது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தான். அடேய், ஏன்டா, பாடத்திற்கு வாடா, கொப்பிய எடுத்துவா, என்னிடம் மற்ற பிள்ளைகள் வந்து படிக்குதுகள், நீ எனது பெறா மகனாய் இருந்தும் வாராய் இல்லை. "கல்வி வாழ்வின் ஒளி" "உனக்கு தெரியுமா? உனக்கு ஏசியோ, அடித்தோ நான் கல்வி புகட்டலாம். அது சரியல்ல. நீ ஒரு நாள் கல்வியின் அருமையை அறிவாய்"என்று கூறிக்கொண்டு அவர் பாடத்தை மற்ற மாணவர்களுக்கு நடத்தினார். அதை காதில் வாங்காதவனாக "சிட்டுக்குருவி போல பறந்து" வெட்டி விளையாட்டுக்காக சென்றுவிட்டான். சித்தியின் புத்திமதியைக் கேட்கவில்லை. சுதந்திர பறவை போல விளையாட்டில் ஊறி சிறுவர்களுடன் வயல், குளம், கோயில் என பல இடங்களில் விளையாடி காலத்தை கழித்தான். கல்வியை கணக்கில் எடுக்காதவனுக்கு கனதியான செய்தி ஒன்று அதிர்ச்சி அலையை வீசியது. தன்னுடைய சித்தி வேலை விட்டு வரும்போது விபத்தில் இறந்த செய்தி பரதனை விம்மி விம்மி அழ வைத்தது. அவனுக்கு சித்தி இறந்த செய்தி வானம் இடிந்து விழுவது போன்று இருந்தது. கண்களில் பெருவெள்ளம் ஓட பெருமூச்சு விட்டுக் கொண்டு தனது சித்தி சொன்னதை எண்ணிப் பார்த்தான். "கல்வி வாழ்வின் ஒளி, நீ ஒரு நாள் கல்வியின் அருமையை உணர்வாய்" ஆகிய வரிகள் அவனின் காதில் எதிரொலித்தன. சித்தி இறந்த பின்பு வீட்டுக்கு கல்வி கற்க சிறுவர்கள் வருவதில்லை. சித்தியுடன் கலகலப்பும், கல்வியும் ஒன்றாக சென்று விட்டதாக உணர்ந்தான். அன்றிலிருந்து படிக்கத் தொடங்கினான். தன்னைவிட படிக்கும் மாணவர்களை முந்தி தான் முதலிடம் பிடிக்க பகல் இரவாய் படிக்க தொடங்கினான். தரம் எட்டு வகுப்பின் முதல் தவணை பரீட்சையில் மூன்றாம் இடம் பெற்ற அவன், இரண்டாம் தவணையில் இரண்டாம் இடம் பெற்றான். மூன்றாம் தவணையில் முதலிடம் பிடிக்கவே இரவு முழுவதும் கண்விழித்து படித்ததுவே அடுத்த நாள் பரிட்சையில் நோயாக மாறியிருந்தது. அவன் எப்படியோ முழு பரீட்சையையும் எழுதி முடித்தான். அன்று பாடசாலை இறுதி நாள் காலையில் இருந்து அவன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது.நேரம் செல்லச் செல்ல அதன் வேகம் அதிகரித்தது. காலை 11 மணி இருக்கும் தேர்ச்சி அறிக்கை பெறும் இடத்திற்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். தேர்ச்சி அறிக்கையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம் தரம் ஆறிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் கரகோஷங்களை எழுப்ப ராஜநடை நடந்து மாணவர்கள் தமது தேர்ச்சி அறிக்கைகளை அதிபரிடம் பெற்றுக் கொண்டிருந்தனர். தரம் எட்டாம் மாணவர்களுக்கான நேரம் வந்தது. பரதன் தன்னுடைய நிலையை அறிய ஆவலுடன் காத்திருந்தான். முதலில் மூன்றாம் இடம் அறிவிக்கப்பட்டது. அதில் பரதன் இல்லை. பின்னர் இரண்டாம் இடம் அறிவிக்கப்பட்டது அதிலும் பரதன் பெயர் கூறப்படவில்லை. முதலாம் இடம் வகுப்பாசிரியரால் "முதலாம் இடம் பரதன்" என்று அறிவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் ஆரவாரங்கள் மத்தியில் கரகோஷங்களும் கலக்கும் நேரத்தில் தான் கண்ட கனவு பலிக்க, சித்தியை எண்ணி கண்கலங்கி அதிபரிடம் தேர்ச்சி அறிக்கையை அதிபரின் காலில் விழுந்து பெற்றுக் கொண்டான். அதிபரின் கைகள் தேர்ச்சி அறிக்கையின் பாடப்புள்ளிகளை கைகளால் தடாவி எதையோ பார்த்து சலனப்பட்டதை பரதன் அவதானித்தான். அவன் கணிதப் புள்ளியை அதிபர் பார்த்து சலனப்பட்டதாக உணர்ந்தான். அதை 100 ஆக மாற்றுவதே தன் லட்சியம் என மனதில் ஆழமாக பதித்துக் கொண்டான். தனது சித்தியின் கல்வி தனக்குள் உதித்ததாக உணர்ந்து கொண்டான்.


ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் BA (Hons)


நன்றி


Post a Comment

0 Comments