உயர்தர பரீட்சை
மாதிரி வினாக்கள்
தமிழ் - காலங்கள்
01. சங்ககால இலக்கியங்களில் பயின்றுள்ள அகத்திணை மரபு பற்றியும், அதில் இடம்பெறும் முதல், கரு, உரி என்பன பற்றியும் விளக்குக.
தமிழின் முதல் இலக்கண நூல் என் கருதப்படும் தொல்காப்பியத்தில், அதன் ஆசிரியர் தொல்காப்பியர், அகத்திணை இயலை ஏழு திணைகளாக பகுத்துள்ளார். அவை கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை. பெருந்திணை என்பனவாகும். அவற்றுள் ஒருதலைக்காதல் எனும் கைக்கிளை, பொருந்தா காமம் எனும் பெருந்திணை தவிர்த்த பிற ஐந்து திணைகளும், காளை ஒருவனுக்கும் கன்னி ஒருத்திக்கும் இடையே முகிழ்த்து வளரும் காதல் அன்பை பற்றி பாடும் திணைகள் ஆகும். இந்த அன்பின் எழுச்சியால் தலைவன், தலைவியரின் உள்ளத்தே தோன்றுகின்ற இன்பமும் துன்பமும், களிப்பும் கலக்கமும் இணைந்த வாழ்வியலை. இந்த ஐந்து திணைகளில் பிரித்து இலக்கியங்கள் பாடுகின்றன. இப்பாடல்கள். பெரும்பாலும் அவர் உள்ளத்திலே நிகழும் நினைவுப் போராட்டங்களாக தம் நெஞ்சுக்கு சொல்லுவதாக அமைந்தாலும், நெருங்கிய, தோழி. செவிலி, பாணன், பாங்காயினோர் போன்றோரிடம் தம் உள்ளம் திறந்து உரைப்பதாகவும் இவை விளங்குகின்றன.
இந்த ஐவகை திணைகளில், ஐவகை நிலங்களின் தன்மையை ஒட்டியனவாக, அந்த அந்த சூழல்களோடு பின்னி பிணைந்து நிகழ்வனவாக. அவற்றின் பகுதிகளாக மேலும் பலப்பல துறைகளையும் வகுத்துக்கொண்டு செய்யுள் செய்வது பண்டை தமிழ் புலவர்களின் மரபாகும். இவ்வொழுக்கங்கள் "முதல்", "கரு", "உரி" என் மூன்று தலைப்புகளில் கீழ் சொல்லப்படும் பொருட்களின் சார்பாக நிகழும் என்றும் வகைப்படுத்தி உள்ளனர்.
"முதற்பொருள்" என்பது "நிலமும் பொழுதும்" என்ற இவற்றினை ஒட்டி அமையும் ஒழுக்கங்கள் ஆகும். "நிலம்" என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என ஐந்தும், "பொழுது" என்பது அந்த ஐவகை நிலத்தை சார்ந்து நிற்போருக்கு காதல் உணர்வினை கிளர்ந்து எழச் செய்யும் ”பெரும்பொழுது" மற்றும் "சிறுபொழுது” ஆகும்.
இவை அந்த அந்த நிலங்களுக்கு சிறப்பாக பொருந்துவன என்று காண பெற்றாலும், சிலரிடையே மயங்கி நின்றும் உணர்வு எழ செய்தலும் நிகழலாம். அவை "திணை மயக்கம்” என்றே கொள்ளல் வேண்டும்.
கருப்பொருள் என்பன அந்த அந்த திணைக்கு உரியனவாகவும், அவற்றின்கண் உள்ளனவாகவும், விளங்கும் தெய்வம், மக்கள் (உயர்ந்தோர், தாழ்ந்தோர்),புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலான பதினான்கும் ஆகும்.
உரிப்பொருள் என்பன உள்ளத்தே எழுகின்ற மன் உணர்வுகளுக்கு காரணமாக விளங்கும் உந்துதல்களாகும். அவை :
2. முல்லை - இருத்தல்
3. மருதம் - ஊடல்
4. நெய்தல் - இரங்கல்
5. பாலை - பிரிதல்/உடன்போக்கு
இவைகள் செய்யுள் செய்வார்க்கு பெரிதும் சிறப்புடைய அடிப்படை பொருட்களாகும். ஆயின், இவை பிற திணைகளின் உள்ளும் வருவதற்கு உரியன எனம் அறிதலும் வேண்டும்.
