இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் - DEVELOPMENT ACTIVITIES OF SRI LANKA


இலங்கையின்  

அபிவிருத்திச் செயற்பாடுகள்


இலங்கையின்  அபிவிருத்திச் செயற்பாடுகள் - DEVELOPMENT ACTIVITIES OF SRI LANKA

1948 ஆம் ஆண்டில் நாம் சுதந்திரம் அடையப் பெற்றமையால் அதுவரை பிரித்தானியப் பேரரசின் தேவைக்காகக் கையாளப்பட்ட எமது பொருளாதாரத்தை, தேச மக்களின் அபிவிருத்திக்காகச் செயற்படுத்தும் பொறுப்பு இநநாட்டு அரசியல்வாதிகளிடம் கையளிக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் இந்நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சி களான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பை வகித்து வந்துள்ளன. அவ்வரசாங்கங்கள் ஒவ்வொன்றும் தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தன. இங்கு நாட்டின் விவசாயக் கைத்தொழில் துறைகளையும் கல்வித் தரத்தையும் சமூக மேம்பாட் டையும் உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பரிசீலித்துப் பார்ப்போம்.

விவசாய அபிவிருத்தி

ஆதிகாலத்தில் இருந்தே இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்து வந்தமையால் தனக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தானே உற்பத்தி செய்து கொண்டது. எனினும் 133 ஆண்டுகளாக முழு நாட்டையும் பிரித்தானியர் ஆண்டு வந்தபோது பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கே முன்னிடம் வழங்கியதனால் தேசத்தின் சுயதேவைப் பயிர் செய்கை மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை. அக்காலத்தில் இந்நாட்டிற்குத் தேவையான உணவு வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஆங்கிலேயர் வழக்கப்படுத்திக்கொண்டிருந்தனர். அதனால் சுதந்திரம் பெறும்போது இந்நாட்டின் உணவுப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கும் தேவை இருந்து வந்தது. ஆகையால் ஒவ்வொரு அரசாங்கமும் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பல்வேறுப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்துவந்தது.

நெல் உற்பத்தியைப் பெருக்குதல்

முதலாவது உலக மகா யுத்தத்தின்போது உணவுப் பொருள்களின் இறக்குமதி பாதிப்புற்றது. 1929 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார சீரழிவினால் உணவுப் பொருள்களின் விலைகள் வேகமாக அதிகரித்துச் சென்றன. இதனால் இந்நாட்டின் நெல் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பிரித்தானிய ஆட்சியின் இறுதிக் காலத்தில் கவனஞ் செலுத்தப்பட்டது. எனினும் இதற்கான நடவடிக்கைகள் அரசுக் கழக ஆட்சிக் காலத்திலயே மேற்கொள்ளப்பட்டன. டொனமூர் அரசியல் யாப்பின்படி (1931-1947)விவசாய அமைச்சு இலங்கையர் வசமானது. விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் செயற்பட்ட டீ.எஸ்.சேனாநாயக்க அவர்களிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டமையும் நெல்லுற்பத்தி அதிகரித்ததற்கு முக்கிய காரணியாக அமைந்தது.

நெற்செய்கைக்குப் பொருத்தமான வளமான மண்ணும் சமதரையான பூமியும் இந்நாட்டின் உலர் வலயத்திலேயே காணப்பட்டமையால், உணவுற்பத்தியைப் பெருக்குவதென்றால் மீண்டும் அப்பிரதேசம் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்தது. இதனால் டீ.எஸ். சேனாநாயக்க அவர்கள் உலர் வலயத்தில் விவ சாயக் குடியேற்றங்களை உருவாக்குவதில் கவனஞ்செலுத்தத் தொடங்கினார்.

விவசாயக் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்தல்

உலர் வலயத்தில் விவசாயக் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குவதற்கான நோக்கங்கள் வருமாறு,

ஈரவலயத்தில் பெருகிச் செல்லும் சனத்தொகை நெருக்கடிக்குத் தீர்வு காணல்.

உணவு உற்பத்தியைப் பெருக்குதல்

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.

உலர் வலயத்தில் உள்ள புராதன குளங்கள், கால்வாய்கள் என்பவற்றைப் புனரமைத்து, அங்குள்ள நிலத்தை அபிவிருத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளல். 

