பெப்ரவரி மாதத்தில் உள்ள
சிறப்பு தினங்கள்
உலக ஈரநிலங்கள் தினம்
பிப்ரவரி மாதம் 2 அன்று 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக ஒரு மாநாடு நடைபெற்றது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே பிப்ரவரி 2 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பிப்ரவரி - 4
உலகப் புற்றுநோய் தினம்
உலகளவில் புற்றுநோய் ஒழிப்பிற்கான ஒரு மாநாடு பாரிஸ் நகரில் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 4 இல் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் புற்றுநோயை ஒழிப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி, விழிப்புணர்வு மூலமாக புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சிகிச்சைமுறை போன்றவற்றை சமூகத்திற்கு போதிப்பது என்கின்ற குறிக்கோளின் அடிப்படையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பிப்ரவரி - 6
பெண் இனப்பெருக்கத்தை அழிப்பதை ஒழிக்கும் சர்வதேச தினம்
பெண் பிறப்புறுப்பு சிதைப்புடன் சுமார் 125 மில்லியன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற 29 நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இது பெண்களுக்கு எதிரான தீவிர பாகுபாடாகும். இது சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவான சிகிச்சையாகும். இதனை ஒழித்திட, விழிப்புணர்வு ஏற்படுத்திட 2012 இல் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.
பிப்ரவரி - 8
டிமிட்ரி மெண்டெலீவ் பிறந்த தினம்
கனிம அட்டவணையின் தந்தை என மெண்டெலீவ் அழைக்கப்படுகிறார். இவர் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் ரஷ்யாவில் பிறந்தார். இவர் வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக்கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். இதனை மார்ச் 6, 1869இல் ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
பிப்ரவரி - 11
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்
தாமஸ் ஆல்வா எடிசன், 1847ஆம் ஆண்டில், பிப்ரவரி 11 அன்று அமெரிக்காவில் பிறந்தார். படிக்காதமேதை, பட்டம் பெறாதவர். ஆனால் கண்டுபிடிப்புகளின் சக்கரவர்த்தியாக விளங்கினார். மிக அதிகப்படியான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உலக சாதனை படைத்தவர். இவரின் கண்டுபிடிப்புகளுக்காக 1093 பதிவுரிமைகளைப் பெற்றார். மாணவர்களால் கொண்டாடப்படும் முக்கிய தினமாகும்.
பிப்ரவரி - 12
சார்லஸ் டார்வின் பிறந்த தினம்
பரிணாமத்தின் தந்தை எனப் போற்றப்படுவர் சார்லஸ் டார்வின் ஆவார். உயிர்கள் எப்படித் தோன்றின என்பதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். விலங்குகள் மற்றும் உயிரினங்களின் பரிணாமம் என்பது இயற்கைத் தேர்வு என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தன என்பதைக் கண்டறிந்தவர். இயற்கை விஞ்ஞானியான இவர் 1809ஆம் ஆண்டு, பிப்ரவரி 12 இல் பிறந்தார்.
பிப்ரவரி - 12
ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம்
ஆப்ரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12 இல் பிறந்தார். இவர் அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். அடிமை முறையை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1865இல் அரசியல் சட்டத்திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார்.
பிப்ரவரி - 13
உலக வானொலி தினம்
ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று உலக வானொலி தினம் அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டுமுதல் ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாகக் கடைப்பிடிக்கிறது.
பிப்ரவரி - 14
உலக காதலர் தினம்
ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது எனத் தடைவிதித்தான். வாலன்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்துவைத்தார். காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை கி.பி. 269ஆம் ஆண்டு பிப்ரவரி 14இல் வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி இரண்டாவது ஞாயிறு
உலக திருமண தினம்
உலக திருமண தினம் 1986ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட உறவுமுறையாகும். திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி - 15
கலிலியோ கலிலி பிறந்த தினம்
கலிலியோ 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று இத்தாலி நாட்டில் பிறந்தார். இவரை நவீன வானவியல் ஆய்வுகளின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை மற்றும் நவீன அறிவியலின் தந்தை எனவும் அழைக்கின்றனர். தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்திற்கு 4 நிலாக்கள், சனிக்கிரகத்திற்கு வளையம், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.
பிப்ரவரி - 19
கோப்பர்நிக்கஸ் பிறந்த தினம்
கோப்பர்நிக்கஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற பூமி மையக்கோட்பாட்டை மாற்றி சூரிய மையக்கோட்பாட்டை அறிவித்தார். பூமி உள்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற புரட்சிகரமான கொள்கையை வகுத்து, வானியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டார்.
பிப்ரவரி - 20
உலக சமூக நீதி தினம்
உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி அதிகமாகிக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி - 21
சர்வதேச தாய்மொழி தினம்
உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. தற்போது 3000 மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டுமுதல் பிப்ரவரி 21 அன்று கொண்டாடுகிறது.
பிப்ரவரி - 22
உலக சாரணர் தினம்
தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தைத் தொடங்கியவர் ஸ்மித் பேடன்பவலின் என்பவராவார். இவர் 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று பிறந்தார். இவரின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படும் இத்தினம் 1995ஆம் ஆண்டில் உலக சாரணர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இது சாரணியத்தின் லட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவு கூரும் தினமாக உள்ளது.
நன்றி
0 Comments