குறிஞ்சித்திணை
குறிஞ்சியாவது. "மலையும் மலைசார்ந்த இடங்களும்", இயற்கை அழகும். வளங்களும் நிறைந்தனவாக. இளம் பருவத்தாரிடையே 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும் செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும். அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர் தம் உணர்வை எடுத்து கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள். எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி. இந்த துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும் குறிஞ்சித்திணைக்கு கூதிர்காலம் மற்றும் முன்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும்.
குறிஞ்சியின் கருப்பொருட்கள் :
புள் - கிளி, மயில்
விலங்கு - புலி, கரடி, யானை
ஊர் - சிறுகுடி நீர் அருவி நீர், சுனை நீர்
பூ - வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை
மரம் - ஆரம் (சந்தனம்), தேக்கு, அகிலம் அசோகம், நாகம், மூங்கில்
உணவு - மலைநெல், மூங்கில் அரிசி, தினை
பறை - தொண்டகப்பறை
யாழ் - குறிஞ்சி யாழ்
பண் - குறிஞ்சிப்பண்
மக்கள் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வேம்பன், கானவர்
தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல். தினைப்புனம் காத்தல், தேன் அழித்தல். நெல் குற்றுதல். கிழங்கு எடுத்தல். அருவி மற்றும் சுனை நீர் ஆடல்
குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு : "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"
முல்லைத்திணை
முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல். ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல். மகளிர் பால் பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக. இருத்தல். இருத்தல் நிமித்தம்“ முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர். முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்.
முல்லையின் கருப்பொருட்கள் :
புள் - காட்டுக்கோழி
விலங்கு - மான், முயல் ஊர் பாடி, சேரி, பள்ளி
நீர்- குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
பூ - குல்லை. முல்லை, பிடவம், தோன்றிப்
மரம் - கொன்றை, காயா, குருந்தம்
உணவு - வரகு, சாமை, முதிரை பறை ஏறுகோட்பறை
யாழ் - முல்லை யாழ்
பண் - முல்லைப்பண்
மக்கள் - குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கீழத்தி, இடையர். இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர். பொதுவர், பொதுவியர், கோவலர்
தொழில் - சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.
முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு : "வினைமுடிந்து மீளும் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது"
மருதத்திணை
மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே பெரும் செல்வர் வாழ்வது இயல்பு இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும். இதனால் தலைவியர்க்கு “ஊடலும் ஊடல் நிமித்தமும்" ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள். மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும்.
மருதத்தின் கருப்பொருட்கள் :
புள் - வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், கம்புள், குருகு, தாரா
விலங்கு - எருமை, நீர்நாய்
ஊர் - பேரூர், மூதூர்
நீர் - ஆற்று நீர், கிணற்று நீர்
பூ - தாமரை, கழுனீர்
மரம் - காஞ்சி, வஞ்சி, மருதம்
உணவு - செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
பறை - நெல்லரிகிணை, மணமுழவு
யாழ் - மருத யாழ்
பண் - மருதப்பண்
மக்கள் - மள்ளர், ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
தொழில் - விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்
"பரத்தையின் பிரிந்து வந்த தலைமகனுக்கு கிழத்தி சொல்லியது"
பாலைத்திணை
பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லையும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் - சிலப்பதிகாரம். இதனால். காதலர் இடையே பிரிவும், பிரிதல் நிமித்தமும் ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர். ஆறலை கள்வரும். கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரிய தன்மைகள், பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும், நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும்.