ஈரவலயத்தில் காணப்படும் நிலப்பற்றாக்குறைக்குப் பரிகாரம் காணல்.

நில உரிமையுள்ள திருப்திகரமான வாழ்க்கையை மேற்கொள்ளும் விவசாயப் பரம்பரை ஒன்றை உருவாக்குதல்.

முற்காலத்தில் உலர் வலயத்தின் பெரும்பகுதியையும் நெற்செய்கைக்குப் பயன் படுத்திக் கொண்டமையால், நாடு நெல்லுற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தது. அங்கிருந்த பிரதான பிரச்சினையான நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வாக எமது முன்னோர்கள் குளங்களையும் நீர்த் தேக்கங்களையும் கால்வாய்களையும் கொண்ட நீர்ப்பாசனத் தொகுதியொன்றை உருவாக்கி இருந்தனர். எனினும் கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பின் பின்னர், உலர் வலயத்தில் வாழ்ந்து வந்த மக்களில் பெரும்பாலானோர் ஈரவலயத்திற்கு இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு கைவிடப்பட்டிருந்த உலர் வலயத்தை 7 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டமை, நெல்லுற்பத்தியைப் பெருக்க மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும்.

புதிய விவசாயக் குடியேற்றங்களை உருவாக்கும்போது அரசாங்கம் எதிர்நோக்கிய சவால்கள் சில வருமாறு,

ஈரவலயத்தில் இருந்து தெரிவுசெய்த மக்களுக்கு உலர் வலயத்தில் நிலங்களை வழங்கி, வீடமைத்துக் குடியேற்றுதல்.

நீண்ட காலமாகக் காடாகிக் கிடந்த நிலத்தை விவசாயத்திற்கு உகந்ததாக மாற்றிய மைத்தல், நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தல், பல்வேறுவிதமான உதவிகளைப் புரிதல்.

முதலாவது அறுவடையைப் பெற்றுக் கொள்ளும்வரை உதவி நிதியை வழங்குதல்.

பொது மக்களுடைய சுகாதாரம், கல்வி உட்பட ஏனைய வசதிகளை மேம்பாட டையச் செய்தல்.

உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான தாபனங்களைத் தோற்றுவித்தல்.

இச்சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறத் தேவையான சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொண்டு, திட்டமிட்டுச் செயற்பட்டதன் மூலம் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே விவசாயக் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்துக் கொள்ளக்கூடிய தாய் இருந்தது. காகம, மின்னேரி, நாச்சதூவ, பெரகம, மினிப்பே, பராக்கிரம சமுத்திரம், ரிதிபெந்தி கால்வாய், கணதறாவ, உன்னிச்சை போன்றவை இவ்வாறு அமைக்கப்பட்ட குடியேற்றங்களாகும். சுதந்திரம் அடையப் பெற்ற பின்னர் 1953 வரையான காலப்பகுதியில் மேலும் 15 குடியேற்றத் திட்டங்கள் வரை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டன. பத்மெடில்ல, தேவஹுவ, கிரித்தலை, பானியன்கடவல இரணைமடு, கல்ஓய, கந்தளாய், சொரபொர வாவி என்பன அக்குடியேற்றங்களாகும். புதிய குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் பழைய குளங்கள், நீர்த் தேக்கங்கள், திருத்தி அமைக்கப்பட்டு நீர்ப்பாசனக் கால்வாய்களை உருவாக்குவதில் நாட்டில் பேரூக்கம் காணப்பட்டது. அத்தோடு புதிய பலநோக்குத் திட்டமாக கல்லோயா நதியில் சேனாநாயக்க சமுத்திரம் உருவாக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தித் திட்டம்

சுதந்திரத்தின் பின்னர் இந்நாட்டின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்களுள் மகாவலித் திட்டத்திற்கு முக்கியத்துவமான பங்கு ஒன்றுள்ளது. கிளை நதிகள் பலவற்றால் ஊட்டம் பெறுகின்ற மகாவலி கங்கை மத்திய மலைநாட்டின் மேற்குச் சாய்வில் ஊற்றெடுத்துத் தும்பறைப் பள்ளத்தாக்கின் ஊடாகக் கிழக்காகத் திரும்பி திருகோணமலைக்கு அருகாமையில் கடலில் கலக்கின்றது. இந்நதித் தொகுதியை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக மகாவலி அபிவிருத்தித் திட்டம் தொடங்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுள் சில வருமாறு,

உலர் வலயக் காணிகளைக் கூடிய பயன்பாட்டுடன் பயிர்ச் செய்கை நடவடிக்கை களை மேற்கொள்ளத் தேவையான நிரந்தர நீர்வசதியை வழங்குதல்.

