இராமாயணம் பகுதி - 53
அனுமன் சீதையை வணங்கிவிட்டு, இராமர் தங்களை விட்டு பிரிந்த பிறகு அவருக்கு சூரிய குமாரான சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவன் குரங்கினத் தலைவன் ஆவான். சுக்ரீவனுடைய அண்ணன் வாலி. வாலி சுக்ரீவனுக்கு தீங்கு இழைத்ததால் இராமர் அவனை தன் பாணத்தால் வீழ்த்தினார். நான் சுக்ரீவனுடைய அமைச்சன் அனுமன். இராவணன் தங்களை கவர்ந்து சென்ற போது, தங்களுடைய ஆபரணங்களை ஓர் துணியில் கட்டி நாங்கள் இருந்த ருசியமுக பர்வதத்தில் தூக்கி எறிந்தீர்கள். அதை நாங்கள் பத்திரபடுத்தி வைத்திருந்தோம். பிறகு நாங்கள் அந்த அணிகலன்களை இராமரிடம் காண்பித்தோம். இராமர் அணிகலன்களை பார்த்து அது தங்களுடைய அணிகலன்கள் தான் என்பதை உறுதி செய்தார். ஆனால் இராமர் தங்களுடைய அணிகலன்களை பார்த்து மிகவும் துன்பப்பட்டார்.
இராமரும் இலட்சுமணரும் நான் கவர்ந்து சென்ற செய்தியை எவ்வாறு அறிந்தனர் எனக் கேட்டாள் சீதை. அதற்கு அனுமன், இராவணன் தூண்டுதலால் மாய மான் போல் வந்த மாரீசனை இராமன் கொன்று விட்டார். ஆனால் அவனோ இறக்கும் தருவாயில் சீதா! தம்பி இலட்சுமணா! என கூறிக் கொண்டு இறந்தவிட்டான். தாங்களோ அது இராமர் என நினைத்து இலட்சுமணரை கடிந்து பேசி இராமரை காண அனுப்பிவிட்டீர்கள். பர்ணசாலை நோக்கி வரும் வழியில் தம்பி இலட்சுமணன் வருவதை கண்ட இராமர், சீதையின் தூண்டுதலால் தான் இலட்சுமணன் இங்கே வந்துள்ளான் என்பதை இராமர் புரிந்துக் கொண்டார். பிறகு தங்களை தனியே விட்டு வந்ததால் அங்கு தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என நினைத்து விரைந்து இருவரும் பர்ணசாலை வந்தடைந்தனர். அங்கு தங்களை காணாமல் இராமர் மிகவும் துன்பப்பட்டார்.
பிறகு அவர்கள் இருவரும் தேரின் சுவடை வைத்து தெற்கு நோக்கி வந்தனர். அவர்கள் வரும் வழியில் ஜடாயு உயிர் துறக்கும் நிலையில் இருப்பதை கண்டனர். ஜடாயு அவர்களிடம் இராவணன் தங்களை கவர்ந்து சென்ற செய்தியை கூறினார். பிறகு இராமரும், இலட்சுமணரும் தங்களை தேடி எங்களை வந்தடைந்தனர் என்றான். இதைக் கேட்ட சீதை, இராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து மிகவும் வருந்தினாள். சீதை அனுமனிடம், மாருதியே! இவ்வளவு சிறிய உருவம் கொண்ட நீ எவ்வாறு இக்கடலை கடந்து வந்தாய் எனக் கேட்டார். சீதை இவ்வாறு கேட்டதால் அனுமன் தன் முழு உருவத்தையும் காட்ட நினைத்தான். பிறகு அனுமன் வானை முட்டும் அளவிற்கு தன் உருவத்தை வளர்த்து நின்றான். அனுமனின் உருவத்தைக் கண்ட சீதை, மாருதி! போதும் உன் உருவத்தை ஒடுக்கிக் கொள் என்றாள். அனுமன், தங்கள் வார்த்தையே எனக்கு கட்டளையாகும் எனக் கூறிக் கொண்டு தன் உருவத்தை சிறிதாக்கி நின்றான்.
பிறகு அனுமன் இராமரின் கட்டளைப்படி, சுக்ரீவன் தங்களை தேடச் சொல்லி பெரும் சேனையை எட்டுத் திசைகளுக்கும் செல்லுமாறு அனுப்பினார். தெற்கு திசையில் தங்களை தேடி வந்த வானர சேனைகளின் தலைவன் அங்கதன் ஆவான். அவன் தங்களை தேடும் பொருட்டு என்னை இலங்கைக்கு அனுப்பியவன். நான் தங்களை கண்டுபிடித்து விட்டு வருவேன் என்று எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான். சீதை அனுமன் சொன்னத்தை கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தாள். சீதை அனுமனிடம் இராமர் நலமாக உள்ளாரா? என வினவினாள். இராமர் நலமாக உள்ளார். ஆனால் தங்களை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். இலட்சுமணரும் நலமாக இருக்கிறார். ஆனால் அவர் தங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளார் என்றான்.
