இராமாயணம் பகுதி - 62 - RAMAYANAM PART - 62


இராமாயணம் பகுதி - 62 


இராமாயணம் பகுதி - 62 - RAMAYANAM PART - 62

விபீஷணன், இராவணனின் படைகளின் எண்ணிக்கை ஆயிரம். இராவணனுடன் இருக்கும் அரக்கர்கள் பலம் பொருந்தியவர்கள். அங்கிருக்கும் மிகவும் பலம் பொருந்திய வீரர்களை பற்றி கூறுகிறேன். முதலில் இராவணன் மற்றும் அவனின் சகோதரர்களை பற்றி கூறுகிறேன் என்றான்.

இராவணன், பிரம்மனும், சிவனும் இவனுக்கு அரிய பெரிய வரங்களை அளித்திருக்கின்றனர். குபேரனை தோற்கடித்து அவனுடைய நகரத்தைக் கைப்பற்றியவன். வருணனை வென்றவன். இவன் மலைகள் போல வலிமையை உடையவன். கும்பகர்ணன் இராவணனின் தம்பி. இவன் தேவர்களை ஓட ஓட விரட்டிய பெரும் வீரன் ஆவான். இவன் இந்திரனின் ஐராவதத்தின் கொம்புகளையே தன் ஆயுதமாகக் கொண்டு தேவர்களை அழித்தவன். இவன் தன் வாழ்நாளில் பெரும்பகுதி தூக்கத்தில் ஆழ்ந்திருப்பவன். மற்ற நாட்களில் இவன் உண்ணும் உணவும் மலையளவு இருக்கும். இந்திரஜித், இராவணனின் மூத்த மகன். இவன் சூரிய சந்திரரை சிறையில் அடைத்தவன். இந்திரனை தோற்கடித்து போரில் வென்றவன். அதிகாயன் இராவணனின் இரண்டாவது மகன். இவன் பிரம்மன் கொடுத்த வில்லை உடையவன். இவன் இந்திரஜித்துக்குத் தம்பி. இவர்கள் இராவணனுடைய பெருமை மிக்கப் புதல்வர்கள்.

கும்பன் ஆயிரம் யானைகளுக்கும், குதிரைகளுக்கும் இணையான வலிமையும், வீரமும் உடையவன். சூரியனின் வெப்பத்தைக் காட்டிலும் மிகவும் கொடிய வீரன் ஆவான். அடுத்தது அகம்பன் இவன் தவமிருந்து போர் புரிபவன். இவன் நரசிம்ம மூர்த்தியைப் போன்றவன். நிகும்பன் மலைகளைக் காட்டிலும் வலிமை உடையவன். மகோதரன் என்பவன் வஞ்சனையும் மற்றும் மாயையும் செய்து போர் புரிபவன். பகைஞன் என்பவன் மலைவாழ் வீரன் ஆவான். இவன் பெரும்படைக்குத் தலைவன். இவன் தேவர்களை பலமுறை போரில் தோற்கடித்தவன். சூரியன் பகைஞன் என்னும் மற்றொருவன் அனைவரையும் வெல்லக்கூடிய வலிமையுடையவன். பெரும்பக்கன் என்பவனை முனிவர்களும் நேராக பார்க்க பயப்படுவார்கள். வச்சிரதந்தன் என்பவன் எட்டு கோடி சேனைக்கு அதிபதி ஆவான். பலரும் இவனிடம் போரிட அஞ்சுவார்கள்.

பிசாசன் என்பவன் பகைவரைக் கண்டு அஞ்சாதவன். இவன் பத்து கோடி சேனைகளுக்கு தலைவன் ஆவான். துன்முகன் என்பவன் பதினான்கு கோடி காலாட்படைக்குத் தளபதி. பூமியையும் தகர்த்து எறியும் ஆற்றல் உடையவன். விரூபாட்கன் என்பவன் வாட்போரில் வல்லவன். தூமாட்சன் என்பவன் மாண்ட வீரர்களின் உடலைத் திண்பவன். தேவர்களையும் தோற்கடிக்கும் வல்லமை உடையவன். போர்மத்தன், வயமத்தன் ஆகிய இவ்விருவரும் மிகவும் வலிமை படைத்தவர்கள். கடல் போன்று இருக்கும் படைகளுக்கு இவர்கள் அதிபர்கள். பிரகஸ்தன் என்பவன் இராவணனுக்கு போர்த்தொழிலில் துணை புரிபவன். இந்த பிரகஸ்தன் இராவணனின் படைத்தளபதி ஆவான். இந்திரனின் ஐராவதம் என்னும் யானை உள்ளிட்ட அனைத்துப் படைகளையும் அஞ்சி ஓடச் செய்யும் வல்லமை உடையவன். இவ்வளவு பெரும்படை உடைய இராவணனை தங்களை தவிர வேறு எவராலும் அழிக்க முடியாது என்றான்.

பிறகு விபீஷணன், இராமா! அனுமன் இலங்கைக்கு வந்த போது ஆற்றிய வீர தீரச் செயல்களை பற்றி கூறுகிறேன் என்றான். அசோகவனத்தில் ஏராளமான அரக்கர்கள் அனுமன் கையால் மாண்டனர். அனுமன் இட்ட தீயினால் இலங்கை மாநகரமே எரிந்து சாம்பலானது. கிங்கரர் எனும் அரக்க போர் வீரர்களை அனுமன் தனித்து நின்று கொன்று குவித்தான். ஜம்புமாலி எனும் வலிமை வாய்ந்த அரக்கனும் அவனுடைய படைகளையும் மாபெரும் வீரர்களான பஞ்ச சேனாதிபதிகளைக் கொன்றான். இராவணனின் இளைய மகனான அக்ஷயகுமாரனை கொன்றான். இராவணனை தடுமாற வைத்தது அக்ஷயகுமாரனின் மரணம் தான். அனுமனால் தாக்கப்பட்டு இலங்கையில் இறந்த அரக்கர்கள் எண்ணில் அடங்காதவை. இப்பொழுது எரிந்து போன இலங்கை நகரை இராவணன் புதுப்பித்து விட்டான் என்றான்.