அதிகரித்துச் செல்லும் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் வண்ணம் மின் உற்பத்தியை மேற்கொள்ளல்.

நீர் வளத்தின் மூலம் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி நிலமற்ற விவசாயி களுக்குக் காணிகளைப் பெற்றுக் கொடுத்து பயிர்ச் செய்கையைப் பரவலடையச் செய்தல்.

மகாவலித் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இம்முக்கிய நோக்கங்களுக்கு மேலதிகமாக விவசாயத்துறைத் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துதல். நன்னீர் மீன் வளர்ப்பை விருத்தியடையச் செய்தல் போன்ற இன்னும் பல பயன்பாடு கூடிய நோக்கங்களும் எதிர்பார்க்கப்பட்டன. இதற்கமைய மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பல நோக்குகளை அடைந்து கொள்ளக்கூடியதாயிருந்தது.

மகாவலித் திட்டத்தின் முதற்கட்டமாகப் பொல்கொல்லையில் நதியை மறித்து பெரிய அணைக்கட்டு ஒன்றை நிர்மாணித்து சுரங்கம் ஒன்றின் ஊடாக சுதுகங்கைக்கு நீரை வழங்கி, போவர்தென்ன நீர்த்தேக்கத்தின் ஊடாக உலர் வலயத்திற்கு நீரை விநியோகிப்பதற்கும் அதன் மூலம் கலா வாவி, திஸா வாவி, நுவர வாவி,நாச்சதூவ வாவி போன்ற இன்னும் பல குளங்களுக்கும் நீரை வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் செயற்பாடுகள் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 1977 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்ள முடியுமாயிருந்தது.என்றாலும் அவை அனைத்தும் 30 ஆண்டுகளில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.

1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களின் தலைமையிலான அரசாங்கம் இத்திட்டத்தை 6 ஆண்டுகளினுள் பூர்த்தி செய்யத்திட்டமிட்டு, துரித திட்டம் ஒன்றை உருவாக்கியது. அதன்படி இதுவரை செயற்பட்டு வந்த மகாவலி அபிவிருத்தி சபைக்குப் பதிலாக 1978 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சு ஒன்றை ஆரம்பித்தது. காமினி திசாநாயக்க அவர்களிடம் அவ்வமைச்சுப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனைச் செயற்படுத்துவதற்காக அதிகாரம் மிக்க அமைப்பு ஒன்றின் தேவை உணரப்பட்டமையால் 1979 ஆம் ஆண்டு மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரத்தெம்பே, உள்ஹிடிய, ரத்கிந்த, மாதுறு ஓய நீர்த்தேக்கங்களை உருவாக்கியதோடு, ரத்கிந்த - மாதுறு ஓய சுரங்கம் உட்பட இன்னும் பல சுரங்கங்களும் மினிப்பே போன்ற அணைக்கட்டுக்களை மாற்றி அமைத்தும் நீர் திசைதிருப்புத் திட்டங்கள் பலவற்றையும் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கொத்மலை நீர்த்தேக்கம்

மகாவலி கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான கொத்மலை ஓயாவில் கட தொர என்னும் இடத்தில் அணை ஒன்றைக் கட்டி, கொத்மலை நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. சுவீடன் அரசாங்கம் இதற்கான உத வியை வழங்கியது.

விக்டோரியா நீர்த்தேக்கம்

மகாவலி கங்கையில் பொல் கொல்லை நீர்த்தேக்கத்திற்குச் சற்றுத் தொலைவில் அணைக் கட்டு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு விசாலமான நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. மின்னுற் பத்தியே இதன் பிரதான நோக்க மாகும். பிரித்தானிய அரசாங் கம் இதற்கான நிதியுதவியை வழங்கியது.