பாலையின் கருப்பொருட்கள் :
மக்கள் - விடலை. காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
புள் - புறா, பருந்து, எருவை, கழுகு
விலங்கு - செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி ஊர் குறும்பு
நீர் - நீரில்லாகுழி, நீரில்லாகிணறு குரா,மரா,பாதிரி
மரம் - உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
உணவு - வழிப்பறி பொருள் பதியில் கவர்ந்த பொருள்
பறை - துடி
யாழ் - பாலை யாழ்
பண் - பாலைப்பண்
தொழில் - வழிப்பறி
பாலைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு : "பொருள்வயின் பிரிவு கடைக்கூடிய தலைவன் நெஞ்சுக்கு சொல்லியது"
நெய்தல்திணை
கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடி கடலிலே திமில் ஏறி செலவது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின. நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும்.
நெய்தலின் கருப்பொருட்கள்:
புள் - கடற்காகம், அன்னம், அன்றில்
விலங்கு - சுறா, உமண் பகடு
ஊர் - பாக்கம், பட்டினம்
நீர் - உவர்நீர் கேணி, மணற்கேணி
பூ - நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்
மரம் - கண்டல், புன்னை, ஞாழல்
உணவு - மீனும் உப்பும் விற்று பெற்றவை
பறை - மீன்கோட்பறை, நாவாய் பம்பை
யாழ் - விளரி யாழ்
பண் - செவ்வ்வழிப்பண்
மக்கள் - சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
தொழில் - மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்
நெய்தல் திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆக தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய் தலைமகனுக்கு சொல்லியது"
இக்கருப்பொருட்கள் அவ்வத் திணைக்குரிய சிறந்த பொருட்கள் என்றே கருத வேண்டும். இவையன்றி பிறவும் உள்ளன என்பதும் அவையும் இலக்கியங்களில் பயின்று வருதலும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
02. உலா பிரபந்தம் பற்றி விளக்கி, தமிழிலக்கிய வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்துக.
தமிழ் இலக்கியத்தில் உலா என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏறி, இசைக் கருவிகளை இசைப்போர் முன்னே வர. மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அல்லது அரசனோ இவ்வாறு உலா வருதலையும், அவ்வாறு உலா வருபவரைக் கண்டு மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் உலா பற்றிய கருத்தாக்கங்கள் காணப்பட்டாலும், உலா என்பது ஒரு தனி இலக்கிய வகையாக உருவானது பிற்காலத்திலேயே ஆகும். பிற்காலத்துப் பாட்டியல் நூல்கள் உலா இலக்கியத்துக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை. அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் நிலையைக் கலிவெண்பாப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இந் நூல்கள் கூறும் இலக்கணம் ஆகும்.
பல்லவர்காலத்தில் எழுந்த திருக்கைலாய ஞானஉலா, சோழர்காலத்தில் எழுந்த மூவருலா என்பன சிறப்பிற்குரிய உலா பிரபந்தத்திற்கு முக்கிய சான்றுகளாகும். திருக்கைலாய ஞானஉலா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று உலா வகையினது. நூலின் காலம் 650-710. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய இந்த உலா நூல் ஆதியுலா எனப் போற்றப்படுகிறது. காரணம் உலா இலக்கியத்தில் இது முதல்நூல் ஆகும். ”ஆதி” எனப்படும் கைலாய நாதன் உலாவருவதைப் பாடுவதாலும் இது ஆதியுலா எனப்பட்டது.
இதில் 197 கண்ணிகள் உள்ளன. இறுதியில் ஒரு வெண்பாவும் உள்ளது. இந்த வெண்பா சங்ககாலத் தொகுப்புநூல் பத்துப்பாட்டு ஒவ்வொன்றின் இறுதியிலும் சேர்க்கப்பட்டுள்ள வெண்பா போன்றது. சிவன் உலா வரும்போது ஏழு பருவத்துப் பெண்களும் அவன்மீது காதல் கொள்கின்றனர்.
இந்த நூலிலிருந்து சில கண்ணிளை நோக்கும் போது - (கண்ணி 98, 99)
நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக்
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - பெதும்பை பருவத்துப் பெண்
பொருள் : நலம் தோற்று, நாண் தோற்று, அறிவு தோற்று, நிறை தோற்று, கைவண்டு (வளையல்) ஓட, கண்வண்டு (விழி) ஓட, கலை (உணிந்துள்ள ஆடை) ஓட, நின்று உள்ளம் ஒழிந்து ஒப்புக்கு நின்றுகொண்டிருந்தாள். என அறியக்கிடக்கின்றது.
