இராமாயணம் பகுதி - 51
திரிசடை தன் கனவை பற்றி கூறியதை கேட்ட சீதை, திரிசடை தாயே! உன் கனவின் மிஞ்சிய பகுதியையும் கண்டுவிட்டு, எனக்கு கூறு. இப்பொழுது நீ உறக்கத்திற்கு செல் என்றாள். தூரத்தில் தங்கத்திலான மண்டபத்தைக் கண்ட அனுமன் அங்கு வந்து சேர்ந்தான். அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த அரக்கியர்கள் தூக்கத்தை கலைத்து சீதையை காவல் புரிய தொடங்கினர். இதை பார்த்த அனுமன் உடனே ஓடி சென்று தன்னை யாரும் பார்க்காத வண்ணம் மரத்தில் ஏறி கொண்டான். அப்போது அரக்கிகள் சீதையிடம், நீ எதற்கு அழுது கொண்டிருக்கிறாய்? உன்னை யார் என்ன செய்தார்கள்? எங்கள் அரசன் இராவணனுக்கு அறிவே கிடையாது. அவர் எங்கள் யாரையாவது விரும்பி இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக அவரின் மனைவியாக இருப்போம். எங்கள் அரசரை நீ ஏற்றுக் கொண்டால் இங்கு நீ மகிழ்ச்சியாக இருக்கலாம். எங்கள் அரசர் இங்கு வந்தால் அவரை வரவேற்று வணக்கம் சொல் என்று அச்சுறுத்தினார்கள்.
இவர்களின் இச்சொற்களை கேட்டு சீதை மிகவும் துன்பப்பட்டாள். அனுமன் சீதையின் நிலைமையை பார்த்து, யார் இந்த பெண்? இவளின் முகம் ஒளியிழந்து காணப்படுகிறதே. இவள் ஏன் அழுக்கு ஆடையை அணிந்து இருக்கிறாள்? இப்பெண்ணின் முகத்தில் தெய்வ ஒளி வீசுகிறதே. அரக்கியர் கூட்டம் சூழ இவள் யாரையோ நினைத்து அழுது கொண்டிருக்கிறாள். இராமர், சீதை பற்றி கூறிய அம்சங்கள் எல்லாம் இவளிடம் உள்ளது. அப்படியென்றால் இவள் நிச்சயம் சீதை தான் என்று தீர்மானித்துக் கொண்டான். நான் பட்டபாடு வீணாகவில்லை. நான் சீதையை கண்டுவிட்டேன். இனி நான் சாகமாட்டேன். அனுமன் மகிழ்ச்சியால் அங்கும் இங்கும் துள்ளி குதித்தான். இப்பெருஞ்செல்வியை தர்மம் காத்ததா? இல்லை ஜனக மகாராஜரின் புண்ணியம் தான் காத்ததா? கற்பு என்ற ஒன்று இவரை காத்தது என்றாள் அது மிகையாகாது என்று சீதையை பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தான்.
தூங்கி கொண்டிருந்த இராவணன் சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லை என்ற கோபத்தில் தூக்கத்தை கலைந்தான். இராவணன் ஒளி வீசுகின்ற மணிகளை அணிந்து சீதையை நோக்கி வந்தான். ஊர்வசி உடைவாளை ஏந்திக் கொண்டு அவனுடன் வந்தாள். மேனகை வெற்றிலை பாக்கை மடித்து கொடுத்துக் கொண்டு உடன் வந்தாள். திலோத்தமை அவனுடைய காலணிகளை தூக்கிக் கொண்டு உடன் வந்தாள். மற்றும் ஏனைய தேவ மாதர்கள் சூழ ஆடம்பரமாக இராவணன் நடந்து வந்தான். இராவணன் அசோக வனத்திற்கு வந்தவுடன் அங்கு இருந்த அரக்கிகள் இராவணனுக்கு வழிவிட்டு நின்றனர். இராவணன் வருவதை கண்ட அனுமன் மரத்தில் ஒளிந்து கொண்டான். இராவணன் சீதையின் முன் நின்றான். அவனை கண்டதும் சீதையின் உடல் கூசியது. இராவணன் சீதையிடம், நீ என் மேல் இரக்கம் காட்ட மாட்டாயா? இதுநாள் வரை உனக்காக காத்திருந்து நாட்கள் வீணாகிவிட்டது.
நீ என்னை அடைந்தால் மூவுலகமும் உன்னை வந்தடையும். இராமனிடம் இருந்து பிரிந்து வந்த பிறகு அவனை நினைத்து அழுவதில் ஒரு பயனும் இல்லை. உன் அழகுக்கு ஏற்றவன் நான் மட்டும் தான். என்னை வேண்டாம் என்று சொல்லாதே. என்னை போல் பலம் கொண்டவன் இவ்வுலகில் எவரும் இல்லை. உனக்கு நல்வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். நீ என்னுடன் வந்தால் என் செல்வங்கள் மேலும் பெருகும். நீ இராமனையே நினைத்து கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. இராமன் இங்கு வந்து உன்னை மீட்டு செல்ல போவதில்லை. தேவர்கள் முதலானோர் என் அடிமைகளாக இருக்கின்றனர். நான் உன் அடிமையாக இருக்கிறேன். உன் அடிமையாகிய என்னை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என தன் இரு கரங்களையும் கூப்பி மண்டியிட்டு கேட்டான்.