ரந்தெனிகல நீர்த்தேக்கம்

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கீழ்ப் பகுதியில் மினிப்பே அணைக்கட்டுக்கு மேற்புற மாக ரத்தெனிகல நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. மின்னுற் பத்தியும் நீர்ப்பாசனமும் இதன் நோக்கங்களாகும். இதற்கும் இதனுடன் இணைந்த ரந் தெம்பே நீர்த்தேக்கத்தினை அமைப்பதற்கு மேற்கு ஜேர் மனி உதவி வழங்கியது.

மகாவலி நீரைத் தேக்கி திரும்பத் திரும்ப மின்னுற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உலர் வலயத்திற்கு மின்சாரத்தை வழங்க முடிவதுடன், இதுவரை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலத்திற்கு நீரை வழங்குவதோடு, புதிய விளை நிலங்களுக்கும் நீரை வழங்கக்கூடியதாக இருந்தது. துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளவும் நீர்ப்பாசன வசதியை வழங்கவும் முடிவதுடன் குடியேற்றங்களையும் நகரங்களையும் பாதைகளையும் அமைக்கும் பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்றன.

நெல் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏனைய நடவடிக்கைகள்.

1948 இல் நெல்லுக்கு உத்தரவாத விலை அறிமுகப்படுத்தப்படல்.

ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குதல், புதிய நெல் இனங்களை அறிமுகப்படுத்துதல், பதலகொடையில் நெல் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்தல்.

விவசாய சேவை மத்திய நிலையங்களை ஆரம்பித்தல் 

அரசாங்க வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வசதியைப் பெற்றுக் கொடுத்தல்.

வர்த்தக விவசாயம்

பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை, இறப்பர் என்பவற்றுடன், பாரம்பரியப் பயிரான தென்னையினதும் உற்பத்திகள், சுதந்திரத்தின் பின்னரான மூன்று தசாப்தங்களாக இந்நாட்டின் ஏற்றுமதிப் பொருள்களாகத் திகழ்ந்து வந்தன. இப்பயிர்ச் செய்கைகளை மேம்படுத்துவதற்காக 1948 ஆம் ஆண்டின் பின்னர் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவ்வாறான செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாவன:

1972 நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் நபர் ஒருவருக்கு வைத்திருக்கக் கூடிய நிலத்தின் அளவு வரையறுக்கப்பட்டது. இதற்கமைவாக 10 ஹெக்டயர் (25 ஏக்கர்) வயல் நிலமும் 20 ஹெக்டயர் (50 ஏக்கர்) காணி நிலமும் உச்ச எல்லையாக விதிக்கப்பட்டன.

1975 - நிலச்சீர்திருத்தத்தின் மூலம் வர்த்தகப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருந்த கம்பனிகளுக்கு உடைமையாக இருந்த காணிகள் பொது உடைமையாக்கப்பட்டன. இச்சீர்திருத்த்தின் மூலம் பெருந்தோட்டச் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த காணிகளில் 62% அரசுடைமையானதும் அவற்றுள் 10% சிறிய பரப்பு காணிகளை விவசாயிகளுக்குப் பகிர்ந்து அளித்ததன் மூலம் சிறு தோட்டச் சொந்தக்காரர் வர்க்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.

1975- காணிச் சீர்திருத்தத்தால், தனியார் கம்பெனிகளிடம் இருந்த பெருமளவு பரப்புள்ள நிலம், அரசுக்குச் சொந்தமானது. இவற்றை நிர்வகிக்கப் பல தாபனங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானவை வருமாறு,

1958 அரசாங்க பெருந் தோட்டக் கூட்டுத்தாபனம்
1976 மலைநாட்டு தோட்ட அபிவிருத்திச் சபை
1976 மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை 

1952இல் சீன இலங்கை இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் இறப்பருக்கு நிரந்தரமான சந்தை ஒன்று கிடைக்கப் பெற்றது.