மூவருலா தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. உலா சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. விக்கிரம சோழன், அவனது மகன் இரண்டாம் குலோத்துங்க என்பது சோழன். பேரன் இரண்டாம் இராஜராஜ சோழன் ஆகிய மூவரையும் புகழ்ந்து பாடியது. எனவே மூவருலா எனப்படுகிறது. இம்மூவரையும் பற்றி முறையே 342, 387, 391 பாக்கள் இந்நூலில் உள்ளன. இவை அனைத்தும் கண்ணி வகையைச் சேர்ந்தவை கண்ணி கலிவெண்பாவில் ஒரே எதுகை வருபவை. சோழர் குலச்சிறப்பு, அரசர் பெருமை, பள்ளி எழுதல், அழகு செய்தல், யானையின் மீது அமர்தல், உடன் வருவோர், அவர்கள் கூற்று. ஏழுவகைப் பருவ மகளிரின் அழகு, உணர்ச்சிகள், விளையாட்டுகள், காமுறுதல், பேசுதல் போன்ற செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூலின் பகுதிகளான மூன்று உலாக்களும் தனி நூல்களாகவும் கருதப்படுகின்றன.
03. பிள்ளைத்தமிழ் பற்றி விளக்கி, தமிழிலக்கிய வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்துக.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள். புலவர் பெருமக்கள். ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும். அப்பாட்டுடைத் தலைவர்கள் செயற்கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைக்கவியில் பாடவில்லையாயின், நூல் என்னும் அமைப்புக்குள் அமையாமல், வெறும் பருவங்கள் மட்டும் அமைந்திருக்கும். ஆகவே, இதனை உளம் கொள்ளுதல் வேண்டும்.
இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை. பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை என்பனவும் முன்பே குறிக்கப்பட்டன.
பல்லவர்காலத்தில் எழுந்த பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ், சோழர்காலத்தில் எழுந்த குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், நாயக்கர் காலத்தில் எழுந்த மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்பன பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கிய சான்றுகளாகும்.
பெரியாழ்வார், ஆழ்வார்கள்களில் ஒருவர். கி.பி. 6 நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். வைணவர். இவரது பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் முதல் 5 திருமொழிகளாக அமைந்துள்ளன. அவற்றில் 474 பாடல்கள் உள்ளன. இவற்றில் இவர் கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்துப் பாடிய பாடல்களும் உள்ளன. பாட்டியல் இலக்கண நூல்கள் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கண நெறியை வகுப்பதற்கு முன்னர் தோன்றிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் இவை. தொல்காப்பியம் கடவுளைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் பகுதியைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடுகிறது.
குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் ஒட்டக்கூத்தர் 12ஆம் நூற்றாண்டில் பாடிய நூல்களில் ஒன்று. இது முழுமையாகக் கிடைக்கவில்லை. சிதைந்து கிடந்த பாடல்களைச் செப்பம் செய்து பண்டிதர் உலகநாத பிள்ளை 1933இல் வெளியிட்டார். அந்தப் பதிப்பில் 103 பாடல்கள் உள்ளன. இவற்றில் இடையிடையே சில பாடல்களில் சில அடிகள் இல்லை. இந்த நூல் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறும் பிள்ளைத்தமிழ் இலக்கண நெறியில் 10 பருவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
04. பரணி என்பது பற்றி விளக்கி, தமிழிலக்கிய வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்துக.
பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.இதை, ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் பன்னிரு பாட்டியல் விளக்குகிறது. பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு, போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு.
பரணி என்னும் சொல்லானது. காடுகிழவோன். பூதம், அடுப்பு, தாழி, பெருஞ்சோறு, தருமன் நாள், போதம் என்னும் பல பொருள்களைத் தரும். இதனைக் "காடு கிழவோன் பூதமடுப்பே. தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே" என திவாகரம் எனும் நூலில் அறியலாம்.
சோழர் காலத்தில் தான் முதல் பரணி இலக்கியம் படைக்கப்பட்டது. இக்காலத்தில் கலிங்கத்துப்பரணி, தக்கயாகப் பரணி ஆகிய நூல்கள் படைக்கப்பட்டன. கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த முதல் நூல் ஆகும். இந்நூல் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயினாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது சயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார். இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என அறியலாம்.
தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந் நூல் தமிழ் நாட்டில் சோழர் ஆட்சி நிலவிய 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த நூலின் வழியாக அக்காலச் சைவம் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது. சிவபெருமானுக்காகப் பாடப்பட்ட இந்நூலில், பிள்ளையார் பெயரில் காப்புச் செய்யுள் பாடும் மரபுக்கு மாறாக வைரவர் பெயரில் காப்புச் செய்யுள் உள்ளது, ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப்பரணியில் 814 தாழிசைகள் உள்ளன. அவற்றுள் 516 தாழிசைகளுக்கு மட்டும் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை உள்ளது. தக்கயாகப்பரணி உரை இந்த நூலின் சிறப்பைக் காட்டுகிறது.
05. பதிகம் என்பது பற்றி விளக்கி, தமிழிலக்கிய வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்துக.
நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது. இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார் பாடல்களின் தொகுப்பு பத்து என்றே குறிப்பிடுகிறது. தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். கம் என் பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின. பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம்.
சங்கமருவிய காலத்தில் எழுந்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் பதிக இலக்கியத்தில் முதன்மையானதாகும். திருவாலங்காட்டில் சிவபெருமான் நடனமாடுவதைக் கண்டு காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகும். பதிக முறையில் பாடப்பெற்ற முதல் பாடல்கள் என்பதால் இதனை ஆதிப்பதிகம் என்றும் அழைப்பர். முதன் முறையாக இறைவனை இசையால் பாடியதால் காரைக்கால் அம்மையாருக்கு தமிழிசையின் தாய் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. அம்மையாரைப் பின்பற்றியே இறைவனை இசையால் பாடி தேவாரம் பாடியுள்ளார்கள் தேவார மூவர். இந்நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான பதிகம் முறையில் பாடப்பெற்றது. திருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது. இதனைப் பாடியவர் காரைக்கால் அம்மையார். இவர் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பாதி. இந்த நூலில் 10 பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது.
பல்லவர் காலத்தில் மணிமணியான பக்திக்கருத்துக்களை திருவாசகமாக ஆக்கித்தந்த மாணிக்கவாசகரால் தில்லையில் அருளப்பெற்ற அனுபோக இலக்கணமான ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலத்தலை தூய பக்தியுடன் பாடிய "கோயில் திருப்பதிகம்" பதிகத்திற்கு சிறந்த சான்றாக விளங்குகின்றது. பத்துப்பாடல்களைக் கொண்டு பக்தி மணங் கமழும் பதிகமாக இது திகழ்கின்றது.
வைணவ ஆழ்வார்களும் பக்திப் பாசுரங்களை படைக்கும் போது பதிகங்களையும் பாடியருளினர். திருப்பாணாழ்வார் திருவரங்கப் பெருமான் மீது பாடிய "அமலர் ஆதி பிரான்" மிகச்சிறந்த பதிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பதிகத்தில் பத்துப்பாடல்கள் இடம்பெறுவதுடன். ஒவ்வொரு பாடலிலும் திருவரங்கப் பெருமானின் அங்கங்கள் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளதை தரிசிக்க முடிகின்றது. திருப்பாணாழ்வார் இறைவனது திருவடி முதல் தலை வரையுள்ள அவயவங்கள் எல்லாவற்றையும். ஒன்றன்பின் ஒன்றாக கண்குளிரக்கண்டு மனம் உருகி, அழகிய மணவாளரிடம் தான் நுகர்ந்த ய அழகையும், இன்பத்தையும் உலகத்தார் அனுபவிக்கும் பொருட்டு இறைவனின் திருமேனி அழகைச் சிறந்த பத்துப் பாடல்கள் பதிகமாக ஆக்கிந்தந்துள்ளார்.
06. அந்தாதி என்பது பற்றி விளக்கி, தமிழிலக்கிய வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்துக.
அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல்சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.