இராவணன் பேசியதை கேட்ட சீதை, அற்பனே! நீ உண்மையான வீரனாக இருந்தால் போர் புரிந்து என்னை கவர்ந்திருக்க வேண்டும். என் கணவரும், அவரின் தம்பி இலட்சுமணரும் இல்லாத நேரத்தில் ஓர் சந்நியாசியாக வந்து என்னை கவர்ந்து சென்ற நீ ஒரு வீரனா? உனக்கு அழிவு காலம் வந்துக் கொண்டிருக்கிறது. அதை மறந்து விடாதே. என் கணவரின் அம்பு வானத்தையும் கிழிக்கச் செய்யும் வல்லமை உடையது. ஜடாயுவிடம் போரிட்டு தரையில் வீழ்ந்து தோற்றவன் தானே. அதனால் ஜடாயுவை சிவன் கொடுத்த வாளால் வெட்டி வீழ்த்தி விட்டாய். அந்த வாள் உன்னிடம் இல்லையென்றால் அன்றே நீ மாண்டு இருப்பாய்.
காட்டில் உயர்ந்து நின்ற கார்த்தவீரியார்சுனனை, பரசுராமன் வென்று ஒடுக்கினான். அந்த பரசுராமனை கணப் பொழுதில் வென்றவர் இராமர் என்பதையும் தெரிந்து கொள். தாடகை, விராதன், கரன், தூஷணன், திரிசிரன் முதலிய அரக்கர்களை அழித்தவர் இராமர் என்பது உனக்கு தெரியாதா? நீ என்னை விரும்புவது உனக்கு அழிவை தேடித் தரும். உன் சக்தியோ அல்லது செல்வமோ என்னை பணிய வைக்க முடியாது. நான் ஒரு போதும் உன்னை மனதால் நினைக்க மாட்டேன் என்பதை தெரிந்து கொள். ஒப்பற்ற உனது செல்வங்களை மட்டுமல்ல, உனது உயிரையும் நீ என் கணவரால் இழக்கப் போகிறாய்.
இராம இலட்சுமணர் இருவர் மட்டும் என்று அலட்சியமாய் எண்ணாதே. அவர்கள் இருவரும் இரு புலிகள். அந்த இரு புலிகளையும் எதிர்க்கும் சக்தியும், வலிமையும் உன்னிடம் உள்ளதா? இராம இலட்சுமணரின் சக்தியும், வலிமையும் நீ போர் புரியும் போது புரிந்து கொள்வாய் என்று கோபமாக அவன் மீது சீறினாள் சீதை. சீதை பேசியதை கேட்ட இராவணன், பெருங்கோபம் கொண்டான். நான் உன்னிடம் அமைதியாக பேசுகிறேன் என்று நீ என்னை அவமதிக்கின்றாய். என்னால் முடியாது என்பது எதுவும் இல்லை. நான் இராமனை கொன்று உன்னை கவர்ந்து வந்திருந்தால் நீயும் உயிரை மாய்த்துக் கொள்வாய்.
ஆதலால் தான் உன்னை வஞ்சனை செய்து கவர்ந்து வந்தேனே தவிர போருக்கு பயந்து அல்ல. நான் நினைத்தால் இராம இலட்சுமணன் இருவரையும் என் வாளினால் வெட்டி வீழ்த்துவேன். ஆனால் அவர்கள் இத்தகைய அழகு படைத்த உன்னை எனக்கு கொடுத்ததால் அவர்களை கொல்லாமல் இருக்கின்றேன். நான் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக உன்னை கொல்லாமல் விடுகிறேன். நான் உனக்கு பன்னிரெண்டு மாதம் அவகாசம் கொடுத்தேன். ஆனால் நீ எனக்கு இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை. பன்னிரெண்டு மாதங்கள் முடிய இன்னும் இரண்டே மாதங்கள் உள்ளது. அதற்குள் நீ என்னுடையவளாக மாறிவிட வேண்டும்.
அப்படி இல்லையேல் உன்னை கொன்று இங்குள்ள அரக்கர்களுக்கு இரையாக்கி விடுவேன் என கோபத்துடன் கூறினான். பிறகு இராவணன் அங்கிருந்த அரக்கியர்களை பார்த்து, இவள் என் வசம் ஆகும்படி செய்யுங்கள். அவளிடம் நல்ல வார்த்தை கூறி பேசி பாருங்கள். அப்படி அவள் இணங்க வில்லை என்றால் கடுமையாக பேசி எப்படியேனும் இணங்கச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அரண்மனை நோக்கிச் சென்றான். இதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமன், இராவணனை கொன்று இப்பொழுதே சீதையை மீட்டு செல்வேன் என மனதில் எண்ணினான்.
தொடரும்.....
0 Comments