1977 ஆம் ஆண்டு உருவான அரசாங்கத்தால் இறப்பர் மீள் நடுகைக்கும் புதிய நடுகைக்கும் காணிச் சொந்தக்காரர்களுக்கு உதவி புரியும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி இறப்பர் மரக் கன்றுகளையும் பசளையையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் தேயிலைச் செய்கைக்கும் இவை விஸ்தரிக்கப்பட்டன. 

சுதந்திரத்தின் பின்னர் அரசாங்கம் கைக்கொண்ட நிலத்தைப் பகிர்ந்தளிக்கும் கொள்கையால், இந்நாட்டில் சிறு தோட்டச் சொந்தக்காரர் வர்க்கம் ஒன்று உருவானமை குறிப்பிடத்தக்க ஓர் இயல்பாகும். இதனால் மேல், தென், சப்பிரகமுவ மாகாணங்களில் 1 10 ஏக்கர் அளவிலான சிறிய இறப்பர், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் உருவாகினர். இதன் வாயிலாக ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையுடன் சம்பந்தப்பட்ட கிராமிய மக்கள் பிரிவினரின் வருமானம் அதிகரித்தது.

சிறு ஏற்றுமதிப் பயிர்களை அபிவிருத்தி அடையச் செய்தல்

தேயிலை, இறப்பர், தென்னை போன்ற ஏற்றுமதிப் பயிர்களுக்கு மேலதிகமாகக் கோப்பி, கொக்கோ, கறுவா, கராம்பு, சாதிக்காய், மிளகு, ஏலக்காய் போன்ற சிறு ஏற்று மதிப் பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளும் சுதந்திரத்தின் பின்னரிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

1968 ஆம் ஆண்டு தேயிலைப் பயிர் செய்யும் நிலங்களில் சிறு ஏற்றுமதிப் பயிர் செய்கையை மேற்கொள்ளவும் அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன.

1972ஆம் ஆண்டு மாத்தளைப் பிரதேசத்தில் சிறு ஏற்றுமதிப் பயிர்களுக்கான ஆய்வகம் நிறுவப்பட்டது. பின்னர் குண்டசாலை, தெல்பிட்டி, நாரம்மலை போன்ற இடங்களிலும் இவை நிறுவப்பட்டன.

1972ஆம் ஆண்டு சிறு ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்த மேலும் பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விவசாயம் தொடர்பான ஆலோச னைகளை வழங்கியதுடன் உரம் மற்றும் விற்பனைகளுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தல் இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

கைத்தொழில் கொள்கை

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரித்தானியாவில் உற்பத்தியாகும் பொருள்களின் சந்தையாக இலங்கை இருந்து வந்தமையால் இந்நாட்டுக் கைத்தொழில் துறையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. டொனமூர் சீர்திருத்தத்தின்படி தொழிலாளர், கைத்தொழில், வர்த்தக அமைச்சுகள் இலங்கையர் வசமானமையால், கைத்தொழில் துறையில் ஊக்கம் பிறந்தது. 1934இல் இந்நாட்டுக் கைத்தொழில் துறை தொடர்பாக ஆராய்ந்து பார்த்த இலங்கையின் வங்கி ஆணைக்குழு உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதற்கான கைத்தொழில்களை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்தது.

1939 ஆம் ஆண்டு ஆரம்பமான 2ஆம் உலகப் பெரும் போரால் இந்நாட்டிற்கான இறக்குமதிகள் சில ஆண்டுகளாக வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இக்காலத்தில் அசற்றிக் அசிட், பீங்கான் பொருள்கள், கடதாசி, சவர்க்காரம், வாசனைப் பொருள்கள் போன்றவை இந்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றிற்கு நல்ல கேள்வியும் நிலவியது. என்றாலும் போர் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் இறக்குமதிகள் இடம்பெற வெளிநாட்டுப் பொருள்களுடன் போட்டியிடுவது சிரமமானபடியால், ஆரம்பிக்கப்பட்ட கைத்தொழில்களும் முடங்கிப் போயின.

