மார்ச் மாதத்தில் உள்ள சிறப்பு தினங்கள் - SPECIAL DAYS IN MARCH


மார்ச் மாதத்தில் உள்ள 

சிறப்பு தினங்கள்


மார்ச் மாதத்தில் உள்ள சிறப்பு தினங்கள் - SPECIAL DAYS IN MARCH

மார்ச் - 3

அலெக்சாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம்

கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் பிறந்தார். இவர் 1876ஆம் ஆண்டில் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். இவர் தனது கண்டுபிடிப்பிற்காக 600க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்திற்கு சென்று, வழக்குகளைச் சந்தித்து, வெற்றி பெற்ற பிறகே தொலைபேசிக்கான உரிமையைப் பெற்றார். இவரே பெல் தொலைபேசி நிறுவனத்தை நிறுவினார்.

மார்ச் - 8

சர்வதேச பெண்கள் தினம்

ஐ.நா. சபை பெண்களுக்கு சம உரிமை வழங்குவது என்பது மனித அடிப்படை உரிமை எனக் கூறி 1945ஆம் ஆண்டில் கையொப்பம் இட்டது. அதன்பின்னர் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என தனது உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டது. 1946ஆம் ஆண்டுமுதல் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 2 ஆவது திங்கள்

காமன்வெல்த் நாடுகள் தினம்

மேபிள் இலை பொறிக்கப்பட்ட சின்னம் காமன்வெல்த்தின் கொடியாக உள்ளது. தலைமைச் செயலகம் லண்டன் நகரில் செயல்படுகிறது. காமல்வெல்த் தலைவராக இருந்த பியாரி ட்ரூடியா (Pierre Trudeau) என்பவர் காமன்வெல்த் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது திங்கள் அன்று கொண்டாடுமாறு 1976ஆம் ஆண்டில் அறிவித்தார்.

மார்ச் - 2ஆவது வியாழக்கிழமை

உலக சிறுநீரக தினம்

உடலுக்கு மூளை, இதயம் எப்படி மிக முக்கியமோ அதுபோல் சிறுநீரகமும் மிகமிக முக்கியமானது. சிறுநீரகம் செயல்படவில்லை என்றால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். ஆகவே சிறுநீரகத்தைப் பாதுகாக்கவும், நோய்வராமல் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. 2006ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

மார்ச் - 14

பை தினம்

பை (TT) என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் நாளை பை நாளாகக் கொள்ளப்படுகிறது. அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 என்பது மார்ச் 14ஐ குறிக்கும். இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். பை தினம் முதன்முதலாக 1988ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் மையத்தில் கொண்டாடப்பட்டது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று ஜெர்மனியில் பிறந்தார். 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்டவர். இவர் புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டதோடு, குவாண்டம், புள்ளியியல், எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.

மார்ச் - 15

உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

நுகர்வோர் என்பவர் நாம் அனைவரும்தான். பாதுகாப்பு உரிமை, கேட்கும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, இழப்பீட்டு உரிமை போன்ற பல உரிமைகள் நுகர்வோருக்கு உண்டு. தரமற்றப் பொருட்களை கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்வதால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் 1983ஆம் ஆண்டுமுதல் உலக நுகர்வோர் தினம் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது.

மார்ச் - 18

ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்

ருடால்ஃப் டீசல் 1858ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று பாரிஸ் நகரில் பிறந்தார். இவரின் கண்டுபிடிப்பு தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இவர் நீராவி இயந்திரத்திற்குப் பதிலாக டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இவரின் கண்டுபிடிப்பு உலகை வேகமாக மாற்றி அமைத்தது.

மார்ச் - 20

சர்வதேச மகிழ்ச்சி தினம்

மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போரையும், வறுமையையும் உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.

மார்ச் - 20

உலக சிட்டுக்குருவிகள் தினம்

நவீன கட்டிட அமைப்பானது சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. இதுதவிர தெருக்களில் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான தானியங்கள் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நிலம், நீர் மாசுகாரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. ஆகவே, சிட்டுக்குருவிகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

மார்ச் - 21

உலக பொம்மலாட்டம் தினம்

பொம்மலாட்டம் மிகப் பழமையான மரபுவழிக் கதைகளில் ஒன்று. உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது. உயிர் அற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களைக் கவரும் கலையாக உள்ளது. உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்க இத்தினம் 2003ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

உலகக் கவிதைகள் தினம்

எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.

உலக காடுகள் தினம்

வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. காடுகளின் அவசியத்தை உணர்த்த உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பா nhண்மை கூட்டமைப்பு நவம்பர் 1971இல் கூடியது. இந்த அமைப்பு மார்ச் 21ஐ உலக காடுகள் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.

சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்

இனக்கொள்கைக்கு எந்தவித அடிப்படை விஞ்ஞானமும் இல்லை. மனிதனை இனங்களாகப் பிரிக்கப்படுவது எந்தவிதத்திலும் சரியானதல்ல. மனிதர்களுக்கு இடையே இனபேதம் பார்ப்பது சமூக விரோதச் செயல் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது. உலகின் பல நாடுகளில் இனவெறி இருப்பதைக் கருத்தில்கொண்ட ஐ.நா. சபை 1966ஆம் ஆண்டில் மார்ச் 21ஐ சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினமாக அறிவித்தது.

உலக டவுன் சிண்ட்ரோம் தினம்

நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.

சர்வதேச நவ்ரூஸ் தினம்

நவ்ரூஸ் என்பது பழங்கால பாரம்பரிய இசைத் திருவிழா. வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் கலாச்சார பன்முகத்தன்மை, நட்பு பங்களிப்பு, அமைதி மற்றும் தலைமுறைகளுக்கு இடையே குடும்பங்களில் ஒற்றுமை, அத்துடன் நல்லிணக்கம் உலகம் முழுவதும் அமைவதை ஊக்குவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.

சர்வதேச கைது மற்றும் காணாமல் போன பணியாளர்களின் ஒற்றுமை தினம்

ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பலர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளனர். முன்னாள் பத்திரிகையாளர் அலெக் கோலெட் (Alec Collett) பாலஸ்தீன முகாம் அருகில் சேவைபுரிந்து கொண்டிருக்கும்போது 1985ஆம் ஆண்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். அவரது உடல் 2009ஆம் ஆண்டில் கிடைத்தது. இதனை நினைவு கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மார்ச் - 3 ஆவது வெள்ளி

உலக தூக்க தினம்

உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம், கவலையே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான தூக்கமே பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது. தூக்கமே நல்ல மருந்தாக செயல்படுகிறது. தூக்கம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தூக்க மருந்து உலக சங்கம் 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.

மார்ச் - 22

உலக தண்ணீர் தினம்

தண்ணீர்தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை. அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்றும் ஏதுமில்லை. தண்ணீர் வற்றாத செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

மார்ச் - 23

உலக வானிலை தினம்

உலக வானிலை தினம் மார்ச் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனை அடுத்து வரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது மனிதர்களின் கடமையாகும்.

மார்ச் - 24

சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம்

பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமியோ அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 இல் போராடினார். இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களை நினைவு கூற இத்தினத்தை ஐ.நா. சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.

உலக காசநோய் தினம்

காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது.

மார்ச் - 25

சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல் தினம்

கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவு கூறவும் மேலும் இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

மார்ச் - 27

உலகத் திரையரங்க தினம்

யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960ஆம் ஆண்டில் உலகத் திரையரங்க தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று உலகத் திரையரங்க தினம் சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.

நன்றி

Post a Comment

0 Comments