சங்கமருவிய காலத்தில் எழுந்த அற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப்பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறது
பல்லவர் காலத்தில் படைக்கப்பட்ட அந்தாதிகளுள் சேரமான் பெருமாள் பாடிய திருப்பொன் வண்ணந்தந்தாதி, நம்மாழ்வார் பாடிய பெரிய திருவந்தாதி, திருமழிசை ஆழ்வார் பாடிய நான்முகன் திருவந்தாதி என்பன முக்க திருப்பொன் வண்ணந்தந்தாதி;யத்துவம் பெறுகின்றன. இவற்றில் சேரமான் பெருமாள் சிவபிரான் மீது அதீத அன்பு கொண்டு திருப்பொன் வண்ணந்தந்தாதி எனும் சிற்றிலக்கியத்தைப் படைத்தருளினார். அரசு முறை ஏற்கும் சேரமானுடைய மனப்பண்பு. சிவநெறிக்கண் வேருன்றி ஆழ்ந்திருக்கும் மெய்யுணர்வை வெளிக்காட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.
பல்லவர் காலத்தில் மணிமணியான பக்திக்கருத்துக்களை திருவாசகமாக ஆக்கித்தந்த மாணிக்கவாசகரால் தில்லையில் அருளப்பெற்ற அனுபோக இலக்கணமான ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலத்தலை தூய பக்தியுடன் பாடிய "கோயில் திருப்பதிகம் அந்தாதித் தொடை மரபில் ஆக்கப்பட்டுள்ள இலக்கியமாக விளங்குகின்றது. அந்தாதி என்பது ஒரு செய்யுளின் கடைநிலைச் சொல் அடுத்து வரும் செய்யுளின் தொடக்கமாக அமைந்து வருதலாகும். இச்சிறப்பை கோயில் திருப்பதிகத்தில் உணர முடிகின்றது. எடுத்துக்காட்டாக "மாறி நின்று என்னை மயக்கிடும்..." என்னும் பாடலில் இறுதிவரியான “இன்பமே என்னுடைய அன்பே" என்பதில் அன்பே என்னும் பதம் அடுத்து வரும் செய்யுளான "அன்பினால் அடியேன் ஆவியோடு....." எனும் செய்யுளின் தொடக்கமாக அமைந்துள்ளதை நோக்க முடிகின்றது. இதன்மூலம் பத்துப்பாடல்களைக் கொண்டு கோயில் திருப்பதிகம் பதிகமாக படைக்கப்பட்டாலும், அதில் அந்தாதித் தொடை மரபு பயின்றுள்ளதை கண்கூடாகக் காண முடிகின்றது.
வைணவத்தின் பெருமைதனை வெளிக்கொணரும் பொருட்டு திருமாலை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பெரிய திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி முதலிய அந்தாதிகளும் பல்லவர் காலத்தில் படைக்கப்பட்டமை அந்தாதி இலக்கியம் மீதான புலவர்களின் ஈடுபாட்டை பறைசாற்றுகின்றது எனலாம்.
07. சோழர்கால பேரிலக்கியங்கள் பற்றி தெளிவுபடுத்துக.
காவிய உற்பத்திக்காலம் எனச் சிறப்பிக்கப்படும் சோழர்காலத்தில் கம்பராமாயாணம். பெரிய புராணம், கந்த புராணம் முதலிய பேரிலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன. காவிய நோக்கத்தில் பாடப்பட்ட இவ்விலக்கியங்கள் காவிய இலக்கணங்களில் குறைவு காரணமாக பேரிலக்கியம் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. சோழ மன்னர்களின் அரசவை புலவர்கள், அமைச்சர் முதலியோர் பேரிலக்கியங்களைப் படைத்தனர்.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்கச்சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர். அங்கிருக்கும் இறைவனான நடராஜன் “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது.
பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். ஸ்கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 91 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது
இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நூல் கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர். தொல்காப்பீய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.
மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால் இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் நூற்றுப்பத்தொன்பது (119) படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய ”ஒட்டக்கூத்தர்” இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்குக் கதி" என்பர்.
கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்தீரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. "வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96" என்றொரு கணக்கீடும் உண்டு.
கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி. பொருள். நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.
இவ்வாறாக பேரிலக்கியங்கள் பற்றி விளக்க முடிகின்றது.
ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் BA (Hons)
நன்றி
0 Comments