1952ஆம் ஆண்டு இங்கு வந்த உலக வங்கித் தூதுக்குழு ஒன்று அரச தலையீட்டுடன் நடுத்தர, சிறு கைத்தொழில்களை ஆரம்பிப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியது. அவ்வறிக்கையைத் தொடர்ந்து 1955 இல் வெள்ளை அறிக்கை ஒன்றின் மூலம் வெளிநாட்டு, தனியார் துறையினதும் முதலீடு தொடர்பான அரசின் கொள்கை தெளிவுப்படுத்தியதால் தொழிற்சாலைகளில் முதலீடு செய்வதற்கு மீண்டும் ஆர்வம் செலுத்தினர். இதன் காரணமாக 1959 ஆம் ஆண்டு முதலாவது கைத்தொழில் பேட்டை ஏக்கலையில் ஆரம்பிக்கப்பட்டது. 1960இல் இரத்மலானையில் கைத்தொழில் பேட்டை ஒன்று தொடங்கப்பட்டது. இவை கைத்தொழில் கொள்கையின் தெளிவான அம்சங்களாகும்.

1960 ஆம் ஆண்டின் பின்னரான இந்நாட்டுக் கைத்தொழில் துறையில் துலக்கமாகத் தெரிந்த சில இயல்புகள் வருமாறு,

1961 ஆம் ஆண்டு மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டதுடன் சிறு கைத்தொழிலாள ருக்குக் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

1966இல் உள்நாட்டுக் கைத்தொழில் உற்பத்திகளின் தரத்தை நிர்ணயிப்பதற்காகத் தர நிர்ணய சபை ஆரம்பிக்கப்பட்டது.

அரசின் கைத்தொழில் கொள்கையால் 1960 இன் பின்னர் இந்நாட்டிற்குத் தேவை யான நுகர்வுப் பொருள் உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டது.

1970-1977 காலகட்டத்தில் அரசு கடைப்பிடித்த பதிலீட்டுக் கைத்தொழில் கொள்கையில் குடிசை, இலகு கைத்தொழில் துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குப் பதிலாக அவற்றை இந்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்வதே இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில் எனப்படுகிறது.

சுதந்திரம் அடையப்பெற்ற முதல் முப்பது வருடங்களில் மூலப்பொருள்களைப் பாரியளவில் பயன்படுத்தி கைத்தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கின்ற அதிகள் விலான கைத்தொழில்களை நடத்திச் செல்வது அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்டது. சீமெந்து, இரும்புருக்கு, ஒட்டுப்பலகை, சீனி போன்ற கைத்தொழில்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

1977 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்றுமதிக் கைத்தொழில்களை வளர்ப்பதற்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதோடு தனியார், முதலீட்டை ஊக்குவிப்பதற்குக் கையாளப்பட்ட கொள்கையினால் ஆடைக் கைத்தொழில் உட்பட, ஏற்றுமதிக்கான கைத்தொழில்களில் துரித அபிவிருத்தி ஏற்பட்டது. 1978 இல் கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக் குழு அமைக்கப்பட்டமை அதே ஆண்டில் கட்டுநாயக்க ஏற்றுமதிப் பதனிடல் வலயத்தை உருவாக்குதல், பின்னர் பியகம, கொக்கல ஏற்றுமதிப் பதனிடல் வலயங்களை உருவாக்கியமை கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கான காரணங்களாக அமைந்தன.

கல்வி

பிரித்தானியரின் ஆட்சியின்போது இந்நாட்டின் கல்வி நடவடிக்கைகளுள் முறையான முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டது. சமய, கலாசார மறுமலர்ச்சி இயக்கம் இடம்பெற்ற காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம்களிடையே கல்வி நடவடிக்கை தொடர்பாக விசேட ஊக்கமொன்று காணப்பட்டபடியால் நாடெங்கும் பாடசாலைகளின் தொகை துரிதமாக அதிகரித்துச் சென்றது. எனினும் உயர் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் அதிக செலவு செய்ய வேண்டி இருந்ததால் ஒருசில வசதியான குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமே கல்வியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் அரசுக் கழக ஆட்சிக் காலத்தில் கல்வி நிருவாகக் குழுவின் தலைவராகக் (அமைச்சராக) கடமை புரிந்த சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களின் ஆலோசனைப்படி சகல மாணவ மாணவிகளுக்கும் பாலர் வகுப்பில் இருந்து பல்கலைக்கழகம் வரை அரசாங்கத்தால் இலவசமாகக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான இலவசக் கல்வி முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்தை அடுத்து இந்நாட்டில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இலவசக் கல்வி முறையை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறையுடன் செயற்பட்டது. 1948 ஆம் ஆண்டின் பின்னரான மூன்று தசாப்த காலத்தில் இந்நாட்டுக் கல்விப் புலத்தில் ஏற்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்கள் வருமாறு,

