சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.
சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், பித்தா பிறை சூடி.... என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி சக மார்க்கம் என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். நீள நினைந்தடியேன்.... என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களைத் திருப்பாட்டு என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினைச் சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர்.
திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, ஞாயிறு என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான சங்கிலியார் எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார்.
அரசரான சேரமான் பெருமாள், இவருக்கு நண்பராயிருந்தார். இறைவனும், இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை. சேரமான் பெருமானை இவர் சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்.... எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர் வாழ்ந்தது எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள், 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார், பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.
சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.
சுந்தரரின் பணிகள்
வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்டர் அஞ்சலி கூப்பிவந்து சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும்
சந்த இசைப்பதிகங்கள் பாடித் தம்பெருமான் திருவாயில் சார்ந்தார்
என்று சுந்தரமூர்த்தி நாயனாரது தெய்வீகத்திறனை சேக்கிழார், பெரிய புராணத்தில் போற்றுவார்.கி.பி 694- கி.பி 712 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்து தனது 18வது வயதில் இறையடியெய்தியவராக இவர் காணப்படுகின்றார்.
சைவ சமயப் பணிகள்
சிவனடியார் வழிபாடு
ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் எவ்வண்ணம் இறைவனுக்கும் இறைவன் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தனரோ அது போன்று சுந்தரரும் அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்ததோடு அவர்களை விட ஒருபடி அப்பால் சென்று இறையடியார்களது வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்கியவராகக் காணப்படுகின்றார். திருவாரூர் தியாகேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்ற சுந்தரர், அங்கு கூடியிருந்த சிவனடியார்களை மதிக்காது சென்ற போது அவ்வடியார்களுள் விறன்மிண்ட நாயனார் சுந்தரரது செயல் கண்டு விசனம் கொள்ள சுந்தரர் தம் தவறை உணர்ந்து சிவனை வேண்டினார். சிவன் அந்தணர் வடிவில் வந்து, தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்...., என அடியெடுத்துக் கொடுக்க அவர் சிவனடியார்களைப் போற்றும் முகமாக “திருத்தொண்டர் தொகை”யைப் பாடினார்.
சைவ உலகில் சிவனடியார்களை வணக்கத்துக்குரியவர்களாக்கிய சிறப்பில் திருத்தொண்டர் தொகைக்கு உயரிய சிறப்புண்டு. சுந்தரருக்குப் பின்னே தோன்றிய நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி பாடுவதற்கும், சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்கும் பெருந்துணை புரிந்த நூல் திருத்தொண்டர் தொகையாகும்.
தேவாரங்களை அருளல்
தேவாரமுதலிகள் என அழைக்கப்படுகின்ற மூவருள் இறுதியாக அமைபவர் இவர். இவர் இறைவனைத் தோழனாகக் கொண்டு தனது லௌகீக வாழ்வின் தேவைகளுக்கெல்லாம் இறைவனைத் துணைபோகக் கேட்டு யோக மார்க்கத்தில் வாழ்ந்து யோகநெறி தழைக்க வழிவகுத்தவராவார். இவர் பாடிய தேவாரங்களில் நமக்கு கிடைத்துள்ள தேவாரங்களின் தொகை 1026 ஆகும். ஆயினும் சேக்கிழாரது கருத்துப்படி இவர் 114 தலங்களுக்கு சென்று பதிகங்கள் பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் 83 தலங்கள் சார்பான பதிகங்களே தற்போது கிடைத்துள்ளன. ஆலயங்கள் சார்பான பதிகங்களை விட சில பொதுவான பதிகங்களும் காணப்படுகின்றன. திருத்தொண்டர் தொகை, நாட்டுத்தொகை, ஊர்த்தொகை என்பன அவற்றுள் சிலவாகும் இவருடைய பாடல்களைத் 'திருப்பாட்டு' எனவும் அழைப்பர்.
சமூகப் பணிகள்
சுந்தரமூர்த்தி நாயனாரின் சமயப்பணிகளைப் போன்று அவரது சமூகப்பணிகளும் சைவசமய வளர்ச்சிக்கு வலுவூட்டுவனவாக அமைந்துள்ளன.
முதலை உண்ட சிறுவனை மீட்டமை.
திப்புக்கொளியூரில் அந்தணர்கள் வாழும் வீதி வழியாகச் சுந்தரர் சென்று கொண்டிருக்கையில் ஒருவீட்டில் மங்கல ஒலியும் எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்டன. அதைக் கேட்டு வியப்புற்ற சுந்தரர் அதற்கான காரணத்தை வினவ, ஐந்து வயது நிரம்பிய இந்த இரண்டு வீட்டுப் பிள்ளைகளும் நீராடுவதற்காக குளத்துக்குச் சென்றனர். அவர்களுள் ஒருவனை முதலை விழுங்கிற்று. மற்றையவன் வீடு சேர்ந்தான். அவனுக்கு இன்று பூநூல் சடங்கு. எதிர் வீட்டில் முதலை விழுங்கிய தம் மகனை நினைத்து பொற்றோர் வருந்துகின்றனர்' என்றனர். சுந்தரர் குளக்கரைக்குச் சென்று திருப்புக்கொளியூர் அவிநாசிப் பெருமானை நினைந்து வணங்கி மீளா அடிமை.... என்ற பதிகத்தைப் பாடினார். இறைவன் திருவருளால் முதலை அப்பிள்ளையை கரையிற்கொணர்ந்து உமிழ்ந்தது. பின்னர் அப்பிள்ளைக்கு சுந்தரர் பூநூல் சடங்கு செய்வித்தார்.
நண்பனுக்காக உயிரரைத் தியாகம் செய்தல்.
திருப்பெருமங்கலம் என்னும் பதியில் சிறந்த சிவபக்தராகிய கலிக்காமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஏலவே சுந்தரரிடத்தில் சிறந்த நண்பராகவும் விளங்கினார். ஆயினும் சுந்தரர் தனது லௌகீக தேவைகளுக்காக சிவனைத் தூதாக அனுப்புகின்றாரே என எண்ணி அவரிடத்தில் மிக்ககோபம் கொண்டு இருந்தார். அத்தருணத்தில் அவருக்கு ஏற்பட்ட நோயை நீக்கும் வண்ணம் இறைவனிடம் முறையிட சுந்தரர் அதனை நீக்கி வைப்பான் என இறைவன் கூறவும் சுந்தரரது வருகையை விரும்பாத கலிக்காமர் தனது வாளினால் தன்னைத் தானே குத்தி இறக்கின்றார். அந்நிலையைக் கண்ட சுந்தரர் தானும் தனது கத்தியால் தன்னைக் குத்துவதற்காக கத்தியை ஓங்கியபோது இறைவன் அருளால் உயிர் பெற்ற கலிக்காமர் அக்காட்சியைக் கண்டு மீண்டும் சுந்தரருடன் நட்புறவு கொள்ளலானார்.
நன்றி
0 Comments