அரசியலை கற்றல்
கி.மு 4ம் நூற்றாண்டில் இருந்து சுமார் 2500 ஆண்டுகளாக அரசியல் என்பது ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் விஞ்ஞானமானது அரசியல் முறைகள், அவற்றின் செயற்பாடு, அவற்றின் தலமாக அமைந்துள்ள அரசியல் பொருளாதார கருத்துக்கள், அரசியல் முறைமையின் செயற்பாடின் ஊடாக மக்கள் மீது ஏற்படும் தாக்கம் என்பவற்றை விஞ்ஞான ரீதியாக கற்கும் பாடமே ஆகும்.
இது 2500 வருட வரலாற்று ரீதியாக படிமுறையாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இவ்வளர்ச்சியில் அரசியல் பாடப்பரப்பு, அணுகுமுறைகள், செயல்முறைகள் என்ற அடிப்படையில் பரவல் அடைந்து வந்துள்ளது. இதனால்தான் இன்று அரசியலை கற்கும் ஊடகமாக அரசியல் விஞ்ஞானத்தை கண்டு கொள்கின்றோம்.
அரசியலை ஒரு கல்வியாக கற்றல் என்பது இரு பொருளினை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றது.
அரசியலை ஒரு கல்வித் துறையாக கற்றல்
அரசியலை நடைமுறை அறிவு என்ற வகையில் கற்றல்
இது நாம் முறையாக பெற்றுக்கொள்ளும் அறிவு அல்ல. இது நாளாந்த வாழ்க்கையின் அனுபவங்களின் மூலம் முறைசாரா வழிமுறைகள் மூலம் கற்றுக் கொள்வதாகும். அதாவது நாம் வாழும் சமூகத்தில் குடும்பம், அயலவர்கள், நண்பர்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், சம வயது குழுக்கள் ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவாகும்.
குடும்பம்
ஒரு சிறுபிள்ளை குடும்பம் என்ற ஆரம்ப நிறுவனத்தில் இருந்து அரசியல் அறிவை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றது. பெற்றோரும், மூத்த சகோதரர்களும் கொண்டுள்ள அரசியல் அறிவுகள் சிறு பிள்ளைகளின் அரசியல் அறிவு ஒழுங்கு அமைவதில் செல்வாக்கு செலுத்துவதோடு சில வேலைகளில் அது வாழ்க்கை பூராகவும் நீடிக்கவும் காரணமாகின்றது.
ஊடகங்கள்
மக்களுக்கு அறிவினை ஊட்டுவதில் ஊடகங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இதில் பத்திரிகைகள், வானொலி, இணையதளம், சினிமா, சஞ்சிகைகள், தொலைக்காட்சி போன்றவைகள் மிக முக்கியமானதாகும். ஊடகங்கள் மக்களுக்கு அரசியல் தகவல்களை வழங்குதல், அது தொடர்பாக மக்களுக்கு துளங்கல்களை வெளிப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் மக்களிடம் அரசியல் அறிவுகளை விருத்தி அடைய செய்கிறது.
சம வயது குழுக்கள்
பல்வேறு நோக்கங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள சம வயது குழுக்களின் மூலம் மனிதர்கள் அரசியலை பயின்றனர். குழுக்களின் கொள்கையானது அதன் உறுப்பினர்கள் மூலமாக ஏற்றுக் கொள்வதுடன் அக்கொள்கையின் அடிப்படையில் அவர்கள் செயல்படுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளன. அதன் ஊடாகவும் அவர்கள் அரசியல் சார்ந்த கல்வியை கற்றுக் கொள்கின்றனர்.
உதாரணம்
இளைஞர் கழகங்கள்
அரசியல் கட்சிகள்
மக்களுக்கு அரசியல் சார்ந்த அறிவினை ஊட்டுவதில் அரசியல் கட்சியானது ஆற்றுகின்ற பணி முக்கியமானதொன்றாகும். இவ் அரசியல் கட்சிகள் அரசியல் செயற்பாட்டாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் தலைவர்களாக வளர்ச்சி அடைய செய்தல் என்பன தொடர்பாக முக்கிய பங்காற்றுகின்றன.
அரசியலை ஒரு கல்வித் துறையாக கற்றல்
ஒரு அரசியல் தோற்றப்பாட்டினை அல்லது பிரச்சினையை விஞ்ஞான முறையில் கற்பதாகும். அதாவது முறைசார் வழிமுறைகள், விஞ்ஞான அணுகுமுறைகள் போன்றவைகள் மூலமாக கற்றலையே இது குறித்து நிற்கின்றது. இதன் பொருள் யாதனின் பாடசாலை, பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்லூரிகள் மற்றும் முறையான ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கல்வி திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள், முறையாகவும் கோட்பாட்டு அணுகுமுறை ஊடாகவும் வழிப்படுத்தப்பட்டு முறையாக திரட்டப்பட்ட தகவல்கள், தரவுகள் மூலமாக கற்றலை குறிக்கும் .
நன்றி
0 Comments