அரசாங்கப் பாடசாலைகளை அமைத்தல், கல்வி அபிவிருத்திக்கு அதிக பணம் ஒதுக்குதல் ஆகிய நடவடிக்கைகளால் நாடெங்கும் பாடசாலைகளின் தொகை அதிகரித்தது

பாடத்திட்டத்தை விருத்தியடையச் செய்து ஆசிரிய பயிற்சி நடவடிக்கைகள் நவீன மயப்படுத்தப்பட்டன.

விஞ்ஞான ஆய்வு கூட, நூல் நிலைய வசதிகள் விரிவாக்கப்பட்டன.

இலவசப் பகலுணவு, வைத்தியம், பல்வைத்தியம் என்பவற்றுடன் சலுகை விலையிலான போக்குவரத்துக் கட்டணங்கள், இலவசப் பாடநூல், சீருடை என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்கான நலன்புரி தேவைகளும் மேம்பாடடையச் செய்யப்பட்டன.

கல்வி நிருவாக நடவடிக்கைகளைக் காலத்திற்குப் பொருத்தமானதாக மாற்றி யமைத்தல் 

தொழினுட்ப கல்வித் தாபனங்கள் உருவாக்கப்பட்டமையால் அத்துறையும் விருத்தி அடைதல். புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம் உயர் கல்வித் துறை முன்னேறுதல்.

1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தைக் கொழும்பில் ஆரம்பித்தமை

1952 இல் அதனைப் பேராதனைக்கு இடமாற்றியமை

வித்தியோதய பிரிவெனாவும் வித்தியாலங்கார பிரிவெனாவும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர, களனி பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்தப்பட்டமை. 

1972 இல் மொரட்டுவை கட்டுபெத்த பல்கலைக்கழகமும் 1974 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஆரம்பிக்கப்பட்டமை

சமூக நலன்புரி நடவடிக்கைகள்

1931ஆம் ஆண்டு இந்நாட்டவருக்கு சர்வஜன வாக்குரிமை கிடைக்கப் பெற்றமையால், பொருளாதார வசதி குறைந்த மக்களும் வாக்குரிமையால் அரசியல் அந்தஸ்ததைப் பெற்றுக்கொண்டனர். பிரதான சாதகமான காரணியானமையால் பொதுமக்கள்மீது அரசியல் வாதிகளின் கவனம் கவர்ந்திழுக்கப்பட முக்கிய காரணமாய் அமைந்தது. அத்தோடு நீண்ட காலமாக இலங்கைக் குடியேற்றவாதத்திற்கு உட்பட்டிருந்தமையால் பொது மக்களுக்குப் பாதகமான அரசியல், பொருளியல் நிலை உருவாகி இருந்தன. இதனால் இச்சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது சுதந்திரத்தின் பின் வந்த அர சாங்கங்களின் முக்கிய செயற்பாடாக அமைவுற்றன. 1948 ஆம் ஆண்டின் பின்னர் சமூக சமநிலையை ஏற்படுத்தல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோரை முன்னேற்றும் வகையில் வழிவகைகளை செய்துகொடுத்தல் போன்றவற்றிற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வருமாறு,

கிராமப் பிரதேசங்களில் கல்வி நடவடிக்கைகளை வளர்ச்சி அடையச் செய்தல்.

தொழில்களைப் பெற்றுக்கொள்வதில் திறமைக்கு முன்னிடம் வழங்கல். போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவுகள் இடம் பெற்றமை.

சுதந்திரம், சமத்துவம், அடிப்படை உரிமைகள் என்பன அரசியல் யாப்பில் இடம் பெற்றன.