விபீஷணன், அனுமனின் வீரச் செயல்களையும், வலிமையையும் கண்டு நான் அடைக்கலம் புகவேண்டியது தங்களிடம்தான் என்பதை உணர்ந்து இங்கு வந்தேன் என்றான். இதைக் கேட்ட இராமர், அனுமனை கருணையோடும், அன்போடும் பார்த்து, வலிமைமிக்க வீரனே! விபீஷணன் சொல்வதிலிருந்து நீ பாதி இலங்கை நகரை அழித்துவிட்டு வந்துள்ளாய் என்பது தெரிகிறது. நீ இலங்கை நகரை தீயிக்கு இரையாக்கிவிட்டு வந்துள்ளாய். என் வில்லின் திறமையை உலகம் அறிய வேண்டும் என்று தான் சீதை அங்கேயே விட்டு வந்துள்ளாய். இதற்கு பரிசாக உனக்கு நான் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை? பிரம்மதேவரின் ஆட்சி காலம் முடிந்தபின் பிரம்மராக ஆட்சி புரிவாய் என்று பிரம்மபதத்தை பரிசாக வழங்கினார். இராமர் கூறியதைக் கேட்ட அனுமன், இராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, புகழின் நாணத்தால் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து நின்றான். இதைப் பார்த்த சுக்ரீவன் மற்றும் மற்ற வானர வீரர்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர்.

பிறகு இராமர், இப்பெருங்கடலை வானரங்களுடன் கடந்து இலங்கை செல்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா? என யோசித்துக் கொண்டு கடலுக்கு அருகில் வந்து நின்றார். இராமர் விபீஷணனை பார்த்து இக்கடலை கடப்பதற்கு ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டார். விபீஷணன், பெருமானே! வருணனை வேண்டிக் கேட்டால் நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும் என்றான். பிறகு இராமர், கடலுக்கு அருகில் சென்று, தர்ப்பைப் புற்களை அடுக்கி அதன்மேல் நின்று கொண்டு, ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தார். ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும் வருணன் வந்து தோன்றவில்லை. இதனால் இராமர் பெருங்கோபம் கொண்டார். உடனே இராமர் தன் கோதண்டத்தை வளைத்து நாணை பூட்டிய அம்பில் தீயை மூட்டி கடலை நோக்கி எய்தினார். இந்த தீயினால் கடலில் இருந்த மீன்கள் முதலிய விலங்குகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயின. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இலட்சுமணன் முதலிய வானர வீரர்கள் இனி என்ன நடக்குமோ என அச்சத்தில் இருந்தனர்.

அப்போதும் வருணன் அங்கு வந்து தோன்றவில்லை. இதனால் இராமரின் கோபம் இன்னும் அதிகமானது. இராமர் பிரம்மாஸ்திரத்தை நாணில் மூட்டி கடலை நோக்கி எய்த ஆயத்தமானார். இதனைப் பார்த்து உலகமே நடுங்கியது. தேவர்கள் முதலானோர் மிகவும் வருந்தினர். அப்போது வருணன் கடல் வழியே வந்து இராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, அடியேன்! செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார். இராமர் கோபம் தணிந்து, நான் இவ்வளவு நேரம் பணிந்து வேண்டியும் வராததற்கு காரணம் என்ன? என்று கேட்டார். வருணம், பெருமானே! கடலில் மீன்களுக்கிடையே போர் நடந்து கொண்டிருந்தது. நான் அவர்களை சமாதானம் செய்து கொண்டிருந்தேன். அதனால் தான் தங்களின் அழைப்பை நான் கவனிக்க மறந்துவிட்டேன். ஆதலால் பெருமானே! இந்த சிறியேன் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார்.

இராமர் இதனைக் கேட்டு, வருணனே நான் உன்னை மன்னித்து விடுகிறேன். நான் இப்பொழுது நாணில் பூட்டிய பிரம்மாஸ்திரத்தை ஏதாவது இலக்கில் செலுத்த வேண்டும். எதன் மீது பிரம்மாஸ்திரத்தை செலுத்தலாம் எனக் கூறு என்றார். வருணன், பெருமானே! மருகாந்தாரம் என்னும் தீவில் வாழும் நூறு கோடி அரக்கர்கள் உலக மக்களுக்கு அழிவு செய்து வருகிறார்கள். ஆதலால் இந்த பிரம்மாஸ்திரத்தை மருகாந்தாரம் தீவில் ஏவி அங்கு வாழும் அரக்கர்களை வதம் செய்யுங்கள் என்றார். உடனே இராமர், மருகாந்தாரம் தீவை பார்த்து பிரம்மாஸ்திரத்தை எய்தினார். அத்தீவு கணப்பொழுதில் அழிந்துவிட்டது. பிறகு இராமர் வருணனை பார்த்து, நாங்கள் அனைவரும் கடலை கடந்துச் செல்ல வழி உண்டாக்கி தர வேண்டும் எனக் கேட்டார்.

தொடரும்.....

Post a Comment

0 Comments