அனுமன் சீதையிடம் இருந்து விடைப்பெற்றுச் சென்றான். அனுமன் போகும் போது நான் சீதையைத் தேடி கண்டுபிடித்துவிட்டேன். இப்பொழுது இராவணன் பற்றியும் அவனின் பலத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இராமர் போர் புரிய எவ்வளவு பலம் வேண்டும் என்பது தெரியும். அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். அரக்கர்களை தொல்லை செய்யலாம் என எண்ணினான். பிறகு வேண்டாம் என நினைத்து விட்டு இவ்வளவு அழகு மிகுந்த இந்த அசோக வனத்தை அழித்தால் இராவணன் நிச்சயம் வர வாய்ப்புள்ளது என நினைத்தான். உடனே அனுமன் அசோக வனத்தை முற்றிலும் நாசம் செய்தான். இவ்வாறு அனுமன் அசோக வனத்தை நாசம் செய்து கொண்டிருக்கும்போது தூங்கி கொண்டிருந்த அரக்கிகள் விழித்துக் கொண்டனர். அப்போது மேரு மலையை போல் இருந்த அனுமனை கண்டு அரக்கிகள் பயந்தனர்.
உடனே அவர்கள் சீதையிடம் சென்று, ஏ பெண்ணே! இவன் யார் என்று உனக்கு தெரியுமா? இவன் எப்படி இங்கே வந்தான் எனக் கேட்டனர். இதற்கு சீதை, மாய உருவம் எடுக்கும் அரக்கர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். யார் வந்தார்கள்? என்ன செய்தார்கள் என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி விட்டாள். உடனே அரக்கிகள் இராவணனிடம் ஓடிச்சென்று, மன்னரே! ஓர் வானரம் அசோகவனத்தில் சீதையின் இருப்பிடத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லா இடங்களையும் நாசம் செய்து விட்டது எனக் கூறினார்கள். இதைக்கேட்ட இராவணன் எவரும் செல்ல முடியாத அசோக வனத்தை ஓர் வானரம் நாசம் செய்து விட்டது என என்னிடம் வந்து மூடத்தனமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். அப்போது அனுமன் உலகம் அதிரும்படியான ஒரு கூக்குரலை எழுப்பினான். இக்குரல் இராவணனின் காதிலும் விழுந்தது.
உடனே இராவணன் கிங்கரர் என்னும் ஒரு வகை அரக்கர்களை அழைத்து, அக்குரங்கை தப்பிக்க விடாமல் என்னிடம் கொண்டு வந்து ஒப்படையுங்கள் என்று ஆணையிட்டான். உடனே கிங்கர அரக்கர்கள் அனுமனை தேடி விரைந்துச் சென்றனர். அவர்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டனர். உடனே அனுமன் தன் பக்கத்தில் இருந்த மரத்தை பிடுங்கி கிங்கர அரக்கர்கள் அனைவரையும் அழித்தான். அனுமனை பிடிக்கச் சென்ற கிங்கர அரக்கர்கள் அனைவரும் இறந்த செய்தி இராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட இராவணனின் முகம் கோபத்தால் சிவந்தது. உடனே இராவணன், ஜம்புமாலி என்னும் அரக்கனை அழைத்து, நீ குதிரைப்படையுடன் சென்று அக்குரங்கை கயிற்றால் கட்டி இங்கு அழைத்து வா! அப்போது தான் என்னுடைய கோபம் தணியும் என்றான். ஜம்புமாலி தன் படையை அழைத்துக் கொண்டு அனுமன் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அனுமன் தன் பக்கத்தில் இருந்த இரும்புத் தடியை கையில் எடுத்துக் கொண்டான். தன்னிடம் போர் புரிய வந்த அரக்கர்கள் எல்லோரையும் இரும்புத் தடியால் அடித்துக் கொன்றான். கடைசியில் ஜம்புமாலி மட்டும் இருந்தான். அனுமன் அவனிடம், உயிர் மேல் ஆசை இருந்தால் இங்கிருந்து தப்பி ஓடிச்செல் என்றான். ஆனால் ஜம்புமாலி அங்கிருந்து கோழை போல் ஓடாமல் அனுமன் மீது அம்புகளை ஏவினான். தன்னை நோக்கி வந்த அம்புகளை அனுமன் தன் இரும்புத் தடியால் தடுத்தான். ஜம்புமாலி தன் அம்பால் அனுமனிடம் இருந்த இரும்புத்தடியையும் ஒடித்து விட்டான். இதனால் சற்று சளைத்து நின்ற அனுமன், ஓடிச்சென்று ஜம்புமாலியின் தேரில் ஏறி அவனின் வில்லை பிடுங்கி அவன் கழுத்தில் மாட்டி தேரிலிருந்து கீழே தள்ளிவிட்டான். ஜம்புமாலி கீழே விழுந்து இறந்தான்.
தொடரும்.....
0 Comments