விவசாய, மீன்பிடி நடவடிக்கைகளுக்குக் கடன் வசதிகளும் மானியங்களும் வழங்கப்பட்டதோடு அரசாங்க அனுசரணையும் கிடைக்கப்பெற்றமை.

சுகாதார சேவை

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவசசுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதற்கான ஏற்பாடுகள் பெருமளவுக்கு நகர் சார்ந்ததாகவே இருந்து வந்தன. இதனால் சுதந்திரத்தின் பின்னர் கிராமப் புறங்களில் வைத்திய வசதிகளை ஏற்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. சுகாதார அமைச்சின் கீழ் கிராமப் புறங்களில் வைத்தியசாலைகளை நிர்மாணித்தல், தாய்- சேய் நடவடிக்கைகளை மேம்பாடடையச் செய்தல், நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குதல், வைத்திய முகாம்களை நடாத்துதல், சுதேச வைத்திய முறையை மேம்பாடடையச் செய்தல், கிராமப் புறங்களில் வைத்திய வசதிகளை விரிவுபடுத்துதல் என்பன இந்நடவடிக்கைகளுக்கான உதாரணங்களாகும். இதனால் காய்ச்சல், யானைக்கால், மலேரியா, சயரோகம், இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்களால் பீடிக்கப்படுவோரின் தொகையைக் குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைத்துக் கொள்ளக் கூடியதாயிருந்தது.

ஏனைய நலன்புரி நடவடிக்கைகள்

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் பெருந்தெருக்கள், புகையிரதப் பாதை கள் அமைக்கப்பட்டமையால் போக்குவரத்து நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட் டது. சுதந்திரத்தின் பின்னர் அதன் பிரதிபலன்களைக் கிராமிய மக்களும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் கிராமப் புறங்களுக்கும் பாதைகள் அமைத்தல், போக்குவரத்து நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கிராம நகரங்களுக்கு இடையே நிலவிய இடைவெளி குறைந்து அது வரை நகரங்களுக்கு மட்டும் என்றிருந்த நீர், மின்சாரம், செய்தித் தொடர்பு போன்ற பொது வசதிகள் கிராமப் புறங்களுக்கும் கிடைக்கப்பெற்றன.

இரண்டாவது உலகப் போர் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கப்பல் போக்குவரத்தில் இடம்பெற்ற இடைஞ்சல்களால் உணவுப் பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த நேர்ந்தது. இதனால் அரசாங்கத்தால் உணவு மானியம் வழங்கும் செயற்றிட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு குறிப்பிட்ட காலமொன்றிற்கு மானியத்திற்கு மக்கள் பழக்கப்பட்டமையாலும் குறைந்த வருமானம், காணிப் பற்றாக்குறை, குறைந்த அறுவடை போன்ற காரணங்களால் சுதந்திரத்தின் பின்னர் வறுமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உணவு மானியத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதிலும் அரிசி மானியத்திற்கு முக்கிய இடம் கிடைத்தது. அரிசி மானியத்தை முறைப்படுத்துவதற்கு மானியத்துடன் கூடிய கூப்பன் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவை அரிசிக் கூப்பன்கள் எனப் பிரபல்யமடைந்தன. 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரிசிக் கூப்பன்களுக்குப் பதிலாக உணவு முத்திரை முறை புழக்கத்திற்கு வந்தது.

அரசாங்கத்திடம் இருந்து மானிய உதவி பெற்ற பொதுமக்கள் மேலும் எதிர்நோக்கிய பிரதான பிரச்சினைகளுள் வீடில்லாப் பிரச்சினையும் ஒன்றாகும். ஆகையால் நகர்ப் புறங்களைப் போன்றே கிராமப் புறங்களிலும் நிலவிய வீடில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சுதந்திரத்தின் பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நகரங்களில் மாடி வீடுகளையும் வீட்டுத் தொகுதிகளையும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு பல்வேறு வகையில் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உதவிகளைப் புரிந்து வந்தது. இவ்வாறு சுதந்திரத்தின் பின்னர் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு நலன்புரி நடவடிக்கைகளின் மூலம் மக்களைப் பலப்படுத்தி முக்கிய வெற்றிகள் பலவற்றை அடைந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது.

நன்றி 

Post a Comment

0 Comments